Monday, January 25, 2021

புனிதர்கள் திமொத்தேயு, தீத்து

இன்றைய (26 ஜனவரி 2021) திருநாள்

புனிதர்கள் திமொத்தேயு, தீத்து

பவுலின் உடனுழைப்பாளர்களும், எபேசு மற்றும் கிரேத்து நகரங்களின் ஆயர்களாகவும் விளங்கிய திமொத்தேயு மற்றும் தீத்து என்னும் இளவல்களின் திருநாளை இன்று நாம் கொண்டாடுகின்றோம்.

இவர்கள் இருவரும் வியப்பின் ஆச்சரியக் குறிகள்!

தீத்துவைப் பற்றி எழுதுகின்ற பவுல், 'துரோவாவில் என் தம்பி தீத்துவைக் காணாததால் என் மனம் அமைதியின்றித் தவித்தது. எனவே, அம்மக்களிடம் விடை பெற்றுக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டேன்' (காண். 2 கொரி 2:13) என்றும், 'தீத்துவைப் பற்றிக் கூற வேண்டுமென்றால், அவர் என் பணியில் பங்காளியும் உடன் உழைப்பாளரும் ஆவார்' (காண். 2 கொரி 8:23) என்றும், 'நம்பிக்கை அடிப்படையில் என் உண்மைப் பிள்ளை' (காண். தீத் 1:1) என்றும் முன்மொழிகின்றார்.

ஆக, ஒரே நேரத்தில் பவுலின் தம்பியும், பங்காளியும், உடன் உழைப்பாளரும், மகனுமாக இருக்கின்றார் தீத்து.

திமொத்தேயுவுக்கு எழுதுகின்ற பவுல், 'நீ வரும்போது நான் துரோவாவில் கார்ப்புவிடம் விட்டுவந்த போர்வையையும் நூல்களையும் குறிப்பாகத் தோற்சுருளையும் எடுத்து வா!' (காண். 2 திமொ 4:13) என்று பணிக்கின்றார். இவரை, 'அன்பார்ந்த பிள்ளை' (காண். 2 திமொ 1:1) என்று அழைக்கின்ற பவுல், 'இரவும் பகலும் இடைவிடாமல் என் மன்றாட்டுகளில் உன்னை நினைவுகூருகின்றேன். உன் கண்ணீரை நினைவிற்கொண்டு உன்னைக் காண ஏங்குகின்றேன். கண்டால் என் மகிழ்ச்சி நிறைவடையும்' (காண். 2 திமொ 1:3-4) என உருகுகின்றார்.

புனித பவுல் தன் உடனுழைப்பாளர்கள் அனைவரோடும் இணைந்து, நாங்கள் 'தூய்மை, அறிவு, பொறுமை, நன்மை, தூய ஆவியின் கொடைகள், வெளிவேடமற்ற அன்பு ஆகியவற்றைக் கொண்டிருக்கிறோம்' (காண். 2 கொரி 6:6) என்று பெருமை பாராட்டுகின்றார்.

எபேசு மற்றும் கிரேத்து நகரங்களின் இளம் ஆயர்களாகத் திகழ்ந்த திமொத்தேயும், தீத்துவும் மேற்காணும் பண்புகளைக் கொண்டே தங்கள் மந்தையைக் கண்காணித்தனர். இவர்கள் வயதில் மிகவும் சிறியவர்களாக இருந்திருக்க வேண்டும் என்பது இவர்களுக்கு எழுதப்பட்ட மடலிலிருந்து புலப்படுகிறது: 'நீ இளைஞனாய் இருப்பதால் யாரும் உன்னைத் தாழ்வாகக் கருதாதிருக்கட்டும்' (காண். 1 திமொ 5:12)ளூ 'யாரும் உன்னைத் தாழ்வாக மதிப்பிட இடமளிக்காதே!' (காண். தீத் 2:15).

ஆக, இவர்களோடு சேர்ந்து இன்று புனித பவுலும் கொண்டாடப்பட வேண்டியவரே.

பவுல், திமொத்தேயு, மற்றும் தீத்து ஆகியோர் இணைந்த மூவர் அணி நமக்கு, குறிப்பாக அருள்நிலையில் இருப்பவர்களுக்கு, முன்வைக்கும் சவால்கள் எவை?

(அ) என்னோடு உடனுழைப்பவரை நான் கொண்டாட வேண்டும்

'அருள்பணிநிலைப் பொறாமை' (clerical jealousy) என்பது இன்று தவிர்க்க இயலாத ஓர் உணர்வாகிவிட்டது. ஓர் அருள்பணியாளர் தன் சகஅருள்பணியாளர் பற்றி, அல்லது தனக்குப் பின் பணி ஏற்பவர் பற்றி இடறல்படுவதுதான் இந்தப் பொறாமையைத் தூண்டி எழுப்பும் தீப்பொறி. பவுல் தன் உடனுழைப்பாளர்களையும் அவர்களுடைய திறன்களையும் கொண்டாடினாரே தவிர, அவற்றைப் பற்றிப் பொறாமை கொள்ளவில்லை.

(ஆ) எனக்குப் பின் ஒரு வாரிசை ஏற்படுத்த வேண்டும்

பவுல், திமொத்தேயு, மற்றும் தீத்து ஆகியோர் வேறு வேறு ஊர்களைச் சார்ந்தவர்கள் என்றாலும், வௌ;வேறு சமூக, குடும்ப, மற்றும் இனப் பின்புலங்களைக் கொண்டிருந்தாலும், இயேசு என்னும் ஒற்றைப் புள்ளியில் குவிகின்றனர். தங்களை இணைக்கின்ற அந்தப் புள்ளியில் குவிந்தார்களே தவிர, தங்களை ஒருவர் மற்றவரிடமிருந்து பிரிக்கும் எந்தக் காரணியையும் அவர்கள் பொருட்படுத்தவே இல்லை. இவ்வாறாக, பவுல் தனக்குப் பின் ஒரு வாரிசை ஏற்படுத்தினார். இன்று பல இடங்களில் மறைமாவட்டங்கள் மற்றும் துறவற சபைகளில் அழைத்தல் குறைந்துகொண்டே வருகிறது. ஒவ்வொருவரும் தனக்கென ஓர் உடனுழைப்பாளரை எடுத்து, அவரைத் தன் அருள்நிலையின் வாரிசாக ஏற்படுத்தினால் எத்துணை நலம்!

(இ) மதிப்பீடுகள்தாம் என்னை நிர்ணயிக்கின்றன

'ஆண்டவர் முன்னிலையில் மட்டுமல்ல. மனிதர் முன்னிலையிலும் கண்ணியத்தைக் கடைப்பிடிப்பதே எங்கள் நோக்கம்' (காண். 2 கொரி 8:21) என்கிறார் பவுல். இன்று பல நேரங்களில் என் கண்ணியத்தை நான் மனிதர்கள் முன் இழக்கின்ற சூழல் என் அருள்பணி வாழ்வில் வந்துவிடுவது ஏன்? கடவுள் முன்னிலையில் நான் நன்றாக இருக்கிறேன் என்று எனக்கு நானே ஆறுதல் சொல்வது ஒரு வகையான தற்பாதுகாப்பா? பவுல் அறிக்கையிட்ட, 'தூய்மை, அறிவு, பொறுமை, நன்மை, தூய ஆவியின் கொடைகள், வெளிவேடமற்ற அன்பு' ஆகியவை என் அடையாளங்களாக மாறுகின்றனவா?

(ஈ) போர்வையை மறக்கும் ஆன்மீகம்

'நான் விட்டுவந்த போர்வையை எடுத்து வா!' என்று பவுல் திமொத்தேயுவுக்கு எழுதும் வாக்கியம், தொடக்கத் திருஅவைப் பணியாளர்கள் வாழ்ந்த எளிய வாழ்க்கை முறையை நமக்கு எடுத்தியம்புகிறது. அன்றாடம் அவர்கள் தங்கள் வயிற்றுக்காக உழைத்தனர். இருந்தாலும், பயணங்கள் பல செய்தனர். எழுத்துகள் பல எழுதினர். போர்வை இல்லாமல் பவுல் எவ்வளவு நாள்கள் குளிரில் வாடியிருப்பார்? தன் உடல் காக்கும் போர்வையை விட்டுவிட்டு, அதைவிட மதிப்புக்குரியது என அவர் தன்னோடு எடுத்துச் சென்றது எது? இன்று பல நேரங்களில் என் மனம் என் போர்வையிலேயே இருப்பது எனக்கு வருத்தம் அளிக்கிறது.

(உ) திரும்பாத திடம்

நான் அடிக்கடி நினைத்ததுண்டு: பவுல் தன் மனமாற்றத்திற்காக மனம் வருந்திருப்பாரா? நல்ல படிப்பு, கைநிறைய வேலை, யாரையும் கொல்லும் அதிகாரம் எனக் குதிரையில் வலம் வந்தவரை, அவர் பணியிடத்து மக்கள், 'அவர் நேரில் வந்தால் பார்க்கச் சகிக்காது. பேச்சும் எடுபடாது' (காண். 2 கொரி 10:10) என்று சொன்னபோது அவருடைய மனநிலை என்னவாக இருந்திருக்கும்? இன்று என் வாழ்வில் சில நேரங்களில் சின்னஞ்சிறு நெருடல்கள் வந்தாலும், 'திரும்புவதே நலம். வாழ்வது ஒரு வாழ்க்கை' என்று என் மூளை சொல்வது ஏன்?

(ஊ) அக்கறையற்றவனாய் இராதே

மாரியே புஸ்ஸோ அவர்கள் எழுதிய, தெ காட்ஃபாதர் என்னும் நாவலில் எனக்குப் பிடித்த பல வரிகளில் இதுவும் ஒன்று: 'நான் என் வாழ்நாள் முழுவதும் அக்கறையுடன் வாழவே முயற்சி செய்தேன். பெண்களும் குழந்தைகளும் அக்கறையின்றி இருக்கலாம். ஆனால், ஆண்கள் அக்கறையின்றி இருக்கக் கூடாது' ('I spent my life trying not to be careless; women and children can be careless, but not men") இங்கே, 'அக்கறை' என்பதை 'கவனக்குறைவு' என்றும் மொழிபெயர்க்கலாம். 'இறைவாக்கு உரைத்து, மூப்பர்கள் உன்மீது கைகளை வைத்துத் திருப்பணியில் அமர்த்தியபோது, உனக்கு அளிக்கப்பட்ட அருள்கொடையைக் குறித்து அக்கறையற்றவனாய் இராதே!' (காண். 1 திமொ 5:14) என்று தன் அன்புப் பிள்ளைக்கு அறிவுறுத்துகின்றார் பவுல். அருள்பணி நிலை பற்றிய அக்கறையின்மை அல்லது கவனக்குறைவே பல நிர்வாக, நிதி, மற்றும் பாலியில் பிறழ்வுகளுக்கான காரணம் என நான் எண்ணுகின்றேன்.

பவுல், திமொத்தேயு, மற்றும் தீத்து நல்ல அருள்பணியாளர்களாய் நம்முன் நிற்கின்றனர். 

நான் அவர்கள் முன் எப்படி நிற்கின்றேன்?

3 comments:

  1. இன்று கொண்டாடப்பட்ட பவுலோடு நாளை தீத்துவும்,திமோத்தேயும் சேர்த்தே கொண்டாடப்படுகிறார்கள்.இவர்கள் குறித்து அநேக நல்ல காரியங்களைப் பற்றித் தந்தை குறிப்பிட்டிருப்பினும்,இவர்கள் அனைவருமே “இயேசு” எனும் ஒற்றைப் புள்ளியில் குவிந்தனர் என்பது கொண்டாடப்பட வேண்டிய விஷயம்.இந்தக் கூட்டணியில் பவுல் இவர்களுக்கு ஒரு தாயாகவே வாழ்ந்திருக்கிறார் என்பது “ என் அன்பார்ந்த பிள்ளை; இரவும் பகலும் என் மன்றாட்டுக்களில் உன்னை நினைவு கூறுகிறேன்” போன்ற வார்த்தைகளில் தெரிகிறது.

    இவர்களை முன்வைத்து, இன்றைய அருட்பணியாளர்களுக்கு சவாலாயிருக்கும் விஷயங்களிலும்.... அவர்களின் அருட்பணி வாழ்வின் நெருடனான நேங்களிலும் இறைவன் அவர்களுக்குத் துணை வரட்டும்!

    இதுவே தந்தைக்கு மட்டுமின்றி அனைத்து அருட்பணியாளர்களுக்காகவும் இன்று நான் இறைவனிடம் வேண்டும் வரம்! இறைவன் அவர்களை நிறைவாக ஆசீர்வதிப்பாராக!!!

    ReplyDelete
  2. Great analysis👍
    Self cum all religious & laity !

    ReplyDelete
  3. Super reflections Yesu. Very good for my personal introspection. God bless us.

    ReplyDelete