ஜென் துறவி கிம்கானிடம் ஒரு இளைஞன் வருகிறான். 'சுவாமி! எனக்கு வாழ்க்கை ரொம்பக் கஷ்டமாக இருக்கிறது. எந்தப் பக்கம் திரும்பினாலும் ஆபத்து இருப்பது போல இருக்கிறது. யாரும் என்னைக் கண்டுகொள்வதில்லை. யாரைப் பார்த்தாலும் எனக்குப் பயமாக இருக்கிறது' என்று புலம்புகிறான். அப்போது கிம்கான் ஒரு உவமை சொல்கிறார்: 'காட்டு வழியே பயணம் செய்து கொண்டிருந்த ஒருவனை ஒரு புலி துரத்துகிறது. எப்படியாவது புலியிடமிருந்து தப்பி ஓடவிட வேண்டும் என நினைத்த அவன் வேகமாக ஓடுகிறான். ஓடும் வழியில் ஒரு பெரிய பள்ளத்தாக்கு. பின்னால் புலி. முன்னால் பள்ளத்தாக்கு. இருந்தாலும் பள்ளத்தாக்கில் குதிக்கிறான். குதித்து கீழே போய்க்கொண்டிருக்கும் வழியில் ஒரு மரத்தின் வேரைப் பற்றிக் கொள்கிறான். அப்பாடா! என்று பெருமூச்சு விட்டவாறு கீழே பார்க்கிறான். அங்கே புலி அவனுக்காகக் காத்திருக்கிறது. அண்ணாந்து மேலே பார்க்கிறான். இரண்டு எலிகள் அவன் பற்றியிருந்த வேரைத் தோண்டிக் கொண்டிருக்கின்றன. தன் அருகில் ஒரு ஸ்டராபெரிக் கொடி. அழகான பழங்கள் தொங்கிக் கொண்டிருக்கின்றன. அதில் ஒன்றைப் பறித்து வாயில் போட்டு 'என்ன சுவையாய் இருக்கின்றது இந்தப்பழம்' என்றான் அவன்.' உடனே ஞானம் பெற்றான் இளைஞன்.
தன்னைச் சுற்றியிருப்பவர்கள் தன்னை ஏற்றுக்கொள்ளவில்லை. தன் கண்முன் எப்போதும் சிலுவை நின்று கொண்டே இருக்கின்றது. இப்படியாக நம்மைப் போலவே சாவின் நிழலில் வாழ்ந்து கொண்டிருந்த இயேசுவுக்கும், அவரையே சுற்றி வந்த அவரது சீடர்களுக்கும் சுவைமிக்க ஸ்டராபெரி பழமாக இருக்கின்றது இயேசுவின் உருமாற்றம்.
இயேசுவின் உருமாற்றம் ஒரு வரலாற்று நிகழ்வா அல்லது இறையியல் நிகழ்வா? இயேசு தன்னோடு 12 திருத்தூதர்களை வைத்திருந்தாலும் அவர்களில் பேதுரு, யோவான் மற்றும் யாக்கோபு என்ற மூவரைத்தான் தனக்கு நெருக்கமான வட்டத்தில் வைத்திருக்கின்றார். யாயீரின் இறந்த மகளுக்கு உயிர் கொடுத்த போதும், தாபோர் மலையில் தான் உருமாறிய போதும், கெத்சமேனித் தோட்டத்தில் இரத்த வியர்வை வியர்த்த போதும் இந்த மூன்று சீடர்களை மட்டுமே தன் அருகில் இயேசு வைத்திருக்கின்றார். இயேசுவின் உருமாற்றத்தை மத்தேயு, மாற்கு மற்றும் லூக்கா நற்செய்தியாளர்கள் மட்டுமே எழுதுகின்றனர். ஆனால் இதை நேரில் கண்ட யோவான் தன் நற்செய்தியில் இந்த நிகழ்வைக் குறித்து மௌனம் காக்கின்றார். அவர் பார்த்தாரா? பார்த்ததை எழுதவில்லையா? சீடர்களின் வாழ்வில் இது எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியது? தாபோர் மலையில் ஆண்டவரின் மாட்சிமை இறங்கி வந்தபோது கீழே நின்ற மக்கள் அதைப் பார்க்கவில்லையா? வந்திருந்தவர்கள் எலியாவும், மோசேவும் என்பதை யார் யாருக்குச் சொன்னார்கள்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் நற்செய்திப் பகுதியில் விடைகள் இல்லை.
இந்த நிகழ்வைக் குறித்து எழுதுகின்ற மூன்று நற்செய்தியாளர்களுமே தங்களுக்கு ஏற்றவாறு நிகழ்வை மாற்றி எழுதுகிறார்கள். உதாரணத்திற்கு, தாபோர் மலை என்ற பெயரை இவர்கள் மூவருமே குறிப்பிடவில்லை. 'மலை' என்று மட்டுமே எழுதுகின்றனர். மாற்கு நற்செய்தியாளர் இயேசுவின் உடைகளை அதிகமாக வர்ணிக்கின்றார். லூக்கா நற்செய்தியாளர் இந்த நிகழ்வு எட்டு நாட்களுக்குப் பின் நடப்பதாகவும், மற்றவர்கள் ஆறு நாட்களுக்குப் பின் நடப்பதாகவும் எழுதுகின்றனர்.
இயேசுவின் உருமாற்றம் நமக்கு வைக்கும் பாடங்கள் என்ன?
1. இயேசுவின் பணிவாழ்வில் இரண்டு மலைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை: ஒன்று, தாபோர் மலை, மற்றொன்று, கல்வாரி மலை. இரண்டு மலை நிகழ்வுகளுக்கும் பல வித்தியாசங்கள் உள்ளன. தாபோரில் உருமாறினார். கல்வாரியில் உருச்சிதைந்தார். தாபோரில் மாட்சிமை பெற்றோர். கல்வாரியில் இழிமரணத்திற்கு ஆளானார். தாபோரில் தன் இரு பக்கங்களிலும் மோசேயும், எலியாவும் நின்றிருந்தனர். கல்வாரியில் தன் இருபக்கங்களிலும் தன்னோடு உரையாடிக்கொண்டிருந்தவர்கள் இரண்டு கள்வர்கள். 'இவரே என் அன்பார்ந்த மகன்' என்ற தந்தையின் அரவணைக்கும் வார்த்தைகள் ஒலித்தது தாபோர் மலை. 'என் இறைவா, என் இறைவா ஏன் என்னைக் கைநெகிழ்ந்தீர்' என்ற இயேசுவின் அவல ஒலி கேட்டது கல்வாரி மலை. 'இங்கேயே இருப்பது எத்துணை நன்று' என்ற பேதுருவின் பெருமகிழ்ச்சி தாபோர் மலையில். 'அவரை எனக்குத் தெரியாது' என்று மறுதலித்து அனைத்துச் சீடர்களும் இயேசுவை ஆதரவற்றவராக மாற்றியது கல்வாரி மலையில். 'அவரது ஆடை கதிரவனைப் போல ஒளிர்ந்தது' தாபோர் மலையில். 'அவரின் ஆடைகளைக் களைந்தனர்' கல்வாரி மலையில். இரண்டு நிகழ்வுகளுக்கும் இவ்வளவு வித்தியாசங்கள் இருந்தாலும், இந்த வித்தியாசங்கள் நடுவில் ஒரே மாதிரி நிற்கின்றவர் இயேசு. தாபோர் மலையில் மகிமையும், கல்வாரி மலையின் இகழ்வும் இயேசுவுக்கு ஒன்றுதான். மக்கள் பாடிய 'ஓசான்னாவும்', 'சிலுவையில் அறையும்!' என்ற அவர்களின் கூக்குரலும் இயேசுவுக்கு ஒன்றுதான். 'போற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும்' தனக்கு ஒன்று என இயேசுவால் எப்படி எடுத்துக்கொள்ள முடிந்தது? இந்த இரண்டு மலைகளும் நம் வாழ்விலும் வரும். ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு நாம் கடந்து செல்லும்போது நம் மனநிலை என்ன?
2. இயேசுவின் திருமுழுக்கின்போது மேகத்திலிருந்து ஒலிக்கும் வானகத்தந்தையின் குரல், 'நீரே என் அன்பார்ந்த மைந்தர்' (லூக் 3:22) என இயேசுவிடம் நேரடியாகப் பேசுவதாக ஒலிக்கிறது. ஆனால் தாபோர் மலையில் ஒலிக்கும் தந்தையின் குரல், 'இவரே என் அன்பார்ந்த மைந்தர். இவருக்கு செவிகொடுங்கள்' (மத்தேயு 17:5) என சீடர்களைப் பார்த்து ஒலிப்பதாக அமைகின்றது. இது 'நீரே கடவுளின் மெசியா. உயிருள்ள இறைவனின் திருமகன்' (மாற்கு 8:29) என்ற பேதுருவின் நம்பிக்கை அறிக்கையை வானகத்தந்தை உறுதி செய்வதாகவும் அமைகின்றது. திருமுழுக்கில் ஒலிக்கும் வார்த்தைகள் இயேசுவை இவ்வுலகிற்கு அறிமுகப்படுத்தின. தாபோரில் ஒலிக்கும் வார்த்தைகள் இயேசுவை நோக்கி வர நமக்கு அழைப்புவிடுக்கின்றன. 'செவிகொடுங்கள்' என்பதற்கு 'பின்தொடருங்கள், பற்றிக்கொள்ளுங்கள்' என்றும் பொருள் உண்டு. இயேசுவை நாம் பின்பற்றுகிறோமா?
3. 'அஞ்சாதீர்கள்'. உருமாற்ற நிகழ்வைக் கண்டு பயத்தால் உறைந்து போயிருந்த தன் சீடர்களைப் பார்த்து இயேசு சொல்லும் வார்த்தை இதுதான். இறைவனின் பிரசன்னம் பல நேரங்களில் நமக்கு பயத்தைத் தருகின்றது. பயம் இருக்கும் இடத்தில் அன்பு இருக்காது. நாம் பயந்துபோயிருந்தாலும் இயேசு அங்கே நமக்கு அமைதியும், அன்பும் தருகின்றார்.
எதிர்வரும் வாழ்வியல் நிகழ்வுகள் எப்படி இருந்தாலும் எம்பெருமான் இயேசுவின் காலடிகளே எம் சுவை என்று நிற்பவர்களுக்கு எல்லா நாளுமே உருமாற்றம்தான்!
இன்றையப்பகுதியில் சொல்லப்பட்டிருக்கும் தபோர் மற்றும் கல்வாரி மலைகள் சம்பந்தவற்றைப் படிக்கும்போது விவிலியத்தை எத்துணை துல்லியமாக படிக்க வேண்டும் என்று புரிகிறது.நாமும் நம் இறைவனையே நிழலாகப்பற்றி வாழ.முற்பட்டால் நாமும் உருமாற்றம் பெறுவோம்...அப்பொழுதுதான்.அவர் நம்மைப் பார்த்துக்கூறும் ''அஞ்சாதீர்கள்'',.''நீரே என் அன்பான மைந்தன்'' போன்ற வார்த்தைகள் நம் செவிகளில் விழும்..அந்தப்படத்தில் இருக்கும் ஸ்ட்ராபெரிக் கனிகளை அப்டியே சாப்டனும் போல இருக்கு. சபாஷ்!
ReplyDeleteதாபோர் மலை நிகழ்வுக்கும் கல்வாரி மலைநிகழ்வுக்கும் இத்தனை வித்தியாசங்களா?
ReplyDeleteஆழமான சிந்தனை!!!
really great
ReplyDelete