Sunday, January 31, 2021

கல்லறைகளே உறைவிடம்

இன்றைய (1 பிப்ரவரி 2021) நற்செய்தி (மாற் 5:1-20)

கல்லறைகளே உறைவிடம்

மாற்கு நற்செய்தியாளரின் நூல் சிறிய அளவில் இருந்தாலும், பல நிகழ்வுகளை மிக அழகாக வடித்திருக்கின்றார். அதாவது, சின்னஞ்சிறிய தகவல்களையும் பதிவு செய்வதில் அவர் வல்லவர். அவருடைய இலக்கியத் திறத்திற்குச் சான்றாக அமைகிறது இன்றைய நற்செய்தி வாசகம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் வரும் ஒரு வாக்கியம் என்னை மிகவும் கவர்ந்ததுண்டு:

'பேய் பிடித்திருந்த அந்த நபர் ஆடையணிந்து அறிவுத் தெளிவுடன் அமர்ந்திருப்பதைக் கண்டு மக்கள் அச்சமுற்றார்கள்.'

இந்த வாக்கியத்திலிருந்து நம் சிந்தனையைத் தொடங்குவோம்.

யார் அந்த நபர்?

அவர் தான் தீய ஆவி பிடித்தவர். இலேகியோன் பிடித்திருந்ததாக அவரே சொல்கிறார். 'இலேகியோன்' என்றால் உரோமைப் படையின் 6000 வீரர்கள் கொண்ட பெரும் படைப்பிரிவு. ஆக, ஏறக்குறைய 6000 பேய்கள் ஒரே நபரைப் பிடித்திருக்கின்றன. பாவம் அந்த மனிதர்! 'கல்லறைகளே அம்மனிதரின் உறைவிடம்' - ஆக, வாழும்போதே இறந்தவராகக் கருதப்பட்டுள்ளார். அல்லது ஊரை விட்டு அவரை விரட்டியடித்திருப்பார்கள். அவரின் வன்முறையைக் கட்டுப்படுத்துவதற்காக மக்கள் அவரைச் சங்கிலிகளால் பிணைக்க முயன்றாலும் அவர் அவற்றை உடைந்தெறிந்துவிடுகின்றார். மேலும், கல்லறைகளிலும் மலைகளிலும் கூச்சலிட்டுக் கொண்டே, கற்களால் தன்னைக் கிழித்துக் கொள்கின்றார்.

என்ன ஓர் அலைக்கழிப்பு! அந்தப் பேய்கள் அவரைத் தூங்கவும் விடவில்லை, அமரவும் விடவில்லை. மிகவும் இரக்கத்துக்குரியவர் அவர்! அதே நிலையில் நாம் இருந்தால் எப்படி இருக்கும்! இந்த நிலை நம் எதிரிக்கும் வரக்கூடாது. 

ஆனால், அந்த ஊர் மனிதர்களுக்கு அது பழக்கமாகிவிட்டது. அதாவது, தங்களைப் போல உள்ள ஒருவருக்கு பேய் பிடித்திருக்கிறதே என்ற வருத்தம் ஊரார் யாருக்கும் இல்லை. 'அவன் பேய் பிடித்தவன். அவன் அப்படித்தான் இருப்பான்' என்று முத்திரை குத்து அதற்குப் பழகிவிட்டார்கள். அதனால்தான், அவனுடைய கூச்சலையும் கொடிய உருவத்தையும் வன்முறையையும் கண்டு அஞ்சாத மக்கள், அவர் ஆடையணிந்து அறிவுத்தெளிவுடன் இருப்பதைக் கண்டு அஞ்சுகின்றனர்.

அதாவது, நம்மைச் சுற்றியிருப்பவர்களைப் பொருத்தவரையில், நாம் அவர்களுடைய எண்ணங்கள்போல இருக்கும் வரை அவர்களுக்குப் பிரச்சினையில்லை. சற்றே மாறிவிட்டோம் என்றால், அவர்கள் நம்மைப் பார்த்து அச்சம் கொள்கிறார்கள். நம்மை அழித்துவிட முனைகிறார்கள். 

என்னுடைய மாற்றம் எனக்கு அடுத்திருப்பவருக்கு அச்சம் தருகிறது.

இயேசு தீய ஆவியை விரட்டும் நிகழ்வு மூன்று நிலைகளாக நடக்கிறது:

முதலில், 'தீய ஆவியே, இந்த மனிதரை விட்டு வெளியே போ!' என்று இயேசு தீய ஆவிக்குக் கட்டளையிடுகிறார்.

இரண்டாவதாக, தீய ஆவி பிடித்த நபர், 'உமக்கு இங்கு என்ன வேலை?' என்று இயேசுவிடம் கேட்கின்றார். இயேசுவின் திருமுன்னிலை அவருக்கு அச்சம் தருகின்றது.

மூன்றாவதாக, தீய ஆவி பிடித்த நபருடன் உரையாடுகின்ற இயேசு, நபரின் வேண்டுகோளுக்கிணங்க, அதை அல்லது அவற்றைப் பன்றிக் கூட்டத்துக்குள் அனுப்பி விடுகிறார்.

பன்றிகள் கடலில் விழுந்து மடிகின்றன. பன்றி என்பது தீட்டான விலங்கு. தீட்டுக்குள் நுழைகின்ற தீய ஆவி, தனது இருப்பிடமான கடலுக்குச் செல்கிறது. 

அந்த நபர் விடுதலை பெறுகின்றார்.

இதற்கிடையில், பன்றி மேய்த்தவர்களின் சொல் கேட்டுக் கூடிய மக்கள், தங்கள் நகரை விட்டு அகலுமாறு இயேசுவை வேண்டிக்கொள்கின்றனர். ஏனெனில், அவர்களுடைய பார்வையில் குணமான அந்த நபரை விட, கடலில் விழுந்து இறந்த பன்றிகள் மதிப்புள்ளதாகத் தெரிந்தன.

நிகழ்வு அத்தோடு முடியவில்லை.

இயேசு படகில் ஏறும்போது, 'நானும் உம்மோடு வருகிறேன்!' என இயேசுவைப் பின்தொடர விரும்புகிறார் அந்த நபர். ஆனால், இயேசு, அதற்கு இசையவில்லை.

அவர் அழைத்தாலன்றி அவரோடு யாரும் இருக்க முடியாது.

ஆனால், அவரிடம், 'உமது வீட்டிற்குப் போய் ஆண்டவர் உம்மீது இரக்கங்கொண்டு உமக்குச் செய்ததையெல்லாம் உம் உறவினருக்கு அறிவியும்' என்கிறார் இயேசு.

இங்கே இயேசுவின் தாய்மை மற்றும் தந்தைமையைப் பார்க்கிறோம்.

இவ்வளவு நாள்களாக அந்த நபருக்கு கல்லறையே வீடாக இருந்தது.

தீய ஆவிகளே உறவினர்களாக இருந்தன.

ஆனால் இன்று, அவரை மீண்டும் ஊரின், வீட்டின், உறவினர்களின் நடுவில் அனுப்புகிறார் இயேசு. ஆண்டவரின் இரக்கத்தை அவர் அறிவிக்க வேண்டும்.

இந்த நிகழ்வு நமக்குப் பல வாழ்வியல் கேள்விகளை முன்வைக்கின்றன:

(அ) என்னைச் சுற்றி இருப்பவர்கள் நன்மைக்காக மாறும்போது அவர்களைப் பற்றி நான் அச்சம் கொள்கின்றேனா? எனக்கு அடுத்திருப்பவரின் அறிவுத்தெளிவு எனக்கு அச்சம் தருகின்றதா?

(ஆ) 'அவன் பேய்பிடித்தவன்', 'அவள் பேய்பிடித்தவள்' என்று நான் மற்றவர்களுக்கு முத்திரை இடுகின்றேனா?

(இ) என்னைப் பிடித்திருக்கும் தீய ஆவி எது? அல்லது நான் பிடித்திருக்கும் தீய ஆவி எது?

(ஈ) ஆண்டவர் என் வாழ்வில் காட்டிய இரக்கத்தை நான் அறிக்கையிடுகிறேனா?

(உ) எனக்கு அடுத்திருப்பவரை விட, என் பன்றிக் கூட்டம் எனக்கு முக்கியமானதாகத் தெரிகின்றதா?

(ஊ) என் வாழ்வை விட்டு அகலுமாறு நானும் இயேசுவிடம் சொல்லி, அவரை விரட்ட முயல்கின்றேனா?

3 comments:

  1. Very good reflection Yesu. God bless us

    ReplyDelete
  2. “நம் எண்ணங்கள் நம்மைச் சுற்றியுள்ளோர் எண்ணம் போல் இருக்கும் வரை அவர்களுக்குப் பிரச்சனை இல்லை; சற்றே மாறிவிட்டோமெனில் அச்சம் கொள்கிறார்கள்.” இந்நிலைதான் இயேசுவால் தீய ஆவியை விரட்டப்பட்டவரின் பின்னைய நிலை. நாமும் பலமுறை தன் பிறழ்வு வாழ்க்கையிலிருந்து மாற முற்பட்டவரைக் குறித்து இப்படி நினைத்திருப்போம். என்னைப்பிடித்திருக்கும் தீய ஆவி எதுவெனக் கண்டுபிடித்து, ஆண்டவர் என் வாழ்வில் காட்டிய இரக்கத்தை அடுத்தவருடன் பகிர்ந்து கொள்ள இயேசு/ தந்தை அழைக்கும் நேரமிது.மற்றவரில் ஏற்படும் நல்ல மாற்றங்களைத் தேடிக்கண்டு பிடிப்பதோடு, மற்றவர்கள் அவர்களுக்குச் சூட்டும் பட்டங்களிலிருந்து அவர்களைக் காக்க முனைவோம்!

    நமக்கும்,நம்மைச்சுற்றியிருப்பவர்களுக்கும் ஏற்படும் ஒரு அனுதினப் பிரச்சனையைத் தனக்கே உரித்தான கேள்விக்கணைகளைத் தொடுத்து நம்மையும் மாற்ற முயல முயற்சி எடுக்கும் தந்தைக்கு என் நன்றிகள்!!!

    ‘திரு திரு திருச்சியின்’ மாற்றுப்புகைப்படம் அருமை! வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete