Tuesday, January 7, 2014

ஆழ்மனம் என்னும் மனச்சான்று

அன்பார்ந்தவர்களே, நாம் மனச்சான்று நாம் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதிருந்தால் நாம் கடவுள் திருமுன் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்க முடியும். அவரிடம் நாம் எதைக் கேட்டாலும் பெற்றுக் கொள்வோம். ஏனெனில் அவர் கட்டளைகளைக் கடைப்பிடிக்கிறோம். அவர் திருமுன் அவருக்கு உகந்தவற்றையே செய்து வருகிறோம். (1 யோவான் 3:21-22)

புத்தாண்டு தினத்திற்கு முந்தைய நாள் திரு. டி. டி. ரங்கராஜன் அவர்களின் 'தினச்சார்யா' காணொளி பார்த்தேன். நாம் புத்தாண்டில் வெற்றியாளர்களாக மாறுவதற்கு மற்றவர்கள் நம்மை நம்புகிறார்களோ இல்லையோ நாம் முதலில் நம்ப வேண்டும் என்றும், நம் நம்பிக்கையே நம்மிடம் உள்ள கடவுள் என்றும், நம் பயமே நம்மிடம் உள்ள சாத்தான் என்றும் அழகாகப் பேசியிருந்தார். நம்மை நம்புவது என்றால் என்ன? என்று யோசித்துக் கொண்டிருந்தேன். நாம் தனியாய் இருக்கும்போது நம்மிடம் யாரோ பேசுவது போலவே இருக்கும். அது யார்? அதுதான் நம் உள்மனம். நம் உள்மனம் நம்மை நம்பினால் எல்லாம் நன்றாக நடக்கும். அந்த உள்மனத்திற்கு மனச்சான்று என்றும் பெயர் உண்டு.

உதாரணத்திற்கு, திருடவே கூடாது என்று புத்தாண்டில் வாக்குறுதி எடுத்துள்ளோம் என வைத்துக்கொள்வோம். கொஞ்சம் சாதாரணமாகச் சொன்னால் 'என்னுடையதாக இல்லாத ஒன்றை நான் எனதாக்கிக் கொள்ள மாட்டேன்' என்ற உறுதிமொழியை எடுத்துக்கொள்வோம். ஒரு பெரிய அறையில் நாம் இருக்கிறோம். அந்த அறையில் ஒரு பணப்பை இருக்கின்றது. அந்த அறைக்கு பலர் வருவார்கள். போவார்கள். அந்தப் பணப்பை நம் கண்ணை உறுத்திக் கொண்டே இருக்கின்றது. நம் பையில் 500 ரூபாய் இருக்கிறது. இப்போது நம் வீட்டிற்குச் செல்ல வேண்டுமென்றால் பேருந்தில் போக வேண்டும். பேருந்தில் டிக்கெட் எடுக்க 500 ரூபாய்க்கு சில்லறை மாற்ற வேண்டும். அதற்குப் பதிலாக இந்தப் பணப்பையிலிருந்து ரூபாய் 2.50 எடுத்தால் நாம் 500ஐ மாற்றத் தேவையில்லை. இப்போது நாம் கை நீட்டி எடுத்தோம் என்றால் அது யாருக்கும் தெரியாது. கடவுளை உள் இழுக்க வேண்டாம். ஆனால் நம் உள் மனத்திற்குத் தெரியும். நம் உள் மனம் என்ன சொல்லும் தெரியுமா? உன்னால் ஒரு சின்ன விஷயத்தில் கூட நீ எடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற முடியவில்லை. நீயெல்லாம் எப்படி பெரியவற்றைச் சாதிக்கப் போகிறாய்? என்று கேட்டுக்கொண்டே இருக்கும். இப்போது நம் உள் மனமே நம்மை நம்பாது. நாம் யாரிடமாவது 'நாளை உங்களை 11 மணிக்கு பார்க்க வருகிறேன்' என்று சொன்னால், நம் உள் மனம் சிரிக்கும்: 'ஏன்டா நீயா? 11 மணிக்கா?' என்ற நம்மையே நம்ப மறுக்கும். 

உள் மனத்திற்கு மிகுந்த ஆற்றல் உண்டு. அது ஒரு குழந்தை. நம்மை அப்படியே காட்டிக் கொடுத்து விடும். இதுவே மனச்சான்று. மனச்சான்று குறித்து அறவியிலில் (ethics) மிகப் பெரிய ஆராய்ச்சியே உண்டு. மனச்சான்று நம் பிறப்பிலேயே வருகின்றதா? அல்லது வளர்ப்பால் வருகின்றதா? பிறப்பால் வருகின்றது என்றால் ஏன் கொலை, கொள்ளை, தீவிரவாதம்? எல்லாரும் மனச்சான்றின் படி நடப்பார்கள் அல்லவா? நம் வளர்ப்பால், நம் சிந்தனையால் வருகின்றது என்றால் நாம் எப்படி ஒரு மாதிரியானவர்கள் எனச் சொல்ல முடியும்?

கத்தோலிக்க மறைக்கல்வி மனச்சான்றை 'கடவுளின் குரல்' என அழைக்கின்றது. இந்தக் கடவுளின் குரல்தான் நம் ஆழ்மனம். இந்தக் குரல்தான் ஒருவர் மற்றவரை இணைக்கின்றது. நாம் அதிகமாக அன்பு செய்பவர்களுக்கு ஏதோ நடக்கிறது என்று நமக்கு உணர்த்துவதும் இந்த ஆழ்மனம்தான். ஆழ்மனம் என்னும் குழந்தை மகிழ்ச்சியாக இருந்தால் நாமும் மகிழ்ச்சியாக இருப்போம். அது எரிச்சல் பட்டால் நாமும் எரிச்சல் படுவோம். அது அழுதால் நாமும் அழுவோம்.

ஆழ்மனத்தின் அற்புத சக்தியினால் நம்மையும் குணமாக்க முடியும், மற்றவர்களையும் குணமாக்க முடியும். 

நம் மனச்சான்று நம்மை ஒருபோதும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காமல் பார்த்துக்கொள்வோமா?

இன்னும் சொல்வேன்...

டி.டி. ரங்கராஜனின் 'தினச்சார்யா' காணொளி பார்க்க இங்கே சொடுக்கவும்:



1 comment:

  1. Anonymous1/08/2014

    மனிதர்களைப் பல சமயங்களில் 'தெய்வ' நிலைக்கு உயர்த்துவது நம் மனச்சான்றுதான் அது மட்டும் இலையெனில் இன்று நம்மில் பலர மிருகங்களோடு ஒப்பிடப்படவேண்டியவர்கள்தான்.டி.டிரங்கராஜனின் 'காணொளி' அருமை.இன்று நாட்டுக்குத் தேவை பல 'ரங்கராஜன்'கள்.

    ReplyDelete