Friday, September 14, 2018

இதோ உம் தாய்

நாளைய (15 செப்டம்பர் 2018) நற்செய்தி (யோவா 19:25-27)

இதோ உம் தாய்

நாளை அன்னை மரியாளின் ஏழு வியாகுலங்களை (துயரங்களை) கொண்டாடுகிறோம்.

திருஅவை மரபில் பின்வருவன மரியாளின் ஏழு துன்பங்களாகக் கொடுக்கப்பட்டுள்ளன:

1. சிமியோனின் இறைவாக்கு (லூக் 2:34-35)
2. எகிப்திற்கு குழந்தையுடன் தப்பியோடியது (மத் 2:13)
3. இயேசு எருசலேமில் காணாமல்போனது (லூக் 2:43-45)
4. இயேசுவை அவரின் சிலுவைப் பாதையில் சந்தித்தது (விவிலிய சான்று இல்லை)
5. இயேசு சிலுவையில் உயிர்விட்டது (யோவா 19:25)
6. இறந்த உடலை இறக்கியது (மத் 27:57-59)
7. இயேசுவை அடக்கம் செய்தது (யோவா 19:40-42)

ஆனால்,

இவை எல்லாவற்றையும் விட - அல்லது இவைகூட மரியாளுக்குத் துன்பம் தந்திருக்காது - மரியாளுக்கு மிகவும் துன்பம் தந்தது என்னவென்று நாளைய நற்செய்தி வாசகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

'... பின்னர் தம் சீடரிடம், 'இவரே உம் தாய்' என்றார்.
அந்நேரமுதல் அச்சீடர் அவரைத் தம் வீட்டில் ஏற்று ஆதரவு அளித்து வந்தார்'

ஒரு நிமிடம் நம்மையே ஒரு தாயாக கற்பனை செய்து பார்ப்போமா?

'நான் ஒரு அம்மா. எனக்கு ஒரே மகன். இவன் பிறந்த கொஞ்ச ஆண்டுகளில் இவனது அப்பா இறந்துவிட்டார். அதற்குப் பின் அவன்தான் எல்லாம் என்று நான் இருந்தேன். இப்போது அவன் இறக்கப் போகிறான். என் நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு என எல்லாம் இவனைச் சுற்றியே இருந்தன. என் சிரிப்பு, கண்ணீர் என இவனுக்கு என் எல்லாமும் தெரியும். இவன் என்னைக் காப்பாற்றுவான் என நான் நினைக்க இவன் என் கண்முன் இறந்துகொண்டு இருக்கிறான். இந்த நேரத்தில் இவன் என் கையைப் பிடித்து இவனது நண்பன் ஒருவனிடம் என்னை ஒப்படைக்கிறான். இவனது பாசம் புரிகிறது.

ஆனால், இவன் நண்பனும் இவனும் ஒன்றாகிவிட முடியுமா?
என்னைப் பற்றி அவனுக்கு என்ன தெரியும்? ஒருவேளை இவன் என்னைப் பற்றிச் சொல்லியிருக்கலாம்?
என் தனிமையை அவன் போக்குவானா?
என் சிரிப்பை அவன் சிரிப்பானா?
என் அழுகையை அவன் அழுவானா?

என்ன... தினமும் உணவு கொடுப்பான்... ஏதாவது செலவென்றால் பார்த்துக்கொள்வான்?
வேறு என்ன செய்ய முடியும் அந்த நண்பனால்?

ஐயோ... என் மகனோடு சேர்ந்து நானும் இறந்துவிடக்கூடாதா...?'

நிற்க.

வாழ்க்கையில் என்னைப் பொறுத்தவரையில் பெரிய துன்பம் இன்னொருவரின் இரக்கத்தில் இருப்பது.

'அந்நேரமுதல் அவரைத் தன் வீட்டில் எடுத்துக்கொண்டார்' என்று கிரேக்க பதிப்பு சொல்கிறது.

தமிழில் கொஞ்சம் விளக்கமாக, 'அந்நேரமுதல் அவரைத் தம் வீட்டில் ஏற்று ஆதரவு அளித்து வந்தார்.'

அப்படின்னா...

இயேசு இறந்த அந்த நிமிடம் மரியாள் அநாதையாகிறார். நிர்கதியாகிறார். நிர்ஆதரவு நிலைக்குத் தள்ளப்படுகிறார்.

அதுவும், வயது கூட கூட நிர்ஆதரவு நிலையின் வலி கூடும்.

எடுத்துக்காட்டாக, இன்று என்னை விட்டு எல்லாரும் போய்விடுகிறார்கள் என்றால், நான் மீண்டும் உறவுகளை வேகமாக சம்பாதித்துக்கொள்ளலாம். ஆனால், வருடங்கள் கடக்க, கடக்க உடல் மாறும். உடல் நலம் குறையும். 'எனக்கு யாராவது ஆதரவு கொடுங்கள்' என்று நான் இப்போது சொன்னால் உடனே நிறையப்பேர் வருவார்கள். ஆனால், எனக்கு உடல்நலமின்றி, நான் யாருக்கும் பயன் இல்லாமல் இருக்கும்போது என்னை யார் ஏற்றுக்கொள்வார்கள்?

அந்த நிலையில்தான் மரியாள் இருக்கிறார். இயேசு இறந்தபோது மரியாளுக்கு ஏறக்குறைய 49 வயது இருந்திருக்கும். ஏனெனில், யூத மரபில் பெண்ணின் திருமண வயது 12.

ஆனால், மரியாள் தன் கையறுநிலையை ஏற்றுக்கொள்கிறார். தன் கையை விரித்து இயேசுவின் நண்பனிடம் கொடுக்கின்றார்.

ஆக, என் கையை விரித்து இன்னொருவர் வழிநடத்துமாறு கொடுப்பதும், அந்த நபரின் ஆதரவைப் பெறுவதும் நாம் அனுபவிக்கும் பெரிய துன்பம். இந்த நிலையில் நாம் நம் தன்மதிப்பு, தன்மானம், தன்னறிவு அனைத்தையும் விட்டுக்கொடுக்க வேண்டும்.

இந்த பாடத்தை நாளைய திருவிழா நமக்கு கற்றுக்கொடுக்கட்டும்.

மேலும், இந்த நிலையில் இருப்பவர்களை ஏற்று ஆதரவு கொடுக்க, அவரின் இழப்பை ஒரு மகனாக ஈடுசெய்ய முயற்சித்தலே அவரின் துன்பத்தைத் துடைக்க முடியும்.


4 comments:

  1. "எப்படி,எப்படி இவரால் மட்டும் ஒருவரின் மனத்தைப் பிசையும் அளவுக்கு சாதாரண விஷயங்களை அசாதாரணமாகத் தரமுடிகிறது?" தந்தையின் இன்றையப்பதிவைப் படித்தபின் என் எண்ண ஓட்டம் இதுதான்.தன் மகன் நித்தியத்துக்கும் தன்னை விட்டுப்பிரியப் போகிறான் எனும் நிலையில் அவரது நண்பனைத்தன் மகனாக சேர்த்துக் கொள்ளத் தன் முன்னே தன் மகனே வைக்கும் ஒரு வேண்டுதல்.மரியாளின் எண்ண ஓட்டத்தை தந்தை விவரித்திருக்கும் விதம் எந்தத்தாயையும் கதறச்செய்வதாக உள்ளது.ஒருவரின் அஸ்தமன காலத்தில் ஒருவருக்கு ஏற்படும் உடலளவினான மாற்றங்களைத்தந்தை விவரித்திருக்கும் பாங்கு கொஞ்சம் பயத்தையும் கூடவே தருகிறது. ஆனால் அதே சமயத்தில் என் கையை விரித்து இன்னொருவர் வழி நடத்துமாறு கொடுப்பதும்,அவரின் ஆதரவைப்பெறுவதும் பெரும் துன்பம் என்று நினைப்பதற்குப் பதில் என் மகன் இடத்தில் எனக்காக அனுப்பப்பட்ட வானதூதர் என அவரை நினைத்தால் நம் தன்மானம்,தன்மதிப்பு ஆகியவற்றை நம்மிடமே தக்க வைத்துக்கொள்ளலாம்.உடலும்,உறவும் நமக்கில்லை என்று ஆனபிறகு யாரோ ஒருவர் என்னை அவருடையவராக ஏற்றுக்கொள்வது எல்லோருக்கும் கிடைக்கும் பேறல்லவே! நமக்கும் இப்படிப்பட்ட கையறு பொழுதுகள் வரலாம் .அந்நேரங்களில் நம் கைகளை இன்னொருவருக்கு விரித்துக்கொடுக்கவும், அதே நிலையில் இருப்பவர்களை நம் கைகளுக்குள் அரவணைக்கவும் அந்த வியாகுல அன்னை நமக்கு வரம் தரட்டும்! இந்தப் பதிவை வாசித்தவுடன் என் கண்களில் தேங்கிய கண்ணீரையே தந்தையின் படைப்பிற்குப் பாராட்டாக்குகிறேன்! இறைவன் தந்தையைத் தன் வரத்தால்,ஞானத்தால் நிரப்புவராக!! அனைவருக்கும் அன்னையின் திருநாள் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  2. இதோஉம் தாய் - வியாகுலத்தாய்க்கு இப்படியும் ஒரு பொருளைத் தர முடியுமா?மகனின் பெருந்தன்மையை மட்டுமே - அவருடைய கோணத்தில் மட்டுமே சிந்திக்க அழைத்த பலருண்டு.ஆனால் ,இயேசு அடிகளார் தாயின் கதறலை கண் முன் நிறுத்தி தாயை - அவரவர் முதுமையை விரித்துரைக்கிறார்.அடுத்தவரின் இரக்கத்தில் வாழ்வதுதான் கையறு நிலையின் கொடுமுடி."எடுத்துக் கொண்டார்"என்ற மூலம் நிராதரவைத் தெளிவாக்குகிறது.இரத்தம் சுண்டிப் போய் நிர்க்கதியாய் - எல்லாம் இருந்தாலும் அண்டி வாழும் நிலை அசாதாரணமானது.அநீத செல்வத்தைக் கொண்டு எல்லாரையும் அன்புடன் அரவணைக்கத் தாய்மரி அறிவுறுத்துகிறார்.குருக்களின் வாழ்வில் தனிமை மிக மிக கொடூரமான நிலை என நான்கருதுவதுண்டு.அதிலும்,பதவி,
    அதிகாரம் இல்லா முதுமை வலி நிறைந்தது....எனக்குத் தெரிந்த ஒரே செபம் "மரியே வாழ்க".இந்நாளில் மீண்டும் அதையே சொல்லி அடிகளாரை வாழ்த்துகிறேன்...

    ReplyDelete