Sunday, January 17, 2021

காலம் வரும்

இன்றைய (18 ஜனவரி 2021) நற்செய்தி (மாற் 2:18-22)

காலம் வரும்

ஆங்கில நாவல் ஒன்றில் எங்கோ வாசித்த ஒரு வாக்கியம் நினைவுக்கு வருகிறது: 'இறப்புக்கு முன் நீ இறந்து போகாதே!'

அதாவது, 'இறப்பு வரும் போது வரும். இறப்பு வருகிறது என்று சொல்லி இருப்பை இழந்து விடாதே!' என்பதுதான் இதன் பொருள்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் 'நோன்பு' பற்றிய வாக்குவாதம் எழுகிறது. 'உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பு இருப்பதில்லை?' என்ற வினா இயேசுவிடம் எழுப்பப்பட, இயேசு, நேரடியாக அதற்கு விடை பகராமல், 'மணமகன், விருந்து, துணி, ஒட்டு, கிழிசல், மது, தோற்பை' என்று சொல்லி, கேட்பவர் தாமே விடையை அறிந்துகொள்ளத் தூண்டுகிறார்.

'மணமகன் இருக்கும் காலம் வரையில் அவர்கள் நோன்பிருக்க முடியாது. அவர்களை விட்டுப் பிரிய வேண்டிய காலம் வரும்!'

ஆக, அந்தந்தக் காலத்திற்கு உள்ளதை அந்தந்தக் காலத்திற்குச் செய்தால் போதும் என்பது இயேசுவின் பாடமாக இருக்கிறது.

சிலர் எதிர்காலம் குறித்த அதீத அக்கறையில் தங்களையே மிகவும் வருத்திக்கொள்வர். எது எப்போது நடக்க வேண்டுமோ அது அப்போது நடக்கும். ஆக, உலகமே நம் தலையில் இருப்பது போல நினைத்து அனைத்தையும் நினைத்துக் கவலைப்படத் தேவையில்லை.

இயேசுவின் கூற்று நமக்கு மூன்று பாடங்களைத் தருகிறது:

(அ) இணைவது அனைத்தும் பிரிந்தே ஆக வேண்டும்

மணமகனின் உடனிருப்பு எந்த அளவுக்கு உண்மையோ, அது போல அவருடைய பிரிவும் உண்மை. அதைச் சீடர்கள் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். மணமகன் எப்போதும் தங்களோடு இருப்பார் என்று அவர்கள் எண்ணுதல் கூடாது.

(ஆ) அந்தந்தக் காலத்திற்கு உரியதை அந்தந்தக் காலத்தில் செய்ய வேண்டும்

காலத்தை அறிதலும், காலத்திற்கேற்ற செயல்பாட்டை அறிதலும் அவசியம். காலம் தப்பிச் செய்யப்படும் எதுவும் பொருந்தாததாகிவிடும்.

(இ) மனித வாழ்வின் இலக்கு மகிழ்ச்சி

மனித வாழ்வின் இலக்கு மகிழ்ச்சியே. நாம் மகிழ்ந்திருத்தல் இறைவனுக்கு விருப்பமே. அப்படி இருக்க, நம்மை நாமே வருத்திக்கொண்டு சோகமாகவும், பரபரப்பாகவும், விரக்தியாகவும் இருப்பது ஏன்? 

'நேர்மையாய் நடப்பதிலும் ஞானத்தைப் பெறுவதிலும் வெறி கொண்டவராய் இராதீர். அந்த வெறியால் உம்மையே அழித்துக் கொள்வானேன்? தீமை செய்வதிலும் மூடராய் இருப்பதிலும் வெறிகொண்டிராதீர். காலம் வருமுன் நீவிர் ஏன் சாக வேண்டும்? ஒன்றைப் பற்றிக்கொண்டிருக்கும்போது அதற்கு மாறானதைக் கைவிட்டு விடாதீர். நீவிர் கடவுளுக்கு அஞ்சி நடப்பீரானால் அனைத்திலும் வெற்றி பெறுவீர்.' (சஉ 7:16-18)

3 comments:

  1. “அந்தந்த காலத்திற்கு உள்ளதை அந்தந்த காலத்தில் செய்தால் போதும்” என உணர்த்தும் பதிவு. உடனிருப்பு எத்தனை உண்மையோ அதுபோலவே பிரிவும் உண்மை என்பதும், காலம் தப்பிச் செயல்படும் எதுவும் பொருந்தாததாகிவிடும் என்பதும், சோகம்,பரபரப்பு, விரக்தி இவற்றை மறந்து மகிழ்ச்சியோடிருக்க வேண்டுமென்பதும் நமது இன்றையப் புரிதலாக பார்க்கப்படுகிறது.

    சபை உரையாளரின் வார்த்தைகளில் “காலம் கனியுமுன் எதையும் கைப்பற்றவோ...கைவிடவோ கூடாது; கடவுளிடம் நாம் காட்டும் அச்சம் ஒன்றே நமக்கு வெற்றியைக்கொண்டுவரும்.”....... என்பதை தனக்கே உரித்தான வார்த்தைகளில் புரியவைத்த தந்தைக்கு நன்றிகள்!

    “ இறப்பு வருகிறது என்று சொல்லி இருப்பை இழந்து விடாதே!”....... இன்றைய நாட்களின் தற்கொலைகளுக்கு விடிவு ( விடை) தரக்கூடிய செய்தி! அருமை!!!

    ReplyDelete
  2. உடலால் உயிரோடிருந்தும் உள்ளத்தால்....உணர்வால் “வாழும் பிணங்களைப்” பற்றித்தான் தந்தை குறிப்பிடுகிறார் எனப் புரிந்திடினும், என் புரிதலையும் ஏற்றுக்கொள்வாரென நம்புகிறேன்! நன்றி!

    ReplyDelete