Tuesday, February 16, 2016

அவன் என் மகன்

அ. எண்கள்

ஒன்று

தோபித்து நூல் பிரிவு 4ஐ ஒட்டுமொத்தமாக இணைக்கும் ஒன்று என்னவென்றால், தோபித்து தன் மகன் தோபியாவுக்கு வழங்கும் அறிவுரை. 'நான் சாக வேண்டும்' என்று கடவுளிடம் மன்றாடிவிட்டு வந்த தோபித்துக்கு மனம் நெருடலாகவே இருக்கின்றது. தான் இறந்துவிட்டால் தான் கபேலுக்கு கடன் கொடுத்த விடயம் தன் மகனுக்கு தெரியாமல் போய்விடுமே என்ற துயரும், தான் இறந்தபின் தன் மகன் எப்படி வாழ்வான் என்ற கவலையும் தோபித்தைப் பற்றிக்கொள்ள, 'தம்பி தோபியா இங்கே வா!' என்று தன்னருகே அழைத்து அறிவுரை பகர்கின்றார்.

இரண்டு

தோபித்தின் அறிவுரை ஒரே கட்டளைதான்;: 'நினைத்துப்பார்' அல்லது 'நினைவில்கொள்'. யாரை? இரண்டு பேரை. (1) அம்மாவை, (1) ஆண்டவரை.

1. அம்மாவை நினைவில்கொள்
'அவளை மதித்து நட. அவளை கைவிடாதே. அவளுக்கு விருப்பமானதைச் செய்' என்று நேர்முகமாகவும், 'அவள் மனம் புண்படும்படி எதுவும் செய்யாதே' என்று எதிர்மறைச் சொல்லாகவும் கட்டளையிடுகிறார் தோபித்து (4:3-4). ஏன் அம்மாவை நினைவில் கொள்ள வேண்டும்? ஏனெனில் அவள் உன்னைப் பெற்றெடுத்தாள். உனக்காக வலிகள் தாங்கினாள். சீராக்கின் ஞானநூல், நீதிமொழிகள் என்ற ஞானநூல்களில்தாம் 'தாயின்' முக்கியத்துவம், தாயின் அறிவுரையின் முக்கியத்துவம் அதிகமாக சுட்டிக்காட்டப்படுகிறது. எபிரேய சமூகம், நம் முற்கால தமிழ்சமூகம் போல தாய்வழி சமூகமாகவே இருந்திருக்கிறது.

2. ஆண்டவரை நினைவில்கொள்
'ஆண்டவரை நினை! அவருடைய கட்டளைகளை மீற விரும்பாதே!' (4:5) என்றும், 'ஆண்டவரைப் போற்று, அவரிடம் மன்றாடு, அவரிடம் அறிவுரை கேள்!' (4:16-17) என்றும் கட்டளையிடுகின்றார்.

நம் வாழ்வில் நாம் நல்லவர்களாக இருக்க தோபித்து சொல்லிக் கொடுக்கும் மிக எளிய மந்திரம், 'அ-ஆ' - 'அம்மா-ஆண்டவர்.' இந்த உலகில் நமக்கு நல்லது நினைப்பவர்கள் இந்த இரண்டுபேர்தாம். மேலும், நாம் அதிகம் புரிந்து கொள்ளாததும் இந்த இருவர்தாம். நாம் அதிகம் கோபப்படுவதும் இந்த இருவர்மேல்தாம்.

மூன்று

தோபித்து பிரிவு 4ல் மூன்று கிரேக்க வார்த்தைகள் அடிக்கடி பயன்படுத்தப்பட்டுள்ளன - 'எலேமோசினா' ('தர்மம்'), 'டிகாயுசுனே' ('நீதி'), மற்றும் 'அலேதேயா' ('உண்மை'). வாழ்விற்கு தேவையானது அன்பு என்பது இன்று நாம் அடிக்கடி ரொமான்டிக்காக பேசும் ஒன்று. ஆனால், மேற்காணும் மூன்று மதிப்பீடுகள்தாம் நம் வாழ்வை மற்றவர்களுக்குப் பயனுள்ள வழியில் வாழ உதவி செய்கின்றன. 'நான் எல்லாரையும் அன்பு செய்கிறேன்' எனச் சொல்லிவிட்டு, இந்த மூன்று மதிப்பீடுகளும் இல்லாமல் வாழ்ந்தால் அன்பு வெறும் வாய்ச்சொல்லாக மட்டும்தானே இருக்கும்.

ஆ. பத்துக்கட்டளைகள்

தோபித்தின் அறிவுரை மோசே வழியாக கடவுள் வழங்கிய பத்துக்கட்டளைகளின் (காண். விப 20:2-17, இச 5:6-21, கத்தோலிக்க திருஅவையின் மறைக்கல்வி, பிரிவு 3, பகுதி 2) மறுவார்த்தைகளாவும் உள்ளது:

கட்டளை 1: 'ஆண்டவரை நினை' (தோபி 4:5)
கட்டளை 2: 'நீ கடவுளுக்கு ஊழியம் புரிந்தால் உனக்கு கைம்மாறு கிடைக்கும்' (4:14)
கட்டளை 3: 'எல்லாக் காலத்திலும் உன் கடவுளாகிய ஆண்டவரைப் போற்று' (4:19)
கட்டளை 4: 'என்னை நல்லடக்கம் செய். அம்மாவை நினைவில்கொள்' (4:3-4)
கட்டளை 5: 'நீ செய்வது அனைத்திலும் கவனமாய் இரு' (4:14)
கட்டளை 6: 'எல்லாவகை தீய நடத்தையிலிருந்தும் உன்னையே காத்துக்கொள்' (4:12)
கட்டளை 7: 'அநீதியின் வழிகளில் செல்லாதே' (4:5)
கட்டளை 8: 'அவருடைய கட்டளைகளை மீற விரும்பாதே' (4:5)
கட்டளை 9: 'நல்லொழுக்கம் உடையவனாய் இரு' (4:14)
கட்டளை 10: 'உடனே கூலியைக் கொடுத்துவிடு. இரவு முழுவதும் வைத்திராதே' (4:14)

இந்தப் பத்துக்கட்டளைகளும் எனக்கும் இறைவனுக்கும், எனக்கும் பிறருக்கும் உள்ள உறவு மேம்பட வழிகோலுகின்றது.

தோபித்து இன்னும் ஒருபடி போய், எனக்கும் எனக்கும் உள்ள உறவு மேம்படவும் மூன்று கட்டளைகள் தருகின்றார்:

1. சோம்பேறியாயிராதே. 'சோம்பலே பஞ்சத்திற்கு காரணம்' (4:13)
2. உன்னை அன்பு செய். 'நல்லொழுக்கமுடையவனாய்...அளவு மீறி மது அருந்தாதே' (4:15)
3. எல்லாருக்கும் செவிகொடு. ஆனால் முடிவை நீயே எடு. 'ஞானிகளிடம் அறிவுரை கேள்' (4:18)

இ. அறவே வேண்டாம்

செருக்கு, அநீதி, சோம்பல் இந்த மூன்றும் அறவே ஒரு மனிதருக்கு கூடாது.

ஈ. மறைந்திருக்கும் மூன்று உண்மைகள்

1. வாழ்வுக்குப் பின் வாழ்வு. நம் வாழ்வு இறப்போடு முடிந்துவிடுவதில்லை. வாழ்விற்குப் பின்னும் வாழ்வு இருக்கிறது. அந்த வாழ்வை அடைவதற்கான ஒரே வழி தர்மம் செய்தல்.

2. அறிவுரை வழங்கும் ஆண்டவர். ஆண்டவரின் அறிவுரையை எப்படி அறிவது? 'எனக்கு அறிவுரை வழங்கும் ஆண்டவரைப் போற்றுகின்றேன். இரவில்கூட என் மனச்சான்று என்னை எச்சரிக்கின்றது' (16:7) என்று பாடுகின்றார் திருப்பாடல் ஆசிரியர். ஆக, ஆண்டவர் அறிவுரை வழங்குவது நமக்கு மனச்சான்றின்வழி. சில நேரங்களில் மனச்சான்றையும் நாம் ஏமாற்ற அல்லது அதனுடன் சமரசம் செய்து கொள்ள முடியும். இந்த நேரத்தில் நாம் கவனமாய் இருத்தல் வேண்டும்.

3. 'நாம் ஏழையாகிவிட்டோம் என அஞ்சாதே!' தோபித்தின் அறிவுரைப்பகுதியில் என் நெஞ்சம் தொட்டது இதுதான். இந்த ஒற்றை வாக்கியத்தில் 'சுயமரியாதை' அல்லது 'தன்மதிப்பு' என்னும் மிக மேன்மையான மதிப்பீட்டை தன் மகனுக்கு கற்றுக்கொடுக்கிறார். மேலும், இந்த வாக்கியம், 'ஏழையாயிருக்கிறோம் என்பதற்காக திருடாதே!' 'ஏழையாயிருக்கிறோம் என்பதற்காக பிறர்முன் கைகட்டி நிற்காதே!' 'ஏழையாயிருக்கிறோம் என்பதற்காக உன்னையே மட்டம்தட்டிக்கொள்ளாதே' என்ற உள்பொருள்களையும் கொண்டிருக்கிறது.

உ. தோபித்தும் ஆபிரகாம் லிங்கனும்

தோபித்து தன் மகனுக்கு வழங்கும் அறிவுரை, ஆபிரகாம் லிங்கன் தன் மகனின் ஆசிரியருக்கு வரைந்த மடலை எனக்கு நினைவூட்டுகிறது. இந்த மடலின் வரிகளை என் நண்பி ஒருத்தி என் பிறந்தநாளுக்கு பரிசாக அனுப்பியிருந்தாள். அந்த மடலை இங்கு சுருக்கமாக தமிழாக்கம் செய்கிறேன் (ஆங்கில மூலத்திற்கு இங்கே சொடுக்கவும்:Dear Teacher - Abraham Lincoln ):

'(என் மகன்) கற்க வேண்டும்...
எல்லா மனிதரும் நீதியானவர்கள் அல்லர்,
எல்லா மனிதர்களும் உண்மையானவர்கள் அல்லர் என்று.
இருந்தாலும் பொய்யானவர்கள் நடுவிலும் உண்மையானவர் இருக்கிறார்,
தன்னலம் கொண்ட அரசியல்வாதிகள் நடுவிலும் நல்ல தலைவர் இருக்கிறார்...

அவனுக்கு கற்றுக்கொடுங்கள்
பகைவன் இருப்பதுபோல நண்பனும் இருக்கிறான் என்று...

பொறாமையிலிருந்து அவனை விலக வையுங்கள்
முடிந்தால், புன்னகையின் மேன்மையை அவனுக்கு உணர்த்துங்கள்
புத்தகங்கள் தரும் ஆச்சர்யத்தை அவன் அறியச்செய்யுங்கள்.
அதே நேரம், மௌனமாக வானத்தை நோக்கி விண்மீன்களைக் கண்டு வியக்கவும்,
மலைச்சாரல் மலர்களை ரசிக்கவும் அவன் அறியட்டும்.

ஏமாற்றவதைவிட தோற்பதே சிறந்தது என அவனுக்குக் கற்றுக்கொடுங்கள்.
தோற்றாலும் அதிலும் பெருந்தன்மையோடு அவன் இருக்கட்டும்.
எளிதாக வரும் 100 ரூபாயைவிட
கஷ்டப்பட்டு வரும் 10 ரூபாய் மேலானது என அவனுக்கு கற்றுக்கொடுங்கள்.

எல்லாரும் தவறு என்று சொன்னால்கூட, அவனுக்கு தன் மனக்கிடக்கைமேல் உறுதியான நம்பிக்கை பிறக்க வையுங்கள்.மென்மையானவரோடு மென்மையாகவும், வன்மையானவரோடு வன்மையாகவும் வாழக் கற்றுக்கொடுங்கள்.

கூட்டத்தைப் பின்பற்றுவதிலிருந்து அவன் விலகி நிற்கட்டும்.
எல்லோரின் அறிவுரையைக் கேட்டாலும், அவற்றைக் தரம்பிரிக்க அவன் கற்றுக்கொள்ளட்டும்.
நல்லதை மட்டும் எடுத்து, கெட்டதை அவன் விடுக்கட்டும்.

அழுவதற்கு அவன் வெட்கப்பட வேண்டாம்.
அதிஇனிமையான வார்த்தைகளால் அவன் கவரப்பட வேண்டாம்.
தன் சிந்தனையை அதிக விலைக்கு விற்கட்டும்
ஆனால், ஒருநாளும் தன் ஆன்மாவையும், இதயத்தையும் அவன் விற்றுவிட வேண்டாம்.

சத்தமிடும் கூட்டத்திற்குத் தன் காதுகளை அவன் மூடிக்கொள்ளட்டும்.
'சரி' என்று தெரிந்தால், தனியாகவே அவன் போராடட்டும்.

அவனை மென்மையாகக் கையாளுங்கள். ஆனால், ரொம்பவும் செல்லம் கொடுக்காதீர்கள்.

நெருப்பே வலிமையான இரும்பை உருவாக்கும்.

பொறுமையற்று இருக்க அவன் துணிச்சலோடும்,
துணிச்சலோடு இருக்க அவன் பொறுமையாகவும் இருக்கட்டும்.

எப்போதும் தன்னம்பிக்கையோடு இருக்க கற்றுக்கொடுங்கள்.
தன்னை நம்பும் ஒருவனால்தான் இந்த மனுக்குலத்தை நம்ப முடியும்.

இதுதான் என் கட்டளை...உங்களால் முடிந்தவரை இதைச் செய்யுங்கள்...

அவன் ரொம்ப நல்ல பையன்...அவன் என் மகன்'


2 comments:

  1. இன்றையப் பதிவைப் படித்து படித்து முடித்தவுடன் அbbப்பா என்ற பெருமூச்சு ஏற்பட்டது.எல்லாவற்றையும் படித்து மனத்தில் இருத்தக் கொஞ்சம் முயற்சி தேவைப்பட்டது...அவ்வளவுதான்.தோபித்து தன் மைந்தன் தோபியாவுக்குக் கூறும் அறிவுரைகளை ஒவ்வொரு தகப்பனும் தங்கள் பிள்ளைகளுக்குக் கூறுவதாக எடுத்துக் கொண்டால் எத்துணை நலம்! தன்னுடைய மொத்த அறிவுரைகளின் சாராம்சமாக " ஆண்டவனையும்,அம்மாவையும் மனத்தில் என்றும் நினை" என்கிறார். நமக்கு உடல் தந்த தாயை உயிர் தந்த இறைவனுக்கு அடுத்தபடியாக வணங்குவது தாய்க்குத் தரப்படும் மேட்டிமை மட்டுமல்ல....அது தனயனுக்கும் சேர்த்தேதான் என்பதை இன்றைய இளவல்கள் புரிந்து கொண்டால் நலம். நாம் நலமுடன்,வளமுடன் வாழ வழிகாட்டும் "தர்மம்,நீதி,மற்றும் உண்மை" போன்ற மதிப்பீடுகளற்ற வாழ்வு என்னதான் அன்பைப் பிரதானமாய்க் கொண்டிருப்பினும் அவ்வாழ்க்கை 'ஓசையிடும் வெண்கலம்' போன்றது என்கிறார்.இவருடைய பத்துக் கட்டளைகளைப் பின்பற்றினாலே போதும்....நித்திய வாழ்வுக்கு கேரண்டி கிடைத்துவிடும் என்று தோன்றுகிறது. இவருடைய மொத்த அறிவுரைகளில் என்னை மிகவும் கவர்ந்தவை இரண்டு...1 தர்மம் செய்தல்.' தனக்கு மிஞ்சிதான் தானதர்மம்' என்ற கூற்றை எதிர்ப்பவள் நான்.என் தேவைக்குப்போக மிஞ்சுவதைக் கொடுப்பது எப்படி தரம்ம் ஆகும்?அருகிலிருப்போரின் தேவையறிந்து தன்னிடம் உள்ளதை அள்ளிக் கொடுக்க முடியவில்லை எனினும் கிள்ளிக்கொடுப்பதே தர்மம்.அதை நிறைவாகவும்,விரைவாகவும் செய்ய இந்தத் தவக்காலம் நமக்கு உதவுகிறது.2 ஏழ்மையை ஏளனப்படுத்தல் ஆகாது என்பது.ஒருவனின் ஏழ்மை காசு பணத்திலிருக்கலாம்; ஏனெனில் அது யாருக்கும் நிரந்தரமல்ல.ஆனால் 'சுயமரியாதை','தன் மதிப்பு' என்பது என்னை என்றென்றும் மேன்மகனாக்க் காட்டவும்,வாழவும் துணை நிற்க வேண்டும்.இறுதியாக மணிமுடி வைத்தாற்போல் அபிரகாம் லிங்கன் தன் மகனின் ஆசிரியருக்கு வரைந்த கடிதம்..பல பள்ளிகளின் அலுவலகங்களின் சுவரை அலங்கரிப்பதைப் பார்த்துள்ளேன்.இங்கு பெருமைக்குரியவர் ஆசிரியர் மட்டுமல்ல; தந்தையும் கூடத்தான்.தன் மகனுக்குப் பாடத்தை மட்டுமல்ல அவனுக்கு வாழ்க்கையை வாழக்கற்றுக்கொடுங்கள் என்று ஆசிரியர்களிடம் விண்ணப்பிக்கும் பெற்றோர் எத்தனை பேர்? அந்தத் தந்தையின் கடித்த்தின் இறுதி வரிகள்..." அவன் ரொம்ப நல்ல பையன்...அவன் என்மகன்" என் கண்கள் பனித்து விட்டன.இப்படிப்பட்ட பிள்ளைகளைப்பெற்ற பெற்றோரும் சரி, பெற்றோரைப்பெற்ற பிள்ளைகளும் சரி " பேறு பெற்றோரே!"
    இப்படி முத்தான விஷயங்களைத் தேடித்தேடித்தரும் தந்தையைப் பாராட்ட என்னிடம் வார்த்தைகளுக்குப் பஞ்சம் வந்து விட்டது.இறைவன் உங்களை நிறைவாக ஆசீர்வதிக்க மனதார வாழ்த்துகிறேன்! நன்றி!!!


    ReplyDelete
  2. Dear Father, very very excellent.Congrats.

    ReplyDelete