Thursday, February 18, 2016

மீனும், சாராவும்

'மீனிடம் காலைக் கொடுத்தார்.
சாராவிடம் உள்ளத்தைக் கொடுத்தார்' -
இப்படித்தான் சுருக்க வேண்டும் தோபியா நூல் பிரிவு 6ஐ.

தோபியாவும், ரபேலும் எக்பத்தானா நோக்கி பயணம் செய்கின்றனர். 'அவர்களது நாயும் உடன் வந்தது' என்று சொல்வதன் வழியாக கதையாசிரியர் தன் கதையை மிகவும் ரசனையோடு படைக்கின்றார். தோபித்து ஒருவேளை வழிப்போக்கனை முழுமையாக நம்பாததால் தன் நாயையும் உடன் அனுப்பி வைத்திருப்பாரோ?

அ. மீனிடம் கால்

வழி நெடுக தூசியில் நடந்த தோபியா சற்று இளைப்பாற திக்ரீஸ் ஆற்றுக்குச் செல்கின்றார். பாதங்களை தண்ணீரில் வைத்து அலம்பிக் கொண்டவரின் காலை மீன் ஒன்று பற்றிக்கொள்கின்றது. கரைக்கருகில் அவ்வளவு பெரிய மீன் எப்படி வரும்? என்ற கேள்வியைக் கேட்டு நம்மையே புத்திசாலிகளாக்காமல், கதையின் ஓட்டத்தோடு செல்வோம். 'காப்பாற்றும்!' என்று கத்த, 'நீர் பிடியும்' என பதில் தருகின்றார் ரபேல். தோபித்து அதைப் பிடித்ததோடு மட்டுமல்லாமல், ரபேலின் சொல்லின்படி மீனின் பித்தப்பை, இதயம், ஈரல் போன்றவற்றை எடுத்துக்கொள்கின்றார். இவற்றின் பலன் என்ன என்பதை தொடர்ந்து ரபேல் சொல்கின்றார்: 'இதயமும், ஈரலும் நெருப்பிலிடப்பட்டால் பேய் போய்விடும்' 'பித்தப்பையினால் கண்ணின் வெண்புள்ளிகள் சரியாகும்.' இந்த வசனத்தில் வாசகர்களுக்கு கதையின் நிறைவு தெரிந்துவிடுகிறது. அதாவது, சாராவைப் பிடித்திருக்கும் பேய் ஓடிவிடும். தோபித்தின் கண்களில் வெண்புள்ளிகள் நீங்கி அவர் பார்வை பெறுவார்.

ஆ. சாராவிடம் உள்ளம்

போகின்ற வழியில் எங்கே தங்க வேண்டும் என்று ரபேல் அறிவுரை சொல்கின்றார். தங்கப்போகும் வீடு இரகுவேலின் வீடு. 'இரகுவேல்' என்றால் 'கடவுளின் நண்பன்' என்பது பொருள். நம் தமிழ்மரபில், 'ரகு' என்பது பொதுவான பெயர். 'ரகு' என்றால் 'நண்பன்' அல்லது 'அருகில் இருப்பவன்' என்பது பொருள். சாராவுக்கு திருமணம் ஏழு முறை நடந்து, ஏழுமுறையும் கணவர்கள் இறந்துவிட்டதை தோபித்து அறிந்திருக்கி;ன்றார். அதை அவருக்கு ரபேலும் நினைவூட்டுகின்றார். சாரா தன் இனத்தைச் சார்ந்தவள் என்பதை உறுதியாக உணரும் தோபியா காணாமலே காதலில் விழுகின்றார்.

இ. வாக்கும், வாழ்வும்

1. 'இளைஞர்.' தோபியா பிரிவு 6ல் இப்படித்தான் அழைக்கப்படுகின்றார். அதாவது, அவர் திருமணம் முடிக்க தயாரானவர் என்பதை மறைமுகமாகக் காட்டுகிறது இந்த வார்த்தை.

2. 'பிடியும். உறுதியாகப் பிடியும்.' 'என்னைக் காப்பாற்றும்' என தோபியா முறையிட, 'நீரே பார்த்துக்கொள்ளும்' என தூரமாய் நிற்கிறார் தூதர். தூதர்கள் நம் அருகில் இருந்தாலும், நம் வேலையை நாம்தான் செய்ய வேண்டும். அவர்கள் நமக்கு அறிவுரை தருகிறார்கள். நம் வல்லமையை நாமே தெரிந்து கொள்ள உதவுகிறார்கள். மேலும், தோபியாவின் இந்த அனுபவம் அவரை முதலிரவுக்கு தயாரிக்கும் அனுபவமாகவும் இருக்கிறது. தனிமையான அந்த இரவில் 'ஏழு முறை பேயால்' வதைக்கப்பட்ட சாராவோடு இருப்பதற்கு துணிச்சல் வேண்டுமல்லவா?

3. 'அறிவுள்ளவள். துணிவுள்ளவள். அழகானவள். நல்லவரின் மகள்.' இந்த நான்கு வார்த்தைகளால் சாராவை வர்ணிக்கிறார் ரபேல். 'அறிவு' முதன்மைப்படுத்தப்படுவது வியப்பைத் தருகிறது. இது சாரா பெற்றிருந்த கல்வியறிவையோ, பெற்றிருந்த பட்டங்களையோ குறிக்கவில்லை. மாறாக, 'நன்மை-தீமை பகுத்தறியும்' ஞானத்தைக் குறிப்பிடுகிறது. 'அறிவு, துணிவு, அழகு' - இந்த மூன்றும் ஒரு பெண்ணிடம் இருக்க வேண்டும்.

4. பயணமே வாழ்வாக. பல நேரங்களில் நாம் பயணத்தின் முடிவில்தான் மகிழ்ச்சி என நினைக்கிறோம். இன்று பணம் சம்பாதித்து நாளை வாழலாம் என சேர்த்து வைக்கின்றோம். ஆனால், வாழ்க்கை என்பது பயணத்தின் இறுதியில் நாம் அடையும் இடத்தில் அல்ல. மாறாக, அது பயணத்தில்தான் இருக்கிறது. பயணத்தின் முடிவில் தோபியா தன் தந்தையின் பணத்தை திரும்ப பெறுகிறார் என்றாலும், பயணத்தின் ஊடே அவர் ஒரு அழகான பெண்ணையும் மனைவியாக்கிக்கொள்கிறார். போகிற வழியில் வருபவற்றை எதிர்கொண்டு அணைத்துக்கொண்டு வாழ்வதே சால்பு.

5. வியப்புக்களின் இறைவன். 'சாரா' பற்றிய செய்தி தோபியாவை 'கண்ணா ரெண்டாவது லட்டு திண்ண ஆசையா!' என துள்ள வைத்திருக்கும். இதுதான் இறைவனின் அருட்கரத்தின் வலிமை. அவர் அள்ளிக்கொடுக்கின்ற இறைவன். இழந்தவற்றைத் தேடித்தருகின்ற இறைவன்.

6. நம்பிக்கை. தோபியா முன்பின் தெரியாத வழிப்போக்கனை முழுமையாக நம்புகின்றார். அவர் சொன்ன வார்த்தைகளை அப்படியே நம்பி மீனைப் பிடிக்கிறார்,சாராவின் மேல் காதல் கொள்கின்றார். நம் வாழ்வில் உடன் வருபவர்களை நம்புவதா, வேண்டாமா என்று நாம் காலம் கடத்திக்கொண்டே இருக்க தேவையில்லை.

7. 'உலகம் உண்டாகுமுன்பே அவள் உமக்கென்று குறிக்கப்பட்டவள்.' நாம் ஒவ்வொருவருமே பாதி மனிதர்கள்தாம். நம் அடுத்த பாதியை தேடி நாம் இந்த உலகில் அலைந்துகொண்டிருக்கின்றோம். அடுத்த பாதியை எல்லாரும் கண்டுகொள்கின்றனரா? என்பது கேள்வி. ஆனால், அப்படி கண்டுகொள்ள முடியவில்லையென்றாலும், நாம் கண்டுகொண்டவர்களை, 'இவர்தான் என் பாதி' என நினைத்து வாழ்ந்தால் வாழ்வில் மகிழ்ச்சியே.

8. மீனும் சாராவும்
நீரோட்டத்தில் எதிர்நீச்சல் போடுவது மீன். வாழ்வில் எதிர்நீச்சல் போட்டுக்கொண்டிருப்பவள் சாரா. கண்களை மூடாதது மீன். தன் மணவாளனுக்காக கண்களை மூடாமல் காத்திருக்கிறாள் சாரா.

'எங்கே எனது கவிதை?
கனவில் எழுதி முடித்த கவிதை?' என ஹம் செய்து கொண்டே, தனக்குள் புன்னகைத்துக்கொண்டே, ஒரு கையில் மீனும், மறு கையில் ரபேலின் விரலும் என வழி நடக்கும் தோபியா, தன் காதலைக் கண்டாரா?

அடுத்த பிரிவில் பார்க்கலாம்.


2 comments:

  1. "மீனிடம்காலைக்கொடுத்தார்;.சாராவிடம்உள்ளத்தைக்கொடுத்தார்."அழகானதொரு, கவித்துவம் மிகுந்த பதிவு.இரகுவேலின் வீடு நோக்கி ரபேலினால் அழைத்துச்செல்லப்படும் தோபியா முற்றிலுமாக தன் உடன் வருபவரை நம்புகிறார்.ஆகவேதான் ரபேல் அவரை மீனைப்பிடித்து அதன் உடம்பிலுள்ள இதயம்,பித்தப்பை,கல்லீரல் இவைகளை எடுத்து வைத்துக்கொள்ளச் சொல்லும் போதும் அவரை முழுமையாக நம்பி செயல்படுவதால் அறிவும்,அழகும் உள்ள சாராவைத் துணைவியாக அடைவது மட்டுமின்றி தன் தந்தையின், இழந்த பார்வை திரும்பவும் அவர் ஒரு காரணியாக செயல்படுகிறார்."போகிற வழியில் வருபவற்றை எதிர்கொண்டு இணைத்துக்கொண்டு வாழ்வதே சால்பு" என்று சொல்லும் தந்தையின் வார்த்தைகளை நியாயப்படுத்துகிறார். உலகில் தோன்றும் போதே ' பாதி' மனிதராக உருவெடுக்கும் நாம், நாம் வழியில் கண்டுகொண்டவர்களை ' இவர் தான் என் பாதி' என நினைத்து வாழ்ந்தால் வாழ்வில் மகிழ்ச்சியே.அழகான,அனைவரும் உணர வேண்டியதொரு உண்மை."' கவிதை என்பது முடிந்த ஒன்றல்ல; தொடர்ந்து எழுதப்பட வேண்டிய ஒன்று; அதை எழுதும் வரையில் தான் வாழ்க்கையில் சுவாரஸ்யம்"... தந்தைக்குச் சொல்லிக்கொள்ள விழைகிறேன்.நல்லதொரு கவிதை படைத்த தந்தைக்குப் பாராட்டுக்கள்!!!

    ReplyDelete
  2. தந்தைக்கு, வாழ்த்துக்கள்.

    ReplyDelete