Sunday, September 23, 2018

உள்ளவருக்கு கொடுக்கப்படும்

நாளைய (24 செப்டம்பர் 2018) நற்செய்தி (லூக் 8:16-19)

உள்ளவருக்கு கொடுக்கப்படும்

சமூக சிந்தனைக் கூட்டங்களில் அல்லது எழுச்சியுரைகளில் நாம் அதிகமாகக் கேட்கும் ஒரு வாசகம், 'பணக்காரார்கள் இன்னும் அதிக பணக்காரர்கள் ஆகிறார்கள். ஏழைகள் இன்னும் அதிகம் ஏழைகள் ஆகிறார்கள்' என்பதுதான். எடுத்துக்காட்டாக, உலகமயமாக்கல் அல்லது நுகர்வுமயம் போன்றவற்றுக்கான எதிரான கூட்டங்களில் நாம் மேற்காணும் கண்டன வார்த்தைகளைக் கண்டிப்பாகக் கேட்டிருப்போம். அந்த நேரத்தில், அவர்கள் ரொம்ப சரியாக பேசுவதாகவும் நினைத்திருப்போம்.

ஆனால்,

விவிலியத்தின் போதனையும் அதுவாகத்தான் இருக்கிறது என்பதும் ஆச்சர்யமாக இருக்கிறது.

'பணக்காரர்கள் இன்னும் அதிக பணக்காரர்கள் ஆகிறார்கள். ஏழைகள் இன்னும் அதிகம் ஏழைகள் ஆகிறார்கள்'

'உள்ளவர்கள் அனைவருக்கும் கொடுக்கப்படும். இல்லாதவரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்.'

அப்படி என்றால், விவிலியம் உலகமயமாக்கல், நுகர்வுமயம் போன்றவற்றை ஆதரிக்கிறதா?

இயேசுவின் இப்போதனையை எப்படி புரிந்துகொள்வது?

முதலில், இயேசு பணம் கொண்டிருப்பதைப் பற்றியோ, அல்லது பணத்தைக் கொண்டு பணத்தை ஈட்டுவது பற்றியோ பேசவில்லை.

இரண்டாவதாக, இதைச் சொல்வதற்கு முன் இயேசு விளக்கு எடுத்துக்காட்டைச் சொல்கின்றார்.

'விளக்கை எரிப்பவருக்கு இன்னும் வெளிச்சம் கிடைக்கும். விளக்கை அணைத்தவருக்கு ஒன்றும் கிடைக்காது.'

ஆக, 'வெளிச்சம் உள்ளவருக்கு இன்னும் வெளிச்சம் கிடைக்கும். வெளிச்சம் இல்லாதவருக்கு அவருடைய விளக்கும் அவரிடமிருந்து அகற்றப்படும்.' ஏனெனில், அவருக்குத்தான் வெளிச்சம் தேவையில்லையே! அப்புறம் எதுக்கு விளக்கை அவர் வைத்திருக்க வேண்டும்?

இவ்வாறாக, நாம் பயன்படுத்தும் எதுவும் வளர்கிறது.பயன்படுத்தாத எதுவும் தேய்கிறது.

இதைத்தான், நாளைய முதல் வாசகம் (காண். நீமொ 3:27-35), 'நன்மை செய்யக்கூடுமாயின் தேவைப்படுவோருக்கு நன்மை செய்ய மறுக்காதே' என்கிறது. ஏனெனில், நன்மை செய்வது என்பது ஒரு பழக்கம். ஒன்றைத்  திரும்ப திரும்பச் செய்யும்போது அது வளர்கிறது. ஆனால், அதைச் செய்ய மறுக்கும்போது அந்தக் குணம் நம்மிடமிருந்து மறைந்துவிடுகிறது.

'சின்ன விடயங்களில் நாம் மேற்கொள்ளும் பிரமாணிக்கம் பெரிய விடயங்களிலும் அதை மேற்கொள்ள' எளிதாகிறது. ஏனெனில், சின்ன விடயத்தில் மனம் பிரமாணிக்கத்தை பழகிக்கொள்கிறது. அது, பெரிதாக பெரிதாக அப்படியே வளர்கிறது.

ஆக, உள்ளது இன்னும் அதிகம் வளர்கிறது.

இல்லாதது அப்படியே மறைந்துபோய்விடுகிறது.


2 comments:

  1. " உள்ளது இன்னும் அதிகம் வளர்கிறது; இல்லாதது அப்படியே மறைந்து போய்விடுகிறது." ...விவிலியம் உலகமயமாக்கல்,நுகர்வுமயம்....இவற்றை ஆதரிக்கிறதா,இல்லையா தெரியவில்லை.ஆனால் தந்தையின் இந்த வரிகள் டார்வினின் " பரிணாமக் கொள்கைக்கு" அப்படியே பொருந்தி நிற்கின்றன.கொள்கை என்ன பெயரில் இருந்தால் என்ன? நமக்கு நன்மை பயக்குமெனில் நதிமூலம்,ரிஷிமூலம் பாராமல் ஏற்றுக்கொள்வது தானே விவேகம்!ஆம்! 'சின்ன விடயங்களில் நாம் மேற்கொள்ளும் பிரமாணிக்கம் பெரிய விடயங்களிலும் அதை மேற்கொள்ள' எளிதாகிறது.கண்டிப்பாக "உள்ளவருக்கு இன்னும் கொடுக்கப்படும்; இல்லாதோரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்." மேலோட்டமாக பார்க்கின் ஒத்துக்கொள்ள முடியாதது போல் தெரியும் இந்த வரிகள் ஒரு நிமிட எண்ண ஓட்டத்திற்குப்பின் " அட,ஆமால்ல!'' என்று ஏற்க வைக்கும்.விவிலியமோ...விஞ்ஞானமோ மனிதனை மனிதனாகவே வாழச்செய்யும் எதுவும் வளர்பிறையை மட்டுமே காணும் என்று சொல்லாமல் சொல்லும் தந்தைக்கு என் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  2. Good Reflection Yesu

    ReplyDelete