இயேசுவும் சீடர்களும் படகேறிப் பாலைநிலத்தில் உள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்றார்கள். அவர்கள் புறப்பட்டுப் போவதை மக்கள் பார்த்தார்கள். பலர் அவர்களை இன்னாரென்று தெரிந்து கொண்டு, எல்லா நகர்களிலிருந்தும் கால்நடையாகவே கூட்டமாய் ஓடி, அவர்களுக்கு முன் அங்கு வந்து சேர்ந்தனர். அவர் கரையில் இறங்கியபோது பெருந்திரளான மக்களைக் கண்டார். அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்ததால் அவர்கள் மீது பரிவு கொண்டார். மேலும் அவர் தம் சீடர்களிடம், 'நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்' என்றார். (மாற்கு 6:33-35,37)
நேற்று மாலை சன் செய்திகள் தொலைக்காட்சியின் 7 மணிச் செய்திகளைப் பார்த்தேன். கடந்த ஒரு மாதத்தில் 250 மீனவர்களையும், 38 படகுகளையும் இலங்கைக் கடற்படையினர் பிடித்துச் சென்றுள்ளனர் என்று செய்தி சொன்னது. இந்த மீனவர்களையும், படகுகளையும் மீட்க நம் முதலமைச்சர் நாட்டின் தலைமை அமைச்சருக்கு கடிதங்கள் எழுதினார் என்பதும் செய்தி. கடந்த திங்கள்கிழமை நம் நாட்டின் தலைமை அமைச்சர் தன் பத்து ஆண்டு ஆட்சிக் காலத்தில் முதல் முறையாக (இறுதி முறையாகவும்!) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டி தருகின்றார். அந்தப் பேட்டியில் அவர் பேசிய மூன்று விஷயங்கள் எனக்கு அதிர்ச்சியை அளித்தது:
1. அடுத்த முறை தான் பிரதமராக இருக்க தனக்கு விருப்பம் இல்லையாம். அதற்குப் பதிலாக இராகுல் காந்தியை அவர் முன்வைக்கிறாராம் (பெருந்தன்மையாக!).
2. நிலக்கரி ஊழலுக்கும் தனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லையாம். சாட்சிகள் உண்மையானவையாம். ஆனால் இவர் நேர்மையானவராம்.
3. தமிழக மீனவர் கடத்தப்படுவதற்கு (தமிழர்கள் இந்தியர்கள் அல்ல போல!) இரு நாட்டு மீனவர்களும் பேச்சு வார்த்தை நடத்த வேண்டுமாம். நம்ம வீட்டுப் பூனை அடுத்த வீட்டில் பால் குடிச்சா, பாலுக்கும் பூனைக்குமா பேச்சு வார்த்தை நடத்த முடியும்? இரண்டு வீட்டுத் தலைவர்கள் தானே பேச வேண்டும்?
நம் அனைவர் முகத்திலும் நிலக்கரியைப் பூசிவிட்டார் இந்தப் புன்னகை மன்னர். ஒருவர் கடிதம் எழுதுகிறார். மற்றவர் இப்படிப் பதில் பேசுகிறார். இதற்கிடையில் இன்னொரு மாண்புமிகுவின் ஆலோசனை என்னவென்றால், தமிழக மீனவர்களுக்குத் துப்பாக்கிகள் வழங்க வேண்டுமாம். எப்படியா உங்களால மட்டும் இப்படி யோசிக்க முடியுது? பள்ளிக்கூடத்தில் வாத்தியார் அடிக்கிறார் என்றால் அதைக் கண்டிப்பதை விடுத்து மாணவர்கள் அனைவருக்கும் குச்சி கொடுப்பீர்களா?
இன்று நம் நிலையும் ஆயர்கள் இருந்தும் ஆயனில்லா நிலையாகத் தான் இருக்கிறது. பெட்ரோல், டீசல், சமையல் வாயு என போட்டி போட்டு விலையேற்றம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வீட்டை விட்டு வெளியே போக முடியாது என்றால், வீட்டிற்குள் அமர்ந்து சாப்பிடவும் முடியாமல் சமையல் வாயு விலை ஏறிக்கொண்டே இருக்கின்றது.
யாரும் இதற்குப் பொறுப்பல்ல? நாம் அமைச்சர்களைக் காட்டுகின்றோம். அவர்கள் நம்மைக் காட்டுகின்றனர்.
ஒரு பக்கம் ராக்கெட், சாட்டிலைட் எனக் கொடி கட்டிப் பறக்கின்றோம். மற்றொரு புறம் அடிபட்டுக் கிடக்கிறோம்.
அமெரிக்காவில் தேவயாணி (தவறு செய்தவர் இவரே!) கைது செய்யப்பட்டதற்கு 'குய்யோ! முறையோ!' எனக் கத்திக் கூப்பாடு போட்ட பாராளுமன்றம், மீனவர்கள் (தவறே செய்யாமல்!) கைது செய்யப்படுவதற்கு ஏன் மௌனம் காக்கின்றது? அமெரிக்காவிற்கு சவால் விடும் அரசு இலங்கையின் முன் ஏன் கைகட்டி நிற்கின்றது?
ரொம்ப பாலிடிக்ஸ் பேசாதீங்க தம்பி!
இன்றைய கதைக்கு வருவோம். இயேசு தம்மைப் பின்பற்றி வந்த கூட்டத்தைப் பார்த்து அதன் மேல் பரிவு கொள்கின்றார். பரிவு என்றால் என்ன? தேவையில் இருக்கும் ஒருவருக்கு நான் உதவி செய்தால் எனக்கு என்ன கிடைக்கும் என நினைப்பதற்குப் பதிலாக, அவருக்கு நான் உதவி செய்யாவிட்டால் அவருக்கு என்ன நடக்கும் என நினைப்பதே பரிவு.
அரசியல்வாதிகளுக்கு மீனவர்கள் கடத்தப்பட்டது ஒரு அரசியல் விளையாட்டு. ஊடகங்களுக்கு அது ஒரு செய்தி. ஆனால் அந்த மீனவர்களின் குடும்பத்தவர்களுக்கு? கடத்தப்பட்டவர்களுக்கு? கடலில் மீன் பிடித்தால் மீன்கள் குறையும் என்றால் பரவாயில்லை. இங்கே மீனவர்கள் குறைகிறார்களே! 'நமக்கு நடக்கும் வரை நடப்பதெல்லாம் வேடிக்கை' என்பார் கண்ணதாசன்.
இயேசு அடுத்தவர்களின் பசியை வேடிக்கை பார்க்கவில்லை. தன் பசி போல ஏற்று உணவு கொடுக்க முன்வருகின்றார். இதற்கு நல்ல எடுத்துக்காட்டு நம் வீட்டின் அம்மாக்கள். தன் கணவனுக்கும், தன் குழந்தைகளுக்கும் சுடுசோற்றை வைத்துவிட்டு, அனைவரும் வயிறார உண்டபின் தன் பசிக்கு பழைய சோற்றுப் பானைக்குள் கைவிடும் அம்மாக்கள் இன்றும் நம் அடுக்களையில் இருக்கத்தான் செய்கிறார்கள். இதுதான் பரிவுள்ளம். இதுதான் தாயுள்ளம்.
இயேசுவின் தாயுள்ளம், நம் அன்னையர்களின் தாயுள்ளம் என்று நம் நாட்டின் உள்ளமாக மாறுகிறதோ அப்போதுதான் நம் வீட்டில் விளக்கெரியும்!
இன்றைய சிந்தனைப் பகுதியை காணொளியாகப் பார்க்க இங்கே சொடுக்கவும்:
களத்தில் இறங்க வேண்டிய இளம் தலைமுறையினர் கல்லெறிந்தாலே போதும் என்று நினைக்கும் வரை இந்திய அரசியலைப் பறறிப் பேசிப்பயனில்லை.இயேசுவின் தாயுள்ளத்தை அருமையாக சித்தரிக்கிறது 'காணொளி' காண உதவிய ஆசிரியருக்கு நன்றி.''Where ever a heart is beating with compassion God is there.முத்தாய்ப்பான வரிகள்.
ReplyDelete