Wednesday, September 5, 2018

ஆயினும்

நாளைய (6 செப்டம்பர் 2018) நற்செய்தி (லூக் 5:1-11)

ஆயினும்

'ஆயினும்' அல்லது 'இருந்தாலும்' போன்ற வார்த்தைகள் 'அரை நம்பிக்கை' வார்த்தைகள்.

'அந்த டாக்டரைப் பற்றி எனக்குத் தெரியும். இருந்தாலும் நீ சொன்னதால் நான் போறேன்!'

'இந்நேரம் அவன் வந்துருக்க மாட்டான். ஆயினும் நான் போய் காத்திருக்கிறேன்!'

'இன்னைக்கு மழை வராது. ஆயினும் நான் குடை கொண்டு போறேன்!'
'அவன் அப்படித்தான். இருந்தாலும் நான் அவன நம்புறேன்!'

- இப்படியாக 'அரை நம்பிக்கை' அல்லது 'அரை நிறைவு' உணர்வைக் கொண்டுள்ள வார்த்தைதாம் 'ஆயினும்' மற்றும் 'இருந்தாலும்.'

இந்த உணர்வு பெண்களைவிட ஆண்களுக்கு அதிகம் வரும்.

எப்படி?

'பெண்கள் எப்போதும் அழுவார்கள். ஆண்கள் எப்போதும் விளக்கம் சொல்வார்கள்' ('Women always cry. Men always explain') என்பது உளவியல் சொலவடை. ஒரு ஆண் மற்றொரு ஆணிடம் பேசும்போது, அந்த ஆணுக்குத் தொடர்பில்லாத வேலை அல்லது வாழ்க்கை நிலை பற்றி ஏதாவது சொன்னால் இந்த ஆணால் அதை அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாது. உதாரணத்திற்கு, ஒரு ஆண் டாக்டர் எல்.ஐ.சி இன்ஸ்யூரன்ஸ் பற்றி கருத்துச் சொன்னால் மற்றொரு ஆண் அதை உடனடியாக ஏற்றுக்கொள்ள மாட்டார். 'இன்ஸ்யூரன்ஸ் பற்றி டாக்டருக்கு என்ன தெரியும்?' என்பது அவரின் கேள்வியாக இருக்கும். ஆகையால்தான், 'உனக்கு ஒரு குழந்தை பிறக்கும்' என்று மரியாளுக்கு கபிரியேல் சொன்னவுடன், 'அப்படியே ஆகட்டும்' என அவர் ஏற்றுக்கொள்ள, சக்கரியாவோ, 'அது எப்படி?' என்று கேட்கின்றார். ஏனெனில், 'கடவுளோட பிரசன்னத்தில தூபம் ஆட்டுற வானதூதருக்கு கருப்பையை, கருவுருவாதலைப் பற்றி என்ன தெரியும்?' என்பது சக்கரியாவின் ஆண்மன வாதமாக இருக்கிறது.

நாளைய நற்செய்தி வாசகத்தில் இப்படிப்பட்ட ஒரு நிகழ்வைத்தான் வாசிக்கின்றோம். சீமோன் பேதுருவின் படகில் அமர்ந்து மக்கள் கூட்டத்திற்கு போதிக்கும் இயேசு, 'ஆழத்திற்கு தள்ளிக்கொண்டு போய், மீன் பிடிக்க வலைகளைப் போடுங்கள்' என்கிறார். உடனே சீமோன், 'ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை' என்கிறார்.

அதாவது, பேதுருவின் எண்ணத்தில் ஓடியதெல்லாம், 'தச்சனுக்கு எப்படி தண்ணீரின் ஓட்டம் தெரியும்?' அல்லது 'போதிப்பவருக்கு என்ன தெரியும் கடலின் நிலை?' என்பதுதான். ஆகையால்தான் இயேசுவின் கட்டளையை அவரால் உடனே ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மேலும், 'இரவு முழுவதும் தண்டு வலித்தும்' என்பதுதான் உண்மையான பாடம். அதாவது, தனக்குத் தெரிந்த அறிவு மட்டும் அல்ல. மாறாக, தன் உழைப்பாலும் ஒன்றும் கிடைக்கவில்லை என்று சீமோன் சொல்கின்றார். ஆக, சீமோனுக்குத் தெரிந்தது இயேசுவுக்குத் தெரியவில்லை. இதுதான் நிகழ்வின் முதல் பகுதி.

'ஆயினும் உம் சொற்படியே வலைகளைப் போடுகிறேன்' என்று வலைகளை வீச பெரிய மக்கள்கூட்டத்தின் அளவிலான மீன்பாடு கிடைக்கிறது. வலை கிழியத் தொடங்குகிறது.

இதுதான் இறைவனின் உடனிருப்பு என நினைக்கிறேன். சில நேரங்களில் நாம் விடிய விடிய தண்டுவலித்திருப்போம். கையில் ஒன்றும் மிஞ்சாது. ஆனால் அவர் வந்தவுடன் நம் வலைகள் கிழியத் தொடங்கும் அளவிற்கு நிறைவு இருக்கும்.

மேலும், படகுகளும் மூழ்கும் நிலையில் இருந்தன என லூக்கா பதிவு செய்கின்றார்.

அதைக் கண்ட சீமோன், 'எனக்குத் தெரிந்து கொஞ்சம்தான். ஆனால் உனக்கு எல்லாம் தெரியுமே' என நினைத்து, 'ஆண்டவரே, நான் பாவி, என்னைவிட்டு அகலும்' என்கிறார். அதாவது, 'நான் உன் சொல்லைக் கேட்கத் தயங்கிய பாவி' என்கிறார். ஆக, இயேசுவுக்குத் தெரிந்தது சீமோனுக்குத் தெரியவில்லை என்பதுதான் நிகழ்வின் இரண்டாம் பகுதி.

சீமோனுக்கு மீன்பாட்டைக் கண்டவுடன் பயம் என்றால், பக்கத்து படகில் இருந்த யோவானுக்கும், யாக்கோபுக்கும் திகைப்பு. கரைக்கு வந்தவுடன் மீன்களால் நிரம்பிய படகை அப்படியே விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றுகிறார்கள்.

சீமோன் நினைத்திருந்தால் இயேசுவைத் தன் தொழிலுக்குப் பயன்படுத்தி இன்னும் நிறைய மீன்கள், படகுகள் என வாழ்வை வளமாக்கியிருக்கலாமே! தன் நிரம்பிய படகை விட்டுவிட அவருக்கு எப்படி மனம் வந்தது?

இதுதான், நம்பிக்கைப் பயணம்.

முதலில், 'ஐயா' என அழைத்தவர், இறுதியில், 'ஆண்டவரே' என சரண் அடைகின்றார்.

ஆண்டவர் நம் வலைகளையும், படகுகளையும் நிரப்புவது, நிரம்பிய அவற்றைப் பிடித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக அல்ல. மாறாக, நிரப்பிய அவரைப் பின்தொடர வேண்டும் என்பதற்காகவே.

முதலில் சீமோனிடம் இருந்த 'ஆயினும்' என்ற வார்த்தை இப்போது இல்லை. இனியும் இல்லை.


1 comment:

  1. தந்தையின் கூற்று உண்மைதான். காதில் விழுந்த எதையும் உண்மையென நம்பும் பெண்களும், ஆனால் அதே விஷயத்தை ஆயிரம் கூறு போட்ட பின்னரும் நம்பாமல் போகும் ஆண்களும் நாம் அன்றாடம் காணும் கதாபாத்திரங்கள் தான்.கபிரியேல் தூதரிடம் " இது எப்படியாகும்?" எனக்கேட்ட மரியா,பின் "உம் சித்தப்படியே ஆகட்டும்" என்றதும், "இரவு முழுதும் தண்டு வலித்தும் ஒன்றும் கிடைக்கவில்லை" என்ற பேதுரு "உம் சொற்படியே வலைகளைப் போடுகிறேன்" என்று இயேசுவிடம் கூறியதும்,அவரின் " உடனிருப்பைப்" புரிந்து வைத்திருந்த காரணத்தாலேதான்.நம்மை அவரிலிருந்து தனிமைப்படுத்தி எத்தனைதான் கடினப்பட்டு தண்டு வலித்தாலும் நமக்கு ஒன்றும் மிஞ்சாது என்பது இன்றையப் பதிவு எனக்கு உணர்த்தும் பாடம்.அழகாகப் பதிவு செய்கிறார் தந்தை..." ஐயா" என அழைத்தவர் " ஆண்டவரே" என சரண் அடைகிறார் என்று.ஆணடவர் நம் வலைகளையும்,படகுகளையும் நிரப்புவது, நிரம்பிய அவற்றைப் பிடித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக அல்ல; நிரப்பிய அவரைப் பின்தொடர வேண்டும் என்பதற்காகவே. நம்பிக்கைப் பயணத்தைத் தொடங்குவோம் அல்லது தொடருவோம்.என் அகராதியிலும் கூட " ஆயினும்" எனும் வார்த்தை இனி இல்லை.

    ",இயேசுவின் உடனிருப்பு" மற்றும் " நம்பிக்கைப்பயணம்" எனும் வார்த்தைகளுக்கு உயிரோட்டம் கொடுத்த தந்தையை இறைவன் ஆசீர்வதிப்பாராக!!!

    ReplyDelete