Tuesday, February 23, 2016

வழிமேல் விழி

தோபித்து நூல் 10ஆம் பிரிவில் ஒரே நேரத்தில் இரண்டு மேடைகளில் நடக்கும் நிகழ்வுகளைப் பதிவு செய்கின்றார் ஆசிரியர்.

மேடை 1: தோபியாவின் வீடு

தோபித்தும், அன்னாவும் தங்கள் மகன் தோபியா இன்னும் ஊர் திரும்பாததை நினைத்து வருத்தத்தில் இருக்கின்றனர். தன் மகன் இன்னும் திரும்பவில்லையே என எண்ணுகின்ற தோபித்தின் உள்ளத்தில் நிறைய கேள்விகள்: 'ஒருவேளை அங்கு தாமதம் ஆகிவிட்டதோ? கபேல் இறந்திருப்பாரோ? தோபியாவுக்குப் பயணம் கொடுக்க யாரும் இல்லையோ? பாதை தவறிவிட்டார்களோ? வழியில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்திருக்குமோ?' கேள்விகள் நீண்டுகொண்டே போகின்றன. ஆனால், அன்னா முடிவே எடுத்துவிட்டார்: 'ஐயோ! என் மகன் இறந்துவிட்டான்!' பெண்கள் அவசரப்பட்டு முடிவெடுப்பது அவர்களின் டிஎன்ஏவில் இருக்கும் ஒரு குணமோ! தன் உள்ளத்தில் ஆயிரம் கேள்விகள், சந்தேகங்கள், குழப்பங்கள் இருப்பினும், தன் மனைவிக்கு நேர்முகமான பதிலையும், நம்பிக்கையையும் தருகின்றார் தோபித்து. ஆனால், அன்னா புத்திசாலி. அவளுக்கு வெற்றுச் சமாதானம் ஏற்புடையதாக இல்லை. தன் மகனைக் கண்ணால் கண்டு, கையால் தொட்டால்தான் நம்புவேன் என அடம்பிடிக்கிறாள். பெண்கள் கண்ணால் காணாத ஒன்றைவிட, காணக்கூடிய ஒன்றாலேயே அதிகம் ஈர்க்கப்படுகிறார்கள். கண்ணுக்குப் புலப்படாத தத்துவ அறிவை விட, கண்ணுக்குப் புலனாகும் தோட்டத்து மலரே அவர்களை ஈர்க்கிறது. மேலும், அன்னா தன் மகன் சென்ற பாதையையே பார்த்துக்கொண்டிருக்கிறாள். பகலெல்லாம் பாதையில் தவம் கிடக்கிறார். இரவெல்லாம் உறங்காமல் அழுதுகொண்டிருக்கிறார் அந்த ஏழைத்தாய். பகலின் விழிப்பும், இரவின் உறக்கமின்மையும், அவள் கொண்டிருந்த அசைக்க முடியாத நம்பிக்கையைத்தான் காட்டுகிறது.

மேடை 2: சாராவின் வீடு

பதினான்கு நாட்கள் 'சாராவும், சாரா சார்ந்த இடமும்' என வாழ்ந்த நம் இளவல் தோபியாவுக்கு இப்போதுதான் மயக்கம் தெளிகிறது. தன் தந்தையும், தாயும், அவர்களின் காத்திருத்தலும் நினைவிற்கு வருகின்றன. மெதுவாக கண்களைக் கசக்கிக்கொண்டே, 'ஆமா! நான் எங்கே இருக்கிறேன்!' என கேட்கிறார் தன் மாமாவிடம். 'மருமகனே! நீ இங்கதான்டா இருக்க! இன்னும் கொஞ்ச நாள் இருடா! உங்க அப்பா-அம்மாகிட்ட தூதர்களை அனுப்பி ஆறுதல் சொல்கிறேன்!' என தன் மகளைப் பிரிய மனமில்லாத இரகுவேல் புதிய பிட்டைப் போடுகின்றார். 'நான் போயே ஆகவேண்டும்!' என அடம் பிடிக்கிறார் தோபியா. இரபேல் கொஞ்சம் பயந்திருப்பார். 'பயபுள்ள நம்மள கபேலிடம் அனுப்பி காசு வாங்கி வரச் சொன்னதுபோல, சாராவுடன் இருக்கிறேன் என சொல்லி, இப்போ தோபித்திடமும் அனுப்பி வைப்பார்களோ!' என எண்ணியிருப்பார். தன் மருமகன் அடம் பிடிப்பதைப் பார்த்த இரகுவேல்-எதினா, மருமகனையும், தன் மகள் சாராவையும் வழியனுப்ப தயாராகின்றனர்.

இரகுவேல் - எதினா ஆசியுரைகள்

'ஆண்-பெண்' இணைதலை மிக அழகாக இங்கே பதிவு செய்கின்றார் ஆசிரியர். அதாவது, இரகுவேல்-ஆண், சாரா-பெண்ணுக்கும், எதினா-பெண், தோபியா-ஆணுக்கும் ஆசி அளிக்கின்றனர்.

'நலமுடன் போய் வா!' என இருவரும் வாழ்த்துகின்றனர். இருவரின் ஆசியுரைகளிலும் குழந்தைப்பேறு முதன்மையாக இருக்கின்றது. இரண்டுபேருமே மனநிறைவு பெற்று வாழுமாறு அனுப்பப்படுகிறார்கள்.

இந்த ஆசியுரைகள் நமக்கு வைக்கும் வாழ்க்கைப் பாடங்கள் எவை?

1. 'கட்டியணைக்க ஒரு நேரம். விட்டுப்பிரிய ஒரு நேரம்.' கட்டியணைக்கும் நாம் அனைவரும் விட்டுப்பிரிய வேண்டும் என்பதே வாழ்க்கை நியதி. இவை இரண்டும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள். ஒன்றை எடுக்கும்போது மற்றொன்றும் கூடவே வந்துவிடுகிறது. ஒரே இடத்தில்; இருப்பது எந்த அளவிற்கு முக்கியமோ, அதே அளவிற்கு முக்கியம் அந்த இடத்தை விட்டு நகர்வது. 'நான் இங்கேயே இருக்கவா!' என்று நம் அன்பிற்குரியவரிடம் கேட்பதைப் போல, அவரிடம் 'நான் போய்ட்டு வரவா!' என்று கேட்கவும் வேண்டும். பதினான்கு நாட்கள் நடந்த விருந்தும், உபசரிப்பும், விருந்தினர்கள் மற்றும் நண்பர்களின் உடனிருப்பும் உற்சாகம் தந்தாலும், இந்த உற்சாகத்திலேயே உட்கார்ந்துவிட முடியுமா? இல்லை. 'கப்பல்கள் கட்டப்படுவது துறைமுகத்தில் நிறுத்தப்படுவதற்கு அல்ல, கடலில் பயணம் செய்யவே' என்பார்கள். துறைமுகத்தின் இதமும், பாதுகாப்பும் இனிமையாக இருந்தாலும், கப்பல் கட்டப்பட்டதன் நோக்கம் அதுவல்லவே. இனி தோபியா-சாரா புதிய பயணத்தை தொடங்க வேண்டும்.

2. 'என் வாழ்நாள் முழுவதும் உன்னைப் பற்றி நல்லதே கேட்பேனாக!'
நீ 'நற்பேறும் நலமும் பெறுவாய்!' என்று திருப்பாடல் 128:2ம் நற்பெயரின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. புதிய வீட்டிற்கு மருமகளாய் செல்பவள் எப்படி இருக்க வேண்டுமாம்? நற்பெயரோடு இருக்க வேண்டுமாம். அதாவது, 'இவள் நல்ல பொண்ணு!' என்ற பெயர் எடுக்க வேண்டும். 'அடுத்தவங்க என்ன நினைப்பாங்க என்பதெல்லாம் எனக்கு முக்கியமல்ல. நான் நானாத்தான் இருப்பேன்!' எனச் சொல்லத் துடிக்கும் இந்தக்காலத்து மருமகள்கள் கொஞ்சம் இந்த வார்த்தைகளை நினைவில் கொள்தல் நலம்.

3. 'உம் வாழ்நாள் முழுவதும் அவள் கண்கலங்காமல் பார்த்துக்கொள்ளும்!'
இது எதினா, தோபியாவிடம் சொல்லும் வார்த்தை. 'என் கண்ணையே உன்னிடம் ஒப்படைக்கிறேன். அதில் இனி நான் ஆனந்தக் கண்ணீரைத்தான் பார்க்க வேண்டும்' என்று சொல்வதைவிட, ஒருபடி போய், 'வெங்காயம், வெள்ளைப்பூண்டு உரிக்கும்போதுகூட கண்ணீர் வரக்கூடாது!' என்கிறார் எதினா. பெண்கள் ஆண்களை விட எளிதாகக் கண்ணீர் விடக் கூடியவர்கள். 'நான் 10 மணிக்கு உன்னைப் பார்க்க வருகிறேன்!' என நண்பியிடம் சொல்லிவிட்டு, 'நான் வருவதற்கு கொஞ்சம் லேட் ஆகலாம்!' என மெசேஜ் அனுப்புங்களேன். அடுத்த பக்கம் உடனே கண்கள் கலங்கிவிடும். ஆக, பெண்களுக்கு கண்ணீர் வருவதற்கு முதல் காரணம் ஏமாற்றம். 'எள்ளளவும் என் மகளை எதிலும் ஏமாற்றிவிடாதே!' என்று தோபியாவிடம் உருகுகிறாள் எதினா.

4. 'மனநிறைவோடு போய்வா!'
இல்லற வாழ்வின் நிறைவு 'பணநிறைவு' அல்ல. 'மனநிறைவே!' திருமணத்தில் 22ஆம் நாள் என்று ஒன்று உண்டு. அதாவது, திராட்சை ரசம் குறையத் தொடங்கும் நாள் அது. 21 நாட்கள் விறுவிறுப்பாக இருக்கும். புதிய வாழ்க்கைத் துணை, புதிய ஸ்பரிசம், புதிய உரையாடல், புதிய சாப்பாடு டேஸ்ட், புதிய வீடு, புதிய பாத்திரம், புதிய ஆடைகள் என த்ரில்லிங்காக இருக்கும் நிலை மறைந்து, எல்லாம் பழையதாகத் தொடங்கும் நாள்தான் 22ஆம் நாள். ஒவ்வொன்றிலும் குறைகள் தெரியத்தொடங்கும் நாள் அது. மனநிறைவு உள்ளவரால்தான் அந்த நாளைக் கடக்க முடியும்.

5. 'உங்களை மதிப்பதே எனக்கு மகிழ்ச்சி'
தோபியா தான் பெற்ற ஆசீருக்கு காணிக்கையாக, தன் மரியாதையை அவர்களுக்கு பரிசளிக்கின்றார். மேலிருப்பவர் கீழிருப்பவரை வாழ்த்துவதும், கீழிருப்பவர் அதற்கு காணிக்கையாக மேலிருப்பவருக்கு தன் மரியாதையையும், மதிப்பையும் அளிப்பதும் எபிரேய மற்றும் தமிழ் வழக்கம்.

மேற்காணும் ஆசியுரைகள் இல்லற வாழ்க்கை நிலைக்கு மட்டும்தான் பொருந்துமா? இல்லை.

2009ஆம் ஆண்டு ஏப்பிரல் 18ஆம் தேதி, சனிக்கிழமை. அடுத்த நாள் மாலை நான் அருட்பணியாளராக திருப்பொழிவு செய்யப்படவிருக்கிறேன். வீட்டில் உள்ளவர்கள் மற்றும் உறவினர்கள் அந்த நிகழ்வில் பங்கேற்க எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு, 'எல்லாம் நல்ல படியா நடக்கட்டும் என வேண்டிக்கொள்ளுங்கள். என்னை ஆசீர்வதியுங்கள்' என என் அம்மா முன் நின்றேன். தங்கையும் வீட்டில் இருந்தாள். 'அப்பாவின் கல்லறை வரை போவோம்! வா!' என்று என்னை அழைத்துக்கொண்டு ஏறக்குறைய 700 மீட்டர் நடத்திச் சென்றார் அம்மா. வழக்கமாக அப்பாவின் கல்லறைக்குச் செல்லும்போதெல்லாம், என்னோடு சேர்ந்து அப்பாவின் காலருகில் நிற்கும் அம்மா, அன்று என்னை கால்மாட்டில் நிற்க வைத்துவிட்டு, அவர் தலைமாட்டில் நின்றுகொண்டார். மதிய வெயில் நன்றாக அடித்துக்கொண்டிருந்தது. 'காலணிகளைக் கழற்றி நில்!' என்று சொன்னவர், தன் உதடுகளை அசைத்து தனக்குள்ளேயே பேசிக்கொண்டார். இடையிடையே கண்களில் கண்ணீரும் நிறைந்து வழிந்தன. இறுதியாக, கல்லறையில் மண்ணை எடுத்து, என் நெற்றியில் இட்டு, 'போய் வா!' என்றார்.

தன் மகனை கடவுளின் மருமகனாக, மதுரை உயர்மறைமாவட்டத்தின் மருமகனாக, மகனாக அனுப்பி வைத்த அவரின் உதடுகளிலும், அமைதியாக ஆழ்துயில்கொண்டிருந்த என் அப்பாவின் உதடுகளிலும், இரகுவேல்-எதினாவின் வார்த்தைகள்தாம் இருந்திருக்கும்:

அ. 'என் வாழ்நாள் முழுவதும் உன்னைப் பற்றி நல்லதே கேட்பேனாக!'

ஆ. 'உன்னிடம் ஒப்படைக்கப்படும் மக்களின் கண்களில் கண்ணீர் வராமல் பார்த்துக்கொள்! நீயும் யார் கண்ணீருக்கும் காரணமாகிவிடாதே!'

இ. 'மனநிறைவோடு போய் வா!'

நற்பேறு, நன்னடத்தை, மனநிறைவு - இம்மூன்றும் இல்லறம், துறவறம் என்ற இரண்டு வாழ்க்கை நிலைகளுக்கும் பொருந்துமே!



1 comment:

  1. மனத்தைப் பிழியும் ஒரு பதிவு.ஏதோ கிளுகிளுப்பாக தோபியா,சாராவின் புதுமண வாழ்க்கையைச் சித்தரித்திடினும், என்னை மிகவும் பாதித்தது தந்தையின் மலரும் நினைவுகளான அந்ந இறுதி வரிகள்.பிரிவைப்பற்றிச் சொல்லும் அந்த வரிகள்.." கப்பல்கள் கட்டப்படுவது துறைமுகத்தில் நிறுத்தப்படுவதற்கு அல்ல; கடலில் பயணம் செய்யவே" எத்தனை பெரிய விஷயத்தை எத்தனை சாதாரணமாக எடுத்து வைக்கிறார். புகுந்த வீடு நோக்கிச் செல்லும் மகளுக்கு " என் வாழ்நாள் முழுதும் உன்னைப்பற்றி நல்லதே கேட்பேனாக; நீ நற்பேறும் நலமும் பெறுவாய்" எனும் திருப்பாடல் 128 ஐ நினைவு கூறும் வரிகளும், மகனாகி விட்ட மருமகனுக்குச் சொல்லப்படும் " உன் வாழ்நாள் பூராவும் அவளைக் கண் கலங்காமல் பார்த்துக்கொள்ளும்" எனும் வார்த்தைகளும், தோபியா தான் பெற்ற ஆசீருக்குக் காணிக்கையாக அவர்களுக்கு மரியாதை செலுத்துவதும் பிள்ளைகளுக்குத் திருமணம் முடித்து வைக்கும் பெற்றோரும்,திருமணம் முடித்த தம்பதிகளும் எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு பாடம் நடத்துவதாகத் தெரிகிறது.ஆனால் எல்லாவற்றையும் தாண்டி இந்த மணமக்கள் சாராவின் பெற்றோரை விட்டுப் பிரிதலைத் தந்தை தன் குருத்துவ அருட்பொழிவோடு ஒப்பிட்டிருப்பது ....அதை விளக்கும் அவரது வார்த்தைகள் கல்லையும் கரைக்கவல்லது." தன் மகனை கடவுளின் மருமகனாக,மதுரை மறைமாவட்டத்தின் மருமகனாக,மகனாக அனுப்பி வைத்த அவரின் உதடுகளிலும் அமைதியாக ஆழ்துயில் கொண்டிருந்த என் அப்பாவின் உதடுகளிலும், இரகுவேல்- எதினாவின் வார்த்தைகள் தாம் இருந்திருக்கும்.என் வாழ்நாள் முழுதும் உன்னைப்பற்றி நல்லதே கேட்பேனாக..உன்னிடம் ஒப்படைக்கப்படும் மக்களின் கண்களில் கண்ணீர் வராமல் பார்த்துக்கொள்! நீயும் யார் கண்ணீருக்கும் காரணமாகி விடாதே!... மன நிறைவோடு போய்வா.".... இந்த வார்த்தைகளைத் தங்களை விட்டுப்பிரியும் பிள்ளைகளுக்குச் சொல்லக்கூடிய எந்தப் பெற்றோரும் பேறுபெற்றோர்களே! ஆம் தந்தையே! நாங்கள் மட்டுமல்ல...உங்களைப் பெற்றவர்களும்,உடன் பிறந்தவளும்,ஏன் பாதிவழியில் உங்களைத் தொற்றிக் கொண்ட என்னைப் போன்றோரும் கூடப் பேறு பெற்றவர்களே! நல்ல தொரு மனத்தைத் தொட்ட பதிவுக்காக வாழ்த்துக்கள்! நன்றிகள்!!!

    ReplyDelete