Wednesday, January 6, 2021

தமது வழக்கத்தின்படி

இன்றைய (7 ஜனவரி 2021) நற்செய்தி (லூக் 4:14-22)

தமது வழக்கத்தின்படி

நேர மேலாண்மையில் அதிகம் சொல்லப்படுவது ஒன்று, 'பழக்கம்' அல்லது 'வழக்கம்'. அதாவது, எவர் ஒருவர் நிறைய செயல்களை வழக்கமாக, அல்லது பழக்கமாக, தொடர்ந்து செய்கிறாரோ அவர் மேன்மை அடைகிறார்.

எப்படி?

நான் தினமும் பல் துலக்குகிறேன். நான் எங்கிருந்தாலும் பல் துலக்குகிறேன். பயணம் செய்தாலும், வேறு இடத்தில் தங்கினாலும், வானூர்தியில் நீண்ட பயணம் செய்தாலும் நான் பல் துலக்க மறப்பதில்லை. ஆனால், புத்தகம் வாசிப்பதையோ, அல்லது வாக்கிங் போவதையோ நான் என் அறையில் இருக்கும்போது மட்டுமே செய்கிறேன். பயணம் செய்வதும், வேறு இடத்தில் தங்குவதும் நான் புத்தகம் வாசிக்க, அல்லது வாக்கிங் போகத் தடையாக இருப்பது ஏன்? காரணம்! வேறு இடம் அல்ல. நான்தான்.

எங்கிருந்தாலும் நான் புத்தகம் வாசிப்பேன், எங்கிருந்தாலும் நான் வாக்கிங் போவேன் என்று நான் அவற்றை என் வழக்கமாகக் கொள்ளவில்லை.

நான் தினமும் செய்யக்கூடிய செயல்கள் என்றால் மிகவும் சிலவே.

ஆனால், தினசரி வழக்கங்கள் கூடக்கூட என் ஆளுமை வளரும், என் திறன்கள் வளரும்.

இயேசு தன் வாழ்வில் சில வழக்கங்களை வைத்திருந்தார்.

ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டியது, வாரம் ஒருமுறை செய்ய வேண்டியது, மாதம் ஒருமுறை செய்ய வேண்டியது, ஆண்டுக்கு ஒருமுறை செய்ய வேண்டியது என அவருடைய நேர அட்டவணை வரையறுக்கப்பட்டடிருந்தது.

ஒவ்வொரு நாளும் தந்தையோடு இரவு நேர இறைவேண்டல். வாரம் ஒருமுறை தொழுகைக்கூடத்தில் வழிபாடு. மாதம் ஒருமுறை நண்பர்கள் சந்திப்பு. ஆண்டுக்கு ஒருமுறை எருசலேம் ஆலயத் திருப்பயணம். 

அப்படியாக, வாரம் ஒருமுறை அவர் வழக்கமாகக் கொண்டிருந்த ஒரு நிகழ்வையே இன்றைய நற்செய்தி வாசகத்தில் பார்க்கின்றோம்.

'தமது வழக்கத்தின்படி ஓய்வுநாளில் தொழுகைக்கூடத்திற்குச் சென்றார்' எனப் பதிவு செய்கிறார் லூக்கா. 

இயேசுவுக்கு அது வழக்கமாக இருந்ததால்தான் அவரால் எழுந்து வாசிக்கவும், கேட்போருக்குச் சவால்விட முடிந்தது.

வழக்கமாகச் செய்யும் ஒன்று என் தன்னம்பிக்கையைக் கூட்டுவதோடு, என் திறனை மேம்படுத்துகிறது.

அன்றாடம் கார் ஓட்டினால் என் கார் ஓட்டும் திறமை வளரும்.

அன்றாடம் இசைக்கருவி மீட்டினால் என் இசைத்திறமை வளரும்.

அன்றாடம் வலைப்பதிவு எழுதினால் என் எழுதும் திறன் வளரும்.

வழக்கமாகச் செய்யும் எதுவும் என்னை வளரச் செய்கிறது.

இந்தப் புத்தாண்டில் நான் உருவாக்கிக்கொள்ளவிருக்கும் வழக்கங்கள் எவை?

ஒவ்வொன்றையும் அதனதன் வழக்கத்தின்படி செய்ய நேரத்தை நான் ஒதுக்குகிறேனா? அல்லது அவற்றோடு சமரசம் செய்துகொள்கின்றேனா?

சமரசம் இல்லாத வழக்கம் சிறப்பு.

2 comments:

  1. இயசுவுக்கு தொழுகைக் கூடத்திற்கு வருவது வழக்கமாக இருந்ததால் தான் அங்கே அவரின் இன்னொரு வழக்கமான வாசிப்பதையும்,பிறருக்கு சவால் விடுவதையும் செய்ய முடிந்தது. நாம் அனுதினமும் எதைச்செய்கிறோமோ அது நம்மை வளரச் செய்வது உண்மை! தந்தையின் விஷயத்தில் இது நூற்றுக்கு நூறு உண்மை! எத்தனை வேலைகள் இருப்பினும்...சுகவீனத்திலும்....பயணங்களின் மத்தியிலும் எந்த எதிர்பார்ப்புமின்றி அவரின் ‘ வலைப்பூ’ எழுதும் பழக்கம் கண்டு வியந்திருக்கிறேன். அதன் மூலம் எத்தனை உயரத்தை அவர் எட்டியுள்ளார் என்பதும் அவரில் நான் அதிசயிக்கும் இன்னொரு விஷயம்.

    என்னைத் தெரிந்தவர்கள்...என்னைப்பார்பவர்கள் கண்டு வியக்கும் வண்ணம் ஏதேனும் என்னில் உண்டா? எனும் எண்ணமும் கூடவே என்னில் எழுவதுண்டு. “ இன்னும் ஒன்றும் கெட்டுப்போய்விடவில்லை; காற்றுள்ள போதே தூற்றிக்கொள்” என்று கூடவே முணுமுணுக்கிறது என் மனம். எதிலும்...எதற்காகவும் சமரசம் செய்யாத ஒரு வாழ்க்கையை இப்பொழுதேனும் ஆரம்பிக்க அழைப்பு விடுக்கும் தந்தைக்கு என் நன்றிகள்!!!

    ReplyDelete
  2. வழக்கமாகச் செய்யும் ஒன்று என் தன்னம்பிக்கையைக் கூட்டுவதோடு, என் திறனை மேம்படுத்துகிறது.

    வழக்கமாகச் செய்யும் எதுவும் என்னை வளரச் செய்கிறது.

    சமரசம் இல்லாத வழக்கம் சிறப்பு.

    The great example for all this is Jesus Christ HIMSELF.
    May HIS example lead me...

    Thank you.


    NB: அன்றாடம் வலைப்பதிவு எழுதினால் என் எழுதும் திறன் வளரும்.

    Also Vice versa

    எழுதும் திறன் இருந்தால் தான்,வலைப்பதிவு எழுத முடியும்.
    இது சும்மா🖕


    ReplyDelete