Wednesday, January 27, 2021

பொருளும் பயனும்

இன்றைய (28 ஜனவரி 2020) நற்செய்தி (மாற் 4:21-25)

பொருளும் பயனும்

'பேனா எதற்குப் பயன்படுகிறது?' - என்று ஒரு கேள்வி நேர்முகத்தேர்வில் கேட்கப்பட்டது.

'எழுத' - என்று பதிலளித்தார் கேட்கப்பட்டவர்.

'வேறு எதற்கு?' - கேள்வி நீட்டிக்கப்பட்டது.

'பரிசளிக்க'

'வகுப்பறையில் நமக்கு முன் இருப்பவரைத் தொட்டு அழைக்க'

'வாசிக்கும் பக்கத்தை நினைவில் கொள்ளும் புக்மார்க் ஆக'

'பறந்து போகும் பேப்பர் மேல் வைக்கப்படும் பேப்பர் வெயிட் ஆக'

'பணம் மற்றும் அந்தஸ்தின் அடையாளமாக' (எடுத்துக்காட்டாக, 'ச்சாஃப்பர்' பேனா)

'நமக்குப் பிடிக்காதவர் மேல் எறியும் ஆயுதமாக'

'கல்லூரியின் இறுதி நாள் அன்று அதில் உள்ள மையை மற்றவரின் சட்டையில் கொட்டி விளையாட'

என்று தொடர்ந்தார் கேட்கப்பட்டவர்.

பொருளுக்குப் பயன் ஒன்று என்றல்ல. நிறையப் பயன்கள் உண்டு.

இன்றைய நற்செய்தியில் விளக்கு என்ற ஓர் உருவகத்தை எடுத்து, அந்த விளக்கு மரக்காலின் உள்ளும், கட்டிலுக்குக் கீழேயும் வைக்கக் கூடாது என எச்சரிக்கிறார் இயேசு. மேலும், எந்த அளவையால் நாம் அளக்கிறோமோ அதே அளவையால் நமக்கும் அளக்கப்படும் என்கிறார். பிந்தைய வரி முந்தைய வரியின் நீட்சிதான் என நினைக்கிறேன். அதாவது, நாம் விளக்கை மரக்காலுக்குள் வைத்தால் அதற்கேற்ற வெளிச்சம் கிடைக்கும். விளக்குத் தண்டின்மேல் வைத்தால் அதற்கேற்ற ஒளி கிடைக்கும்.

ஒரு வீட்டில் மூன்று இடங்கள் உள்ளன இந்த உருவகத்தின்படி: ஒன்று, மரக்கால். இரண்டு, கட்டில், மூன்று. விளக்கத்தண்டு.

பாலஸ்தீனத்தில் விளக்கு இந்த மூன்று இடங்களிலுமே வைக்கப்பட்டது. காற்றுக் காலத்தில் விளக்கு அணைந்துவிடாமலிருக்க, அல்லது தீப்பெட்டி இல்லாத நேரத்தில் எரிகின்ற விளக்கை அப்படியே மூடி வைத்து அடுத்த நாள் பயன்படுத்துவார்கள். ஆனால், இப்படிச் செய்வதால் நிறைய எண்ணெய் வீணாகும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். கட்டிலின் கீழும் விளக்குகள் வைக்கப்பட்டன. உணவுத் தானியங்களை, குறிப்பாக, கோதுமையை அவர்கள் கட்டிலின் கீழ் உலர்த்துவது வழக்கம். கோதுமைக்கு வெப்பம் கொடுக்கவும், பூச்சிகள் வராமல் இருக்கவும் - ஆனால் விளக்குக்கென்று சில பூச்சிகள் வரும் - கட்டிலின் கீழ் விளக்கை ஏற்றி வைப்பர். மூன்றாவதாக, விருந்தினர்கள் வரும்போது, இறைவேண்டல் செய்யும்போது, வீட்டில் உள்ளவர்கள் பொதுவாக அமர்ந்து உரையாடியபோது விளக்கு மரக்காலின்மேல் வைக்கப்பட்டது.

மூன்று இடங்களில் விளக்கு வைக்கப்பட்டாலும், விளக்குக்கென்று நிறையப் பயன்பாடுகள் இருந்தாலும் அதன் முதன்மையான பயன்பாடு ஒருவர் மற்றவருக்கு ஒளியூட்டுவது. அதாவது, ஒருவர் மற்றவரின் முகத்தைக் காண உதவுவது. விளக்குத் தண்டின்மேல் விளக்கு இருக்கும்போதுதான் இப்பயன் சாத்தியம்.

ஆக, முதன்மையான பயன்பாட்டை நாம் மனத்திலிருத்தி வாழ வேண்டும்.

என் வாழ்வுக்கு அல்லது என் வாழ்வால் நிறையப் பயன்கள் ஏற்படலாம். ஆனால், என் முதற்பயனை நான் வாழ்கிறேனா? என் முதற்பயனை அல்லது என் தனிப்பயனை வாழ்வது அவசியம். ஏனெனில், அதுவே எனக்குத் திரும்ப வரும்.

எடுத்துக்காட்டாக, நான் யூட்யூபில் காணொளி பார்ப்பதை என் பயன் எனக் கொள்கிறேன் என வைத்துக்கொள்வோம். அதையொட்டியே நான் வளர்வேன். ஆனால், என் பயன் விவிலியம் வாசிப்பது என நான் நினைத்து அதற்கு நேரம் கொடுத்தால் அது எனக்குத் திரும்பப் பயன் கொடுக்கும். நான் எந்த அளவையை எடுத்தாலும் அது எனக்குத் திரும்பக் கொடுக்கும்.

இன்னொரு பக்கம், இயேசுவின் அறிவுரைப் பகுதியின் சூழலை நாம் கருத்தில் கொண்டால், விளக்கு என்பது இறையாட்சியையும், மரக்கால் என்பது நம் அன்றாட வாழ்வியல் பரபரப்புகளையும், கட்டில் என்பது நம் ஓய்வையும் குறிக்கிறது. பரபரப்பும் ஓய்வும் இறையாட்சிப் பணியின் எதிரிகள். இவ்விரண்டுக்கும் இடையே, பொறுமையாகவும், ஓய்ந்திராமலும் இறையாட்சியை அறிவித்தலே விளக்குத்தண்டின்மேல் விளக்கை ஏற்றுதல்.

என் வாழ்வின் முதற்பயனை உணர்தலும், உணர்ந்தவுடன் அதைச் செயல்படுத்த முயல்தலும் நலம்.

நான் என்னுடைய வாழ்க்கைக்குக் கொடுக்கும்போது, வாழ்க்கை எனக்குக் கூடுதலாகக் கொடுக்கும்.

2 comments:

  1. மூன்று இடங்களில் விளக்குகள் வைக்கப்படாலும், அதனால் நிறைய பயன்பாடுகள் இருந்தாலும் அதன் முதற்பயன் ‘ஒளியூட்டுவது’ என்பதை என் வாழ்க்கையுடன் இணைத்துப்பார்க்க அழைப்பு விடுக்கிறது இன்றையப்பதிவு.. முதற்பயன் என்பது தனிப்பயன்; அதுவே நம் வாழ்க்கையோடு கைகோர்த்து வரும் என்கிறார் தந்தை.

    இதைக்கருத்தில் கொண்டு என் வாழ்வின் முதற்பயன் என்னவென்பதைத் தேடவும்...தேடிக்கண்டுபிடித்ததைக் கொண்டாடவும் அழைக்கப்படுகிறோம். என் விளக்கை விளக்குத்தண்டின் மேல் வைத்தலே என் தலையாய கடமை என்பதை நான் உணர்கையில் என் வாழ்வின் அனைத்து நல்லவைகளையும் வாழ்வு என்னிடம் கொண்டு சேர்க்கும். ........வாழ்ந்து பார்க்க வேண்டிய அனுபவம்.

    என் விளக்கு எது? விளக்குத் தண்டு எது? கண்டுபிடிக்க முயல்கிறேன்.தந்தையின் வரிகள் உதவட்டும்! அப்ப்ப்பா! பேனாவிற்கு இத்தனை பயன்கள் இருக்கிறதா? மூச்சு முட்டுகிறது.ஆராய்ச்சி செய்த தந்தைக்கு என் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete