Friday, January 8, 2021

அருகில் நிற்றல்

இன்றைய (9 ஜனவரி 2021) நற்செய்தி (யோவா 3:22-30)

அருகில் நிற்றல்

கடந்த இரு நாள்களாக, அல்லது இரு நாள்களுக்கு முன் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் பாராளுமன்றக் கட்டடத்திற்குள் நடந்த நிகழ்வு உலகம் அனைத்தையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. இதுவரை ஆண்ட அதிபர் ஒருவர் புதிய அதிபருக்கு இடம் தர மறுக்கின்றார். மேலும், வன்முறையும் கட்டவிழ்க்கப்படுகிறது.

இந்த உலகம் முதலாமவராக இருக்கவும், முதலாமவராக இருப்பதே சிறப்பும் என்றும் கொண்டாடுகிறது.

ஆனால், இரண்டாம் நிலையும் இனிய நிலையே எனக் கற்றுத் தருகிறார் இன்றைய நற்செய்தி வாசகத்தின் கதைமாந்தர் திருமுழுக்கு யோவான்.

திருமுழுக்கு யோவான் நமக்கு ஆச்சரியம் தரக்கூடியவராக இருக்கின்றார்.

யோவானின் சீடர்கள் சிலர் இயேசுவைப் பற்றி அவரிடம், 'அவரும் திருமுழுக்குக் கொடுக்கின்றார்' எனச் சொல்கின்றனர். இப்படிச் சொல்வதன் நோக்கம், அவர் இயேசுவைக் கடிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே.

ஆனால், யோவான் அப்படிச் செய்யவில்லை.

மூன்று விடயங்களை அவர் பதிவு செய்கின்றார்:

(அ) 'விண்ணிலிருந்து அருளப்படாவிட்டால் எவரும் எதையும் பெற்றுக்கொள்ள இயலாது' என்கிறார். அதாவது, இயேசுவுக்குத் திருமுழுக்குக் கொடுக்கும் அருள் விண்ணிலிருந்து வழங்கப்பட்டது என்று சொல்வதன் வழியாக, இயேசுவை மேன்மைப்படுத்துகின்றார்.

(ஆ) தன் வரையறை என்ன என்பதை உணர்கின்றார். இரு உருவகங்களைக் கையாளுகின்றார் யோவான்: ஒன்று, 'முன்னோடி.' அதாவது, ஓர் அரசர் வரும்போது அவருடைய வருகையை அறிவித்துக்கொண்டே சேவகன் ஒருவன் 'முன் ஓடுவான்.' 'அவனே நான்' என்கிறார் யோவான். முன் ஓடுபவனின் குரலை மாந்தர்கள் கேட்பார்களே தவிர, அவனது முகத்தை யாரும் பார்க்க மாட்டார்கள். மன்னனின் முகமே அவர்கள் எதிர்நோக்கி இருப்பது. இருந்தாலும், 'முன்னோடி' தொடர்ந்து ஓடுவான். இரண்டு, 'மணமகனின் தோழன்'. மாப்பிள்ளைத் தோழர்கள் மணமகனுக்கு அருகில் நிற்கலாம். ஆனால், நிகழ்வில் முதன்மைப்படுத்தப்படுவர் மணமகனே. மணமகனுக்காக அவர் ஓட வேண்டும் - தண்ணீர் எடுக்க, கைக்குட்டை எடுக்க, வியர்வை துடைக்க, காலில் ஷூ மாட்டிவிட, கோட்டில் பட்டன் மாட்டிவிட என்று அவருடைய கண்கள் மணமகன்மேல் இருந்துகொண்டே இருக்க வேண்டும். மணமகன் சிரிப்பது கண்டு சிரிக்க வேண்டும். அத்தகைய 'வாடகை மகிழ்ச்சியை' தன் மகிழ்ச்சி என்கிறார் யோவான். 'அதில் அவர் பெருமகிழ்ச்சி கொள்கிறார். என் மகிழ்ச்சியும் இது போன்றது. இம்மகிழ்ச்சி என்னுள் நிறைந்துள்ளது' என்கிறார் யோவான்.

(இ) 'அவர் வளர வேண்டும், நான் குறைய வேண்டும்.' தன் வளர்ச்சியை முதன்மைப்படுத்தாது, தனக்குப் பின் வந்த ஒருவரின் வளர்ச்சியை முதன்மைப்படுத்துகிறார் யோவான். மேலும், அடுத்தவர் வளர்வதற்குத் தான் தடையாக இருக்கக் கூடாது என்றும் நினைக்கின்றார்.

யோவானின் இக்குணங்களுக்குக் காரணம் அவருடைய நிறைவு மனப்பாங்கு.

தன் நிறைவைத் தனக்குள் காண்கிறார். தனக்கு அடுத்திருப்பவரில் அல்ல.

இன்று நான் என் நிறைவை எங்கு காண்கிறேன்? இன்னொருவர்தான் என்னை நிரப்ப முடியும் என்று என் மகிழ்ச்சியை நான் மற்றவரில் தேடிச் சோர்ந்து போகின்றேனோ? 

நம் மகிழ்ச்சி நம் வரையறையை உணர்வதில் இருக்கிறது.

நம் வரையறை இரண்டாம் இடமும் என்றாலும், இரண்டாம் இடத்திலும் இனிமை, மகிழ்ச்சி இருக்கிறது.

4 comments:

  1. ‘நிறைவு மனப்பாங்கு’ கொண்ட ஒருவர் தன் நிறைவைத் தனக்குள் காண்கிறார்.. தான் மணமகன் இல்லை எனினும், மணமகனின் தோழனே என்பதில் பெருமை கொள்கிறார் திருமுழுக்கு யோவான்..தந்தையின் கேள்வி நம்மைக்கொஞ்சம் உசுப்பேத்தி விடுகிறது. என் மகிழ்ச்சியை நான் என்னில் காண்கிறேனா இல்லை மற்றவரில் தேடுகிறேனா? இந்தக் கேள்விக்குத் தானே பதிலாக நிமிர்ந்து நிற்கிறார் “ இரண்டாம் நிலையும் இனிய நிலையே” என நமக்குக் கற்றுத்தரும் ஒருவர்.....அவரே தன் வளர்ச்சியை முதன்மைப்படுத்தாது தனக்குப்பின் வந்த ஒருவரின் மகிழ்ச்சியை முதன்படுத்தும் திருமுழுக்கு யோவான். ஒரு பக்கம் ‘ அவர் பாவம்’ என நமக்குத்தோன்றினாலும் இயேசுவுக்காக எதிலும் குனிந்து கொடுக்கும் அவரின் சுபாவம் நம்மை வசீகரிக்கிறது.

    முதலாமவராக இருப்பதே சிறப்பு என்று நினைப்போர் மத்தியில் “ இரண்டாம் நிலையும் இனிய நிலையே!” என்று ஓங்கிக் குரல் கொடுக்கும் தந்தைக்கு என் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  2. சிறப்பு🤝

    ReplyDelete
  3. Good Refection Dr Yesu

    ReplyDelete
  4. நம் வரையறை இரண்டாம் இடம் என்றாலும், இரண்டாம் இடத்திலும் இனிமை, மகிழ்ச்சி இருக்கிறது.


    Though I have come across this view of yours, many times & do accept this fact,

    Right from my childhood,I was behind this " being first" for anything & everything.

    Just yesterday,I had an eye opening of this fact, from one of my office colleague,(probably 20 years younger than me)

    When I asked him,"Am I the first to submit the IT statement?"
    He just replied very politely...

    "அப்படி இல்லாவிட்டாலும் ஒன்றுமில்லை அம்மா"
    Yes absolutely,he is true...
    Which reinforced your view too.

    So now I am convinced,
    Not always behind the first;
    Not always behind the best; BUT

    Always for the greater Glory of the Almighty.

    Thank you.

    ReplyDelete