Sunday, September 9, 2018

குற்றம் காணும் நோக்குடன்

நாளைய (10 செப்டம்பர் 2018) நற்செய்தி (லூக் 6:6-11)

குற்றம் காணும் நோக்குடன்

தொழுகைக்கூடத்தில் ஓய்வுநாளில் கற்பிக்கின்ற இயேசுவின்முன் சூம்பிய கை உடையவர் ஒருவர் நிற்கிறார். அங்கிருந்த மறைநூல் அறிஞரும், பரிசேயரும் இயேசுவிடம் குற்றம் காணும் நோக்குடன், அவர் அவரைக் குணப்படுத்துவாரா என்று பார்த்துக்கொண்டே இருந்தனர் என லூக்கா பதிவு செய்கின்றார்.

குணமாக்குவதில் உறுதியாக இருக்கும் இயேசு அவர்களுக்கு ஒரு சின்ன டெஸ்ட் வைத்தபின் அவரைக் குணமாக்குகின்றார். அவர்களும் இயேசுவின்மேல் கோப வெறி கொண்டு அவரை என்ன செய்யலாம் என்று கலந்து பேசுகின்றனர்.

குற்றம் காணுதல், குற்றம் கடிதல் என்று இரண்டு வகை உண்டு.

உதாரணத்திற்கு, என் அப்பாவின் சட்டைப் பையில் உள்ள 500 ரூபாயை நான் எடுத்துவிடுகிறேன் என வைத்துக்கொள்வோம். என் வீட்டில் இருக்கும் என் அம்மாவிடம் விசாரிக்கும் என் அப்பா, அவர் எடுக்கவில்லை என்று உறுதியாகத் தெரிந்தவுடன் என்னிடம் விசாரிக்கின்றார். நானோ, 'இல்லை' என பொய் சொல்கிறேன். ஆனால், நான் பேசுவது பொய் என்று தெரிந்தும், 'இனி இப்படிச் செய்யாதே!' என என்னைக் கடிகின்றார் என் அப்பா. இது குற்றம் கடிதல். ஆனால், ஒருவேளை, 'இவன் இந்தப் பணத்தை எடுப்பானா?' என்ற எண்ணத்தில் என் அப்பா பணத்தை தன் பையில் வைத்து, என்னையே பார்த்துக்கொண்டிருக்கிறார் என்றால், அது 'குற்றம் காணுதல்.'

முதல் நிகழ்வில், தவறு என்மேல் இருக்கிறது. தவறு என் செயலில் இருக்கிறது.

இரண்டாம் நிகழ்வில், தவறு என் அப்பாமேல் இருக்கிறது. தவறு அவரது எண்ணத்தில் இருக்கிறது.

ஒருவேளை இயேசு குணமாக்கியபின் அவரை நேருக்கு நேர் அணுகி, தங்களின் சட்டங்கள் மற்றும் மரபுகளை மேற்கோள் காட்டி, 'இது சரி! இது தவறு!' என்று சொன்னால், அது சரி.

அதைவிடுத்து, இயேசுவின் 'குணமாக்குதல்' என்ற நல்ல பண்பை அவர்கள் தங்களுக்குச் சாதமாக எடுத்துக்கொள்கின்றனர். ஆக, இவர்களின் எண்ணம் தீயதாக இருக்கிறது.

தங்களில் சரியாக இவர்கள் இல்லாததால்தான் இவர்கள் சரியாக இருப்பவரைக் குற்றம் காணுகின்றனர்.

ஆக, தீய எண்ணம் கொண்டவர் அடுத்தவரும் தன்னைப் போல தீய எண்ணம் கொண்டிருக்க வேண்டும் என்கிறார்.

குற்றம் காணுதல் மறைய நிறைய பெரிய மனம் வேண்டும்.

நாளைய முதல் வாசகத்தில் 'புளிப்பு மாவை' தூக்கி எறியுங்கள் என்கிறார் பவுல்.

தீய எண்ணம் நம்மிடம் இருக்கும் புளிப்பு மாவு. அது ஒரு விடயத்தில் வந்தால் அடுத்தடுத்து வேகமாக நம் ஒட்டுமொத்த சிந்தனையை புளிப்பாக்கிவிடுகிறது.

எனவே, தீய எண்ணம் மறைதல் அடுத்தவருக்கு நலமோ இல்லையா எனக்கு நலம்.

1 comment:

  1. " குற்றம் கடிதல்", " குற்றம் காணுதல்" ... இரு வார்த்தைகளுக்கிடையே உள்ள வேறுபாட்டைத் தந்தை விளக்கியுள்ள விதம் புரிதலைத் தருகிறது.நம்முடைய சிந்தனையைப் புளிப்பாக்கி விடும் தீய எண்ணங்களை நம்மிடமிருந்து களைவது முக்கியம்.அதைவிட முக்கியம் "பெரிய மனம்." ஆம்!" குற்றம் காணுதல் மறைய நிறைய பெரிய மனம் வேண்டும்."..... என்னைச்சுற்றி இருப்போரின் செயல்களில் எனக்குத்தெரியாத ஒரு நியாயம் இருக்கலாம் என நினைத்தால் கண்டிப்பாக அடுத்தவரிடம் குற்றம் காணுதலை அறவே நம்மிடமிருந்து ஒழித்து விடலாம்....இறைவன் அருளும் சேர்ந்து நின்றால்! முயன்றால் முடியாதது என்று ஒன்றில்லை என்று சொல்லாமல் சொல்லும் தந்தைக்கு என் நன்றிகள்!!!

    ReplyDelete