Saturday, November 7, 2015

தூய முத்தம்

இன்று மாலை ரோசாப்பாட்டிக்கு நன்மை கொடுக்கப் போயிருந்தேன்.

ரோசாப்பாட்டி ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட துறவற சபைக்கு திருப்பலி கருத்திற்காக பணம் அனுப்புவார். ஒவ்வொரு மாதமும் திருப்பலி நிறைவேற்றியபின் அந்த சபையில் உள்ள பொறுப்பு தந்தை இவருக்கு நன்றிக் கடிதம் அனுப்புவார். கடந்தமாதம் பொறுப்பேற்றிருக்கும் அருட்தந்தை ஒருவர் இவருக்கு எழுதும் கடிதத்தில் எழுதியிருந்த 'கரிஸ்ஸிமா ரோசா' ('அன்பிற்கினிய ரோசா' அல்லது 'மிகுந்த அன்பிற்கினிய' அல்லது 'என் இதயத்துக்கு நெருக்கமான', 'என் வாஞ்சைக்குரிய ரோசா' என மொழிபெயர்க்கலாம்) என்ற வார்த்தைகளை திரும்பத் திரும்ப வாசித்து தனக்குத்தானே சிரித்துக் கொண்டார்.

சிரித்து முடித்துவிட்டு, 'ஒவ்வொரு அருட்பணியாளரும் இப்படி ஒவ்வொருவரையும் பெயரிட்டு அழைக்கும் அளவுக்கு அன்பு செய்தால் எத்துணை நலம்!' என்றார்.

நாளைய முதல் வாசகத்துடன் தூய பவுல் உரோமையருக்கு எழுதிய திருமடலை வாசித்து முடிக்கின்றோம். கடிதத்தை நிறைவு செய்கின்ற பவுல் நிறையப் பேருக்கு நன்றி சொல்கின்றார். நிறையப் பேரின் சுகம் கேட்டு எழுதுகின்றார். ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி எழுதுகின்றார்.

'தூய முத்தம் கொடுத்து ஒருவர் மற்றவரை வாழ்த்துங்கள்!' - இதுதான் கடிதத்தில் இறுதி கிளாசிக்.

தூய முத்தம் என்றால் என்ன?

கடிதத்தின் நிறைவைக் கூர்ந்து கவனித்தாலே இதன் அர்த்தம் விளங்கிவிடும்.

பவுல் கடிதத்தை உரோமை திருச்சபைக்கு எழுதுகின்றார். ஏறக்குறைய 300 முதல் 500 பேர் உள்ள சபையாக, அல்லது 100 முதல் 200 பேர் உள்ள சபையாக இறைமக்கள் இருந்திருப்பார்கள். இந்தக் கடிதம் பொதுவில் வாசிக்கப்பட வேண்டியது. அதில் 11 பேரின் பெயர்களை மட்டும் குறிப்பிட்டு எழுதுகின்றார் பவுல். இந்த 11 பேரின் பெயர்களை மட்டும் வாசிக்கும்போது மற்ற 89 பேர் என்ன நினைப்பார்கள்? 'என்னடா என் பெயர் வரலையே?' அப்படின்னு நினைச்சாலோ, அல்லது தங்கள் பெயரை எழுதாததால் பவுல் மீது கோபப்பட்டாலோ, அல்லது இந்த 11 பேரின் மேல் பொறாமைப்பட்டாலோ சபையில் பிரிவினை வருந்துவிடுமே! இதை பவுல் எதிர்நோக்காதவரா?

பவுலின் நிதர்சனமான நன்னயம் அல்லது தெளிந்த நீரோடை போன்ற அன்புதான் இங்கே துலங்குகிறது. இப்படிப்பட்டவர்கள்தாம் உள்மனச்சுதந்திரத்துடன் இருக்க முடியும். இதை அனுபவித்த சபையினர், 'ஏய் விடுங்கப்பா, உங்க பேரு வரலைன்னா என்ன? பவுலைப் பற்றி நமக்குத் தெரியாதா? அவர் மனசுல நம்ம எல்லாருக்கும் இடமிருக்குப்பா!' என்ற பெரிய மனதுடன் எடுத்திருப்பார்கள்.

முத்தம் கொடுப்பது நம் மரபில் கொஞ்சம் 'தபு'வோடே பார்க்கிறோம்.

எனக்கு முந்தையை தலைமுறையினர் முத்தம் கொடுத்து நான் பார்த்ததேயில்லை. அந்தத் தலைமுறையில் வந்த 'சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து' பாடலின் முத்தக்காட்சியில் கூட, சிவாஜி வெறும் உதட்டை மட்டும் துடைத்துக்கொள்வதாகக்தான் காட்டுவார்கள். முத்தம் கொஞ்சம் தூரமாகவே வைக்கப்பட்டது. இன்றைய தலைமுறையினர் ஃபோனில் கொடுக்கும் முத்தங்களிலிருந்து, நேரில் கொடுக்கும் முத்தம் வரை கொஞ்சம் முன்னேறித்தான் இருக்கிறோம் அல்லது இருக்கிறார்கள்.

முத்தம் கொடுத்து வாழ்த்துவது இன்றுவரை உரோமையில் (இத்தாலியில்) உள்ள பண்பு. ஜெர்மனியில் விரைப்பாக நின்று கையை நீட்டுவார்கள். இத்தாலியில் சரி என்று படுவது, இந்தியாவிற்கு தவறு என்று படும்தான்.

ஒன்று மட்டும் கத்துக்கலாம் நம்ம பவுல்கிட்ட.

இயல்பா இருங்க. இயல்பா இருக்கிறது இயல்பா வெளிப்படுத்துங்க.


2 comments:

  1. எத்தனை அஅகவைக்க ஆனால் என்ன? என் பெயரை ஒருவர் உச்சரிக்கையில் என்க்குள் ஏற்படும் மகிழ்ச்சியே அலாதிதான்.இதற்கு ரோசாப்பாட்டி மட்டும் எப்படி விதிவிலக்காக முடியும்? ஆனால் ரோசாப்பாட்டிக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை...இன்று நம் அருட்பணியாளர்களும் தம் பங்கு மக்களைப் பெயர் சொல்லியும்,அக்கா,அண்ணா என்று உறவிட்டு அழைக்குமளவிற்கு நிலைமை மாறியுள்ளது என்று.இதனால் வரும் பிணக்குக்களைத் தீர்க்கத்தான் " ஏய் சும்மா விடுங்கப்பா.நமக்குத்தெரியாதா..நம் பங்குத்தந்தை மனசுல நாம் எல்லோரும் இருக்கோம்ணு?"... என்று கூறத்தான் பவுல் போன்றவர்கள் இல்லை.தூய பவுலடியாரின் மடல்களை வாசிக்கும் போது அவர் உபயோகிக்கும் வார்த்தைகளில் உள்ள வாஞ்சை நம்மையும் எளிதில் தொற்றிக்கொள்ளும்.மற்றபடி நம் மக்கள் உறவுப் பறிமாற்றம் செய்யும் முறைகள் நாளுக்கு நாள் மாறிவருவதைப் பார்க்கிறோம்.பள்ளிகளில் மாணாக்கர் ஆசிரியர்களுக்கு 'வணக்கம்'சொல்வது அரிதாகி இருப்பினும் நம் உறவு முறைகளில் ஒருவருக்கொருவர் தம் உறவை வெளிப்படுத்துவது பல பரிமாணங்களைக் கொண்டுள்ளது.வீட்டிற்கு வருபவர்களைப் பார்த்து அன்பொழுக 'வாங்க' என்று சொல்வது, கை குலுக்குவது,பாதி உடம்பு பட்டும் படாமலும் அணைப்பது(hug) முதலியவை இதில் அடங்கும்.இந்தத் ' தூய முத்தம்' என்பது கொடுப்பவரும்,எடுப்பவரும் தூய்மையாய் இருக்கும் பட்சத்தில் மட்டுமே சாத்தியம் என நினைக்கிறேன்.இத்தனை ஏன்?... நம் எதிரே இருப்பவர்களைப் பார்த்து கருணையுடன் கூடிய ஒரு 'கடைக்கண் பார்வை', உதட்டோரத்தில் ஒரு கீற்றுப் 'புன்னகை'..இவை போதுமே 'நீ என்னவன்', 'நீ என்னவள்' என்பதைத் தெரியப்படுத்த? தந்தையே! மிகச்சரியாகச் சொன்னீர்கள்.." You don't have to touch people to touch their heart".. என்று. தந்தைக்கும்,அனைத்து உறவுகளுக்கும் இனிய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. தந்தைக்கு வணக்கம்.உங்கள் பதிவு ரொம்ப அருமையான மற்றும் அழகான பதிவு.இயல்பா இருங்க. இயல்பா இருக்கிறது இயல்பா வெளிப்படுத்துங்க.மிகவும் அர்த்தமுள்ள வார்த்தைகள்.தந்தைக்கு நன்றிகளும்! பாராட்டுகளும்!

    ReplyDelete