Thursday, January 16, 2014

வாழ்க்கை மிகவும் கடினமானது!

உனக்குப் பிடிக்காத எதையும் பிறருக்குச் செய்யாதே. உன் உணவில் ஒரு பகுதியை பசித்திருப்போருக்கு வழங்கு. ஞானிகளிடம் அறிவுரை கேள். எல்லாக் காலத்திலும் உன் கடவுளாகிய ஆண்டவரைப் போற்று. உன் வழிகள் நேரியவையாய் அமையவும் உன் முயற்சிகளும் திட்டங்களும் வெற்றியடையவும் அவரிடம் மன்றாடு. (தோபி 4:15-19) (திருப்புகழ்மாலை, காலை செபம், புதன் 1)

இரண்டு நாட்களுக்கு முன்பாக என் நண்பர் குரு ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவரும் நானும் புனே பாப்பிறைக் குருமடத்தில் மூன்று ஆண்டுகள் ஒன்றாகப் படித்தோம் - படித்தோம் என்று சொல்ல முடியாது. ஒன்றாக இருந்தோம். அவரின் சொந்த ஊர் விஜயவாடா. இப்போது ஜெர்மனி நாட்டில் ஒரு மறைமாவட்டத்தில் உதவிப் பங்குத்தந்தையாகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். தொலைபேசியில் அழைத்த போது அவர் தொலைக்காட்சியில் படம் பார்த்துக்கொண்டிருந்தார். 'என்ன செய்து கொண்டிருக்கிறாய்?' என்று கேட்டேன். 'ஏன். எப்பவும் ஏதாவது செய்து கொண்டே இருக்க வேண்டுமா? இதுதான் உன் கான்சப்டா?' என்றான். 'என்னடா? கோபமாயிருக்கிறாயா?' என்றேன். 'ஆமாம்!' என்றான். சற்று முன் அவர்கள் வீட்டிலிருந்து ஃபோன் செய்தார்களாம். 'ரொம்ப தனியா இருக்கிற மாதிரி இருந்தா ஏதாவது வேலை செய்' என்று சொன்னார்களாம். தனிமையில் இருக்கிறாய் என்பதற்காக குடி, சிகரெட் அடிமையாகிவிடக்கூடாது! ரொம்ப டிவி பார்க்காதே. ஏதாவது படி என்றார்களாம். அதுதான் அவனுக்குக் கோபம். 'ஏன் படம் பார்ப்பது தவறா?' 'ஏன் எப்பவுமே சீரியஸாகவே இருக்க வேண்டுமா?' என்று கேட்டுக்கொண்டே இருந்தான். 

அவனுக்காகப் பரிதாபப்பட எனக்கு மனமில்லை. பின் அவனது அறைகள் ஒவ்வொன்றாய் ஸ்கைப்பில் காட்டினான். அவனே சமைப்பதாய், வீடு கூட்டுவதாய், பாத்திரம் கழுவுவதாய்ச் சொன்னான். 'நம்ம பிழைப்பு பரவாயில்லையே!' என்று தோன்றியது எனக்கு. 'எனக்கு அடிக்கடி ஃபோன் பண்ணு!' அல்லது நான் யாருடனாவது ஓடி விடுவேன் என்று எனக்கு பயமாயிருக்கிறது! என்றான். 'இவ்வளவு கஷ்டத்தோடு ஏன் இன்னும் இங்கு இருக்க வேண்டும்?' என்று கேட்டேன். யாரிடமோ சவால் விட்டு வந்தானாம். 'நான் சாதித்துக் காட்டுவேன்!' என்று சண்டையிட்டு, சவால் விட்டு வந்தேன். நான் போனால் என்னைத் தோல்வியாய்ப் பார்ப்பார்களே. நான் தோற்றதேயில்லை' என்றான்.

'எங்கே வாழ்க்கை தொடங்கும் 
அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம்
என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லாம் மாறிவரும்
பயணம் முடிந்துவிடும்
மாறுவதைப் புரிந்து கொண்டால்
மயக்கம் தெளிந்து விடும்'
என்ற கண்ணதாசனின் வரிகள்தாம் என் நினைவிற்கு வந்தன. 'ஒரு கூட்டுப் பறவையாய்ச் சிரித்துக்கொண்டோம் சில ஆண்டுகளுக்கு முன்!' இன்று எல்லாமே மாறிவிட்டது! எனப் புலம்புகின்றான் அவன். நம் கலாச்சாரத்தில் பல நேரங்களில் நமக்குப் பிடிக்கவில்லையென்றாலும் பல நேரங்களில் அதை மற்றவர்களுக்காகச் செய்ய வேண்டியிருக்கிறதே. அதுவே பல நேரங்களில் நமக்கு துன்பமாக மாறிவிடுகிறது. 

அவனிடம் பேசிக்கொண்டிருந்தபோது ஒன்றை நான் நினைத்துக் கொண்டேன்: ஒவ்வொருவரும் அவரவர் வாழ்க்கையை வாழ அவர்களுக்கு உரிமை உண்டு. 'படித்துக்கொண்டே இருப்பதுதான் சரி!' என்பது எனக்கு ஓகே என்றால் அதுபோல் தான் எல்லாரும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தவறுதானே. 

வாழ்க்கை மிகவும் கடினமானது!


1 comment:

  1. Anonymous1/16/2014

    இறைவன் தாம் தேர்ந்தெடுத்தவர்களைத் தம் அன்பில் நிலைத்திருக்கச் செய்ய பல வழிகளைக்.கையாளுகிறார் அதுஉங்கள் நண்பனின் சவாலாகக் கூட இருக்கலாம்.மனம் ஒரு குரங்கு..இன்று தவறாக நினைப்பது நாளை சரி என்று தோன்றலாம்.பொறுமை காக்கச் சொல்லுங்கள் உங்கள் நண்பரை.''உன் கால் கல்லில் மோதாதபடி.அவர்கள் உன்னைக் கைகளில் தாங்கிக்.கொள்வார்கள்'' என்ற 91ம் சங்கீதத்தை ஞாபகப்படுத்துகிறது தங்களின் தலையங்கப்படம்.நன்றி.

    ReplyDelete