Sunday, September 30, 2018

சின்ன வழி

நாளைய (1 அக்டோபர் 2018) நற்செய்தி (மத் 18:1-5)

சின்ன வழி

'வானிலிருந்து வரங்களை ரோசா மலர்களாக அள்ளித் தெளிக்கும் சின்ன ராணி குழந்தை தெரசாளின்' திருநாளை நாம் நாளை கொண்டாடுகிறோம். இவரை மறைவல்லுநர் எனவும் திருச்சபை கொண்டாடுகிறது.

இவரின் 'சின்ன வழி' மிகவும் போற்றுதற்குரியது.

ஒருவழி, இருவழி, நான்குவழி, ஆறுவழி, எட்டுவழி என உலகம் அடுத்தவரை மிதித்து வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கின்ற வேளையில் இவரின் சிறுவழி நமக்குச் சொல்லும் பாடம் என்ன?

நாளைய நற்செய்தி வாசகத்தில், 'விண்ணரசில் மிகப் பெரியவர் யார்?' என்ற சீடர்களின் கேள்விக்கு, 'சிறுபிள்ளை போல தம்மைத் தாழ்த்திக்கொள்பவரே விண்ணரசில் மிகப் பெரியவர்' என்கிறார் இயேசு.

'நம்பிக்கையின் தந்தை' ஆபிரகாம், 'விடுதலையின் பிதாமகன்' மோசே, 'சிறந்த பேரரசன்' தாவீது என இவர்களில் யாரையாவது, 'பெரியவர்' என்று சொல்லியிருக்கலாமே!

இயேசு, குழந்தையை எடுத்துக்காட்டாகச் சொல்லக் காரணம் என்ன?

நம் மனித வாழ்க்கை நிலையை நம் நடையை வைத்துச் சொல்லிவிடலாம். பிறந்தவுடன் நாம் முதலில் மல்லாக்க படுக்கிறோம். பின் குப்புறப் படுக்கிறோம். பின் தத்தி தத்தி தவழ ஆரம்பிக்கிறோம். பின் முதல் அடி. இரண்டாம் அடி. கொஞ்சம் சறுக்கல். அழுகை. எழுதல். நிற்றல். நடத்தல். ஓடுதல். இப்படியே வளர வளர நம் நடையின் வேகம் கூடுகிறது. இளமை மற்றும் முதிர்பருவத்தில் நம் நடை உச்சகட்ட வேகத்தைத் தொடுகிறது. பின் மறுபடியும் வேகம் தளர்கிறது. பின் இரண்டு கால்கள் தடுமாற, மூன்றாம் காலாக கையில் குச்சி முளைக்கிறது. தள்ளாடிய நடை. என வாழ்க்கை தளர்ச்சியாக முடிகிறது.

நாம் ஓட்டும் வாகனங்கள் அல்லது நாம் பயணம் செய்யும் வாகனங்கள்கூட நம் கால்களின் நீட்சிகளே.

குழந்தையின் ஒரு இயல்பு வேகம் குறைப்பது.

சின்ன வழியில் நுழைய வேண்டுமெனில் வேகம் குறைப்பது அவசியம். அல்லது வேகம் குறைப்பவரே சின்ன வழியில் நடக்க முடியும்.

ஆகையால்தான், நாளைய முதல் வாசகத்திலும் (காண். எசா 66:10-14) பாபிலோனிய அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரயேல் மக்களை மீட்டுக்கொண்டு வரும் யாவே இறைவன், அவர்களை சிறு குழந்தைகளாக தோளில் போட்டுக்கொண்டு வருகிறார். அவர்கள் வேகமாக நடந்ததாலும், சிலைவழிபாடு போன்ற பெரிய வழிகளில் நுழைந்ததாலும் அவர்கள் அடிமைகள் ஆகின்றனர். இறைவனின் கைகளில் சிறு குழந்தைகளாக இருக்கும் அவர்கள் இனி வேகம் குறைக்க வேண்டும்.

ஆக, என் வாழ்வின் வேகத்தையம், ஓட்டத்தையும் குறைத்து, சின்னச் சின்னதாய் நடக்க நம் சின்ன ராணி அழைக்கிறார்.


1 comment:

  1. சின்ன வயதிலிரிந்தே இந்த " சின்ன ராணியை" எங்கள் குடும்பப் பாதுகாவலியாக அறிந்திருந்த காரணத்தினாலோ என்னவோ என் நெஞ்சுக்கு மிக நெருக்கமானவர் இந்தப் புனிதை." சின்ன ராணி" என்பதை விட இவருக்குச் சூட்ட வேறு மகுடம் இல்லை என்றே நினைக்கிறேன்.அவசர வேகத்தில் இயங்கும் நம் வாழ்விற்குப் போட வேண்டிய வேகத்தடைகள் பற்றி அழகாகப் பதிவு செய்கிறார் தந்தை. என்ன தான் மனிதன் உயரே உயரே பறந்தாலும் ஒரு நாள் இறங்கியே ஆக வேண்டும் என்பது வாழ்க்கையின் நிதர்சனம்.இதற்கு வேண்டியது வாழ்க்கையின் வேகத்தையும்,ஓட்டத்தையும் குறைத்து சின்னச்சின்ன அடிகளாக எடுத்து வைப்பதே போன்ற பெரிய பெரிய விஷயங்களைத் தனக்கே உரித்தான சிறிய வழிகளில் செய்த இன்றைய " "சின்ன ராணி" தன் வண்ண ரோசா மலர்களை நம்மீதும் பொழிவாராக! அழகான ஒரு பதிவிற்காகத் தந்தைக்கு என் நன்றிகள்!!! புலர்ந்துள்ள புதிய மாதம் அனைவருக்கும் ஆசீரை அள்ளித்தர வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete