Sunday, February 28, 2016

யூதித்து நூல் - முன்னோட்டம்

கத்தோலிக்க விவிலியத்தின் இணைத்திருமுறைநூல்களில் இரண்டாவது இருப்பது யூதித்து நூல். 'யூதித்து' என்றால் 'யூதப்பெண்' என்று பொருள்.

'வளைக்கரமும் வாள்பிடிக்கும்!' - என்று யூதித்து நூலை இரண்டு வார்த்தைகளில் சுருக்கி விடலாம்.

'வலுவற்ற ஒரு பெண்ணின் கரத்தால்' (காண். யூதி 8:33, 9:9, 10, 12:4, 13:4, 14, 15, 15:10, 16:5), 'வலுவான இறைவன்', 'வலுவற்ற யூத மக்களைக் காக்கின்றார். 'கரத்தால்' என அடிக்கடி வரும் சொல்லாடல் விடுதலைப் பயண நூலில் யாவே இறைவன் தன் வலிமைமிகு கரத்தால் (காண். விப 15:6) இஸ்ரயேல் மக்களை விடுவித்ததை நினைவுபடுத்துகிறது.

கி.மு. 100ஆம் ஆண்டில் எழுதப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்பட்டாலும், இந்த நூல் வரலாற்றின் பல மைல்கற்களை நீட்டித் தொடுகின்றது. நெபுகத்னேசர் ஆட்சி (1:1, 2:1) என்று சொல்லும்போது, ஏறக்குறைய கி.மு. 500ஆம் ஆண்டில் நடைபெற்ற நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டுகின்றது. மேலும், இந்த நூலில் அசீரிய தலைநகர் நினிவே அழிக்கப்பட்ட நிகழ்வும் (கி.மு. 612) குறிப்பிடப்பட்டுள்ளது. பாபிலோனியா (604-502), இரண்டாம் ஆலயம் (515) பற்றிய குறிப்புகளும் உள்ளன. பாரசீக மன்னர்களின் ஆட்சி, மூன்றாம் அர்த்தாகெர்கஸ் (358-338) அரசனின் படைத்தலைவர்கள் ஒலோபெரின், பகோவா என்பவர்களின் பெயர்களாகவும் தரப்பட்டுள்ளது. மேலும் இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த செலுசிய மன்னன் நான்காம் அந்தியோக்கஸ் எபிஃபேனஸ் பற்றிய குறிப்பும் உள்ளது.

இந்த நூலில் வரும் கதைமாந்தர்கள் யூதித்து, அர்ப்பகசாது பற்றி வேறு எந்த வரலாற்று குறிப்பும் இல்லை. மேலும் பெத்தூலியா வாய்க்கால் பற்றிய எந்த தடயமும் தொல்லியல் ஆராய்ச்சியில் கிடைக்கவில்லை. ஆக, இந்த நூல் கடவுளை இஸ்ரயேல் மக்களின் மீட்பராக முன்வைக்கும் ஒரு வரலாற்று புதினம் (historical fiction or novella) என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்து. படைகளைக் கொண்டு அல்ல, ஒரு எளிய கைம்பெண்ணின் கரத்தால் மக்களைக் காப்பாற்றுகின்றார் இறைவன்.

'ஒருவர் கடவுள்மீது பற்றுறுதி கொண்டு செயல்பட்டால், எத்துணை வலிமை படைத்த உலக ஆற்றல்களையும் வென்றுவிடலாம்' என்பது இந்நூலின் மையக்கருத்து.

இது முதலில் எபிரேய மொழியில் எழுதப்பட்டு, பின் அரமேயம் மற்றும் கிரேக்கத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருந்தாலும், எபியேர மற்றம் அரமேய பிரதிகள் நமக்கு இன்னும் கிடைக்கவில்லை. ஆனால் எரோணிமுஸ் தன் இலத்தீன் மொழிபெயர்ப்பை அரமேய பிரதியிலிருந்து செய்ததாக எழுதுகிறார்.

யூத ரபிக்கள் இந்த நூலை தங்கள் விவிலியத்தின் ஒரு பகுதியாகக் கருதவில்லை. சீர்திருத்த சபையினரும் இந்த நூலை 'தூண்டப்பட்ட நூல்' என ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால், தொடக்க திருஅவை இந்த நூலுக்கு மேன்மையான இடத்தை கொடுத்தது. தூய கிளமெந்து (கி.பி. முதல் நூற்றாண்டு) யூதித்தை துணிச்சலான அன்பிற்கு எடுத்துக்காட்டாக வைக்கிறார் (1 கொரிந்தியர் 55). யூதித்து திருஅவையின் முன்மாதிரி என்றும், புனிதக் கைம்பெண் எனவும், மரியாளை புதிய யூதித்து என்றும் சொல்கின்றார் எரோணிமுஸ். திரிதெந்தின் சங்கம் (1546) யூதித்து நூலை கத்தோலிக்க விவிலியத்தின் ஒரு நூலாக ஏற்றுக்கொண்டது.

யூதித்து நூலில் முதல் ஏற்பாட்டு நூல்களோடு நிறைய ஊடுபிரதித்தன்மை (intertextuality) காணப்படுகிறது. கடவுள் மோசேயின் கரம் கொண்டு இஸ்ரயேலை விடுவித்தது (விப 10:21-22, 14:27-30) போல, யூதித்தின் கரம் கொண்டு விடுவிக்கின்றார். சிசராவின் தலையில் ஆணி அறைந்து கொன்ற யாவேல் (நீத 4) போல, யூதித்து படைத்தலைவன் ஒலோபெரினைக் கொல்கின்றார். பெண் நீதித்தலைவர் மற்றும் இறைவாக்கினர் தெபோரா (நீத 4-5) போல, யூதித்து இஸ்ரயேலின் இடுக்கண்களில் துணைநின்று அறிவுரை வழங்குகின்றார். இஸ்ரேயல் மக்களின் பிதாமகள் சாராவின் அழகு பாரவோனை ஏமாற்றி நிறைய நன்மைகளை பெற்றுத்தந்ததுபோல (தொநூ 17:6, 12:11-20) யூதித்தின் அழகு ஒலோபெரினை ஏமாற்றுகிறது.

இன்று வரை பல பாடல்கள், ஓவியங்கள், திரைப்படங்கள், மற்றும் இலக்கியப் படைப்புக்களில் நட்சத்திரமாக மின்னுகின்றார் யூதித்து.

நூலை ஐந்து உட்பிரிவுகளாகப் பிரிக்கலாம்:

1. அசீரிய அச்சுறுத்தல் (1:1-3:10)
2. பெத்தூலியா முற்றுகை (4:1-7:32)
3. யூதித்து, கடவுளின் மீட்புக் கரம் (8:1-10:10)
4. யூதித்தின் கவர்ச்சிப் போர் (10:11-13:20)
5. வெற்றியும் நன்றியும் (14:1-16:25)

4 comments:

  1. இணைத்திருமுறை நூல்களில் இரண்டாவதான ' யூதித்து' நூலை தன் வாசகர்களுக்குக் கூறவிருக்கும் தந்தைக்கு வாழ்த்துக்கள். " வலுவற்ற ஒரு பெண்ணின் கரத்தால் வலுவான இறைவன் வலுவற்ற யூத மக்களைக்காக்கிறார்" என்பதைச் சுருங்கச்சொல்லும் " வளைக்கரமும் வாள் பிடிக்கும்" எனும் சொலவடை அழகோ அழகு.ஒருவர் கடவுள் மீது பற்றுறுதி கொண்டு செயல்பட்டால் ,எத்துணை வலிமை மிக்க உலக ஆற்றல்களையும் வென்றுவிடலாம்......வலிமைமிக்க தொரு அஸ்திவாரத்தின் மீது கட்டப்படப்போகும் கட்டடமாக இருக்கப்போகிறது 'யூதித்து' நூல் என்பது புரிகிறது; அதிலும் இது ஒரு பெண்ணைப்பற்றிய புதினம் என்பது பெண்ணினத்தைச் சேர்ந்த எம் போன்றவர்க்குப் பெருமை சேர்ப்பதாகும். தொடருங்கள் தந்தையே! தங்களின் சேவையை....இறைவன் இருக்கிறார் தங்கள் கரங்களுக்கு வலு சேர்க்க எனும் நம்பிக்கையோடு.இந்த வாரம் இனியதாக அமைந்திட வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  2. தந்தைக்கு வணக்கம்.நல்ல ஒரு தொடக்கம்.எடுத்த காரியத்தில் கண்ணும் கருத்துமாக இருப்பதை நினைத்தால் ரொம்ப பெருமையாக இருக்கிறது.இந்நுலின் மையக்கருத்து மிக மிக அழகு அதாவது 'ஒருவர் கடவுள்மீது பற்றுறுதி கொண்டு செயல்பட்டால், எத்துணை வலிமை படைத்த உலக ஆற்றல்களையும் வென்றுவிடலாம்' என்பது.

    எனக்கு பிடித்த வார்த்தைகளும் கூட.

    இவள் ஆணாதிக்க சமுதாயத்திற்கு தன வீர வார்த்தைகளால் சவால் விட்டவள்.
    இவள் நம் அன்னை மரியாவின் முன்னறிவிப்பு.

    துன்பத்திலும்,மகிழ்விலும் இறைவன் ஒருவனையே நம்பி இருந்தால்.


    யூதித்து நூல் - முன்னோட்டமே அமர்க்களமாக இருக்கிறது தந்தையே.இதை நல்ல முறையில் முடிக்க என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. அருட்தந்தை அவர்களின் இலக்கிய பயணம் சிறப்புற இறை ஆசீர் வேண்டி செபிக்கிறேன்...

    ReplyDelete
  4. அருட்தந்தை அவர்களின் இலக்கிய பயணம் சிறப்புற இறை ஆசீர் வேண்டி செபிக்கிறேன்...

    ReplyDelete