Monday, January 4, 2021

நீங்களே அவர்களுக்கு

இன்றைய (5 ஜனவரி 2021) நற்செய்தி (மாற் 6:34-44)

நீங்களே அவர்களுக்கு

நான் மதுரையில் உள்ள ஜாய் ஆலூக்காஸில் ஒரு மோதிரம் வாங்கிக் கொண்டு பேருந்தில் பயணம் செய்து ஆரப்பாளையம் வருகிறேன் என வைத்துக்கொள்வோம். நான் பேருந்தை விட்டு இறங்கும்போது, என் கையில் மோதிர டப்பா (மோதிரத்துடன்) இருக்கிறது. அவர்கள் கொடுத்த ட்ராவல் பேக் காணாமல் போய்விடுகிறது. அந்த ட்ராவல் பேக் காணாமல் போனதற்காக நான் வருத்தப்படுவேனா? இல்லை! ஏனெனில், அது கொசுறு என்று வந்த பை. நான் பணம் கட்டியது மோதிரத்துக்காகத்தான். அந்த மோதிரம் இப்போது என்னிடம் பத்திரமாக இருக்கிறது.

ஆக, நான் செலவழிக்காத ஒன்றுக்காக நான் வருத்தப்படுவதில்லை (What you don't invest, doesn't count).

அல்லது, நான் செலவழிக்காத ஒன்றின்மேல் எனக்கு நெருக்கம் வருவதில்லை.
நெருக்கத்திற்கும் பணிவிடைக்கும் நிறைய தொடர்பு உண்டு.

நான் யாருக்குப் பணிவிடை செய்கிறேனோ, அல்லது நான் எந்த நிறுவனத்துக்காக அதிக நேரம், ஆற்றல் செலவழிக்கின்றேனோ அந்த நபர் அல்லது அந்த நிறுவனத்தோடு நெருக்கமாகி விடுகிறேன் (You become attached to what / whom you serve). 

நீண்ட காலம் நட்பில் இருக்கும் ஒருவரை விட்டு நம்மால் பிரிய இயலாததற்குக் காரணமும் இதுவே. ஏனெனில், நாம் அந்த நட்பிற்காக நிறைய நேரம், ஆற்றல், சில நேரங்களில் பணம் செலவழித்துவிடுகின்றோம். அதுபோல, ஒரு நட்பை நாம் பேணி வளர்க்க வேண்டும் என்றால், அதற்கு நேரத்தையும் ஆற்றலையும் கொடுக்க வேண்டும்.

நேரத்தையும் ஆற்றலையும் பொருள்களையும் நான் ஒருவருக்காகச் செலவழிக்கும்போது அவர்களோடு நெருக்கம் ஏற்படுகிறது.

இதைத் தான் தன் சீடர்களுக்குத் தன் செயலால் கற்பிக்கின்றார் இயேசு.

இயேசுவின் போதனையைக் கேட்க மக்கள் திரளாகக் கூடி வருகின்றனர். நெடுநேரமாகிவிடுகிறது. 'ஏதாவது வாங்கிக்கொள்ளுமாறு அவர்களை அனுப்பிவிடும்!' என்று சீடர்கள் பரிந்துரைக்க, 'நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்!' எனக் கட்டளையிடுகிறார்.

'நீங்கள் உங்கள் ஆற்றலையும், நேரத்தையும், கையில் உள்ளதையும் அவர்களுக்குக் கொடுக்க முன்வாருங்கள். அப்போது உங்களுக்கும் அவர்களுக்கும் நெருக்கம் உண்டாகும்' எனக் கற்பிக்கிறார் இயேசு.

நாம் எதன்மேல் நேரத்தை, ஆற்றலை, பணத்தைச் செலுத்துகிறோமோ அதன்மேல் நமக்கு நெருக்கமும் பிரியமும் ஏற்படுகிறது.

சீடர்கள் தங்கள் ஆற்றலை மக்கள்பக்கம் திருப்பத் தொடங்கிய அந்த நொடியில் வல்ல செயல் நடந்தேறுகிறது. 

முதலில், 'பாலைநிலத்தில் பசும்புல் தரை தெரிகிறது'. பாலைநிலத்தில் பசும்புல் தரை எங்கிருந்து வந்தது? நான் செயலாற்றத் தொடங்கிய உடன், எனக்கு நெருக்கமான இன்னொருவர் செயலாற்றத் தொடங்குகிறார், இன்னொருவர், இன்னொருவர் என அது நீள, அங்கிருக்கும் ஒருவர் பசும்புல் தரையை அடையாளம் காட்டுகிறார்.

இரண்டு, 'கூட்டமாக இருந்தவர்கள் எண்ணப்படுகின்றனர்.' பெருந்திரளாக இருந்தவர்கள் ஐம்பது ஐம்பது எனப் பிரிக்கப்படுகின்றனர். ஆண்டவருடைய பந்தியில் அனைவரும் எண்ணப்படுவர். ஆண்டவருடைய பார்வையில் யாரும் கூட்டத்தில் ஒருவர் அல்லர், மாறாக, ஒவ்வொருவரும் தனிநபர்.

மூன்று, 'நேருக்கு நேர் பார்த்தவர்கள் அண்ணாந்து பார்க்கின்றனர்.' ஒரு வெறுமை இன்னொரு வெறுமையைப் பார்த்து, 'உன்னிடம் என்ன இருக்கிறது?' என்று மக்கள் கேட்டுக்கொண்டிருக்க, நிறைவு என்னும் இயேசு நிறைவு என்னும் கடவுளை நோக்கித் தலையை உயர்த்துகிறார். வெறுமை வெறுமையை நிறைவு செய்ய இயலாது. ஆனால், இறை என்னும் நிறை நம் குறையை நிறைவு செய்ய முடியும்.

நான்கு, 'நாங்கள் போய் வாங்க வேண்டுமா என்றவர்கள் பன்னிரண்டு கூடைகள் நிறைய அங்கேயே எடுக்கின்றனர்.' ஒவ்வொருவரும் தனக்குரியதை அடுத்தவருக்குக் கொடுத்து, 'நீ சாப்பிடு! நீ சாப்பிடு!' என்று கூற, வார்த்தைகளாலேயே வயிறுகள் நிறைந்துவிடுகின்றன. கரண்டியைப் பிடித்தே தங்கள் வயிற்றை நிரப்பிக்கொள்கின்றனர் கூட்டத்தினர்.

இப்புதிய ஆண்டில் நான் என்ன முயற்சி எடுக்க நினைத்தாலும், அதற்குரிய நேரத்தையும், ஆற்றலையும், பொருளையும் நான் செலவழித்தால்தான் எனக்கு அதன்மேல் நெருக்கம் வரும்.

நெருக்கம் வரும் இடத்தில் வல்லசெயல் நடக்கும்.


6 comments:

  1. “நீங்கள் உங்கள் ஆற்றலையும், நேரத்தையும்,கையில் உள்ளதையும் அவர்களுக்குக் கொடுக்க முன் வாருங்கள். அப்போது உங்களுக்கும் அ வர்களுக்கும் நெருக்கம் உண்டாகும்”. இயேசுவின் வார்த்தைகளைக் கேட்ட சீடர்களுக்கு அவரது போதனையைக்கேட்க வந்த மக்கள் மேல் நெருக்கம் உண்டானது இப்படித்தான்.

    நெருக்கம் வந்தவுடன் ஒன்றன்பின் ஒன்றாக வேலைகள் நடந்தேறுகின்றன. ஆயினும் அ அங்கே ஒரு வெறுமையின் நிழலும் இல்லாமல் இல்லை. அதை நிறையாக மாற்றுகிறார் இயேசு.

    காலச்சக்கரம் உருளும்போது பல சமயங்களில் நாமும் அதன் பற்களின் பலிகடா ஆகிறோம்.வெறுமை ஒன்றே நம் சொந்தமாக மாறிப்போகிறது. யாரால் முடியும் இதை சரிசெய்ய? இறை என்னும் நிறை மட்டுமே நம் குறையை சரி செய்யும் என்கிறார் தந்தை.

    வெறும் கை முழம் போட முடியாது எனக்கேட்டிருப்போம். ஒருவரிடம் நிறையைத்தர...நெருக்கத்தை ஏற்படுத்த நம்மிடம் ஏதோ இருக்க வேண்டும். அந்த “ ஏதோ” என்னவெனக் கண்டுபிடித்து ...அதைக்கொடுத்தே நெருக்கத்தைப்பெற முடியும்.

    செலவழிப்போம்.... நெருக்கத்தை ஏற்படுத்துவோம்....வல்ல செயல்களுக்கு சாட்சியாவோம்.

    சாதாரண ஒரு விஷயத்தை அசாதாரணமாக க் காட்டிய தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete
  2. You become attached to what / whom you serve).

    நாம் எதன்மேல் நேரத்தை, ஆற்றலை, பணத்தைச் செலுத்துகிறோமோ அதன்மேல் நமக்கு நெருக்கமும் பிரியமும் ஏற்படுகிறது.

    சீடர்கள் தங்கள் ஆற்றலை மக்கள்பக்கம் திருப்பத் தொடங்கிய அந்த நொடியில் வல்ல செயல் நடந்தேறுகிறது.
    நிறைவு என்னும் இயேசு நிறைவு என்னும் கடவுளை நோக்கித் தலையை உயர்த்துகிறார்.

    இப்புதிய ஆண்டில் நான் என்ன முயற்சி எடுக்க நினைத்தாலும், அதற்குரிய நேரத்தையும், ஆற்றலையும், பொருளையும் நான் செலவழித்தால்தான் எனக்கு அதன்மேல் நெருக்கம் வரும்.

    நெருக்கம் வரும் இடத்தில் வல்லசெயல் நடக்கும்.

    அந்த வல்ல செயல்களுக்காய், வாழத் துணிவேன்( துணிவோம்.)

    நன்றி🙏




    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. *4 வல்ல செயல்கள்...

    *முதலில், 'பாலைநிலத்தில் பசும்புல் தரை தெரிகிறது'.

    *இரண்டு, 'கூட்டமாக இருந்தவர்கள் எண்ணப்படுகின்றனர்.

    *மூன்று, 'நேருக்கு நேர் பார்த்தவர்கள் அண்ணாந்து பார்க்கின்றனர்

    *நான்கு, 'நாங்கள் போய் வாங்க வேண்டுமா என்றவர்கள் பன்னிரண்டு கூடைகள் நிறைய அங்கேயே எடுக்கின்றனர்.'

    இந்த மனமாற்றத்தையே,இன்றைய நற்செய்தி, என்னிடம் எதிர்பார்க்கிறது.

    Certainly I will strive for it.

    To say exactly,in a nut shell,

    Father,Really YOU are the good news for us.

    The living bible directing towards salvation.👍

    ReplyDelete