Friday, February 12, 2016

தோபித்து - தன் அறிமுகம்

தோபித்து என்னும் கதைமாந்தர் யார் என்பதை தோபித்தே சொல்வதாக பதிவு செய்கிறார் நூலின் ஆசிரியர்.

அ. முன்மாதிரியான யூதர்

'என் வாழ்நாளெல்லாம் உண்மையையும், நீதியையும் பின்பற்றி வாழ்ந்துவந்தேன்' (1:3) - இதுதான் தோபித்தின் மிஷன் ஸ்டேட்மெண்ட். இனி இந்த நூலில் வருவதெல்லாம் இந்த இரண்டு வார்த்தைகளின் விளக்கவுரைதான்.

ஆ. இணைச்சட்டத்தார் இறையியல் (Deuteronomist Theology)

இணைச்சட்ட நூலில் சொல்லப்பட்டதன்படி நடக்க மக்களை அறிவுறுத்திய இறைவாக்கினர்களும், விவிலியநூல் ஆசிரியர்களும் 'இணைச்சட்டத்தார்' என அழைக்கப்படுகின்றனர். இணைச்சட்ட நூல் சொல்வது என்ன? 'சட்டங்களை கடைப்பிடி - வாழ்வாய்! சட்டங்களுக்கு கீழ்ப்படியாவிட்டால் - சாவாய்!' நம் நாட்டார் வழக்கியலில் சொல்ல வேண்டுமெனில், 'கையில காசு - தட்டுல தோசை'. நன்மை செய்தால் நன்மை நடக்கும், தீமை செய்தால் தீமை நடக்கும். எ.கா. 'நான் என் முழுமனத்துடன் என் கடவுளைச் சிந்தையில் இருத்தினேன்...அவர் என்னை பெருமைப்படுத்தினார்' (தோபி 1:12-13). 'கடவுளுக்கு அஞ்சினால் அவர் நமக்கு நன்மை செய்வார்' என்பதே இப்புரிதல்.

தோபித்து இத்தகைய இறையியலை வாழ்பவராகத்தான் முன்வைக்கப்படுகின்றார்.

இணைச்சட்ட நூல் சொன்ன அனைத்தையும் பின்பற்றுகின்றார்:

1. 'நான் என் முழு மனத்துடன் என்; கடவுளைச் சிந்தையில் இருத்தினேன்' (தோபி 1:12. இச 6:2-4)
2. 'பசியுற்றோருக்கு உணவளித்தேன்' (தோபி 1:17. இச 15:11)
3. 'ஆடையற்றோருக்கு ஆடையளித்தேன்' (தோபி 1:17. இச 24:13)
4. 'இறந்தவரை அடக்கம் செய்தேன்' (தோபி 1:17. இச 21:23)
5. 'வெள்ளியைக் கடன் கொடுத்தேன்' (தோபி 1:14. இச 15:6-8)
6. 'ஆறு ஆண்டுகள் சேர்த்து வைத்து ஏழாம் ஆண்டு எருசலேம் திருப்பயணம் சென்றேன்' (தோபி 1:7. இச 16.6)
7. 'பத்தில் ஒரு பங்கை காணிக்கையாக கொடுத்தேன்' (தோபி 1:6. இச 14:22-29)
8. 'வேற்றினத்தாரின் உணவை நான் உண்ணவில்லை - சிலைகளை வணங்கவில்லை' (தோபி 1:11. இச 13)
9. 'என் தந்தையின் வழிமரபைச் சார்ந்த பெண்ணை திருமணம் செய்தேன் - வேறு கலப்பு உறவு கொள்ளவில்லை. இனத்தின் தூய்மை காத்தேன்' (தோபி 1:9. இச 7:3)
10. 'பெற்றோருக்கு கீழ்ப்படிந்து அவர்கள் அறிவுரையைக் கேட்டேன்' (தோபி 1:8. இச 5:16, 21:18)

இணைச்சட்ட நூலின் முக்கியக்கூறுகள் அனைத்தையும் தான் வாழ்ந்து காட்டுவதாக அறிக்கையிடுகின்றார் தோபித்து.

இ. தோபித்து - யோபு ஒற்றுமை

தோபித்து இணைச்சட்டத்தார் இறையியலை தீவிரமாக வாழ்ந்தாலும், சட்டதிட்டங்களுக்கு கீழ்ப்படிந்திருந்தாலும், ஒரு கட்டத்தில் அரசனிடம் காட்டிக்கொடுக்கப்பட்டு, அவரின் உடைமைகள் அனைத்தும் பறிக்கப்படுகின்றன: '...என்னைக் கொல்லத் தேடினர்...என் உடைமைகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு...என் மனைவி அன்னாவையும், என் மகன் தோபியாவையும்தவிர எனக்கு எதுவும் எஞ்சவில்லை' (தோபி 1:20). 'நீதிமான்கள் அல்லது நிர்மல உள்ளம் கொண்டோர் ஏன் துன்புறுகின்றனர் (the suffering of the just or the innocent)?' என்ற கேள்வி நாம் யோபு நூலை வாசிக்கும்போது நம்முள் எழுகிறது. யோபுவைப் போல உடலில் துன்பங்கள் ஏற்படாவிடினும், தன் மகன்களை இழக்காவிடினும், தோபித்தின் துன்பமும், யோபுவின் துன்பத்தை ஒத்திருக்கிறது என்பது கண்கூடு.

ஈ. வாழ்வின் இருபருவங்கள்

எபிரேய விவிலியம் மனிதரின் வாழ்வை இரண்டு பருவங்களாகப் பிரிக்கிறது: (அ) இளமைப் பருவம், (ஆ) பெரியவர் பருவம். தோபி 1:4-8 தோபித்தின் இளமைப்பருவம் பற்றியும், 1:9-22 அவரின் பெரியவர் பருவம் பற்றியும் சொல்கிறது. அந்தந்த பருவத்திற்குரியதை அந்தந்த பருவத்தில் வாழ்கிறார் தோபித்து.

உ. வாழ்வியல் சவால்கள்

1. 'பசித்தோர்க்கு உணவு. நிர்வாணத்தை அணிந்தவர்களுக்கு ஆடை. இறந்தோருக்கு நல்லடக்கம்.' உணவு, ஆடை, அடக்கம் - இயற்கையால் அல்லது சக மனிதர்களால் மனுக்குலத்திற்கு ஏற்படும் இடர்பாடுகள் நேரங்களில் இந்த மூன்றும்தான் அவசிய தேவையாக இருக்கின்றன. தோபித்தின் காலத்தில் நடைபெற்ற போரினால் மக்கள் உணவு, ஆடை இல்லாமல் வருந்தினர். இறந்தோர் தெருக்களில் கிடந்தனர். நம் வாழ்வில் இந்த மூன்றில்தாம் நாம் வலுவற்று நிற்கின்றோம். நாம் செய்யும் வேலை, மேற்கொள்ளும் பயணம், சம்பாதிக்கும் உறவு அனைத்தும் இந்த மூன்றிற்காகத்தானே: இருக்கும் வரை நமக்கு சாப்பாடு, உடை வேண்டும். இறக்கும்போது உறவுகள் வந்து நம்மை அடக்கம் செய்ய வேண்டும். இந்த மூன்றையும் நாம் 'உடல்சார்ந்த இரக்கச் செயல்கள்' (Corporal Works or Acts of Mercy) (மொத்தம் 7) என்று சொல்கின்றோம். இன்று இந்த மூன்று செயல்களுமே குறைந்துவருகின்றன. உணவு, உடை கொடுக்க முடியாவிட்டாலும், இறந்தோரை அடக்கம் செய்ய, இறந்தவருக்கு மரியாதை செலுத்த, அந்தக் குடும்பத்தாரோடு உடன் நிற்க நாம் முயற்சி செய்யலாம்.

2. 'பத்தில் ஒரு பங்கு.' தோபித்து மாத சம்பளம் வாங்கி வருவதை கற்பனை செய்து பார்ப்போம். வீட்டிற்கு வந்தவுடன் சம்பள பணத்தை அப்படியே மேசையில் விரித்து பத்து பங்குகளாக கூறுபோடுகின்றார். முதல் பங்கு ஆலயத்திற்கு, இரண்டாம் பங்கு திருப்பயணத்திற்கு, மூன்றாம் பங்கு கைவிடப்பட்டவர்க்கும், கைம்பெண்களுக்கும், நான்காம் பங்கு சாப்பாட்டிற்கு, ஐந்தாம் பங்கு மருந்திற்கு, ஆறாம் பங்கு விருந்தினர் உபசரிப்புக்கு, ஏழாம் பங்கு மகனின் படிப்பிற்கு, எட்டாம் பங்கு வீடு பராமரிப்பிற்கு, ஒன்பதாம் பங்கு கடன் கொடுக்க, பத்தாம் பங்கு அவசரத்துக்கு. என்ன அழகான நிதிநிலை மேலாண்மையை தோபித்து செய்கின்றார்! இப்படி பிரித்து வாழும்போது நாமும் முதன்மையானவைகளுக்கு நிதி ஒதுக்கவும், நம் வரையறைக்குள் வாழவும் கற்றுக்கொள்கிறோம்.

3. 'ஒருவர் காட்டிக்கொடுக்கின்றார். மற்றொருவர் பரிந்து பேசுகின்றார்' (தோபி 1:19,22) கடவுள் ஒரு கதவை அடைத்தால், மறு கதவை திறப்பார் என்பதுபோல, ஒருவர் தோபித்தைக் காட்டிக் கொடுத்ததால் அவர் தன் சொத்துக்கள் அனைத்தையும் இழக்க நேரிடுகிறது. ஆனால், அதே நேரத்தில் மற்றவரின் பரிந்து பேசுதலால் தோபித்து தன் உடைமைகளையெல்லாம் திரும்ப சம்பாதிக்கின்றார். நம் வாழ்விலும் இந்த இரண்டு பேரும் வருவார்கள். நாமும் இந்த இரண்டுபேர் போலவும் வாழ்கின்றோம். முதலாமவர் மறைந்து, பரிந்து பேசும் இரண்டாமவர் நம்மில் மேலோங்கி நின்றால், நாமும் அடுத்தவர்களின் இழப்புக்களை ஈடு செய்ய முடியும்.

5 comments:

  1. இணைச்சட்ட நூலில் உள்ளபடி நடக்க மக்களை அறிவறுத்திய இறைவாக்கினர்கள் இணச்சட்டத்தார் என அழைக்கப்பட்டனர் எனவும், அவர்களின் சொற்களை அட்சரம் பிசகாமல் வாழ்ந்த தோபித்து, யோபு போன்றவர்களைக் கூட வாழ்வின் நிதர்சனங்கள் விட்டுவைக்க வில்லை என்பது இறைவன் தனக்கு நெருக்கமானவர்களைப் புடமிட்டு சோதித்தறிகிறார் என்பதற்கு எடுத்துக்காட்டு.உடல் சார்ந்த இரக்க செயல்களான பசித்தோருக்கு உணவளிப்பதும், நிர்வாணமாயிருப்போரை உடுத்துவதும், மரித்தோரை அடக்கத்துடன் கூடிய மரியாதை செய்து இழந்தோரோடு உடனிருப்பதும் எத்துணை அழகான விஷயங்கள் என இத்தவக்காலத்தில் உணர்த்தப்படுகிறோம்.மற்றபடி தந்தையின் கூற்றுப்படி நம் வருமானத்தைப் பத்தாகப் பிரித்து பத்து விஷயங்களுக்குப் பகிர்ந்தளிக்க நம்மால் இயன்றால் அழகான விஷயமே.நம் வாழ்வில் காட்டிக்கொடுக்க ஒருவரெனில் பரிந்து பேசவும் ஒருவர் வருவார் என்பதும்,இறைவன் ஒரு கதவை அடைக்கையில் ஒரு ஜன்னலையேனும் திறந்துவிடுவார் என்பதும் வாழ்வின் நிதர்சனங்கள்.நம்மிலும் இந்தப் 'பரிந்து பேசுபவரை' நாம் வளரவிட்டால் நம்மாலும் அடுத்தவர்களின் இழப்புக்களை ஈடு செய்ய முடியும் என்ற உண்மையை வாழ்ந்து பார்க்க அழைக்கப்படுகிறோம்.இன்றையப் பதிவில் வரும் அத்தனை விஷயங்களையும் இல்லை யெனினும் முதற்படியையேனும் இன்று எடுத்து வைக்கலாமே! எனத்தட்டிக்கொடுக்கும் தந்தைக்கு நன்றிகள்!!'

    ReplyDelete
  2. Dear Father,Very good illustration from the book of Tobit.

    Thank you for applying principles of management.

    You are proving that you are a very good manager of life.

    Congrats Father.

    ReplyDelete
  3. Dear Father,Very good illustration from the book of Tobit.

    Thank you for applying principles of management.

    You are proving that you are a very good manager of life.

    Congrats Father.

    ReplyDelete
  4. GITANJALI A BERNARD,
    Chennai.

    Dear Fr. Y. K:

    - You have listed 10 specifics as the saintly Tobit attempted to live out his life, specifics patterned after Deuteronomist Ethics. I would love to follow most of them as may be possible.

    - By the same token, as a Catholic Christian I would love to make one exception, please: I WOULD NEVER MARRY FROM MY FATHER'S LINEAGE. I WOULD NEVER ADHERE TO KEEP THE PURITY OF BLOOD. Who knows: may be one way of being a "pure" Christian is to consciously disobey a couple of laws that regulate
    blood-related purities.

    ReplyDelete