ஸ்பெயின் நாட்டில் அரசர்கள் ஆண்ட சமயம் நடந்த ஒரு நிகழ்வு. ஒரு கிராமத்து மக்களைச் சந்திக்க அரசர் வருகிறார் என்ற செய்தி வருகிறது. கிராமத்து மக்களுக்கு ஆச்சர்யம். ஆயிரம் வருடங்களுக்குப் பின் அரசர் ஒருவர் நம் கிராமத்திற்கு வருகிறார். நம்மிடம் உள்ளதில் சிறந்தவற்றை அவருக்குக் கொடுக்க வேண்டும் என்று ஊர்கூடி திட்டமிடுகின்றனர். அந்த ஊரில் உள்ளவர்கள் அனைவரும் திராட்சை ரசம் செய்யக் கூடியவர்கள். ஆகையால் ஊர் நடுவில் ஒரு பெரிய பானையை வைப்போம். அந்தப் பானையில் நாம் அனைவரும் செய்த திராட்சை ரசத்தைக் கொண்டு வந்து ஊற்றுவோம். அரசர் இதுவரை தான் பருகியிராத சுவையான திராட்சை ரசத்தைப் பருகட்டும் என்று சொல்கின்றனர். பானையும் வைத்தாயிற்று. பானையின் உச்சிக்குச் செல்ல ஒரு ஏணியும் வைத்தார்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவராக அந்தப் பானையில் ஊற்றுகின்றனர். அரசர் வரும் நாளும் வந்தது. மகிழ்ச்சியுடன் அரசரைப் பானையை நோக்கி அழைத்துச் செல்கின்றனர். ஒரு டம்ளரைக் கட்டி பானையினுள் நுழைத்து அரசருக்குக் குடிக்கக் கொடுக்கின்றனர். குடித்தவுடன் அரசரது முகத்தில் ஏமாற்றம்: 'என்ன தண்ணியா?' என்கின்றார். எல்லோரும் ஆச்சர்யமாகப் பார்க்கின்றனர். ஆம். என்ன நடந்தது என்றால், 'இவ்வளவு பெரிய பானையில் திராட்சை ரசத்திற்குப் பதிலாக கொஞ்சம் தண்ணீர் ஊற்றினால் தெரிந்துவிடவா போகிறது' என நினைத்து எல்லோரும் தண்ணீரையே ஊற்றியிருக்கின்றனர். தங்களிடமிருந்தில் சிறப்பானதை அரசனுக்குக் கொடுக்க அவர்களுக்கு மனம் வரவில்லை.
இதோ! இன்று ஒரு அரசர் எருசலேம் நோக்கிப் பயணமாக வருகின்றார். தன்னிடம் சிறப்பாக இருக்கும் தன் உயிரையே மக்களுக்காகத் தர வருகின்றார் அவர். அவருக்கு மக்கள் எதைக் கொடுத்தார்கள்? ஆண்டவரின் குருத்தோலைப் பவனி அவரின் வாழ்வில் எந்த அளவிற்கு முக்கியமோ, அந்த அளவிற்கு அவரது சமகாலத்தவரின் வாழ்விலும் முக்கியமாக இருக்கிறது. ஆண்டவரின் எருசலேம் வருகை அவருக்கு ஒரு முடிவை அறிவித்தாலும், மக்களின் வாழ்வில் அது ஒரு புதிய தொடக்கத்தை விதைக்கிறது. இறைவாக்கினர்கள் இயேசுவைக் குறித்து எழுதியவை நிறைவேறத் தொடங்குகின்றன. 'வாயில்களே, உங்கள் நிலைகளை உயர்த்துங்கள். தொன்மைமிகு கதவுகளே, உயர்ந்து நில்லுங்கள். மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும்' (திபா 24:7) என்று திருப்பாடல் ஆசிரியர் முன்மொழிய இன்று எருசலேம் நகரமே எழுந்து நிற்கின்றது இயேசுவை வரவேற்க. இந்த அரசனுக்கு அன்று மக்கள் என்ன கொடுத்தார்கள்? இன்று நாம் என்ன கொடுக்க வேண்டும்?
1. தங்களில் சிறந்ததைக் கொடுக்கின்றனர். ஸ்பெயின் நாட்டு மக்களைப் போல அல்லாமல், இயேசுவின் சமகாலத்தவர், அவரால் நலம் பெற்றோர், எளியோர், வறியோர், இறையரசை எதிர்பார்த்துக் காத்திருந்தோர் தங்களிடமிருந்தவைகளில் முதன்மையானவைகளை இறைவனுக்குக் கொடுக்கின்றனர்: யாருமே ஏறியிராத கழுதை, குருத்தோலைகள் மற்றும் ஆடைகள். கழுதை அமைதியின் சின்னம். தாவீதின் அரசரும் அப்சலோமுடன் உடன்படிக்கை செய்யச் செல்லும்போது கழுதையின் மேலே அமர்ந்து செல்கின்றார். குதிரைகள் இரத்தத்தையும், கண்ணீரையும் கொண்டு வருகின்றன. ஆனால் கழுதை அமைதியையே கொண்டு வருகின்றது. இந்தக் கழுதைக்கும் இறைத்திட்டத்தில் பங்கு இருக்கின்றது. அது இயேசுவுக்காகவே காத்திருக்கின்றது. இன்று நாம் யாருக்காகக் காத்திருக்கிறோம்? யாராவது நம்மை அவிழ்க்க வருவார்களே என்ற தயார்நிலையில் இருக்கின்றோமா? குருத்தோலைகள் குறிப்பவை என்ன? புத்துயிர். தென்னை மற்றும் வாழை மரங்களில் பார்த்திருப்போம். குருத்தைக் கவனமாகப் பாதுகாப்பார்கள். குருத்து புதிய உயிரைக் கொண்டிருக்கிறது. குருத்து வருகிறது என்றால் அங்கே உயிர் இருக்கிறது என்று அர்த்தம். குருத்து தராத மரம் 'மலட்டு' மரம் என்றே அழைக்கப்படும். குருத்தோலைகள் புத்துயிரை அடையாளப்படுத்துகின்றன. இயேசுவின் பிரசன்னம் புத்துயிரைக் கொண்டுவருகின்றது. ஆடைகள் பாவ நிலையைக் குறிப்பிடுகின்றன. பாவத்தால் வந்த ஆடை பாவம் போக்க வந்த இயேசுவின் முன் விரிக்கப்படுகின்றது. மேலும் ஆடைகள் விரித்து அதன் மேல் நடந்து வருதல் ஒருவரின் மேன்மையைக் குறிப்பிடுகின்றது. சிவப்புக் கம்பள வரவேற்பு என்றும், இரத்தினக் கம்பள நடை என்றும் நாம் இதையே குறிப்பிடுகிறோம். எந்த நம்பிக்கையோடு இஸ்ராயேல் மக்கள் தங்கள் ஆடைகளை விரித்திருப்பார்கள்? இன்று இயேசு நம் முன் வருகிறார் என்றால் நம்மால் ஆடைகளை அவருக்காக விரிக்கும் துணிச்சல் வருமா?
2. ஓசான்னா. 'தாவீதின் மகனுக்கு ஓசான்னா. ஆண்டவர் பெயரால் வருகிறவர் ஆசீர் பெற்றவர். உன்னதங்களில் ஓசான்னா' என்று மகிழ்ச்சிக் குரல் எழுப்புகின்றனர் மக்கள். இந்த ஓசான்னா இன்னும் கொஞ்ச நாட்களில் 'சிலுவையில் அறையும்' என்று மாறிவிடும் என்பதும் எதார்த்தம். 'ஓசான்னா!' என்பது ஒருவகையான செபம். திபா 118:25-26 என்ற திருப்பாடல்தான் யூத மக்களின் ஹலேல் திருப்பாடலில் இறுதியானது. ஹலேல் வகைத் திருப்பாடல்கள் அரசர்கள் திருப்பொழிவு செய்யும் போது பாடப்படும். 'தாவீதின் வழி வரும் அரசர் இவரே' என்று இயேசுவைத் தாங்களாகவே அரசராகத் திருப்பொழிவு செய்கின்றனர் மக்கள். வாடகைக் கழுதையில் வந்த இறுதி நம்பிக்கை தங்களுக்கு மீட்பைக் கொண்டுவரும் என நம்பினர். 'ஓசான்னா' என்றால் 'எங்களை மீட்டுக்கொள்ளும், காப்பாற்றும்' என்றும் பொருள் கொள்ளலாம். இன்று நாம் திருப்பலியிலும் ஓசான்னா பாடுகிறோம். இறைவனின் மீட்பை நாம் நம் வாழ்வில் உணர்ந்திருக்கின்றோமா? இன்று எருசலேம் கூட்டத்தில் நாம் நின்றால் ஓசான்னா பாடுவோமோ?
ஓசான்னா பாடுவதற்கு நம்மிடம் தடையாய் இருப்பவை எவை? 'நான் என்ற ஆணவம்' - எனக்கு எல்லாம் தெரியும், என்னால் எல்லாம் முடியும், நானே என்னைப் பார்த்துக்கொள்வேன் என்று நினைப்பவர்கள் ஓசான்னா பாட முடியாது. ஆகையால் தான் பவனியைப் பார்த்த பரிசேயரும், மறைநூல் அறிஞரும் மக்களைக் கடிந்து கொள்கின்றனர். 'பயம்' இருப்பவர்களும் 'ஓசான்னா' பாட முடியாது. 'அன்பு இருக்கும் இடத்தில் பயம் இருக்காது. பயம் இருக்கும் இடத்தில் அன்பு இருக்காது' என்பார் அகுஸ்தினார். இறைவனின் அன்பை அனுபவிப்பவர்களே அவரிடம் தஞ்சம் புக முடியும். அடுத்ததாக, சந்தேகம் இருக்கும் இடத்தில் ஓசான்னாவிற்கு இடமில்லை. சந்தேகமற்ற நிலையே நம்பிக்கை.
3. முதற்தர மகிழ்ச்சி. இயேசு கானாவூரில் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியபோது அந்த இரசத்திற்கு பந்தி மேற்பார்வையாளர் அளித்த அடைமொழி 'முதற்தரமான' என்பதுதான். இயேசுவின் பவனியில் பங்கேற்றவர்கள் முகத்தில் இருந்ததும் இந்த மகிழ்ச்சிதான். இவர்களின் கண்கள் பார்த்தது இயேசுவை மட்டும்தான். மற்றவர்கள் பார்ப்பார்களே! நம்மை; கேலிசெய்வார்களே! என்று யாரைப் பற்றியும் அவர்கள் கவலைப்படவேயில்லை. நம் வாழ்வில் இயேசுமட்டும் மையமாக வைக்கும் முதற்தர மகிழ்ச்சியை நாம் அனுபவிக்கிறோமா? அந்த மக்களுக்கு தெரிந்ததெல்லாம் இயேசு என்றால் நம்பிக்கை என்பது மட்டும்தான். நம் வாழ்விலும் நமக்குத் தெரிந்த ஒரே நம்பிக்கை இயேசுதான் என்றால் நாமும் நம் ஆடைகளை விரிப்போம். அவர் பவனி வரட்டும்!
வரவிருக்கும் தவக்காலத்திற்காக நம்மை இப்போழுதிருந்தே தயார் செய்கிறார் ஆசிரியர்.விண்ணையும் மண்ணையும் படைத்த,மீட்பின் உச்சகட்டமான சிலுவைச்சாவை ஏற்ற நம் பரமனுக்கு நம் மனத்தின் ஆசாபாசங்களையும்,இன்னும் நம்மைத்தீமைக்கு கொண்டு செல்லும் ஆணவம்,பயம், சந்தேகம் போன்ற
ReplyDeleteதுர்குணங்களையும் நீக்கி நம் மனம் என்னும் 'கழுதை' மேல்
ஏற்றுவோம்.''ஓசான்னா''வை உரக்கச் சொல்வோம் இவ்வுலகத்துக்கு.