Monday, January 27, 2014

ஆண்டவரே நீர் இங்கு இருந்திருந்தால்...

ஒரு ஜென் துறவியைப் பார்க்க ஒரு பார்வையற்ற மனிதர் ஒரு மாலை நேரம் வருகின்றார். சற்று நேரம் பேசிக் கொண்டு இருந்துவிட்டு அந்த மனிதர் புறப்படுகின்றார். அப்போது இருட்டத் தொடங்கிவிடுகிறது. உள்ளே சென்ற துறவி ஒரு அரிக்கேன் விளக்கைக் கொண்டு வந்து அவரிடம் கொடுத்து, 'இதை எடுத்துக் கொண்டு செல்லுங்கள்!' என்கிறார். அதற்கு பார்வையற்ற மனிதர், 'பகலோ, இரவோ, வெளிச்சமோ, இருளோ எனக்கு அனைத்தும் ஒன்றுதான். இந்த விளக்கை வைத்து நான் என்ன செய்ய?' எனக் கேட்கின்றார். துறவி சொல்கின்றார், 'உனக்காக இல்லையென்றாலும் உன்மேல் யாராவது மோதிவிடாமல் இது உன்னைக் காப்பாற்றும்'. விளக்கைப் பெற்றுக்கொண்டு சிறிது தூரம் செல்கின்றார் பார்வைற்றவர். சற்று நேரத்தில் ஒருவர் அவர் மீது மோதிவிடுகிறார். இவருக்குக் கோபம் வந்துவிடுகிறது. 'என் கையில் விளக்கு இருப்பது கூடத் தெரியவில்லையா? ஏன் மேல் மோதுகிறீர்?' எனக் கேட்கின்றார். 'உன் கையில் விளக்கு இருக்கின்றது. ஆனால் அது அணைந்து கிடக்கின்றது' என்கிறார் மோதியவர். உடனே ஞானம் பெற்றார் பார்வையற்றவர்.

நம்மிடம் இருக்கும் விளக்கு அணைந்து விடும்போது என்ன செய்வது? விளக்கு இருந்தால் மட்டும் போதாது. அதை அணையாமலும் காக்க வேண்டும் அல்லவா? லாசர் என்ற விளக்கு பெத்தானியாவில் அணைந்து கிடக்கிறது. அதை ஏற்ற வருகின்றார் இயேசு. இயேசுவின் உடலில் அவரது இதயம் இருந்ததைவிட பெத்தானியாவில்தான் இருந்தது என்று சொல்லலாம். லாசர், மார்த்தா, மரியா வாழ்ந்த பெத்தானிய இல்லம் இயேசுவுக்கு ஓய்வு இல்லம். தன்னை முழுமையாக ஏற்றக்கொண்டவர்கள் இந்த மூவர்தான். இன்றும் புனித பூமியில் பெத்தானியாவின் மார்த்தா இல்லம் அழகாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அங்கு நுழைந்தவுடன் இயேசு இன்னும் அங்கேயே அமர்ந்திருப்பது போல நம் கண்முன் தோன்றுகிறது. கொடுத்த வைத்த குடும்பம் அது.

1. லாசர் தூங்குகிறான். 'தூக்கம்' - இதுதான் விவிலியம் மரணத்திற்குக் கொடுக்கும் வார்த்தை. 'ஒவ்வொரு தூக்கமும் குறுகிய இறப்பு, ஒவ்வொரு இறப்பும் நீண்ட தூக்கம்' என்பார் ஷேக்ஸ்பியர். 'உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு' என்கிறது திருக்குறள் (339). செபக்கூடத் தலைவர் யாயீரின் மகள் இறந்த போதும் 'சிறுமி உறங்குகிறாள்' என்றே சொல்கின்றார் இயேசு. நாம் தான் இறப்பைப் பற்றி ரொம்பவும் பயப்படுகிறோம். ஆனால் இறைவனின் பார்வையில் அது 'தூக்கம்'. இறப்பைப் பற்றிய நமது பயத்தை மறு ஆய்வு செய்ய அழைக்கின்றது இன்றைய நாள்.

2. 'ஆண்டவரே நீர் இங்கு இருந்திருந்தால்...' ஒவ்வொரு இறப்பு வீட்டிலும் அழுகின்ற இதயங்கள் இதைச் சொல்லித்தான் அழுகின்றன. 'இறைவன் நம்மோடு இல்லை' என்ற ஒரு எண்ணத்தைத் தருவது நம் நெருங்கியவரின் இறப்பு. இறப்பு ஓர் ஈடுசெய்ய முடியாத இழப்பை உருவாக்கி விடுகிறது. ஆண்டவரின் பிரசன்னம் மட்டுமே நிறைவு தரும் என்பதை நமக்கு நினைவுறுத்துவது மரணம்தான். 'மரணம், நோய், மூப்பு' - இந்த மூன்றின் முன் எல்லா அறிவியலும், விஞ்ஞானமும் மண்டியிட்டு விடுகிறது. மார்த்தாவின் அளவுகடந்த நம்பிக்கையை நாம் இங்கு பார்க்கலாம். 'என் இயேசு எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார். அவர் இருக்கும் இடத்தில் குறை இருக்காது' என்று துணிச்சலாக அறிக்கையிடுகின்றார். இந்த நம்பிக்கை நம்மிடம் இருக்கிறதா? மற்றொரு பக்கம் 'கடவுள் இருந்தாலும் இறப்பும் நடக்கும்' என்பதும் மறுக்க முடியாத ஒன்று. இயற்கையின் எதார்த்தங்களை ஏற்றுக்கொள்வதற்கும் மனப்பக்குவம் அவசியம்.

3. கண்ணீர் விடும் கடவுள். விவிலியத்தில் மிகவும் குறுகிய வசனம் யோவான் 11:35 - இயேசு அழுதார். கிரேக்கப் பதிப்பில் இது ஒரே வார்த்தையில் சொல்லப்பட்டுள்ளது. மனிதர்களுக்காக கண்ணீர் விடும் கடவுள். இங்கே தான் இயேசு இம்மானுவேலனாகத் தன்னையே முழுமையாக வெளிப்படுத்துகின்றார். 'அவர்களுடைய கண்ணீர் அனைத்தையும் அவர் துடைத்து விடுவார். இனிமேல் சாவு இராது. துயரம் இராது. அழுகை இராது. துன்பம் இராது' என்ற திருவெளிப்பாட்டு 21:4 வசனம் அன்றே இயேசுவில் நிறைவேறிவிட்டது. 

4. 'ஆண்டவரே நாற்றம் அடிக்குமே!' மார்த்தாவின் நம்பிக்கை கொஞ்சம் தடுமாறுகிறது. 'நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் உயிரோடு இருந்திருப்பான்' என்று முழு நம்பிக்கையை அறிக்கையிட்ட மார்த்தா, 'கல்லைப் புறட்டுங்கள்' என்று இயேசு சொன்னவுடன் கொஞ்சம் தடுமாறுகின்றார். இயேசு நம் வாழ்வில் செயலாற்ற பல நேரங்களில் ஏதோ ஒரு கல் தடையாக இருக்கின்றது. 'அந்தக் கல்லை அகற்று' என்று அவர் நம்மிடம் சொல்லும்போது, 'ஐயோ ஆண்டவரே நாற்றமடிக்குமே. நான் பாவியாயிற்றே. நான் நிறைய தவறுகள் செய்திருக்கிறேனே' என்ற குற்றவுணர்வு இயேசுவைச் செயல்பட முடியாமல் செய்து விடுகிறது. 'நான்கு நாட்கள் என்ன, நாற்பது நாட்கள்' ஆகியிருந்தாலும் இயேசுவால் செயல்பட முடியும்.

5. 'கட்டுக்களை அவிழ்த்து அவனைப் போகவிடுங்கள்!' கடவுளும் மனிதனும் இணைதலே அற்புதம். நம் வாழ்வில் அற்புதங்களை எதிர்பார்க்கிறோம். ஆனால் அதைக் கடவுள் மட்டுமே நடத்த வேண்டும் என நினைக்கிறோம். 'வேலை கிடைக்க வேண்டும்' என்ற அற்புதத்தைக் கடவுள் நிகழ்த்த வேண்டும் என்று நாம் நினைத்தால் 'அதற்கேற்றாற் போல நாம் படித்திருக்க வேண்டும். அல்லது பக்குவப்பட்டிருக்க வேண்டுமே'. இறைவன் நமக்கு உயிர் மட்டும்தான் தர முடியும். நம் கட்டுக்களை நாம் தான் அவிழ்க்க வேண்டும். அல்லது கட்டுண்டிருப்பவர்களை நாம் தான் அவிழ்த்துப் போகவிட வேண்டும். சமூகத்தின் பொறுப்புணர்வையும் இந்த வார்த்தைகள் காட்டுகின்றன. 'நான் என்ன என் சகோதரனுக்குக் காவலாளியா?' என்ற கேள்வி விடுத்து அடுத்தவர்களின் கட்டுக்களை அவிழ்க்கும் பொறுப்புணர்விற்கு அழைக்கின்றார் இயேசு.

1 comment:

  1. Anonymous1/28/2014

    ''பெத்தானியா'' என்றாலே அது ''லாசரின்'' குடும்பத்தை நமக்கு நினைவூட்டும் அளவுக்கு உள்ளது இயேசுவின் மீது அந்தக் குடும்பத்தினர் வைத்திருந்த அசையா நம்பிக்கையும் அவர் அந்தக் குடும்பத்தினர் மீது காட்டிய பாசமிக்க பரிவும்தான்.நாமும் கூட இந்தப் பரமனைப் பற்றிக்கொண்டால் நம் குடும்ங்களும் அந்த ''பெத்தானியக் குடும்பம்'' போன்று அவர் நெருக்கத்தைஉணரலாமே! "என் வாழ்வில்''...இந்தப் பாட்டுக்குச் சொந்தக்காரர்களான அருட்பணி.ஜோ ஆன்டனி சே.ச.மற்றும் அருட்பணி.ஜெரோம் சே.ச இவர்களை இறைவன் நிறைவாக ஆசீர்வதிக்கட்டும்.

    ReplyDelete