Friday, January 15, 2021

நேர்மையாளர்களை அல்ல



இன்றைய (16 ஜனவரி 2021) நற்செய்தி (மாற் 2:13-17)

நேர்மையாளர்களை அல்ல

இன்றைய நற்செய்தி வாசகத்தில் அல்பேயுவின் மகன் லேவியின் அழைப்பு பற்றி நாம் வாசிக்கின்றோம். இவர் 'மத்தேயு' என்றும் அறியப்படுகின்றார்.

இந்த நிகழ்வு மூன்று பகுதிகளாக அமைந்துள்ளது. முதல் பகுதியில், சுங்கச் சாவடியில் அமர்ந்திருந்த லேவியை இயேசு அழைக்கின்றார். இரண்டாம் பகுதியில், லேவி இயேசுவைத் தன் இல்லத்துக்கு விருந்துண்ண அழைக்கின்றார். மூன்றாம் பகுதியில், இயேசு பாவிகளோடு உண்பது பற்றிய விவாதம் எழ, இயேசுவும், 'நோயற்றவருக்கு அல்ல, நோயுற்றவருக்கே மருத்துவர் தேவை!' என்ற பழமொழியைக் கையாண்டு, தன் பணி யாருக்கானது என்பதை வரையறை செய்கின்றார்.

மேற்காணும் மூன்று பகுதிகளில், ஒன்று மற்றதன் தொடர்ச்சி அல்லது நீட்சியாக இருக்கிறது.

'இவர்களுள் பலர் இயேசுவைப் பின்பற்றியவர்கள்' என்று மாற்கு இடையே ஒரு தகவலைக் கொடுக்கின்றார். அதாவது, இயேசுவைப் பின்பற்றியவர்களில் பலர் பாவிகளாக இருந்துள்ளனர். சமூகத்தின் பார்வையில் பாவிகளாக இருந்துள்ளனர்.

இயேசுவின் சமகாலத்து சமயப் புரிதலின்படி, யூத ரபிக்கள் - பெரும்பாலோனோர் பரிசேயர்கள் - தங்களைத் தூய்மையாக வைத்துக்கொள்ள மிகவும் முயற்சி எடுப்பர். மக்களால் போதகர் ('ரபி') என அழைக்கப்பட்ட இயேசு அதற்கு எதிர்மாறாக செயல்படுவது அவர்களுக்குப் பெரிய உறுத்தலாக இருந்தது. ஆகையால்தான், அவருக்கு எதிராக முணுமுணுக்கின்றனர்.

ஆனால், இயேசு தன் இலக்கை மிகத் தெளிவாக வரையறை செய்கின்றார்: 'நேர்மையாளர்களை அல்லளூ பாவிகளையே அழைக்க வந்தேன்.'

'இவர்களுக்கு அல்ல, மாறாக, அவர்களுக்கு!' என்று இரு பிரிவினராகப் பிரித்து, ஒரு சாராரின் சார்பாக நிற்கின்றார் இயேசு.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். எபி 4:12-16), இயேசுவைத் தனிப்பெரும் தலைமைக் குரு என முன்மொழிகின்ற ஆசிரியர், 'அவர் நம் வலுவின்மையைக் கண்டு இரக்கம் காட்டாதவர் அல்ல' என்கிறார். ஆக, இயேசு வலுவற்றவர்களின் சார்பாக நிலைப்பாடு எடுத்ததால்தான் அவர் தலைமைக்குரு என்ற நிலைக்கு உயர்கின்றார்.

வலுவற்றவர்களோடு துணை நிற்க வேண்டுமெனில், (அ) வலுவற்றவர்களை அடையாளம் காண வேண்டும், (ஆ) வலுவற்றவர்களின் நொறுங்குநிலை உணர்வை அறிய வேண்டும், மற்றும் (இ) அவர்களை இகழ்ச்சியோடு பார்ப்பதற்குப் பதிலாக அவர்களைக் கொண்டாட வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, அவர்களுக்கும் எனக்கும் உள்ள வேறுபாட்டைப் பார்த்து அவர்களிடமிருந்து விலகி நிற்க முயற்சி செய்வதை விட, அவர்களுக்கும் எனக்கும் உள்ள ஒற்றுமையைக் கண்டு அவர்களைக் கொண்டாட வேண்டும்.

இரக்கம் - இந்த உணர்வு ஒருவரின் நொறுங்குநிலையில் எழும் ஓர் உணர்வு.

4 comments:

  1. வரிதண்டுபவர்களோடு உணவருந்தச் சென்ற இயேசுவைச் சாடியவர்களுக்கு இயேசு கூறிய வார்த்தைகள்....” நோயற்றவருக்கல்ல....நோயுற்றவருக்கே மருத்துவர் தேவை.” அதாவது நேர்மையாளரையல்ல...பாவிகளையே தேடிவந்தேன்” என்பதற்கு இணையான வார்த்தைகள். அப்படியானால் “பாவமும் ஒரு வலுவின்மையே” என்கிறாரா இயேசு?

    தொடர்கிறது தந்தையின் வார்த்தைகள்.... “ வலுவற்றவரை இனம் கண்டு....அவர்களின் நொறுங்கு நிலை கண்டு அவர்களை இகழ்ச்சிக்குள்ளாக்காமல் கொண்டாட வேண்டும்.”
    ‘ நான் பாவமற்றவளென’ நினைக்கும் தைரியம் எனக்கிருந்தால் அவர்களின் வலுவற்ற செயல்கண்டு தூரநிற்காமல் அவர்களிடம் உள்ள என் ஒற்றுமை கண்டு அவர்களைக் கொண்டாட வேண்டுமென சொல்ல வருகிறது இன்றையப்பதிவு.

    நான் பாவத்தில் விழுந்த நேரங்களில் நான் தேடுவது என்மேல் இரக்கம் காட்டக் கூடிய ஒருவரைத்தான்....இது எல்லோருக்குள்ளும் எழும் உணர்வே!

    “நோயுற்றவர்களும்...பாவிகளும் இரக்கப்பட வேண்டியவர்களே!”... என்பதை எடுத்துச் சொல்லும் இயேசுவுக்கும்...தந்தை யேசுவுக்கும் என் நன்றிகள்!!!

    ReplyDelete
  2. "இவர்களுக்கு அல்ல, மாறாக, அவர்களுக்கு!"

    இப்படித்தானே,இன்று நம்மில் பலரும் நினைத்துக் கொள்கிறோம்...

    I mean in the negative sense too.

    இதை இன்னும் இப்படி extend பண்ணலாமே...

    இல்லை இதை இத்துடன் நிறுத்திக்கொள்வதே மேல்.

    வலுவற்றவள்,என் சார்பாக இயேசு இருக்கிறார்.

    நன்றி🙏

    ReplyDelete
  3. இயேசுவைப் பின்பற்றியவர்களில் பலர் பாவிகளாக இருந்துள்ளனர். சமூகத்தின் பார்வையில்.....
    Great interpretation🤝

    ReplyDelete