Friday, February 19, 2016

கரம்பிடித்த கண்ணாளன்

தன் தந்தையிடம் கடன்பட்டிருந்த கபேலிடமிருந்து பணத்தை மீட்க ரபேலுடன் புறப்பட்டு வந்த தோபியா இப்போது பாதி வழியில் நிற்கின்றார். தான் செய்ய வேண்டிய வேலை மறந்து இப்போது மனமெல்லாம் சாரா நிறைந்திருக்கிறாள். தன் மனம் நிறைத்த சாராவை அவர் கைப்பிடிக்கும் நிகழ்வைப் பதிவு செய்கிறது தோபித்து நூல் 7ஆம் பிரிவு.

அ. புரியாத புதிர்கள்

1. 'நம் உறவினர் வீட்டுக்கு என்னை அழைத்துச் செல்லும்.' தோபியா இரபேலை முன்பின் அறியாதவர். இருந்தாலும், இரபேல் சாராவைப் பற்றிச் சொன்னவுடன், சாராவின் வாழ்க்கை வரலாற்றைச் சொன்னவுடன் அவருக்கு எல்லாம் தெரியும் என முடிவெடுக்கின்றார் தோபியா. எக்பத்தானா வந்தும், வராமல், 'என்னை இரகுவேலின் வீட்டிற்கு அழைத்துச் செல்லும்!' என்கிறார் தோபியா.

2. முற்றத்தில் இரகுவேல். தோபியாவையும், இரபேலையும் முற்றத்தில் எதிர்கொள்கின்றார் இரகுவேல். இவர்கள் இருவரும் வருவர் என்று அவருக்கு ஏற்கனவே தெரிந்ததா? அல்லது தன் மகளுக்கேற்ற மணவாளன் யாராவது வருவார்களா? என்று எந்நேரமும் காத்திருந்தாரா?

3. மகிழ்ச்சிக் கண்ணீர். தோபியாதான் தன் உறவினர் தோபித்தின் மகன் எனத் தெரிந்தவுடன் கண்ணில் வெள்ளம் வந்துவிடுகிறது இரகுவேலுக்கு. அவர் அழ, அவரோடு சேர்ந்து அவரது மனைவி எதினா (எபிரேயத்தில் 'மகிழ்ச்சி' என்று பொருள்) அழ, அவரோடு சேர்ந்து சாரா என வீடே ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறது.

4. 'குளித்தபின் கை அலம்பி விட்டு.' இரபேலும், தோபியாவும் இரகுவேலின் வீட்டில் உணவருந்த அமர்கிறார்கள். இருவரும் முதலில் குளிக்கிறார்கள். குளித்தவுடன் தான் அவர்கள் தூய்மையாகிவிடுகிறார்களே! பின் எதற்கு மறுபடியும் கை அலம்புகிறார்கள்?

5. 'உண்டு பருகுங்கள்!' தோபியா தன் மகளை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார் என்று தன் காதில் இரகசியம் விழ, 'உண்டு பருகுங்கள்!' என்று இருமுறை சொல்லி இகுவேல் அவர்களை திசை திருப்புவது ஏன்?

ஆ. ஆச்சர்யங்களும் பாடங்களும்

1. தோபித்தின் புகழ். தோபித்தின் தர்மமும், நேர்மையும், அவருக்கு பார்வை பறிபோனதும் எக்பத்தானா வரை தெரிந்திருக்கிறது. இது எதைக் காட்டுகிறது என்றால், பண்டைக்கால சமூகத்தில் ஒருவர் மற்றவர் நலனில் காட்டிய அக்கறையை. தூரத்தில் இருந்தாலும், தகவல் தொழில்நுட்பம் இல்லாவிட்டாலும், ஒருவர் மற்றவரை அறிந்திருக்கின்றனர். யாஹூ இணையதளத்தில், 'இன்லேன்ட் லெட்டர் என்றால் என்ன?' என்று ஒருவர் கேள்வி எழுப்ப, நிறைய பேர் கீழே பதிலை எழுதியிருக்கின்றனர். வாட்ஸ்ஆப்பில் மெசேஜ் அனுப்பி அதில் இரண்டு டிக் விழுந்தவுடன் துள்ளிக்குதிக்கும் தலைமுறைக்கு இன்லேன்ட் லெட்டரின் ஆச்சர்யம் தெரியாது. பெட்டிக்கடையில் வாங்கி, 'நீ இங்கு நலம். நான் அங்கு நலமா?' எனக் கேட்டு, ஒட்டும் இடம் தவிர எல்லா இடத்திலும் குட்டிக்குட்டியாய் எழுதி, எச்சில் அல்லது சோற்றுப்பருக்கையால் ஒட்டி, வெளியே 'கெஸ்' என எழுதி, 'கடவுளே! இது பத்திரமாய் போக வேண்டும்!' என சிவப்பு கலர் போஸ்ட் பாக்ஸ்முன் குட்டி செபம் செய்து, உள்ள போட்டு, அது பத்திரமாய் உள்ளே விழுந்த சத்தத்தை கவனமாயக் கேட்டு, லெட்டர் டெலிவரி ஆக மூன்று நாட்கள், பதில் கிடைக்க மூன்று நாட்கள் என ஒருவாரம் காத்திருந்து, 'நான் இங்கு நலம்' என்ற பதிலைக் காணும்போது நம் உதடுகளில் தவழும் புன்னகையை இன்று நாம் கைபேசியில் இழந்துவிட்டோம். நாம் அழைத்து அடுத்தவர் ஃபோனை எடுக்கவில்லையென்றால் பொறுமை இழக்கின்றோம்;.

2. 'எங்களுக்கு, உங்களை!' தோபியாவின் தாராள உள்ளம் இங்கே தெரிகிறது. நல்ல பொண்ணு ஒருத்தியை பார்க்கப்போகிறார் தோபியா. கூடவே இரபேலும் வருகிறார். இரபேல் வானதூதர் என்பதால் தோபியாவைவிட கொஞ்சம் அழகாகவே இருந்திருப்பார். நல்ல உடற்கட்டு, கவர்ச்சியான தோற்றம், புன்னகை முகம் என எல்லாவற்றிலும் தோபியாவிடை சிறந்தே இருந்திருக்க வேண்டும். ஆனால், தோபியா அவரைப் பார்த்து பொறாமைப்படவோ, தன்னை அவரோடு ஒப்பீடு செய்யவோ இல்லை. 'நீங்கள் யார்?' என்று இரகுவேல் கேட்டதும், 'நாங்கள்' இரபேலையும் இணைத்தே பதில் தருகின்றார். 'நான் தோபித்தின் மகன், இவர் நான் வழியில் கண்டவர்' என இரபேலை பிரித்துப் பார்க்கவில்லை. மூச்சுக்கு மூச்சு 'நாங்கள்,' என்றும் 'எங்களுக்கு' என்றும் சொல்கிறார். ஒருவேளை, தன்னைவிட இரபேல் அழகாயிருக்கக் கண்டு, அவரை சாரா மனம் முடித்துவிட்டால் என்ன செய்வது என்ற பயமும் அவரிடம் இல்லை. நட்பில் இருக்கும் அனைவருக்கும் தோபியாவின் பரந்த உள்ளம் நல்ல பாடம். சில நேரங்களில் காதல் அல்லது திருமணம் இரு நண்பர்களின் நட்டை உடைத்துவிடுகிறது. அல்லது நண்பர்கள் காதலால் பிரிந்து எதிரிகளாகவிடுகின்றனர்.

3. இரபேல் ஒரு வண்ணத்துப்பூச்சி அல்ல. இரபேலுடைய நல்ல உள்ளத்தையும் இங்கே பார்க்க வேண்டும். பார்க்கின்ற பூக்களின்மேல் எல்லாம் அமரத் துடிக்கும் வண்ணத்துப்பூச்சி அல்ல இரபேல். 'என் வாழ்க்கை எனக்கு, தோபியா வாழ்க்கை தோபியாவுக்கு' என மனநிறைவோடு இருக்கிறார். 'எனக்கு இதுவும் வேணும், அதுவும் வேணும்' என்று நினைப்பதும், 'ஐயோ! அது எனக்கு கிடைக்கலயே!' என ஏங்குவதும் தேவையற்றது என மௌனமாகக் கற்பிக்கின்றார் இரபேல். மணமகனின் தோழனாக இருப்பதில் நிறைவுகாண்கிறார் இரபேல். ஏனெனில் அவருக்குத் தெரியும் தன் வேலை மணம் முடிப்பது அல்ல, விண்ணக இறைவனின் வேலையைச் செய்து முடிப்பது என்று.

4. திருமணம் என்றால் என்ன? திருமணம் பற்றிய பண்டைக்கால புரிதலை நாம் இரகுவேலின் வார்த்தைகளில் பார்க்கின்றோம்: திருமணம் விண்ணகத்தில் உறுதி செய்யப்படுகிறது. திருமணத்தில் ஒருவர் மற்றவரின் உரிமையாக மாறுகின்றனர். திருமணத்தில் இணையும் மணமக்களை ஆண்டவர்தாம் காக்கின்றார்.

5. திருமணம் நடைபெறும் விதம். திருமணம் இரண்டு படிகளில் நடந்தேறுகிறது. ஒன்று, 'இவள் உனக்கு மனைவியாகிறாள். இவளை ஏற்றுக்கொண்டு உன் தந்தைவீட்டிற்கு அழைத்துச் செல்' என்று அப்பா, தன் மகளின் கையைப் பிடித்து, மணமகனிடம் கொடுக்கின்றார். இரண்டு, ஓர் ஏட்டில் திருமண ஒப்பந்தத்தை அதில் எழுதிக் கொடுக்கின்றார். முதலில் வாய்மொழியாக, அடுத்து எழுத்துவடிவில் அரங்கேறுகிறது திருமணம். ரொம்ப எளிதான, ஆனால் மிகவும் அர்த்தமுள்ள திருமணம்.

6. தாயின் பங்களிப்பு. மணமகளின் தாய்க்கும் திருமண நிகழ்வில் முக்கிய பங்கு இருக்கிறது. 'இவன் தோபித்து மாதிரி இல்லையா? என்று இரகுவேல் கேட்க, எதினாதான், இளைஞர்களிடம், 'நீங்கள் யார்?' எனக் கேட்கிறார். மேலும், திருமண ஒப்பந்த ஏட்டை அவள்தான் தயார் செய்கிறாள். அவளுக்கும் எழுதப் படிக்க தெரிந்திருக்கிறது. திருமணத்தை நிறைவு செய்யும் மூன்றாம் காரணியான, உடலுறவு நிறைவேற அறையைத் தயார் செய்கின்றாள். கலங்கி நிற்கும் தன் மகளுக்கு, 'அஞ்சாதே, மகளே, விண்ணக ஆண்டவர் உன் துயரத்தை மகிழ்ச்சியாக மாற்றுவார், துணிவுகொள், மகளே' என நம்பிக்கை வார்த்தைகள் சொல்கிறாள்.

7. தமிழர் திருமண முறை. அப்பா-அம்மா-மகன், அப்பா-அம்மா-மகள் என திட்டமிட்ட குடும்பங்களாக இருக்கின்றது இந்த இருவரின் குடும்பங்களும். திருமணத்திற்கு முன் பெண்பார்க்கும் படலம் இருக்கிறது. திருமணத்தில் ஆலயம் மற்றும் அரசாங்கத்தின் பங்கு எதுவும் இல்லை. முதலிரவு மணப்பெண்ணின் வீட்டில் நடந்தேறுகிறது. இந்தக் கூறுகள் தமிழரின் பண்டைக்கால திருமண முறையை நமக்கு நினைவுபடுத்துகிறது. ஆனால், இன்று நம் திருமண நிகழ்வுகள் மேலைத்தேயமயமாகிவிட்டன என்பது வேதனைக்குரிய ஒன்று.


2 comments:

  1. தந்தைக்கு வணக்கம்.தோபியா பற்றிய பதிவுகள் ஒவ்வொரு நாளும் ஒரு படம் பார்ப்பதைப் போன்ற உணர்வு.தந்தைக்கு வாழ்த்துக்களும் நன்றியும்!

    ReplyDelete
  2. ஆழ்மனத்து உணர்ச்சிகளையெல்லாம் எழுத்துவடிவில் கொட்டித்தந்தை நம்மை ஒரு திருமணவைபவத்திற்கே அழைத்துச் சென்றுள்ளது போல ஒரு ஃபீல் கிடைக்கிறதுஇன்றையப்பதிவில்.வெட்டிஆடம்பரச்சடங்குகளுக்கும்,,வெளிப்பகட்டுகளுக்குமே முக்கியத்துவம் கொடுத்து நடத்தப்படும் திருமணங்களையே பார்த்துப் பழக்கப்பட்ட நமக்கு உறவுகளும்,உணர்ச்சிகளும் சங்கமிக்கும் ஒரு இயல்பான மனங்களின் கலப்பை இங்கே பார்க்க முடிவது மட்டுமல்ல; ஐயோ..இத்திருமணமாவது சாராவுக்கு நல்ல படியாய் முடியணுமே...இந்தப் பிள்ளைகள் மகிழ்ச்சிமிக்க ஒரு மணவாழ்க்கைக்குள் நுழைய வேண்டுமே எனும் ஆதங்கமும்,அக்கறையும் கூடவே நம்முள் எழுவதையும் உணரமுடிகிறது,வளமான வாழ்க்கைக்கு வழிசொல்லும் பல நலமான உத்திகளைத் தந்தை இங்கே அழகாக படம் பிடித்து காட்டுகிறார்.தன் நண்பன் தோபித்தின் மகன் தோபியாதான் தன் மகளை மணக்கப்போகும் இளவல் என்றறிந்ததும் அந்தக் குடும்பம் வடிக்கும் ஆனந்தக்கண்ணீர்,தன்னைவிட அழகாயுள்ள ரபேலின் மீது பயமோ, பொறாமையோ இன்றி அவரையும் தன்னவராகப் பெண் வீட்டாருக்குத் தோபியா அறிமுகம் செய்யும் பாங்கு,மணமகனோடு இருப்பினும் விண்ணகத்தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவது மட்டும்தான் தன் வேலை என உணர்ந்திருக்கும் ரபேல், திருமணம் முடிந்த உடன் மகளின் கண்ணீரையும் பயத்தையும் தன் ஆசீரான வார்த்தைகளால் மகிழ்ச்சியாக மாற்றும தாய் எதினா....இப்படி களத்தில் உள்ள அனைவருமே அவரவரின் பொறுப்புணர்ந்து, பூரண கையளிப்போடு முடிந்த ஒரு திருமணம்.அதில் முதன்மை விருந்தாளியாக இறைவனின் பங்கு இருந்திருக்கும் என்பதைச் சொல்ல வேண்டுமா என்ன? அழகான,ஆரவாரமற்ற ஒரு திருமணத்தைக் கண்டுகளித்த உணர்வைத் தந்த தந்தைக்குப் பாராட்டுக்கள!!! அதுமட்டுமல்ல...தந்தையே நான் தங்களை இதுவரை Modern technology யின் ஒரு பிரதிபலிப்பாகத்தான் நினைத்திருந்தேன்.ஆனால் தாங்கள் இந்த " இன்லன்ட் லெட்டரின்" பிரதாபங்களை விளக்கியுள்ள விதம் ஐய்ய்யோ! சான்ஸே இல்ல போங்க! எப்படி அதில் அடங்கியுள்ள அத்தனை விஷயங்களையும் ஒன்றுவிடாமல் அழகு நயத்துடன் சொல்ல முடிந்தது உங்களால்?அந்த லெட்டர் போய் சேர்ந்து அதற்கு ஒரு பதில் லெட்டர் வருமே அதைக்கையில் வாங்கும்போது பல கோடிகளைக் கையில் வாங்கும் புளங்காகிதம்....பாவம் இந்தத்தலைமுறை இந்த சந்தோஷங்களை யெல்லாம் தொலைத்து விட்டு நிற்கிறார்கள்.இன்று கொஞ்சம் டல்லாயிருந்த என்னை 'இந்த' இன்லன்ட் லெட்டர்' மேட்டர் பற்றி எழுதி என் இளமையின் மகிழ்ச்சியை எனக்களித்த தந்தைக்கு எதைக்கேட்டாலும் கொடுக்கலாம்.சொல்லுங்கள் தந்தையே! என்ன வேணும்??!

    ReplyDelete