Saturday, January 9, 2021

நீர்நிலைகளுக்கு வாருங்கள்!

ஆண்டவரின் திருமுழுக்கு

I. எசாயா 55:1-11 II. 1 யோவான் 5:1-9 III. மாற்கு 1:7-11

நீர்நிலைகளுக்கு வாருங்கள்!

இன்றைய பதிலுரைப்பாடலின் பல்லவியாக, 'மீட்பளிக்கும் ஊற்றுகளிலிருந்து அகமகிழ்வோடு தண்ணீர் முகந்துகொள்வீர்' (காண். எசா 12) தரப்பட்டுள்ளது. இயேசுவின் திருஇருதயப் பெருவிழா அன்று திருப்பலியின் வருகைப் பல்லவியாகவும் இவ்வாக்கியம் அமைந்துள்ளது. 'தண்ணீரை நோக்கி வருமாறு அழைத்தல்' அல்லது 'தண்ணீரை நோக்கிச் செல்லுதல்' விவிலியத்தில் வளமை, பசுமை, மற்றும் செழிப்பைச் சுட்டிக்காட்டுகிறது.

ஏன்?

பாலஸ்தீனமும் இஸ்ரயேலின் பெரும் பகுதியும் பாலைநிலப் பகுதி. பாலைநிலப் பகுதியில் வாழ்பவர்களுக்குத் தண்ணீர் மிகப் பெரிய புதையல். தண்ணீர் இருக்கும் இடம் நாடி அவர்கள் செல்வது இயல்பு. முதல் படைப்புக் கதையாடலிலும் எங்கும் தண்ணீர் நிறைந்திருப்பதை நாம் காண முடிகிறது. மேலும், தண்ணீர் வாழ்வின் ஊற்றாகவும் இருக்கிறது. ஏதேன் தோட்டத்திற்கு நீர் பாய்ச்சுவதற்காக பீசோன், கீகோன், திக்ரீசு, மற்றும் யூப்பிரத்தீசு என்னும் நான்கு ஆறுகள் ஓடுகின்றன (காண். தொநூ 2:10-14). ஆகார் தண்ணீர் தந்து தனக்கு வாழ்வுதரும் இறைவனைக் கண்டுகொள்கின்றார் (காண். தொநூ 21:19). தானும் தன் ஊர் மக்களும் பயன்படுத்துவதற்காக கிணறு ஒன்றை வெட்டுகின்ற ஆபிரகாம் அபிமெலக்கோடு உடன்படிக்கை செய்துகொள்கின்றார் (காண். தொநூ 21:22-33). யோர்தான் ஆற்றை யோசுவாவின் தலைமையில் கடக்கின்ற இஸ்ரயேல் மக்கள் வாக்களிக்கப்பட்ட நாட்டுக்குள் நுழைகின்றனர் (காண். யோசு 3). ஆண்டவரைத் தன் ஆயர் என அழைக்கின்ற தாவீது, 'அமைதியான நீர்நிலைகளுக்கு என அழைத்துச் செல்வார்' (காண். திபா 23:2) என்று பாடுகின்றார்.

ஆக, புதிய வாழ்வு, புதிய தொடக்கம், புதிய திருப்பம், புதிய நாடு, புதிய நிறைவு எனப் புதியவற்றின் ஊற்றாக இருக்கின்றது நீர்நிலை.

இன்றைய முதல் வாசகத்தில், 'நீர்நிலைகளுக்கு வாருங்கள்' என இஸ்ரயேல் மக்களை அழைக்கின்றார் ஆண்டவராகிய கடவுள். நற்செய்தி வாசகத்தில், 'இயேசு நீர்நிலைக்கு வருகின்றார்.' நாமும் நம் திருமுழுக்கு நாளில் நீர்நிலைக்கு நம் பெற்றோராலும் ஞானப் பெற்றோராலும் அழைத்துச் செல்லப் பெற்றோம். நீர்நிலைகளுக்கு வருதல் என்பதன் பொருள், திருமுழுக்கின் பொருள், மற்றும் நீர்நிலைக்கு வர நாம் செய்ய வேண்டியவை எவை என்று இன்று சிந்திப்போம்.

முதல் வாசகம் (காண். எசா 55:1-11) 'இரண்டாம் எசாயா' நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. பாபிலோனிய அடிமைத்தனம் நிறைவுறும் காலத்தில் (கி.மு. 536) இந்த இறைவாக்கு உரைவாக்கப்படுகிறது. பாபிலோனிய அடிமைத்தனத்தின் நிறைவையும், அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறும் மக்கள் பெறும் மகிழ்ச்சியையும் முன்னுரைப்பதாக இருக்கிறது இந்த இறைவாக்குப் பகுதி. இஸ்ரயேல் மக்கள் தங்கள் உடன்படிக்கை உறவிலிருந்து பிறழ்வுபட்டதால் ஆண்டவராகிய கடவுள் பாபிலோனிய நாடுகடத்தலுக்கு அவர்களை உட்படுத்தினார் என்ற செய்தியைத் தெரிவித்த எசாயா, இன்று, அவர்கள் திரும்பி வரும்போது மீண்டும் அதே பழைய பிரமாணிக்கமின்மையில் விழக்கூடாது என அவர்களை எச்சரிக்கின்றார்.

முதல் வாசகம் மூன்று பகுதிகளாக அமைந்துள்ளது: ஒன்று, விருந்துக்கான அழைப்புளூ இரண்டு, மனந்திரும்புதலுக்கான கட்டளைளூ மூன்று, கடவுளின் வாக்குறுதியின் உறுதித்தன்மை. 'வாருங்கள்! பருகுங்கள்! உண்ணு ங்கள்!' என்று தன் மக்களை அழைக்கின்றார் ஆண்டவராகிய கடவுள். தண்ணீரும் உணவும் ஆண்டவராகிய கடவுள் வழங்குகின்ற விருந்தின் உருவகங்களாக இருக்கின்றன. இந்த விருந்தில் பங்கேற்க வேண்டுமெனில், அவர்கள் ஆண்டவராகிய கடவுளுக்குச் செவிகொடுக்க வேண்டும். அவரை நோக்கித் திரும்ப வேண்டும். கடவுளின் வாக்குறுதியின் உறுதித்தன்மை இரண்டு நிலைகளில் வரையறுக்கப்படுகிறது: ஒன்று, கடவுளின் எண்ணங்கள் மனித எண்ணங்களை விட உயர்ந்தவை. இரண்டு, கடவுளின் வார்த்தை எதற்காகப் புறப்பட்டதோ அதைச் செய்து முடிக்கிறது.

இரண்டாம் வாசகத்தில் (காண். 1 யோவா 5:1-9) தொடக்ககாலக் கிறிஸ்தவ நம்பிக்கை மற்றும் செயல்பாடுகளின் அடிப்படை இருப்பதைக் காண்கிறோம். இயேசுவை, 'கிறிஸ்து' என ஏற்று நம்பிக்கை அறிக்கை செய்வதே முதன்மையானது. இந்த நம்பிக்கையால் ஒருவர் உலகை வெல்கிறார். 'உலகு' என்பது தீமையின் அடையாளம். மேலும், இந்த நம்பிக்கை கொண்டிருப்பவர் ஒருவர் மற்றவரை அன்பு செய்கிறார். இரண்டாம் வாசகத்தின் இரண்டாம் பகுதி, யோவான் கொண்டிருந்த மூவொரு இறைவன் பற்றிய புரிதலை நமக்குச் சொல்கிறது. 'நீராலும் இரத்தத்தாலும் வந்தவர் இயேசு' என்கிறார் யோவான். இதன் வழியாக, இயேசுவின் பணி நீரில் (திருமுழுக்கில்) தொடங்கி, இரத்தத்தில் (சிலுவையில்) நிறைவுறுகிறது என்று இயேசுவின் ஒட்டுமொத்தப் பணி, பாடுகள், மற்றும் இறப்பைச் சுருங்கச் சொல்கின்றார். தூய ஆவியார், இயேசுவின் மீட்புப் பணியின் தாக்கத்தை நம்பிக்கையாளர்கள் இதயத்தில் நம்பிக்கை மற்றும் அன்பு வழியாகத் தொடர்ந்து நடைபெறச் செய்கின்றார். இறுதியாக, இயேசுவின் பணியும், தூய ஆவியாரின் செயல்பாடுகளும் கடவுளின் அன்புக்கும் மீட்புத் திட்டத்துக்கும் சான்று பகர்கின்றன. ஆக, கிறிஸ்தவ வாழ்வு என்பது இயேசுவை நம்புவதிலும், அந்த நம்பிக்கையில் நிலைத்திருந்து ஒருவர் மற்றவரை அன்பு செய்வதிலும் அடங்கியுள்ளது. நம்பிக்கையை அறிக்கையிட்டு, அன்பினால் செயல்பட நம்பிக்கையாளர்களின் அழைக்கப்படுகின்றனர்.

நற்செய்தி வாசகம் (காண். மாற் 1:7-11), இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளது. முதல் பகுதியில், திருமுழுக்கு யோவான் தன்னைப் பற்றியும், தனக்குப் பின் வருபவர் பற்றியும் சான்று பகர்கின்றார். இரண்டாவது பகுதியில், இயேசுவின் திருமுழுக்கு நிகழ்வை மாற்கு பதிவு செய்கின்றார். திருமுழுக்கு யோவான், இயேசு தன்னைவிட வலிமை வாய்ந்தவர் என உரைக்கின்றார். இயேசுவின் வலிமை அல்லது மேன்மை அவர் தரும் திருமுழுக்கில் உள்ளது: இயேசு தரும் திருமுழுக்கு தூய ஆவியால் நிகழ்ந்தேறுகிறது. இது இயேசுவின் உயிர்ப்புக்குப் பின்னர் நிகழும் பெந்தகோஸ்தே நிகழ்வை முன்னுரைப்பதாக அமைந்துள்ளது. மேலும், திருமுழுக்கு யோவான் தன்னை இயேசுவின் அடிமை அல்லது பணியாளர் என்ற நிலைக்குத் தன்னையே தாழ்த்திக் கொள்கிறார். 

இயேசு திருழுக்கு யோவானின் திருமுழுக்கை ஏற்றுக்கொள்கின்றார். யோவான் மனமாற்றத்துக்கான திருமுழுக்கை வழங்கினார். இயேசு தன் பாவங்களுக்காக அல்ல, மாறாக, தன் பணிவாழ்வின் தொடக்கத்தை முன்னிட்டே யோவானிடம் திருமுழுக்கு பெறுகின்றார். ஆகையால்தான், 'என் அன்பார்ந்த மகன் நீயே. உன் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்' என வானத்திலிருந்து குரல் கேட்கிறது. இயேசுவின் பணிவாழ்வுத் தொடக்கத்தை கடவுள் ஏற்பதாக இக்குரல் ஒலி அமைகிறது. 

ஆக, 

முதல் வாசகத்தில், நீர்நிலை என்பது ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களுக்கு வாக்களித்த நிறைவு மற்றும் மகிழ்ச்சியின் அடையாளமாக உள்ளது.

இரண்டாம் வாசகத்தில், நீரினால் திருமுழுக்கு பெறுகின்ற நம்பிக்கையாளர், இயேசுவின்மேல் நம்பிக்கை அறிக்கை செய்வதுடன், நம்பிக்கையை அன்புச் செயல்களால் வாழ்ந்து காட் அழைக்கப்படுகின்றார்.

நற்செய்தி வாசகத்தில், நீர்நிலைக்கு வருகின்ற இயேசு இறையனுபவம் பெறுகின்றார். அதுவே அவருடைய பணிவாழ்வின் அடித்தள அனுபவமாக அமைகிறது.

இயேசுவின் திருமுழுக்கு பெருவிழா நமக்குத் தரும் செய்தி என்ன? 'நீர்நிலைக்கு வாருங்கள்' 

நீர்நிலைக்கு வருவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

(1) நீர்நிலைக்கு வருதல் ஓர் அன்றாட நிகழ்வு

நாம் குழந்தைகளாக இருந்தபோது திருமுழுக்கு பெற்றோம். அந்த நேரத்தில், நம் பெற்றோரும் ஞானப் பெற்றோரும் திருமுழுக்கு நீர்த் தொட்டி என்னும் நீர்நிலைக்கு நம்மை அழைத்துச் சென்றனர். அந்த நீர்நிலையில் நாம் கழுவப்பெற்றோம், நம் பாவங்கள் மன்னிக்கப்பட்டு, நாம் திருஅவையின் உறுப்பினர்களாக, கிறிஸ்துவின் மறையுடலில் ஓர் உறுப்பாக மாறினோம். அந்த நிகழ்வில் நம் சார்பாகப் பங்கேற்றவர்கள் நம் பெற்றோர்களும், ஞானப் பெற்றோர்களுமே! இன்று நாம் அந்த நிகழ்வை எண்ணிப் பார்க்கலாம். திருமுழுக்குத் தொட்டி என்னும் நீர்நிலைக்கு நான் செல்வதற்குக் காரணமாக இருந்த அவர்களுக்காக நாம் நன்றி கூறுவதோடு, அந்த நிகழ்வு நம்மில் ஏற்படுத்திய தூய்மை மற்றும் ஒளிநிறை வாழ்க்கையை மீண்டும் வாழ உறுதி எடுக்கலாம்.

(2) செவிகொடுத்தல்

நீர்நிலைகளுக்கு வர வேண்டுமெனில், நாம் செவிகொடுக்க வேண்டும். ஆண்டவர் அருகில் இருக்கும்போதே அவரைத் தேட வேண்டும். அவரின் வாக்குப்பிறழாமையில் நம்பிக்கை கொள்ள வேண்டும். இன்று நாம் விரும்புகிறோமா விரும்பவில்லையோ நிறையக் காணொளிகளிலும், ஒலிகளிலும் செய்திகளைக் கேட்கின்றோம். பெரும்பாலான செய்திகள் நமக்குப் போலியான நம்பிக்கையையே தருகின்றன. அல்லது நம் நம்பிக்கையைக் குலைத்து நமக்கு அச்சம் ஏற்படுத்துவதாக உள்ளன. ஆண்டவராகிய கடவுளின் செய்தியும் அழைப்பும் நமக்கு ஆறுதல் மட்டுமே தருகின்றது. இன்று நான் அவருடைய குரலுக்குச் செவிகொடுக்கத் தடையாக உள்ள அக மற்றும் புறக் காரணிகளை நான் அகற்றிவிடத் தயாராக இருக்கின்றேனா?

(3) இலக்குத் தெளிவும் தெரிவும்

தன் பணி என்ன என்பதையும், தன் பணியின் நேரம் என்ன என்பதையும் தெளிந்து தெரிகின்ற இயேசு, உடனடியாகச் செயல்படுத்துகிறார். தெளிவும் தெரிவும் கொண்டிருக்கின்ற ஒருவர் மட்டுமே நீர்நிலைக்கு வர முடியும். மேலும் நீர்நிலையில் இறங்கியபின் பழைய வாழ்க்கைக்கு ஒருவர் திரும்ப முடியாது. ஆக, திரும்ப முடியாத திடம் கொண்டிருத்தல் அவசியம்.

இறுதியாக,

இன்று நமக்கு முன் நீர்நிலைகள் போல பல கானல்நீர்த் தடாகங்கள் இருக்கின்றன. அவற்றின்பின் நாம் செல்வதால் நம் ஆற்றல் விரயமாவதுடன், அவற்றால் நாம் எந்தப் பயனும் அடைய முடிவதில்லை.

'நீங்கள் வலப்புறமோ, இடப்புறமோ எப்பக்கம் சென்றாலும், 'இதுதான் வழி, இதில் நடந்து செல்லுங்கள்' என்னும் வார்த்தை பின்னிருந்து உங்கள் செவிகளில் ஒலிக்கும்' (காண். எசா 30:21).

அக்குரல் வழி சென்றால், நீர்நிலையை நாம் அடையலாம். அந்த நீர்நிலையில் நாம் நுழைந்தால் நமக்கு மேலும் குரல் ஒலிக்கும்!

2 comments:

  1. *1)நீர்நிலைக்கு வாருங்கள்'
    *2)நீர்நிலைகளுக்கு வர வேண்டுமெனில், நாம் செவிகொடுக்க வேண்டும்.
    *3)இலக்குத் தெளிவும் தெரிவும்.
    தெளிவும் தெரிவும் கொண்டிருக்கின்ற ஒருவர் மட்டுமே நீர்நிலைக்கு வர முடியும். மேலும் நீர்நிலையில் இறங்கியபின் பழைய வாழ்க்கைக்கு ஒருவர் திரும்ப முடியாது. ஆக, திரும்ப முடியாத திடம் கொண்டிருத்தல் .
    *4) கானல்நீர்த் தடாகங்களை,இனங்கண்டு தவிர்த்தல்
    **†**
    நீங்கள் வலப்புறமோ, இடப்புறமோ எப்பக்கம் சென்றாலும், 'இதுதான் வழி, இதில் நடந்து செல்லுங்கள்' என்னும் வார்த்தை பின்னிருந்து உங்கள் செவிகளில் ஒலிக்கும்' (காண். எசா 30:21).

    அக்குரல் வழி சென்றால், நீர்நிலையை நாம் அடையலாம். அந்த நீர்நிலையில் நாம் நுழைந்தால் நமக்கு மேலும் குரல் ஒலிக்கும்!

    ***இவரே,என் அன்பார்ந்த மகன்(ள்) என்று...

    அவ்வொலிதனை நிறைவாய் கேட்டிட,நம்மை தகுதியாக்க வேண்டும்.

    GREAT👍

    ReplyDelete
  2. மேலேயுள்ள படத்தையும், முதல் ஏற்பாட்டிலிருந்து தந்தைக் குறிப்பிட்டிருக்கும் நீர்த்தடாகங்களையும் வாசிக்கையிலேயே உள்ளையிருக்கும் பசுமை நம் கண்களுக்குப் புலப்படுகிறது.

    கடவுளின் எண்ணங்கள் மனிதனின் எண்ணங்களை விட மேலானவை; அவர் கொடுக்கும் விருந்தில் பங்கேற்க வேண்டுமெனில் அவருக்கு செவி மடுக்க வேண்டுமெனும் முதல் வாசகமும்....
    கிறிஸ்தவ வாழ்க்கை என்பது இயேசுவை நம்புவதிலும், அடுத்தவரை அன்பு செய்வதிலும் அடங்கியுள்ளது என்று கூறும் இரண்டாம் வாசகமும்....
    இயேசு தன் பாவங்களைக் குறித்து அல்ல..தன் பணிவாழ்வின் பொருட்டே திரு முழுக்கு பெற்றார் என்று கூறும் நற்செய்தி வாசகமும்....
    இயேசுவின் “ திருமுழுக்கே” இந்நாளின் கருப்பொருள் என்று நமக்குச் சொல்கிறது.” “என் அன்பார்ந்த மகன் நீயே! உன் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்” எனும் விண்ணகத்தந்தையின் வார்த்தைகளும் இதன் பொருட்டே!

    இன்றைய வார்த்தைகளின் வழியாக நம் வாழ்க்கை சவாலாக “ நீர் நிலைக்கு வாருங்கள்” என்ற தந்தையின் அறைகூவலுக்கு நம் பதிலிறுப்பு.....
    நாம் திருமுழுக்கு பெற்ற நீர்த்தொட்டியையும்,அதற்கு சாட்சியாக நின்ற நம் ஞானப்பெற்றோரையும் பாசமுடன் நினைத்துப்பார்க்கவும்....இயேசுவின் குரல் கேட்கத் தடையாயுள்ள அனைத்துக் காரணிகளையும் புறந்தள்ளவும்.. ஒருமுறை நீர்நிலையில் இறங்கியபின் பழைய வாழ்க்கையைத் திரும்பிப்பாராமல் இருக்கவும் நாம் சூளுரைக்க எதிர்பார்க்கப்படுகிறோம்.
    நான் எவ்வழி சென்றிடினும்.....” நீங்கள் இடப்புறமோ,வலப்புறமோ எப்பக்கம் சென்றாலும்,’ இதுதான் வழி, இதில் நடந்து செல்லுங்கள்” எனும் வார்த்தைகள் என் பின்னாலிருந்து ஒலிப்பதை நான் கேட்க விழைகிறேன்.....அவ்வொலியே என்னை நீர்நிலைக்குலழைத்துச்செல்லும் கைத்தடி என்பதை நான் நம்புகிறேன்.
    அழகானதொரு மறையுரை தந்த தந்தைக்கு வாழ்த்துக்களும்...ஞாயிறு வணக்கங்களும்!!!

    ReplyDelete