Tuesday, September 25, 2018

வரம் இரண்டு

நாளைய (26 செப்டம்பர் 2018) நற்செய்தி (லூக் 9:1-6)

வரம் இரண்டு

கடவுளர்கள் மனிதர்களுக்குத் தோன்றி, 'வரம் கேள்' என்று கேட்கும் நிகழ்வுகளை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.

மனிதர்களே மனிதர்களிடம் வரம் கேட்கும் நிகழ்வை - எ.கா. குந்திதேவி அரசி தன் மகன் கர்ணனிடம் கேட்பது - நாம் மகாபாரதத்தில் வாசிக்கிறோம்.

ஆனால், கடவுள் தோன்றாமலேயே கடவுளிடம் வரம் இரண்டு கேட்கும் நிகழ்வை நாளைய முதல் வாசகத்தில் (காண். நீமொ 30:5-9) வாசிக்கின்றோம்.

கடவுளைப் பற்றி தன் சீடருக்கு அறிவுறுத்தும் நீதிமொழிகள் நூல் ஆசிரியர் தொடர்ந்து, தானே கடவுளிடம் வரம் கேட்கின்றார். அவரின் வார்த்தைகள் வாசிப்பதற்கே மிகவும் அழகாய் உள்ளதால், அவற்றை அப்படியே இங்கே பதிவு செய்கிறேன்:

'வரம் இரண்டு உம்மிடம் கேட்கிறேன். மறுக்காதீர். நான் சாவதற்குள் அவற்றை எனக்கு அளித்தருளும்'

(அ) வஞ்சனையும் பொய்யும் என்னைவிட்டு அகலச் செய்யும்.

(ஆ) எனக்குச் செல்வம் வேண்டாம். வறுமையும் வேண்டாம். எனக்குத் தேவையான உணவை மட்டும் தந்தருளும். எனக்கு எல்லாம் இருந்தால், நான், 'உம்மை எனக்குத் தெரியாது' என்று மறுதலித்து, 'ஆண்டவரைக் கண்டது யார்?' என்று கேட்க நேரிடும். நான் வறுமையுற்றால், திருடனாகி, என் கடவுளின் திருப்பெயருக்கு இழிவு வருவிக்க நேரிடும்'

'சாவதற்குள் கொடும்' என்று ஆசிரியர் கேட்பது சற்று வியப்பாக இருக்கிறது. ஆசிரியர் இறக்கும் தருவாயில் இருக்கிறாரா, அல்லது இந்த வரங்கள் கிடைக்க ஆண்டுகள் ஆகும் என்பதலா என்று நமக்குத் தெரியவில்லை.

முதல் வரம், ரொம்பவும் எளிதான வார்த்தைகளில் இருக்கிறது. 'வஞ்சனை,' 'பொய்' இவை இரண்டும் நம் தவறுகள் அல்ல. மாறாக, இவை நாமாக எடுக்கும் தெரிவுகள். நான் பால் பாத்திரத்தை தூக்க நினைத்து, அதைத்; தூக்க, அந்தப் பாத்திரம் சூடானதாக இருந்து நான் அதை அப்படியே தரையில் போட்டால் அது தவறு. ஆனால், பாத்திரம் சூடாக இருக்கிறது என்று தெரிந்தும், என்னால் சூடான பாத்திரத்தை தூக்க முடியாது எனத் தெரிந்தும், நான் அதைத் தூக்கி வேண்டுமென்றே கீழே போடுகிறேன் என்றால் அது என் தெரிவு. மேலும், வஞ்சனையில் இரட்டைத்தன்மை இருக்கும். என் நண்பனோடு நான் நன்றாக பேசிக்கொண்டே இருந்தாலும், அவனுக்கு எதிராக நான் சூழ்ச்சி செய்யும்போது அங்கே நான் வஞ்சனை செய்கிறேன். அங்கே என் செயல்பாடுகள் இரட்டைத்தன்மையோடு இருக்கின்றன. அதே போல, நான் பொய் சொல்லும்போதும், உண்மை ஒன்று, பொய் மற்றொன்று என்று அதிலும் இரட்டைத்தன்மை இருக்கிறது. ஆக, இரட்டைத்தன்மை மறைய வேண்டும் என்பதை நானே தெரிவு செய்ய வேண்டும். இதை இறைவனிடம் வரமாகக் கேட்கின்றார் ஆசிரியர்.

இரண்டாம் வரம். கொஞ்சம் விளக்கமாக இருக்கிறது. 'செல்வமும் வேண்டாம், வறுமையும் வேண்டாம். தேவையானதைக் கொடு' என்கிறார். இது ரொம்பவும் புத்திசாலித்தனமான வரமாக இருக்கிறது. தான் கேட்பதற்கான விளக்கத்தையும் கொடுக்கின்றார் ஆசிரியர். ரொம்ப செல்வம் வந்தால் அங்கே கடவுளை மறந்துவிடும் வாய்ப்பு இருப்பதாகவும், ரொம்ப வறுமை வந்தால் அங்கே திருடான ஆகிவிடும் வாய்ப்பு இருப்பதாகவும் சொல்கிறார் ஆசிரியர். இது ரொம்பவும் உண்மை. அதிகம் பணம் இருப்பவர்கள் கடவுளைத் தேட மாட்டார்கள். ஏனெனில் தங்களுக்குத் தேவையானது எல்லாமே அவர்களுக்குக் கிடைத்துவிடுகிறதுதானே. ரொம்ப வறுமை வந்தால், சாப்பாட்டைத் தேடுவோமா? கடவுளைத் தேடுவோமா? மேலும், வறுமை ஒருவனையும் திருடனாக்கிவிடும். (செல்வம் இருப்பவர்களும் திருடுவார்கள். நம்ம நாட்டு அரசியல் தலைவர்கள் அல்லது அரசியல் தலைவர்களை விலைக்கு வாங்கும் கார்ப்பரெட் முதலாளிகள்)

'தேவையானதைக் கொடு' - இவரின் இந்த செபம் எனக்கு பிடித்திருக்கிறது. மிகவும் எதார்த்தமான செபம். இதை மெய்யியலில் 'நடுவழி' என்பார்கள். இரண்டு கடைக்கோடிகள் இல்லாமல் நடுமனைப் பிடித்துக்கொள்வது. அரிஸ்டாட்டிலும், 'பண்பு என்பது நடுமனில் இருக்கிறது' என்கிறார்.

இந்த இரண்டு வரங்களையும், தாமே தம் சீடர்களுக்குக் கொடுத்து அவர்களைப் பணிக்கு அனுப்புகின்றார் இயேசு.

'கையில் எதுவும் வைத்துக்கொள்ள வேண்டாம்' என்று சொல்லும் அவர், அவர்களின் செல்வங்களை விடவும், 'அங்கேயே தங்கியிருங்கள்' என்று சொல்லும் அவர், தங்களின் தேவைக்குரியதை மற்றவர்களிடம் பெற்றுக்கொள்ளவும் சொல்லி அனுப்புகிறார்.

இறையரசு பற்றிய அவர்களின் அமைதிப் போதனையில் வஞ்சனையோ, பொய்யோ இல்லை.

இறைவனிடம் இன்று நாம் கேட்கும் வரங்கள் எவை?

1 comment:

  1. நமக்குப் பரிச்சயமான பல வரங்களை பற்றித்தன் பதிவை ஆரம்பிக்கும் தந்தை இறுதியாக நீதிமொழியின் ஆசிரியர் இறைவனிடம் கேட்கும் வரம் பற்றிக்கூறுகிறார். 1.வஞ்சனையும் பொய்யும் என்னை விட்டு அகலச்செய்யும்..இவை பற்றித் தந்தை கூறும் "தவறு"- " தெரிவு" எனும் வார்த்தைகளுக்கிடையே உள்ள வித்தியாசம் தவிர புதிதாக ஒன்றும் தோன்ற வில்லை.ஆனால் அந்த இரண்டாவது வரம்..." செல்வமும் வேண்டாம்; வறுமையும் வேண்டாம்.எனக்கு எது தேவையோ அதை மட்டுமே கொடு"... எனக்கும் கூட இந்த செபம்( வரம்) பிடித்திருக்கிறது.கண்டிப்பாக இப்படிக் கேட்பதற்கும் ஒரு தைரியம் தேவை." அதீதம்" என்றுமே ஆபத்தானது; எது தேவையோ அதை மட்டுமே வைத்துக்கொள்ளுங்கள்" என்று சொல்லும் முதல் மற்றும் இரண்டாம் வாசகங்கள் இன்றைய கால கட்டத்துக்கும்,இன்றையத் தலைமுறையினருக்கும் மிகவும் தேவைதான்.இங்கே தந்தை குறிப்பிட்டிருக்கும் பலவிதமான " வரங்கள்"' மத்தியில் "நான் இருக்கும் நிலையில் உன்னை என்ன கேட்பேன்? தினம் நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன்" எனும் மகாபாரத்த்தின் வரிகள் என் செவிகளில் வந்து விழுவதை என்னால் தவிர்க்க இயலவில்லை." வரம்" தந்தை சாமியை இன்றும்,என்றும் இறைவன் தன் வரங்களால் நிரப்புவாராக!

    ReplyDelete