Wednesday, September 12, 2018

கொஞ்சம் எக்ஸ்ட்ரா

நாளைய (13 செப்டம்பர் 2018) நற்செய்தி (லூக் 6:27-38)

கொஞ்சம் எக்ஸ்ட்ரா

'இன்னும் கொஞ்சம் சிரிச்சாதான் என்ன?' என்று பாடல் ஒன்று உண்டு. நாளைய நற்செய்தி வாசகம், 'இன்னும் கொஞ்சம் நடந்தாதான் என்ன?' என்று நம்மை 'இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா மைல் நடக்க அழைக்கிறது.'

இயேசுவின் சமவெளிப்பொழிவின் நீட்சியாக இருக்கும் நாளைய நற்செய்திப் பகுதியில் இயேசு, 'பகைவருக்கு அன்பு காட்டுதல்,' 'சபிப்பவருக்கு ஆசி வழங்குதல்,' 'இகழ்ந்து பேசுவோருக்காக செபித்தல்,' 'ஒரு கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னத்தைக் காட்டுதல்,' 'மேலுடையை எடுத்துக்கொண்டால் அங்கியையும் கொடுத்தல்,' 'கேட்பவருக்குக் கொடுத்தல்,' 'எடுத்துக்கொள்வோரிடம் அப்படியே விட்டுவிடுதல்,' 'திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்ற எதிர்பார்ப்பு இல்லாமல் அன்பு செய்தல்,' 'இரக்கம் உள்ளவராய் இருத்தல்,' 'மற்றவர்களைக் கண்டனம் செய்யாமல் இருத்தல்,' 'மன்னித்தல்,' 'கொடுத்தல்' என, நாம் இதுவரை செய்வதைவிட இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா செய்யச்சொல்கின்றார். இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா நடக்கச் சொல்கின்றார்.

எப்படி நடப்பது?

அமெரிக்காவின் வால் மார்ட் ஒன்றில் வேலை பார்த்த 'மார்ட்டி' என்பவரைப் பற்றி 'வி.ஜே. ஸ்மித்,' 'தெ ரிச்சஸ்ட் மேன் இன் தெ டவ்ன்' ('நகரத்தின் பணக்கார மனிதர்') என்ற ஒரு புத்தகத்தை எழுதினார். அதில், அவர் குறிப்பிடும் பண்பு என்னவென்றால், மார்ட்டி தான் அமர்ந்து பில் போடும் இடத்திலிருந்து பில் போட்டவுடன் எழுந்து ஒவ்வொரு வாடிக்கையாளரையும் கைகுலுக்கி நன்றி சொல்வார். அவரிடம் காரணம் கேட்டபோது, அவர் மூன்று விடயங்களைச் சொன்னாராம்: (அ) மனிதர்கள் பொருள்களைவிட மேலானவர்கள். எங்கள் கடையில் உள்ள பொருள்களை அவர்கள் எங்கு வேண்டுமானாலும் வாங்கலாம். ஆனால், இவர்கள் எங்களைத் தேடி வந்திருக்கிறார்கள். எனவே இவர்கள் முக்கியமானவர்கள், (ஆ) உன்னை நீ மட்டுமே மகிழ்ச்சியாக வைக்க முடியும். மகிழ்ச்சி உன்னில் காண வேண்டியது. எனவே என் மகிழ்ச்சியை நான் என்னில் காண்கிறேன், மற்றும் (இ) கொஞ்சம் எக்ஸ்ட்ரா முயற்சி எடுப்பது எப்போதுமே நிறைவு தரும்.

மார்ட்டி வால் மார்ட் நிறுவனத்தில் பெறும் ஊதியம் அவருடைய உழைப்பிற்குத்தான். ஆனால், அந்தச் சம்பளத்தையும் கடந்த ஒன்றை அவர் செய்கின்றார். அதுதான், அடுத்தவருக்கு நன்றி சொல்லி, வாழ்த்துவது.

அவர் தான் கொஞ்சம் எக்ஸ்ட்ரா மைல் நடப்பதில் மகிழ்ந்தார்.

எக்ஸ்ட்ரா மைல் நடக்க என்ன வேண்டும்?

இதற்கான விடை நாளைய முதல் வாசகத்தில் இருக்கிறது.

'மணம் முடித்தல்,' 'மணத்துறவு' பற்றிப் பேசிய பவுல் தொடர்ந்து, கொரிந்து நகரத்தில் இருந்த அடுத்த பிரச்சினையான 'சிலைவழிபாடு' பற்றிப் பேசுகின்றார். இங்கே, 'அறிவு,' 'அன்பு' என்ற இரண்டு வார்த்தைகளைக் கையாளுகின்றார். 'அறிவு இறுமாப்படையச் செய்யும். அன்பு உறவை வளர்க்கும்' என்று மிக அழகாகச் சொல்கின்றார். 'அறிவு' அடுத்தவரைவிட நான் எப்படியெல்லாம் வித்தியாசமானவன், பெரியவன் என்று எனக்குச் சொல்லும். ஆனால், 'அன்பு' அடுத்தவரோடு நான் எப்படியெல்லாம் இணைந்திருக்கிறேன், சமமாய் இருக்கிறேன் என்று சொல்லும். அறிவு பிரித்துப் பார்க்கும். அன்பு இணைத்துப் பார்க்கும்.

'எனக்கு அவன் 100 ரூபாய் கடன் கொடுத்தான். ஆகவே, அவனுக்கு நானும் 100 ரூபாய் கடன் கொடுப்பேன்' என்று நினைத்தால் அது அறிவு.

'எனக்கு அவன் 100 ரூபாய் கொடுத்தான். அது எனக்கு அன்றைய தேவையாக இருக்கிறது. இன்று அவனுக்கு 100000 ரூபாய் கேட்கிறான். ஏனெனில் இது அவனது தேவையாக இருக்கிறது. எனவே, நான் 100000 கொடுப்பேன்' என்று நினைத்தால் அது அன்பு.

அறிவு கணக்குப் பார்த்து நடக்கும்.

அன்பு கொஞ்சம் எக்ஸ்ட்ரா மைல் நடக்கும்.

1 comment:

  1. ரொம்ப ப்ராக்டிக்கலா இருப்பது எப்படி என்று சொல்லும் ஒரு பதிவு.இயேசு கொடுத்த கட்டளைகளக் கடைப்பிடிப்பதைத் தாண்டி அவரை மகிழ்விக்க கொஞ்சம் எக்ஸ்ட்ரா மைலும் நடக்க வேண்டுமென்கிறார் தந்தை.இதற்கு எடுத்துக்காட்டாக வால்மார்ட்டின் 'மார்ட்டி, பற்றிய ஒரு குறிப்பையும் தருகிறார்.இப்படி ஒருவரை வாழ்ந்து காட்டச் செய்வது அவரின் அடிமனத்தில் இழையோடும் " அன்பே" என்பதையும்,அந்த 'அன்பு' நாம் பெரிதாகப் போற்றும் 'அறிவிலிருந்து' எப்படி வேறுபடுகிறது என்பதையும் " அறிவு பிரித்துப்பார்க்கும்", " அன்பு இணைத்துப் பார்க்கும்" எனும் வரிகளில் அழகாக வெளிப்படுத்துகிறார். ஆம்! எந்த பிரதிபலனையும் எதிர்பாராமல் நல்லோர் மீதும்,தீயோர் மீதும் தன்னை சமமாகப் பொழியும் 'மழைக்கு' இணையான ஒன்றுதான் 'அன்பு, என்பதை தனக்கே உரித்தான சிந்தனையைத் தூண்டும் வார்த்தைகளில்வெளிப்படுத்திய தந்தைக்கு ஒரு சபாஷ்!!!

    ReplyDelete