1. இந்த எடுத்துக்காட்டுதான் எடுத்துக்காட்டுக்களிலெல்லாம் முத்தாய்ப்பானது. வாழ்வின் உணர்வுகளையும், எதார்த்தங்களையும் பல பரிமாணங்களில் காட்டும் வைரம். வாழ்க்கையின் முடிச்சுகளையும், அதன் புரிந்துகொள்ள முடியாத புதிர்களையும் கொண்டிருக்கின்றது இந்த எடுத்துக்காட்டு. இன்று நம் குடும்பங்களில் காணும் பல பிரச்சினைகளைப் பிரதிபலிக்கிறது இந்த எடுத்துக்காட்டு. கொஞ்சம் விவரம் தெரியும் வயதிற்கு வந்தவுடன் தங்கள் பெற்றோருக்கு எதிராக எழுந்து நிற்கும் பிள்ளைகள், குடும்பத்திலிருந்து தனிமைப்படுத்தவர்கள் எதிர்கொள்ளும் தனிமை, விரக்தி, அந்நிய நாடு தரும் மோகம், முட்டாள்தனமான வாழ்வின் பலன்கள், குடும்பத்தை நினைவுகூறும்போது நம் உள்ளத்தில் தோன்றும் நினைவுகள், தன்னையறிதிலின் முக்கியத்துவம், விழிப்புணர்வு, மனமாற்றம், திரும்பி வருதலின் மகிழ்ச்சி, மன்னிப்பின் வல்லமை, சகோதரத்துவ அன்பு என பல கருத்தியல்களை இந்த எடுத்துக்காட்டில் காணலாம்.
2. உரிமைகளுக்கும், உறவிற்கும் உள்ள வித்தியாசம். தன் குடும்பத்தில் தன்னிடமுள்ள கடமைகளை மறந்து விட்டுத் தன் உரிமைகளை மட்டும் கேட்கின்றார் இளைய மகன். இன்றும் குடும்பங்களில் வரும் பிரச்சனைகளுக்குக் காரணம் இதுதான். தங்களுக்குள்ள கடமைகளை மறந்துவிட்டு உரிமைகளை மட்டும் கொண்டாட நினைப்பது. நம் இல்லங்களில் உள்ள பிரச்சினைகளுக்குக் காரணமும் இதுதான்ஷ எனக்கு இந்த வீட்டில் இதற்குக் கூட உரிமையில்லையா? எனத் தொடங்கும் நம் கேள்விகள் ஒவ்வொன்றுமே நம் உறவுகளின் மேல் கட்டப்படும் சமாதிகளே! திருமணத்தில் இணையும் இனியவர்களுக்கும், அருட்பணியில் இணையும் இனியவர்களுக்கும் உரிமைகளும் இருக்கின்றன, கடமைகளும் இருக்கின்றன. நம் உரிமைகளை எடுத்துக்கொள்ள நாம் காட்டும் வேகத்தை நம் கடமைகளில் நாம் காட்டுவதில்லை. 'அது வேண்டும். இது வேண்டும். இது இல்லை. அது இல்லை!' என முறையிடும் நாம், 'நான் என் குடும்பத்திற்காக, என் பணிநிலைக்காக நான் என்னை செய்திருக்கிறேன்!' என நாம் கேட்பது கிடையாது.
3. 'தொலைநாடு'ஷ தூர இருப்பதன் இன்பம் ஒரு கானல்நீர். 'இந்தப் பிரச்சினை வேண்டாம், நான் ஒதுங்கிக் கொள்கிறேன்' என தனிமனிதர்கள் நினைப்பதும், 'நான் தனிக்குடித்தனம் செல்கிறேன்' என்று தம்பதியர் ஒதுங்கிக் கொள்வதும், 'நான் வெளிநாட்டிற்குப் படிக்கப்போகிறேன், இங்கு என்னால் பணி செய்ய முடியாது' என அருள்நிலைப் பணியாளர்கள் ஒதுங்கிக்கொள்வதும் தொடக்கத்தில் இன்பம் தந்தாலும் காலப்போக்கில் அந்த இன்பம் ஒரு கானல்நீராக மாறுகின்றது. தொலைதூரத்தில் நிற்கும்போது தான் சொந்த வீடு நம் கண்களுக்கு நன்றாகப் படுகின்றது. தொலைந்து போவதன் வெற்றியும் இதுதான். ஒருமுறை தொலைந்த இளைய மகன் இனித் தொலைய மாட்டான்.
4. இந்த உருவகத்;தின் மையமாக இருக்கின்ற வார்த்தைகள்ஷ 'அவன் அறிவு தெளிந்து'. கிரேக்கச் சொல்லாடல் இப்படிச் சொல்லவில்லை. மாறாக 'தன் உண்மை நிலையை மீண்டும் கண்டுணர்வது' என்றே அவை குறிப்பிடுகின்றன. இளைய மகன் 'அவர் என் அப்பா' என்ற ஞானத்தைப் பெற்றான். வீட்டை நோக்கித் திரும்பும் பயணம் நம் உள்ளொளிப் பயணம்தான். மனிதன் தன் வாழ்வில் செய்யும் மிக நீண்ட பயணமும் இந்த உள்மனப் பயணம்தான். இளைய மகன் அறிவு தெளிந்த அளவிற்கு மூத்த மகன் அறிவு தெளியவில்லை. 'அவர் என் அப்பா' எனவும் 'இவன் என் சகோதரன்' என்ற ஞானத்தை மூத்த மகன் பெற்றானா? தந்தையிடம் திரும்பி வருதல் இறையன்பு. சகோதரனிடம் திரும்பி வருதல் பிறரன்பு. இறையன்பும், பிறரன்பும் நம் வாழ்வின் இரு கண்கள்.
5. அன்பில் பரிகாரத்திற்கு அவசியமில்லை. 'இனி நான் மகன் எனக் கருதப்பட தகுதியற்றவன்' என இளைய மகன் தன்னையே ஒரு பணியாளனாகத் தாழ்த்திக்கொண்டாலும், தந்தை அவனைத் தன் மகனாகவே ஏற்றுக்கொள்கின்றார். இதுதான் இறைஇரக்கத்தின் உச்சகட்டமும் கூட. நாம் பாவத்திலிருந்து மனம் மாறி திரும்பி இறைவனிடம் வரும்போது அவர் 'இதைச் செய்! அதைச் செய்! இவ்வளவு பணம் செலுத்து!' என்று நம்மைப் பரிகாரம் செய்யச் சொல்வதில்லை. இருப்பதுபோல் நம்மை ஏற்றுக் கொள்கின்றார். நம்மை அளவுகடந்த அளவில் அன்பு செய்யும் வானக இறைவன் நாம் இவ்வுலகிலிருந்து திரும்பச் செல்லும்போது வெறுங்கையராய்ச் சென்றாலும் நம்மை வாரி அணைத்துக்கொள்வார்.
6. 'என்னால் எல்லாம் முடியும்' என தன் பலத்தை மட்டும் நம்பியிருக்கும் எவராலும் மற்றவர்தரும் கொடையை அனுபவிக்க முடியாது என்பதற்கு மூத்த மகன் ஒரு எடுத்துக்காட்டு. நம் வாழ்வில் நாம் அனுபவிக்கும் அனைத்தும் நாமே சம்பாதித்தது என நினைக்கின்றோம். அதைக்குறித்து பெருமையும் படுகின்றோம். ஆனால் நாம் அனுபவிக்கும் பல நாம் பெற்ற கொடைகளே. நாம் குடிக்கும் தண்ணீர், நாம் சுவாசிக்கும் காற்று, நாம் அனுபவிக்கும் உறவுகள் அனைத்தும் கொடைகளே. இளைய மகனுக்கு வாழ்வு கொடை. ஆனால் மூத்த மகன் அனைத்தையும் தன் உழைப்பால், தன் திறனால் பெற்றுவிடலாம் என நினைக்கிறார். வாழ்வின் ஒரு கட்டத்தில் 'எல்லாம் உம் கொடை' என இறைவனிடம் சரணாகதியாவதே வாழ்வின் தேடலின் உச்சகட்டம். 'நான் யோக்கியம். மற்றவர்கள் அயோக்கியர்கள்' என தன்னைத்தானே உயர்த்தும் போக்கு நம் சொந்த சகோதரனையே நம்மிடமிருந்து அந்நியப்படுத்திவிடுகிறது.
7. 'கொண்டாட்டத்தி;ல் நம்மால் இணையமுடியுமா?' 'அவன் சொத்துக்களை அழித்தான். இனி அவன் அழிந்து போகட்டும்' எனத் தீர்ப்பிட்டான் மூத்த மகன். மற்றவர்களது துன்பத்தில் பங்கு பெறும் நம்மால் பல நேரங்களில் அவர்களது இன்பத்தில், வெற்றியில் பங்குபெற முடிவதில்லை. அதற்குக் காரணம்ஷ 'இது இப்படித்தான் இருக்க வேண்டும்' என்று நாமே முடிவெடுத்துக்கொள்தும், பொறாமையும், தேவையற்ற ஒப்பீடுகளும்தான். ஒருவர் மற்றவரோடு இணைந்து கொண்டாட்டத்தில் பங்கு பெறுவதும் அவசியமே.
8. காத்திருந்த தந்தைஷ கண்டுகொள்ளாத அண்ணன். மற்றவர்கள் காணமற்போகும் போது 'போய்த் தொலைகிறான்' என்று ஒதுங்கிக் கொள்ளாமல் வழிமேல் விழிவைத்து நிற்கின்றார் தந்தை. 'என்னது? திரும்பவும் வந்துவிட்டானா?' என்று புலம்புகின்றான் அண்ணன். இதில் நாம் யார்?
9. 'மூத்த மகன் வீட்டிற்குள் சென்றானா?' இந்தக் கேள்விக்கு நாம் ஒவ்வொருவரும் பதில் சொல்ல வேண்டும். இயேசுவின் உருவகம் ஒரு மறைபொருளாகவே முடிகின்றது. இந்தப் பதில்தான் நாம் 'அறிவு தெளிந்தவிட்டோமா' என்பதை நமக்குக் காட்டும்!
''ஊதாரிமகன்'' உவமை என்பது நமக்குப் பரிட்சயமான ஒன்றுதான்.ஆனால் அதைப்பல கோணங்களில் ஆசிரியர் அலசியிருப்பது பல உண்மைகளை நமக்குப் புரிய வைக்கிறது.பிரிந்து போன மகனுக்குத்தான் நாம் முக்கியத்துவம் கொடுத்துள்ளோமேயன்றி அருமை மகனைப் பிரிந்த தந்தையைப்பற்றிக் கவலைப்பட்டதில்லை.ஒருவேளை நாம் தந்தையைத் தனிமைப்படுத்திய தனயனாய் இருப்பின் அவரை நோக்கித் திரும்புவோம்...அவர் பாசத்தை சுவைக்கத் தொடங்குவோம்..அவரின் அருகாமையில் இருப்பதைவிட சிறந்த பாதுகாப்பு வேறில்லை என்பதை உணரத்தொடங்குவோம். இம்மகா உண்மையை
ReplyDeleteஎளிமையான வார்த்தைகளால் புரியவைத்த ஆசிரியருக்கு நன்றி.