1980 ஆம் ஆண்டு 'காட்ஸ் மஸ்ட் பி கிரேஸி' என்ற ஆப்பிரிக்க காமெடி படம் வெளியானது நம் அனைவருக்கும் தெரியும். அந்தத் திரைப்படத்தின் துவக்கத்தில் இரண்டு உலகங்களைக் காட்டுவார்கள்: ஒரு உலகத்தில் தோட்டங்கள் இருக்கும். மறு உலகத்தில் உயர்ந்த கட்டடங்கள் இருக்கும். ஒரு உலகத்தில் குழந்தைகள் ஓடியாடி விளையாடுவார்கள். மறு உலகத்தில் குழந்தைகள் பள்ளிக்குப் பெரிய சுமைகளைச் சுமந்து கொண்டு செல்வார்கள். ஒரு உலகத்தில் ஒருவர் ஆற்றங்கரையில் மீன் பிடித்துக் கொண்டிருப்பார். மறு உலகத்தில் அலுவலகத்திற்குள் பேக் மற்றும் ஃபைல்களோடு பலர் ஓடிக் கொண்டிருப்பர். முதல் உலகம் சூரியன் மற்றும் சந்திரனின் இயக்கங்களுக்குக் கட்டுப்பட்டதாக இருக்கும். இரண்டாவது உலகம் கடிகாரத்திற்குக் கட்டுப்பட்டதாக இருக்கும். வெறும் எண்களால் கட்டப்பட்ட இந்த இரண்டாவது உலகம் மிகவும் பரிதாபமானது என்ற தலைப்புடன் தொடங்கும் திரைப்படம். ஒரு காட்டில் வசிக்கும் ஆதிவாசிகளுள் ஒருவர் ஒரு கோகோ கோலா பாட்டிலை வயல்வெளியில் கண்டுபிடிப்பார். அதை மிகவும் ஆச்சரியத்துடன் பார்ப்பார். அது எதற்குப் பயன்படும் என்பது அவருக்குத் தெரியாது. அதை தன் ஊருக்குக் கொண்டு வந்த அனைவரிடமும் காட்டுவார். பெண்கள் அதை மாவரைக்கவும், சப்பாத்தி சுடவும் பயன்படுத்தவர். சிறுவர்கள் அதனுள் கற்களைப் போட்டு விளையாடுவர். பெரியவர்கள் அதற்குள் காற்றை ஊதி சமிக்ஞைகள் எழுப்புவர். ஆனால் யாருக்கும் அது என்ன என்பது தெரியாது. ஒரு கட்டத்தில் அந்தப் பாட்டிலுக்காக ஊருக்குள் சண்டைகள் தொடங்கும். 'எனக்குத்தான்! எனக்குத்தான்!' என்ற போட்டிகள் எழும். ஒரு கட்டத்தில் ஒருவர் அந்தப் பாட்டிலைக் கொண்டு மற்றவரை அடித்துக் காயப்படுத்திவிடுவார். இதைப் பார்த்த அதைக் கொண்டு வந்தவர் மறுபடியும் அதை எடுத்துக்கொண்டு போய் ஓடுகின்ற ஆற்றுக்குள் எறிந்து விடுவார். ஊருக்குள் அமைதி திரும்பும்.
திடீரென்று வந்த ஒரு பொருள் ஊருக்குள் பெரிய கவலையை உருவாக்கி விட்டதே என அனைவரும் வருத்தம் தெரிவிப்பார்கள். இன்றைய நற்செய்தி 'கவலைப்படாதீர்கள்' என நமக்குச் சொல்கிறது. எதற்காகக் கவலைப்படக் கூடாது? ஏனெனில் வானத்துப் பறவைகளும், வயல்வெளி மலர்களும் கவலைப்படுவதில்லை. மனிதர்களாகிய நாம் ஆறறிவு படைத்தவர்கள். ஏழாம் அறிவுக்கும் சொந்தக்காரர்கள். ஆனால் பல நேரங்களில் நம் பிரச்சினைகள் மற்ற மிருகங்களின் பிரச்சினைகளை விட அதிகமாகவே இருக்கின்றது. எந்த ஒரு ஆட்டுக்குட்டியும் தாழ்வு மனப்பான்மையால் துன்புறுவதில்லை. கன்றுக்குட்டி ஆளுமை வளர்ச்சிக்கான வகுப்புக்களுக்குச் செல்வதில்லை. கோழிக்குஞ்சு ஒருநாளும் மயிலைப் பார்த்துப் பொறாமைப்படுவதில்லை. முயல் வேகமாக ஓடுகிறதே, தன்னால் ஓட முடியவில்லையே என மீன் என்றும் கவலைப்பட்டதில்லை. மனிதர்கள் மட்டுமே இந்த அனைத்து உணர்வுகளாலும் அலைக்கழிக்கப்படுகின்றனர்.
கவலை. இது நாம் அனைவரும் எதிர்கொள்ளும் ஒரு உணர்வு. இந்த உணர்விற்குப் பின்னால் இருக்கும் மற்ற உணர்வு பாதுகாப்பின்மை. நடந்தவற்றைக் குறித்தும் கவலைப்படுகிறோம். நடக்கப்போவதைப் பற்றியும் கவலைப்படுகிறோம். காதலி கிடைக்கவில்லையே என்ற கவலை, காதலி கிடைத்தவுடன் 'நம்மை விட்டுப் போய்விடுவாளோ!' என்ற கவலையாக மாறிவிடுகிறது. சாப்பாடு இல்லையே என்ற கவலை சாப்பாடு கிடைத்தவுடன், 'சாப்பிட்டால் குண்டாகிவிடுவோமோ?' என்ற கவலையாக மாறிவிடுகிறது. கரண்ட் இல்லையே என்ற கவலை கூடிய சீக்கிரம் 'இவ்வளவு கரண்ட் பில்லா?' என்ற கவலையாக மாறிவிடுகிறது. நாம் மகிழ்ச்சி தரும் என்று நினைப்பதே பல நேரங்களில் கவலையாக மாறிவிடுகிறது.
'தேவையற்ற கவலைகள் எதற்கு?' என்பர் சிலர். கவலைகள் என்றாலே தேவையற்றவைதானே. தேவையுள்ள கவலைகள் இருக்கின்றனவா என்ன? நாமே உருவாக்கிக்கொள்ளும் மனித அமைப்புகள் நமக்குக் கவலை தருவனவாக மாறிவிடுகின்றன. அமைப்புகள் இல்லாதவரை கவலைகள் இல்லை. ஆனால் அமைப்புகளைக் கடந்து வர நம்மால் இயலாது. ஆனால் கவலைகளைக் கடந்து வர இயலும்.
1. கவலைகள் பயனற்றவை. 'கவலைப்படுவதால் வளர்த்திக்கு ஒரு முழம் கூட்ட முடியும்' என்றால் இன்று நாம் அனைவரும் மிகவும் உயரமானவர்களாக இருப்போம். கவலைப்படுபவர்கள் தீர்வு காண்பதில்லை என்பார்கள். எடுத்துக்காட்டாக, தேர்வு கடினமாக இருக்குமோ எனக் கவலைப்படும் மாணவன் படித்தாலும், கடின உழைப்பு செய்தாலும் அது அவனிடம் தங்குவதில்லை. அவனது கவலை அவனது செயல்திறனைக் குறைத்துவிடுகிறது. நாம் கவலைப்படும்போது நம் ஆற்றல் குறைந்து விடுகிறது. எதற்காக நாமே நம் ஆற்றலைக் குறைத்துக் கொள்ள வேண்டும்?
2. முதன்மைப்படுத்த வேண்டும். வாழ்வியல் மதிப்பீடுகளை முதன்மைப்படுத்துபவர்கள் கவலைப்படுவதில்லை. 'உணவை விட உயிரும், உடையைவிட உடலும் முதன்மையானவை' என்பது நமக்குத் தெரிய வேண்டும். பல நேரங்களில் நம் கவலைகளுக்குக் காரணம் திட்டமிடாமையும், முதன்மைப்படுத்தாத தன்மையும் தான். எல்லாவற்றையும் போட்டுக் குழப்பி ஒன்றும் செய்ய முடியாமல் போய்விடுகின்றது. கிரிக்கெட் பார்க்க வேண்டும் என்ற ஆசையும் இருக்கின்றது. படிக்க வேண்டும் என்ற பயமும் இருக்கின்றது. விடிய விடிய கிரிக்கெட் பார்த்துவிட்டு ஐயோ தேர்வுக்குப் படிக்கவில்லையே என்று கவலைப்படுவது நாம் முதன்மைப்படுத்தத் தெரியாதவர்கள் என்பதையே காட்டுகிறது.
3. உடனடி இன்பம். கவலை வர அதிகக் காரணம் இதுதான். 'நாம் நினைப்பதை உடனடியாகச் செய்துவிட வேண்டும்'. தாவீது அரசர் சிறந்த உதாரணம். மதிய நேரம் தூக்கம் வராமல் மாடியில் உலாவுகின்றார். பெத்சேபாவைப் பார்க்கின்றார். அவரோடு உறவு கொள்கின்றார். எல்லாம் முடிந்தது என நினைக்கின்றார். பெத்சேபா என்ற பெண் தந்த இன்பம் கொஞ்ச நாட்களில் துன்பமாக மாறிவிடுகிறது. அவள் கருத்தரித்து விட்டாள். அதை மறைக்க வேண்டும். அவளது கணவனை அழைக்கிறார். கணவன் வீடு செல்ல மறுக்கிறான். ஒன்றை மறைக்க மற்றொன்று. இறுதியில் கொலை. 'நாம் இன்பம் தரும்' என்று நினைக்கும் பல நமக்குத் துன்பமே தருகின்றன. ஆகையால் உடனடி இன்பங்களுக்கு உடன்படாமல் இருப்பது நம் கவலை போக்கும்.
4. செல்வமா? கடவுளா? இந்தக் கேள்விக்கு நாம் தரும் பதிலைப் பொறுத்தே நம் கவலை அதிகரிக்குமா, குறையுமா என்பது தெரியும். 'இறையரசையும் அதன் நீதியையும் நாடுங்கள். எல்லாம் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்' என்கிறது நற்செய்தி.
திடீரென நம்மிடம் வந்து இன்று நாம் பற்றிக் கொண்ட 'பாட்டில்கள்' எவை? அவைகள் நமக்குக் கவலை தருகின்றனவா? 'நாம் வானத்துப் பறவைகளை விட மேலானவர்கள்!'