Monday, February 22, 2016

கடன்பட்டார் நெஞ்சம்

'இரண்டு கார் வாங்கக் கூடிய அளவிற்கு பணம் இருக்கும்போது ஒரு கார் வாங்கு!' என்பதும், 'ஒட்டாக முடிவெட்டுவதும், நீளமாக சட்டை தைப்பதும் என் அப்பா காலத்து பொருளாதார தத்துவங்கள்.

'மாதாமாதம் பத்தாயிரம் ரூபாய் சேர்த்து வைத்து மூன்று ஆண்டுகள் இறுதியில் கார் வாங்கு!' என்று சொல்லும் அப்பாவிடம், 'இன்று காரை வாங்கிவிட்டு, மாதாமாதம் பத்தாயிரம் ரூபாய் தவணையாக மூன்றாண்டுகளுக்கு கட்டிவிடலாம்' என்று மகன் சொல்வது இந்தக் கால பொருளாதார தத்துவம்.

இன்று கடன் அட்டைகள் அதிக புழக்கத்தில் உள்ளன. 'இன்று பொருளை வாங்கு! இன்று சந்தோஷமாக இரு! நாளை பணம் கட்டு!' என்று வங்கிகளும், நிறுவனங்களும் நம்மை தூண்டில்போட்டு இழுக்கின்றன.

கடன்படுதல் என்பது மிகப்பெரிய வேதனையைத்தான் தருகின்றது. கடன்பட்டார் நெஞ்சம் எப்போதும் 'வாழ்வா-சாவா' என்ற போராட்டத்திலேயே இருக்கும் என்பதை கம்பரும் எடுத்துச் சொல்கின்றார். இலங்கை வேந்தன் இராவணனுக்கு எதிராக இராமனின் ஆயுதங்களும், படையும் எழுந்தபோது இலங்கை வேந்தன் பட்ட மனத்துயரை பின்வருமாறு வர்ணிக்கிறார் கம்பர்:

'விடம்கொண்ட மீனைப்போலும் வேந்தழல் மெழுகுபோலும்
படம்கொண்ட பாந்தள்வாயிற்பற்றிய தேரை போலும்
திடம்கொண்ட இராமபாணம் செருக்களத் துற்றபோது
கடன்கொண்டார் நெஞ்சம்போலக் கலங்கினான் இலங்கைவேந்தன்'

(விஷம்உண்ட மீன் எப்படி துடிக்குமோ, நெருப்பில் விழுந்த மெழுகு எப்படி உருகுமோ, பாம்பின் வாயில் சிக்கிய தேரை என்ன பாடுபடுமோ, கடன்பட்டவர் எப்படி பதைபதைப்பார்களோ, அப்படி பதறினான் இலங்கை வேந்தன்)

தோபித்து நூலில் வரும் கபேல் எதற்காக தோபித்திடம் இவ்வளவு பெரிய தொகை கடன்பட்டார் எனத் தெரியவில்லை.அவர் நெஞ்சமும் பதைபதைத்துக்கொண்டுதான் இருந்திருக்க வேண்டும். தான் பட்ட கடனை அடைக்கக் கூடிய நிலையில் இருக்கின்றார் கபேல். பணம் முத்திரையிடப்பட்டு தயாராக இருக்கிறது. அதைக் கொண்டு போய்ச் சேர்ப்பதே இப்போது எஞ்சியிருக்கும் வேலை.

கபேலிடமிருந்து தோபியா (ரபேலை அனுப்பி) கடனைத் திரும்ப பெறும் நிகழ்வை தோபித்து நூல் 9ஆம் பிரிவில் நாம் வாசிக்கின்றோம்.

இரகுவேல் தன் மருமகன் தோபியா தன்னைவிட்டு 14 நாட்கள் எங்கும் போகக்கூடாது என கட்டளையிட்டுவிட்டார். செல்லக்கிளி சாராவைக் காணாமலேயே காதலில் விழுந்தவர், அவரைக் கண்டவுடன் சிறிதளவேனும் அவரை விட்டுப் பிரிய மறுக்கிறார்.

இந்த இடத்தில் கல்கி, 'பார்த்திபன் கனவில்' பதிவு செய்யும் ஒரு வரி நினைவிற்கு வருகிறது: 'இரும்பு வலிமையானதுதான். அதை யாராலும் வளைக்க முடியாதுதான். ஆனால், காந்தத்தின் முன் இரும்பு தன் வலிமையை முழுவதும் இழந்துவிடுகிறது. காந்தம் செல்லும் திசையில் இரும்பும் செல்ல ஆரம்பிக்கிறது.'

தோபியா என்ற இரும்பு, சாரா என்ற காந்தத்தால் ஈர்க்கப்பட்டுவிட்டது. தானும் போகக்கூடாது, வேலையும் நடக்க வேண்டும் என நினைக்கும் தோபியா, 'இரபேல் அண்ணா! நீங்க போய் வாங்கிட்டு வாங்களேன்!' என்கிறார்.

தோபியா அண்ணனுக்கு இரண்டு அன்புக்கட்டளைகள் இடுகின்றார்: (அ) பணத்தை வாங்கி வாருங்கள், (ஆ) கபேலையும் திருமணத்துக்கு அழைத்து வாருங்கள்.

இப்படியாக, அவர் பணத்தைப் பெற்ற மாதிரியும் ஆயிற்று. கபேலைப் பார்த்தது மாதிரி ஆயிற்று. ஒரே கல்லில் மூன்று மாங்காய்? பணம் முதல் மாங்காய். கபேல் இரண்டாம் மாங்காய். அதென்ன மூன்றாம் மாங்காய்? சாராவுடன் இணைந்திருக்க முடிகின்ற இந்த தருணமே அது.

அ. சென்றார், வென்றார்

'நான்கு பணியாளர்கள், இரண்டு ஒட்டகங்களோடு இரபேல் சென்றார்' என்று ஆசிரியர் எழுதுவது, பணத்தின் மதிப்பை குறிக்கிறது. அதாவது, கடன்தொகையைப் பெற்று தூக்கிக்கொண்டு வருவதற்கு இவ்வளவு மனித மற்றும் ஒட்டக ஆற்றல் தேவைப்பட்டது. ஆவணத்தைக் காட்டி பணம் திரும்பப் பெறப்படுகிறது.

ஆ. வந்தார், வாழ்த்தினார்

தோபியாவின் திருமண நிகழ்வில் பங்கேற்க உடனே புறப்பட்டு வருகின்றார் கபேல். வந்தவர் வாய்நிறைய வாழ்த்துகிறார்: 'நல்லவனே, சிறந்தவனே' என தோபியாவையும், 'நன்மையும், சிறப்பும், நேர்மையும், வள்ளன்மையும் உள்ளவர்' என தோபித்தையும் ஒருசேர வாழ்த்துகின்றார்.

இந்த நிகழ்வு நமக்கு மூன்று வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுத்தருகிறது:

1. பணியைப் பகிர்ந்தளிப்பது. இது ஒரு முதன்மையான மேலாண்மையியல்பாடம். அலுவலகத்தில் நாம் செய்யும் பணியிலிருந்து, நம் மொபைல்ஃபோனுக்கு டாப்-அப் செய்வது வரை எல்லாவற்றையும் 'நானே செய்வேன்' என நினைத்து, மாய்ந்து மாய்ந்து வேலை செய்வது தவறு. நம்மை அறியாமல் நாம் பணியைப் பகிர்ந்தளிக்கவும் செய்கிறோம். உதாரணத்திற்கு, நம் உறவினர்கள் அல்லது நண்பர்களின் பிறந்த நாள் மற்றும் வீட்டு வைபவங்களுக்கு பரிசை நாம் அஞ்சல்வழி அனுப்புகிறோம். நாமே நேரிடையாக செல்ல முடியாதபோது, அந்த வேலையை நாம் அஞ்சல் அலுவலகத்தோடு அல்லது கூரியர் சேவையோடு பகிர்ந்துகொள்கிறோம். தோபியா தன் பணியை இரபேலோடு பகிர்ந்து கொள்கின்றார்.

2. நேர்மையும், நாணயமும். இந்த இரண்டும் இருந்தால் மனிதர்களும், வானதூதர்களை வேலை வாங்கலாம். நூலின் இந்தப் பிரிவை வாசித்தவுடன் எனக்கு சுருக்கென்றது. அதாவது, தன் வேலையை எல்லாம் விட்டுவிட்டு வந்த வழிப்போக்கன் ஒருவரை, தன் திருமண நிகழ்வின் மகிழ்ச்சி தடைபட்டுவிடக் கூடாது என்ற 'தன்னலத்தில்' தோபியா, இரபேலிடம் வேலை ஏவுகின்றார். இது எப்படி நியாயமாகும்? ஆனால் இதன் அர்த்தம் என்னவென்றால், நேர்மையும், நாணயமும் நம்மிடம் இருந்தால் நாம் வானதூதர்களுக்கும் கட்டளையிட முடியும். அவர்களும் நம் வேலைகளைச் சிரமேற்கொண்டு செய்து முடிப்பர்.

3. தயார்நிலையில் கடன். 'நீங்கள் யாருக்கும் எதிலும் கடன்படாதீர்கள். ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதே நீங்கள் செலுத்த வேண்டிய ஒரே கடனாய் இருக்கட்டும்' (உரோ 13:8) என எழுதிகிறார் பவுல். நாம் படும் எந்தக் கடனையும் உடனே முத்திரையிட்டு திரும்பச் செலுத்தும் தயார்நிலையில் இருக்க வேண்டும். மேலும், சில நேரங்களில் வாழ்வில் நாம் படும் கடன்களை திரும்பச் செலுத்த முடியாது என்பதையும் உணரும் ஞானம் வேண்டும்.


2 comments:

  1. " கடன் பட்டார் நெஞ்சம்"... பாவம் தந்தை தன் தந்தையின் காலத்தைப்பற்றிப் பேசுவதுபோல்தெரிகிறது.இந்தக்காலத்தில்கடன்வாங்கியவர்களுக்கல்ல...கொடுத்தவர்களுக்குத்தான் தவிப்பு,பதற்றம் எல்லாமே! ஒருவரிடம் நான் அடுத்தடுத்து இருமுறை பணம் கொடுத்ததன் விளைவு அவர் என்னை வழியில் பார்த்தால் முகத்தைத் திருப்பிக்கொள்ள ஆரம்பித்தார்....ஏதோ ஒரு எதிரி ரேஞ்சுக்கு. ஒருநாள் " தம்பி சத்தியமாக கொடுத்த பணத்தைத் திருப்பிக்கேட்க மாட்டேன்.என்னை ஒரு எதிரியாகப் பார்ப்பதை நிறுத்துங்கள்" என்ற பின்பே சரியானார்.இன்னும் சிலர் இருக்கிறார்கள்....நாம் அன்பின் பரிமாற்றமாக ஏதேனும் கொடுத்தால் கூட அதற்குப்பதிலாக உடனே எதையேனும் கொடுத்து சரி கட்டி விடுவர்.அவர்களுக்குத் தெரிவதில்லை..." காசு பணத்தையும் தாண்டி நாம் ஈடு செய்ய இயலாத எத்தனையோ விஷயங்களும் உள்ளன" என்பது.இன்றையப் பதிவில் வரும் கடன் கொடுத்த தோபித்தும் சரி...கடன் வாங்கிய கபேலும் சரி...பக்கா ஜென்டில்மென்.நாணயம் மிக்கவர்கள்.அதனால் தான் நேர்மை மிக்க தோபியாவால் ரபேல் எனும் வானதூதரிடம் உதவி பெற முடிந்தது.பதிவின் இறுதியில் வரும் பவுலின் வார்த்தைகள்... " ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதே நீங்கள் செலுத்தும் ஒரே கடனாய் இருக்கட்டும்"... அன்பு ஒன்றே நம் வாழ்வுக்கு ஆதாரம் எனச் சொல்லாமல் சொல்கின்றன.தந்தையே!சரியாகச்,சொன்னீர்கள்...." என்னதான் அழுதாலும்,புரண்டாலும், தலைகீழாக நின்றாலும் இறுதிவரை நம்மைக் கடனாளியாகவே வைத்திருக்கும் சில கடன்களும் இருக்கத்தான் செய்கின்றன" என்பதை உணர்ந்து கொள்ளும் ஞானமும் நமக்கு வேண்டும் என்று.ஒருவகையில் பார்த்தால் தங்கள் பதிவின் மூலம் பயன்பெறும் என் போன்றவர்கள் கூடத் தங்களுக்கு ஏதும் திருப்பி செலுத்த முடியாத கடனாளிகளே!நல்லதொரு பதிவைத்தந்த தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete
  2. Anonymous11/26/2023

    அருமையான பதிவு

    ReplyDelete