Monday, February 15, 2016

திரும்பவும் வீட்டிற்குள்

அ. இலக்கியக் கூறு
உரைநடையாக சென்று கொண்டிருக்கும் தோபித்து நூல் இங்கே கொஞ்சம் செய்யுளாக மாறுகின்றது. தோபித்து நூல் 3:2-6 மற்றும் 3:11-15 செய்யுள் வடிவில் இருக்கின்றது. இவ்வாறு உரைநடையின் இடையே வரும் செய்யுளை ஆங்கிலத்தில் 'Inset Hymn' (இடைநில் பாடல்) என சொல்கிறார்கள். இவ்வகைப் பாடல்கள் பிற்காலத்தில் எழுதப்பட்டு, உரைநடைக்குள் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அப்படி சேர்க்கப்பட்டாலும், இவைகள் உரைநடையின் கதைமாந்தர்களின் உணர்வு, கதையின் ஓட்டம் அனைத்தையும் ஒத்தே இருக்கின்றன. விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு திரைப்படத்தில் காதல், சோகம் போன்ற உணர்வுகள் பாடல்களாகக் காட்டப்படுவதுபோல, உரைநடையின் ஓட்டத்தை கொஞ்சம் நிறுத்தி, கதைமாந்தர்களின் உணர்வை பாடலாக்குகின்றனர் ஆசிரியர். உதாரணத்திற்கு, இயேசுவின் பிறப்பு நிகழ்வுகளை உரைநடையாக பதிவு செய்யும் லூக்கா, பிறப்பு முன்னறிவிப்பு, மரியா-எலிசபெத்து சந்திப்பு என உரைநடையாக எழுதிவிட்டு, டக்கென நிறுத்தி மரியாளை பாடல் ஒன்று பாடல் வைக்கின்றார். இவ்வகைப் பாடல்களின் நோக்கம் இரண்டு: ஒன்று, இதுவரை நடந்தவற்றை வாசகருக்கு நினைவூட்டுவது. இரண்டு, இனி வரவிருப்பவைகளுக்கு வாசகரைத் தயாரிப்பது.

தோபித்து 3ல் காணும் இரண்டு இடைநில் பாடல்களும் மன்றாட்டுக்கள் வகையைச் சார்ந்தது.

ஆ. இரண்டு பேர்

தோபித்து நூல் 3ஆம் பிரிவு மிக முக்கியமானது. ஏனெனில் இங்குதான் கதைமாந்தர் தன்மையில் பேசிக்கொண்டிருப்பதை விடுத்து படர்க்கையில் பேச ஆரம்பிக்கின்றார். மேலும், இங்கேதான் கதையின் அடுத்த முக்கிய கதைமாந்தர் சாரா அறிமுகம் செய்துவைக்கப்படுகின்றார்.

தோபித்துக்கும், சாராவுக்கும் ஐந்து ஒற்றுமைகள் இருக்கின்றன:

1. தோபித்து வீட்டின் முற்றத்தில் இருக்கின்றார். சாரா வீட்டின் மாடியில் இருக்கின்றார். நம் வீடுகளின் முற்றம், வாசற்படி, திண்ணை, படிக்கட்டுகள் போன்றவற்றிற்கு உணர்வுப்பூர்வமான அர்த்தமும் உண்டு. அதாவது, வீட்டிற்குள் கணவன்-மனைவிக்குள், பெற்றோர்-பிள்ளைக்குள் சண்டை வரும்போது, பாதிக்கப்பட்டவர் அழுவதற்கு ஓடிச்செல்லும் இடம் அதுதான். நம் வீட்டுத் திண்ணைகளும், படிகளும், மாடிகளும், எத்தனை பேரின் கண்ணீரைத் தாங்கியிருக்கின்றன. இப்படி ஓடிச் சென்று நாம் அவற்றில் அமர்ந்து அழும்போது, நாம் நம்மைக் காயப்படுத்தியவருக்கு எதிராக மௌனமாக போராட்டம் செய்கின்றோம். 'இனி உனக்கும், எனக்கும் சம்பந்தமில்லை' என தற்காலிமாக நமக்குள் சொல்லிக்கொள்கிறோம். மேலும், முற்றம், திண்ணை, படி, மாடி இவைதான் நம்மை வெளியுலகத்தோடு இணைக்கின்றன. உள்ளேயிருந்து வெளியே கடத்தும் காரணிகள் இவை. இங்கே நாம் அமரும்போது நமக்குள் ஒருவித பாதுகாப்பின்மையும் இருக்கிறது. வீட்டிற்குள் இருக்க பயம். ஏனெனில் நம்மைக் காயப்படுத்தியவர் உள்ளே இருக்கிறார். வெளியேறிச் செல்ல பயம். ஏனெனில் வெளியுலகம் எப்படி இருக்கும் என நமக்குத் தெரியாது. இந்தப் போராட்டத்தில் நாம் இடையிலேயே நின்றுகொள்கிறோம். தோபித்தும், சாராவும் இப்படித்தான் இருக்கின்றனர்.

2. இருவருமே இரு பெண்களால் பழித்துரைக்கப்பட்டவர்கள். தோபித்து தன் மனைவி அன்னாவால். சாரா தன் பணிப்பெண் ஒருத்தியால்.

3. இருவருமே கடவுளை நோக்கி மன்றாடுகின்றனர். நம் மனித உள்ளம், தான் மீறமுடியாத ஒரு எல்லையை, அல்லது தன் சக்திக்கு மீறிய ஒன்றைக் கையாளும் நிலை வரும்போது, தன்னையறியாமலேயே அது கடவுளை நோக்கி தன் கண்களையும், கைகளையும் உயர்த்துகிறது.

4. இருவருமே சாக வேண்டும் என விரும்புகின்றனர். தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு தங்களின் இறப்பு தான் என நினைக்கின்றனர்.

5. ஆனால் இருவருமே தங்களின் இறப்பு எண்ணத்தை விடுத்து வீட்டுக்குள் திரும்புகின்றனர். தோபித்து முற்றத்திலிருந்து வீட்டிற்குள், சாரா மாடியிலிருந்து வீட்டிற்குள் நுழைகின்றனர்.

இ. இரண்டு பாடல்கள்

தோபித்து பாடலும், சாரா பாடலும் மன்றாட்டுக்களாக இறைவனை நோக்கி எழுகின்றன. இந்த இரண்டு பாடல்களும் ஒரேவகை அமைப்பைக் கொண்டிருக்கின்றன:

1. புகழ்ச்சி (3:2, 3:11)
2. மன்னிப்பு (3:3-5, 3:12-14)
3. விண்ணப்பம் (3:6, 3:15)

ஈ. இரண்டு பிரச்சினைகள் - ஒரு தீர்வு

இந்தப் பாடல்கள் வழியாக இந்நூலின் ஆசிரியர் மற்றொன்றையும் தன் வாசகருக்குத் தெரியப்படுத்துகின்றார். அதாவது, இந்த நூல் தீர்க்கப்போகும் பிரச்சினைகள் இரண்டு:

1. பார்வையற்ற தோபித்து பார்வை பெறுதல்
2. திருமணம் கைகூடாத சாரா திருமணம் முடித்தல்

கடவுள் இந்த இருவரின் மன்றாட்டுக்களுக்கும் செவிகொடுக்கின்றார். இந்த இரண்டு பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வாக தன் தூதர் ரபேலை அனுப்புகின்றார்.

உ. வாழ்வியல் சவால்கள்

1. முற்றம். மாடி. நம் வாழ்வில் எந்தப் பிரச்சினையென்றாலும், அந்த இடத்திலேயே, அல்லது பிரச்சினை தரும் அந்த நபரின் பிரசன்னத்திலிருந்து தற்காலிகமாக ஓடிவிட வேண்டும். நமக்கென்று ஒரு முற்றத்தை, ஒரு மாடியை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும், அந்த நேரத்தில் நாம் மற்றவற்றின்மேல் கவனம் செலுத்தக் கூடாது. உதாரணத்திற்கு, என்மேல் ஒருவர் கோபப்பட்டு கத்திவிட்டார் என்பதை மறக்க, நான் டிவி அல்லது காமெடி பார்த்து என்னையே திசைதிருப்பக் கூடாது. திசைதிருப்புதல் ('distraction' or 'displacement') ஒரு டிஃபென்ஸ் மெக்கானிசம். இது தற்காலிக தீர்வையே தரும். நிரந்தர தீர்வு வேண்டுமெனில், நாமே அமைதியாக அமர்ந்து நம் பிரச்சினையின் வேரைக் கண்டுபிடிப்பதும், நம்மைக் காயப்படுத்தியவரிடம் நேருக்கு நேர் பேசி பிரச்சனையைத் தீர்ப்பதுவுமே.

2. இரண்டாம் யோசனை. 'நான் இறந்து போகட்டும்' என மூன்றுமுறை செபிக்கின்ற தோபித்து தன் மனைவி மற்றும் மகள் நினைவு வந்தவுடன் வீட்டிற்குள் போகின்றார். தூக்குப்போட்டு இறப்பதற்காக கயிற்றுடன் மாடி ஏறி வந்த சாரா, 'நான் இறந்துவிட்டால் என் தந்தையை யார் பார்த்துக்கொள்வார்' என்று இறங்கி வருகின்றார். அவசர முடிவுகள்தாம் பல நேரங்களில் பெரிய இழப்பை ஏற்படுத்திவிடுகின்றன. காதல், படிப்பு, வேலை போன்றவற்றில் தோல்வியை தழுவியவர்கள் ஒரு நிமிடம் தங்களையே குடும்பம் என்ற பெரிய வட்டத்தில் வைத்துப் பார்க்க வேண்டியதும், தங்கள் முடிவுகளைச் செயலாக்குமுன் ஒரு நொடி தன் பெற்றோரை நினைப்பதும் அவசியம்.

3. மனிதர்களின் வார்த்தைகள் சோப்புநுரை. மனைவியின் பழிச்சொல் தோபித்துக்கு, பணிப்பெண்ணின் பழிச்சொல் சாராவுக்கு வெறும் சோப்புநுரைகளாக தெரிந்தன. காற்று பட்டால் எல்லாம் கடந்துவிடும்.


1 comment:

  1. தோபித்து- 3 ன் வழியாக ஏற்கனவே நமக்கு அறிமுகமான நீதிமான் தோபித்தையும், அவரது மருமகள் சாராவையும் ஒருசேர களத்தில் இறக்குகிறார் தந்தை அவர்களிடையே உள்ள ஒற்றுமையின் அடிப்படையில்.தேவையற்ற பழிச்சொற்கள் நம்மேல் சேறாக வாரி இறைக்கப்படும்போது நாம் என்ன செய்திருப்போம் என்று நம் கடந்த காலத்தைத் திரும்பிப் பார்க்க வைக்கின்றன தந்தையின் வரிகள்.இங்கே திண்ணை,வாசற்படி,முற்றம் போன்ற இடங்கள் கூட கதாபாத்திர அந்தஸ்து பெறுகின்றன.தோபித்து தன் மனைவியாலும்,சாரா தன் பணிப்பெண்ணாலும் பழித்துரைக்கப்பட்டதன் விளைவாய் இருவரும் தங்களின் சக்திக்கு மீறியதொரு எல்லையைத்தொட்டாலும் இறுதியில் இருவரின் கண்களும்,கைகளும் வானத்தை நோக்கி நீள்கின்றன என்பது நமக்கெல்லாம் தூண்டுதலான,ஆறுதலான விஷயம்.இவர்களின் மன்றாட்டுக்கு செவிமடுத்த இறைவன் இவர்களுக்கு ஒரு இரஃபேலை அனுப்பியது போல எத்தனை இரஃபேல்களை நம் பிரச்சனைகளுக்குத் தீர்வாக அனுப்பியுள்ளார் என்று கணக்கெடுத்துப் பார்க்க வேண்டிய வேளை இது.வாழ்வில் தாளவொண்ணாத் தோல்விகளை சந்திக்கும்போது விரக்தியின் உச்சிக்கே செல்லும் நம் இளைஞர்களும்,இளைஞிகளும் செய்ய வேண்டியது என்ன என்பதை தந்தை அழகாக்க் கோடிட்டுக் காட்டுகிறார். இறுதிவரிகள்....ஒவ்வொருவருமே நம் மனத்தில் சிம்மாசனமிட்டு எழுதி வைக்க வேண்டிய வார்த்தைகள்.ஆம்.." நம்மை நோக்கி வரும் பழிச்சொற்கள் இறைவனின் இரக்கம் எனும் காற்றுபட்டால் கட்ந்துவிடும்; கரைந்துவிடும்" என்பதை நம் விருதுவாக்காக எடுத்தோமேயானால் எதுவுமே நம்மைப்பாதிக்காது.வாழ்க்கையின் அச்சாரமான ஒரு விஷயத்தைப் படைப்பாக தந்த தந்தைக்கு நன்றிகள்! பாராட்டுக்கள்!!!

    ReplyDelete