Tuesday, January 19, 2021

நால்வகை மனிதர்கள்

இன்றைய (20 ஜனவரி 2021) நற்செய்தி (மாற் 3:1-6)

நால்வகை மனிதர்கள்

இன்றைய நற்செய்தியின் நிகழ்வு தொழுகைக்கூடத்தில், ஓய்வுநாளில் நடந்தேறுகிறது. சூம்பிய கை உடைய ஒருவருக்கு இயேசு நலம் தருகிறார்.

இந்த நிகழ்வில் கை சூம்பிய நபர் நான்கு வகை மனிதர்களை எதிர்கொள்கிறார்:

(அ) நன்மை செய்ய விரும்புபவர் (Willing the Good of Others)

நோயுற்ற நபருக்கு இயேசு நலம் தர விரும்புகிறார். தானே முன்வந்து நலம் தருகிறார். தான் கேட்ட கேள்விக்கு அங்கிருந்த நபர்கள் பதில் சொல்லாமல் இருந்தபோது அவர்கள்மேல் கோபம் கொள்கிறார். ஆனால், கோபத்தை அவர்கள்மேல் காட்டாமல் நற்செயலாகக் காட்டுகிறார்.

(ஆ) குற்றம் சுமத்தும் நோக்குடன் கூர்ந்து நோக்குபவர்கள் (Fault Finders)

தங்களைப் போன்ற ஒருவர்தான் இங்கே நலமற்று இருக்கிறார் என்று நினைக்காமல், அந்த நபரைப் பயன்படுத்தி, இயேசுவின் மேல் குற்றம் சுமத்த நினைக்கும் சிலர் இயேசுவைக் கூர்ந்து நோக்குகிறார்கள். இவர்கள் இயேசுவைக் கூர்ந்து நோக்குவது சரிதான். ஆனால், அவர்கள் நோக்கம்தான் தவறாக இருக்கிறது.

(இ) நன்மை எது, தீமை எது என்று முடிவெடுக்க இயலாதவர்கள் (The Indecisive)

கை சூம்பியவரை நடுவில் நிறுத்துகின்ற இயேசு, அங்கிருந்தவர்களைப் பார்த்து, 'ஓய்வு நாளில் நன்மை செய்வதா? தீமை செய்வதா? உயிரைக் காப்பதா? அழிப்பதா? எது முறை?' எனக் கேட்கின்றார். ஆனால், அங்கிருந்தவர்கள் பதில் சொல்லாமல் அமைதி காக்கிறார்கள். இந்த அமைதி ஆபத்தானது. முடிவெடுக்க இயலாத நிலையில் எழும் அமைதி இது. முடிவெடுக்க விரும்பாத நிலையையும் இது காட்டுகிறது. 

(ஈ) நன்மை செய்தவருக்கு எதிராகச் சூழ்ச்சி செய்யப் புறப்படுபவர்கள் (The Revengeful)

இந்த நிகழ்வைக் கண்டவுடன், இயேசுவைப் பாராட்டாமல், அல்லது நலம் பெற்றவரைக் கண்டு வியக்காமல், ஒரு சிலர் விரைவாக வெளியேறி இயேசுவுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்கின்றனர். 'விரைவாக' என்னும் வார்;த்தை, 'அவர்கள் மனம் மாறி விடுவதற்கு முன்பாக' என்ற பொருளில் அமைந்துள்ளது. தங்கள் கண்முன் நடந்தது நன்மை எனிலும், அதைத் தீமையாகவும், ஓய்வுநாள் மீறலாகவும் மட்டுமே பார்க்கின்றனர் இவர்கள்.

இரண்டு நிலைகளில் நாம் சிந்திக்கலாம்:

(அ) எனக்கு முன் யாராவது தேவையில் இருக்கும்போது, நலம் வேண்டி நிற்கும்போது என் மனநிலை மேற்காணும் நான்கு நிலைகளில் எப்படி இருக்கிறது? 

(ஆ) சில நேரங்களில் நான் கை சூம்பியவர் நிலையில் நிற்கும்போது, என்னைச் சுற்றி அதிகம் நிற்பவர் யார்?

நம்மைச் சுற்றி நிற்பவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும், நம் இயல்பு நன்மை செய்வதாக இருக்க வேண்டும் என்பது இயேசு தரும் பாடமாக இருக்கிறது.

இந்த இயேசுவையே இன்றைய முதல் வாசகம் தனிப்பெரும் தலைமைக்குருவாக, மெல்கிசதேக்கின் முறைப்படி குருவாக ஏற்படுத்தப்பட்டவராக முன்வைக்கிறது. இயேசு ஒருவர் மற்றவர்மேல் காட்டிய இரக்கமே அவரை இந்நிலைக்கு உயர்த்துகிறது.

மனித இயல்பு ஏற்ற அவர், மனித இயல்பை இரக்கத்தினால் மட்டுமே உயர்த்த முடியும் என நம்பினார்.

இரக்கம் காட்டுதல் நன்மை செய்வதற்கான தொடக்கம்.

கை சூம்பியவருக்கு நன்மை செய்தால் தனக்கு என்ன நடக்கும் என்பதைப் பற்றி இயேசு கவலைப்படவில்லை. அவருக்கு நன்மை செய்யாமல் விட்டால் அவருக்கு என்ன நடக்கும் என நினைக்கின்றார். நன்மை செய்கின்றார்.

1 comment:

  1. கை சூம்பியவரை சுகப்படுத்தியது மட்டுமின்றி இந்நிகழ்விற்கு சாட்சியாக நிற்கும் மனிதர்களைப் பலவகையாகப்பிரித்துப் பார்க்கிறார் தந்தை. நம்மைச் சுற்றி நிற்பவர்கள் எப்படிப்பட்டவராக இருப்பினும் “நன்மை செய்வது ஒன்றே” நமது நோக்கமாக இருக்கவேண்டுமெனும் பாடத்தையும் கற்றுத்தருகிறார் இயேசு.மனித இயல்பு ஏற்ற அவர், மனித இயல்பை இரக்கத்தினால் மட்டுமே உயர்த்த முடியும் என நம்பினார்.

    என்னை அடுத்து நிற்கும் ஒருவர் மனமோ,உடலோ சூம்பிய நேரங்களில் நான் என்ன செய்கிறேன்.அவரின் சுமையை இறக்கி வைத்து அவருக்கு சுகம் தருகிறேனா? இல்லை என் சுற்றுபுறத்தை முன்னிட்டு அவரை ஓரங்கட்டுகிறேனா?

    “ இரக்கம் காட்டுதல் நன்மை செய்வதற்கான தொடக்கம்.இரக்கம் செயலாகவும் மாறுகையில் நாமும் இயேசுவாகிறோம்.” இரக்கத்தின் செயல்களை நன்றே செய்வோம்; அவற்றை இன்றே செய்வோம்.

    “இரக்கப்படுபவர்கள் பாக்கியவான்கள்”......... பாக்கியவான்களாவது எப்படி? எனும் வழி சொல்கிறார் தந்தை. நன்றிகள் உரித்தாகட்டும்!!!

    ReplyDelete