Wednesday, September 26, 2018

அனைத்தும் சலிப்பே

நாளைய (27 செப்டம்பர் 2018) நற்செய்தி (லூக் 9:7-9)

அனைத்தும் சலிப்பே

நாளைய முதல் வாசகத்திலிருந்து (காண். சஉ 1:2-11) நமது சிந்தனையைத் தொடங்குவோம்.

சபை உரையாளர் நூல் எபிரேய விவிலியத்தின் ஐந்து ஞானநூல்களில் ஒன்று. வாழ்வின் எல்லா நிலைகளையும் அனுபவித்த ஒருவர், தன் அனுபவித்தை வார்த்தைகளில் வடிப்பதே இந்நூலின் அழகு.

இவர் மேலோட்டமாக வாசித்தால் மிகவும் எதிர்மறையான நபராக இருக்கிறார். ஆனால், அவர் அருகில் கொஞ்சம் அமர்ந்து, அவரின் தோளில் கை போட்டு, அவர் சொல்வதைக் கேட்டால் அவர் சொல்வதில் நிறைய பொருள் இருக்கிறது என்பதை நாம் உணரமுடிகிறது.

'வீண், முற்றிலும் வீண், எல்லாமே வீண்' - என்று தன் நூலைத் தொடங்கி, இதே வார்த்தைகளோடு தன் நூலை முடிக்கிறார். இங்கே, 'வீண்' என்பது 'நிலையற்றது,' அல்லது 'பயனற்றது' என்ற இரண்டு நிலைகளில் பொருள் தருவதாக உள்ளது.

முதலில், மனித உழைப்பின் பயனை வீண் என்கிறார் ஆசிரியர்.

எடுத்துக்காட்டாக, நான் அழகிய வீடு ஒன்றைக் கட்டுகிறேன் என வைத்துக்கொள்வோம். 10 ஆண்டுகள் உழைத்து, என் மகிழ்ச்சியை தியாகம் செய்து, கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து ஒரு வீடு கட்டுகிறேன். வீடு கட்டிய அடுத்த ஆண்டு இறந்துவிடுகிறேன். நான் உழைத்துக் கட்டிய வீடானது, எந்தவொரு உழைப்பும் செய்யாத என் உடன்பிறந்தவருக்குக் கை மாறுகிறது. அவர் அந்த வீட்டின் பயனை அனுபவிப்பதில்லை. அது அவருக்கு இலவசமாகக் கிடைப்பதால் அவர் அதை சரியாக அனுபவிப்பதில்லை. அல்லது அது அவருக்கும் தேவையற்றதாகத் தெரியலாம். இப்படியாக, என் உழைப்பின் பயன் ஒரு தலைமுறையிலேயே மறைந்துவிடுகிறது. நாம் ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டுக் கிடந்தோம். நமக்கு முந்தைய தலைமுறை விடுதலைக்காக போராடியது. ஆனால், நாம் போராடவே இல்லை. போராடவே இல்லாமல் நமக்கு சுதந்திரம் கிடைத்தது. அதனால், அதன் அருமை நமக்குத் தெரியவில்லை. மேலும், நமக்கு அடுத்த தலைமுறைக்கு சுதந்திரப் போராட்டமே மறந்துவிடும். ஆக, உழைப்பின் பயன் அடுத்த தலைமுறையில் மறைந்துவிடுகிறது.

இதையெல்லாம் யோசிக்கிற சபை உரையாளர், 'எல்லாம் வீண்' என்ற முடிவுக்கு வந்துவிடுகிறார்.

உழைப்பின் பயன் அவரை விரக்திக்கு ஆளாக்கிவிடுகிறது. ஆனால், உழைப்பின் பயனை அனுபவிக்க காத்திராமல், உழைப்பையே நாம் அனுபவித்தால் அது நமக்கு மகிழ்ச்சிதான். அதாவது, பயணத்தின் இலக்கை அனுபவிப்பதைவிட, பயணத்தையே இனிய அனுபவமாக அனுபவிக்க சபை உரையாளர் நம்மை அழைக்கின்றார்.

சபை உரையாளரின் அடுத்த புலம்பல், 'எல்லாம் ஒரே மாதிரி நடப்பது' அல்லது 'எல்லாம் முடிந்துவிடுவது.'

எடுத்துக்காட்டாக, நான் கொடைக்கானல் சுற்றுலா செல்கிறேன் என வைத்துக்கொள்வோம். புதிய ஆடை, புதிய ஷூ, புதிய கம்பளி, புதிய சோறு என புறப்பட்டுச் செல்கிறேன். ஆனால், இரண்டு நாள்களில் ஆடைகள் அழுக்காகிவிடுகின்றன. சோறும் காலியாகிவிடுகிறது. ஆக, நிறைவு எல்லாம் ஒரு நாள் குறைவு ஆகும். மேலே செல்லும் நான் கீழே இறங்க வேண்டும். இதைத்தான் பட்டினத்தாரும், 'பிறந்தன இறக்கும், இறந்தன பிறக்கும், புனர்ந்தன பிரியும், பிரிந்தன புனரும், உவப்பது வெறுப்பாம், வெறுப்பது உவப்பாம், உடுத்தியது அழுக்காம்' என்று பாடுகின்றார். ஆக, ஒன்றின் இறுதியை நினைக்கும்போது, 'ச்சே, இவ்வளவுதானா!' என்று ஆகிவிடுகிறது. எல்லாம் 'இவ்வளவுதானா!' என்று ஆகிவிட்டால் பின் எப்படி வாழ்வது?

சலிப்பு உணர்வு என்பது நம் உள்ளம் சார்ந்தது. இது இப்படித்தான் இருக்கும் என்று ஏற்றுக்கொண்டுவிட்டால் சலிப்பு தட்டாது.

இறுதியாக, 'சூரியனுக்குக் கீழ் புதியது என்று எதுவும் இல்லை' என்கிறார் சபை உரையாளர். நாம் இன்று கைகளில் ஸ்மார்ட்ஃபோன் வைத்திருக்கிறோம். இது புதியதுதானே! 'இல்லை' என்கிறார் சபை உரையாளர். ஏனெனில், ஒருவரின் காது மற்றும் வாயின் மற்றும் கையின் நீட்சிதான் ஸ்மார்ட்ஃபோன். அப்படிப்பார்த்தால், ஸ்மார்ட்ஃபோன் புதிதல்லதான் நமக்கு.

சபை உரையாளரின் இந்தப் புலம்பல்தான் வாழ்க்கையா?

வாழ்க்கையில் இன்பமே இல்லையா?

இருக்கிறது. வாழ்க்கையே இன்பம்தான்.

வாழ்க்கை குறுகியது என நினைத்து ஒவ்வொரு பொழுதையும் முழுமையாக வாழும்போது. இதைத்தான் நாளைய பதிலுரைப்பாடலில் திருப்பாடல் ஆசிரியர் ஆண்டவரிடம் கேட்கிறார்:

'எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும். அப்போது ஞானமிகு உள்ளத்தினைப் பெற்றிடுவோம்.'

தன் வாழ்நாளே குறுகியதாக இருக்க, தன்னைப் போன்ற திருமுழுக்கு யோவானின் வாழ்வை அழித்துவிட்ட ஏரோது புலம்புகிறார் நாளைய நற்செய்தி வாசகத்தில்.

ஒவ்வொருவரின் வாழ்க்கையும் குறுகியது என்று நினைத்து வாழ்ந்தால், நாம் நம் வாழ்வையும் நன்றாக வாழ்வோம். அடுத்தவரையும் நன்றாக வாழ அனுமதிப்போம்.


1 comment:

  1. சபையுரையாளரின் பல செய்திகளை ஒரு கலவையாக்கித் தருகிறார் தந்தை.அத்தனையும் ஒரு வாசகருக்குப் புரியுமா..தெரியவில்லை.புரியவில்லை எனில் நஷ்டமா..அதுவும் தெரியவில்லை." பயணத்தின் இலக்கை அனுபவிப்பதை விட பயணத்தையே இனிய அனுபவமாக அனுபவிக்க" அழைக்கும் சபையுரையாளருக்கு ஒரு Hats off! "ஆரம்பம் என்று ஒன்றிருந்தால் முடிவு என்ற ஒன்றுமிருக்கும்"என்று சொல்லும் தந்தைக்கும் ஒரு Hats off! "ஒன்றின் நீட்சி தான் இன்னொன்று எனவும்,நமக்கு கிடைத்துள்ள இந்த வாழ்வு குறுகியதென்பதால் நாமும் நன்றாக வாழ்ந்து,அடுத்தவரையும் நன்றாக வாழவைப்போம்"என்ற உறுதிமொழி எடுக்கும் நம் அனைவருக்குமே ஒரு Hats off! நம் எண்ணங்களை நாமே இரசிக்க ஆரம்பித்தால் நம்மைச் சுற்றியுள்ள எல்லாமே நம் இரசனைக்குரியதாகி விடும். உணரவைத்த கிரியாஊக்கி தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete