Monday, January 6, 2014

consult not your fears!

Today my amma mailed me with a quote from Pope John XXIII. Though I have read the quote elsewhere today it became more significant to me. The quote is this: ‘consult not your fears, but your hopes and dreams’. The quote makes meaning not only in the context of my depressed mind but in the context of the feast of Epiphany which we are celebrating today. The wise men from the East visited the baby in manger because they consulted not their fears, but their hopes and dreams. Let us reflect on the feast of Epiphany.

கடவுள் அனுபவம் பெற முடியுமா? கடவுளை நாம் எங்கே பார்க்கலாம்? ஏரோது நினைத்தான்: 'என் அரண்மனை போதும். என் படைபலம் போதும். என் மனைவியர் போதும். உரோமைக்குக் கொடுக்கும் வரியை அதிகப்படுத்தினால், அதில் தனக்கு வரும் பங்கு போதும்.' யூதக் குருக்களும், மறைவல்லுநர்கள் நினைத்தார்கள்: 'தோரா என்னும் சட்டநூல்களைப் படித்தால் போதும். தொழுகைக்கூடங்களில் இதைப்பற்றிப் பேசினால் போதும். மக்களுக்குள் ஏதாவது பிரச்சினை என்றால் மோசே சட்டத்தை வைத்துத் தீர்ப்புச் சொன்னால் போதும். எருசலேம் ஆலயத்தின் காணிக்கை போதும். யாராவது கலகம் செய்தால் அவர்களை விலக்கி வைத்தால் போதும் அல்லது கல்லால் எறிந்து கொன்றால் போதும்'. யூதர்கள் நினைத்தனர் 'யாவே இறைவன் தன் சொந்த இனமாகத் தேர்ந்துகொண்ட இஸ்ராயேல் இனத்தில் பிறந்தால் போதும். மீட்பு கிடைத்துவிடும்' ஏரோதுக்கு அவனது பதவியே கடவுள். அவன் அரண்மனையே கோவில். யூதக்குருக்களுக்கும், மறைநூல் வல்லுநர்களுக்கும் சட்டமே கடவுள், எருசலேமே கோவில் (சமாரியர்களின் கெரிசிம் அல்ல!). அனைத்து யூத மக்களுக்கும் தங்கள் இனமே கடவுள், கோவில் எல்லாம். இந்த இரண்டையும் தாண்டி இறைவன் தன்னை வெளிப்படுத்தும் நிகழ்வைத்தான் இன்று நாம் கொண்டாடுகின்றோம். புறவினத்தார்க்கு ஒளியாக வெளிப்பட்ட கிறிஸ்துவை, கீழ்த்திசை ஞானியரின் வருகையை இன்று நாம் கொண்டாடுகின்றோம்.

விண்மீன் வழிகாட்ட மீட்பரைச் சென்றடைகின்றனர் ஞானியர். இந்த வித்தியாசமான விண்மீனை எல்லாருமே பார்த்திருப்பார்கள். பார்த்த அனைவருமே அந்த விண்மீனைப் பின்பற்றவில்லை. விண்மீன் பலருக்கு பல்வேறு உணர்வுகளை ஏற்படுத்துகின்றது: விண்மீன் பற்றி கேட்ட ஏரோதுக்கு அதிர்ச்சி. தன் அரியணை பறிபோய்விடுமோ? என்ற கவலை. மறைவல்லுநர்களுக்கு அதைப்பற்றித் தெரிந்தது. ஆனால் அது எங்கேயோ? எப்போதோ? நடக்கும் நிகழ்வு என்று கண்டுகொள்ளாமல் இருந்தனர். சாதாரண மக்களுக்கு விண்மீன் ஒரு ஆச்சர்யம். ஆனால் அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளைப் பார்க்கவே நேரமில்லை. விண்மீனைப் பின்தொடர எப்படி நேரம் இருக்கும்? ஆனால் இந்தக் கீழ்த்திசை ஞானியர் மட்டும் எப்படி விண்மீனைத் தொடர்ந்தனர்?

ஞானியர் மட்டும்தான் விண்மீன்காட்டிய வழி நடக்கத் தொடங்குகின்றனர். 'தாங்கள் எங்கே போகிறோம்' என்று தெரியாமலே தொடங்கியிருப்பார்கள் தங்கள் பயணத்தை. அவர்களிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முதல் பாடம் 'கடவுளின் வெளிப்படுத்துதலுக்கு நாம் என்ன பதில் தருகிறோம்' என்பதுதான். கடவுள் தன்னை எப்படியும் வெளிப்படுத்தலாம் என்று அவர்கள் காத்திருந்தனர். அந்த வெளிப்பாடு கிடைத்தவுடன் அவர்கள் தருகின்ற பதில்தான் அவர்களின் பயணம். இன்றும் கடவுள் தன்னை எண்ணற்ற வழிகளில் வெளிப்படுத்துகின்றார். அதற்கு நாம் என்ன பதில் தருகிறோம். 50 ஆண்டுகளுக்கு முன் நடந்தேறிய இரண்டாம் வத்திக்கான் சங்கம் 'கடவுள் தன்னை இயேசுவில் வெளிப்படுத்தினார். இன்றும் பல்வேறு நிகழ்வுகளில் தன்னை வெளிப்படுத்துகின்றார். அந்த வெளிப்படுத்துதலுக்கு மனிதர்களாகிய நாம் தரும் பதில்தான் நம்பிக்கை.' எனக் கற்பிக்கின்றது. ஆனால் கடவுளின் வெளிப்பாட்டிற்கு நாம் எந்த அளவிற்கு பதில் கொடுத்திருக்கின்றோம்? இறைவனின் வெளிப்பாட்டிற்குப் பதில் கொடுக்க வேண்டுமென்றால் நமக்குத் தேவை தயார்நிலை.

வௌ;வேறு இடங்களிலிருந்து புறப்பட்டாலும் ஞானியர் தங்கள் பயணத்தை ஒரு கூட்டு முயற்சியாக மாற்றுகின்றனர். இறைவனைத் தேடுதலுக்கான அடுத்த நிலை 'கூட்டு முயற்சி'. நான் போதும். என் நம்பிக்கை போதும். என் நற்செயல்கள் போதும் என்று நம்மை தனிமைப்படுத்துவதை விட 'நாம் சேர்ந்து தேடுவோம்' என்று பிறரோடு கைகோர்ப்பதுதான் ஆன்மீகம். தேடுபொருள் ஒன்றாக இருந்ததால் ஞானியர்களுக்குள் பிரிவு இல்லை. இன்று இறைவன் தேடுபொருளாக இருந்தாலும் சமயங்களுக்குள், சமயத்திற்குள் எத்துணை பிரிவுகள்? 'எனக்கு அடுத்திருப்பவர் எனக்கு நரகம்' என நாம் மற்றவர்களை நினைக்கும்போது நம்மையே அந்நியப்படுத்திக்கொள்கிறோம். ஒன்றாக இணையும்போது, ஒரே சமூகமாக வாழும்போது நட்சத்திரத்தைப் பின்தொடர்தல் எளிதாகும்.

இந்த மூன்று ஞானியரும் பொன், தூபம், வெள்ளைப்போளம் என காணிக்கைகளைக் கொண்டுவருகின்றனர். எந்த நம்பிக்கையில் காணிக்கையைக் கொண்டுபோயிருப்பார்கள்? தாங்கள் கண்டிப்பாக இறைமகனைக் கண்டுகொள்வோம் என்ற நம்பிக்கையில் தான் அவர்கள் காணிக்கைகளை எடுத்துச் சென்றிருப்பார்கள். காணிக்கையை எடுத்துச் செல்லும் நல்ல மனம் இருந்தால் மட்டும் போதாது. வழிப்பறி, திருட்டு என எதுவும் வழியில் நடந்துவிடாமல் அதைக் காக்கும் துணிவும் இருந்தது அவர்களுக்கு. நாம் இன்று இறைவனுக்கு அளிக்கும் காணிக்கை என்ன? நம் இதயமும், இதயத்தின் அன்பும், வாழ்வும் காணிக்கை என்று நினைக்கும் நாம் எத்துணை முறை அவைகளை வழியிலேயே இழந்திருக்கின்றோம்?

அடுத்ததாக இவர்களிடம் பிடித்த ஒரு பண்பு துணிச்சல். ஒரு அரசனிடமே போய் 'பிறந்திருக்கும் அரசன் எங்கே?' என்று கேட்டதுதான். ஒருவகையில் இவர்கள் இயேசுவின் முதற்சீடர்கள் எனக் குறிப்பிடலாம். இயேசுவை அரசன் என்று முதன்முதலாக சான்றுபகர்கிறார்கள் - இதில் உள்ள ஒரு முரண் என்றால் இயேசுவை யூதர்களின் அரசராகக் கண்டுகொண்டவர்கள் யூதரல்லாதவர்கள்தாம்!

இயேசுவைச் சந்தித்த இம்மூவரும் வேறு வழி வழியாக தங்கள் இல்லம் திரும்புகின்றனர். இதில் உள்ள இறையியல் மறைபொருள் என்னவென்றால் இயேசுவைச் சந்திக்கும் அனைவரும் தங்கள் வழியை மாற்றித்தான் ஆகவேண்டும். தாங்கள் வந்த பழைய வழியிலேயே செல்ல முடியாது.

இறைவன் தன்னை எந்த நட்சத்திரத்திலும் வெளிப்படுத்தலாம் - நமக்குத் தேவை அதை அடையாளம் காணும் நல்மனமும், அதற்கான தயார்நிலையும், அதைப் பின்தொடரும் துணிச்சலும்தான். நல்மனமும், தயார்நிலையும், துணிச்சலும் நம்மையும் ஞானிகளாக்கும்!

1 comment:

  1. Anonymous1/06/2014

    3அரசர்களுக்கு விண்மீன் வழியாக அடைய வேண்டிய இடத்தைக் காட்டிய இறைவன் இன்றும்,நம்வாழ்விலும்.பலரை நமக்கு விண்மீனகளாக வழி காட்ட அனுப்புகிறார் அந்த விண்மீன்களை இனம் கண்டு கொள்வோம்......அவர்களைப் பின்பற்றுவோம்.....கரை சேர்வோம்.

    ReplyDelete