Monday, November 30, 2015

மரபு மீறல்

நேற்று காலை என் அம்மாவுடன் பேசிக்கொண்டிருந்தபோது உரையாடல் 'இறந்தவர்களை எரிக்கலாமா? கூடாதா?' என்று மாறியது. இறந்தபின் உடல் தானம், இறந்தபின் உடலை எரித்தல் இந்த இரண்டிலும் அவர்களுக்கு என்றும் மாற்றுக் கருத்துதான்.

அதாவது, இறந்தவர்களைப் புதைத்தல் என்பது கிறிஸ்தவத்தில் காலங்காலமாக இருந்து வரும் மரபு. மரபு மீறல் அவசியமா? மரபு மீறல் எதற்காக?

நேற்று மத்திய ஆப்பிரிக்கா நாட்டிற்கு திருப்பயணம் மேற்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் பாங்குவி நகரத்தில் உள்ள பேராலயத்தில் சிறப்பு யூபிலி ஆண்டின் புனிதக் கதவுகளைத் திறந்து வைத்தார். மேலும் இந்த நகரத்தை அமைதியின் ஆன்மீக நகரம் என்று பெயரிட்டார்.

இது ஒரு மரபு மீறல்? எப்படி?

கத்தோலிக்க திருஅவை தொடங்கிய நாளில் இருந்து யூபிலி ஆண்டில், ரோமில் உள்ள தூய பேதுரு பேராலயத்தின் புனிதக் கதவுகள்தாம் முதலில் திறக்கப்படும்.

இதுவரை திருச்சபையின் யூபிலி ஆண்டின் மையம் ரோமாக இருந்தது. இன்று அது மாறி ஆப்பிரிக்காவின் ஒரு நகரத்துக்குப் போய்விட்டது. ஆக, மையம் விளிம்பாகிவிட்டது. விளிம்பு மையமாகிவிட்டது. இந்த மரபு மீறல் மையத்தில் இவ்வளவு நாள் இருந்த மக்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால் இவ்வளவு நாள் விளிம்பில் இருந்தவர்கள் இதைக் கொண்டாடுகிறார்கள்.

திருத்தந்தையின் இந்த செயல் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

அதாவது, இவ்வளவு நாள் இருந்த திருத்தந்தையர்கள் யோசிக்காததை, அல்லது யோசித்தும் செய்யாததை இவர் செய்திருக்கிறார்.

'நான் யாரையும் ப்ளீஸ் பண்ணத் தேவையில்லை' என்று நினைப்பவர்கள்தாம் மரபு மீற முடியும்.

இந்த மனப்பாங்கு நம் திருத்தந்தைக்கு அதிகம் உண்டு. இதை நான் இவரிடம் கற்றுக்கொள்ள விரும்புகிறேன்.

நிற்க.

திருச்சி மாவட்டம் துவாக்குடியில் தேவராயநேரி பகுதியை சேர்ந்தவர் ரவி. அவரது மகன் சரவணன். நரிக்குறவ சமூகத்தைச் சார்ந்த இவர் சாலைவிபத்தில் சிக்கி கோமா நிலைக்கு (மூளைச்சாவு) சென்றுவிட்டார்.

இவரின் இதயம் மற்றும் உடல் உறுப்புக்களை தானம் செய்தால் அவர் இறந்தும் வாழலாம் என ரவிக்கு சொல்கின்றனர் மருத்துவர்கள். இதற்கு ரவியின் உறவினர்களும், சமூகமும் எதிர்ப்பு தெரிவிக்கிறது. 'நம் மரபில் இது சாத்தியமே இல்லை' என்கின்றனர் பெரியவர்கள்.

ஆனால், ரவி துணிந்து தன் மகனின் உறுப்புக்களை தானம் செய்ய முன்வருகின்றார். உடனடியாக சரவணின் இதயம் ஐதராபாத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு அவசியத்தில் இருந்த ஒருவருக்கு பொருத்தப்படுகிறது.

ரவியின் மரபு மீறல் ஒரு உயிரைக் காப்பாற்றுகிறது.

இன்று நம்மைக் கட்டியிருக்கும் மரபின் சங்கிலிகள் ஏராளம்.

ஏதாவது ஒன்றை நாம் இனங்கண்டு அதை அறுக்க முயற்சிக்கலாமே!

இந்த மரபு மீறலையே நாளைய முதல் வாசகமும் (எசாயா 11:1-10) பதிவு செய்கிறது:

'ஓநாய் செம்மறியாட்டுக் குட்டியோடு தங்கியிருக்கும். அக்குட்டியோடு சிறுத்தைப்புலி படுத்துக்கொள்ளும். கன்றும், சிங்கக் குட்டியும், கொழுத்த காளையும் கூடி வாழும். பச்சிளம் குழந்தை அவற்றை வழிநடத்திச் செல்லும். பசுவும் கரடியும் ஒன்றாய் மேயும். பால் குடிக்கும் குழந்தை விரியன் பாம்பின் வளையில் விளையாடும். பால்குடி மறந்த பிள்ளை கட்டுவிரியன் வளையினுள் தன் கையை விடும்.'

2 comments:

  1. தந்தைக்கு வணக்கம்."மரபு மீறல்" எழுச்சிமிக்க பதிவு. மரபு மீறி காரியங்களை பண்ணிவிட்டால் எங்கு உலகம் நம்மை தப்பா நினைக்குமோ? என்ற கேள்விக்குறியோடு நிறைய பேரின் வாழ்கை முடிந்து விடுகிறது.இன்றைய கால்ச்சூலளுக்கு ஏற்ற பதிவு. இன்று நம்மைக் கட்டியிருக்கும் மரபின் சங்கிலிகள் ஏராளம்.ஏதாவது ஒன்றை நாம் இனங்கண்டு அதை அறுக்க முயற்சிக்கலாமே! மிக அழகான வரிகள்.இந்த நல்ல குணத்தை நம் திருத்தந்தையிடமும்,இதை விரும்புகிற ஏசு தந்தையிடமும் கற்றுக்கொள்வோம். திருவருகை காலத்தின் இரண்டாம் நாளிலேயே எங்களை தட்டி எழுப்பிய தந்தையின் வார்த்தைகளுக்கு நன்றியும், பாராட்டுக்களும்!!!

    ReplyDelete
  2. ' மரபு மீறல்'... இது வெளியே இருந்து பார்க்கும் போது ஒரு முரண்பாடான செயல்.ஆனால் அதன் வேர் வரை சென்று தோண்டிப் பார்த்தால்....அதன் ' ப்ரோஸ் & கான்ஸ்'( pros& cons) என்னவென்று பார்க்கும் போதுதான் சில விஷயங்கள் வெளிச்சத்திற்கு வருகின்றன." நான் யாரையும் ப்ளீஸ் பண்ணத்தேவையில்லை" என்று சொல்பவர்களால் தான் மரபை மீறமுடியும்.சில விஷயங்களை செய்பவர்கள் செய்தால் தான் அது ஏற்றக்கொள்ளக்கூடிய செய்தியாகிறது.இருப்பினும் தன்னுடைய முன்னோடிகள் செய்யத் துணியாத காரியத்தை செய்த திருத்தந்தைக்கு ஒரு சபாஷ்! தந்தையின் வார்த்தைபளில் " விளிம்பு மையமாகி விட்டது; மையம் விளிம்பாகி விட்டது".... அழகான வெளிப்பாடு.என்னைப்பொறுத்த வரை உறுப்பு தானம் ஓ.கே.ஆனால் உடல்தானத்தை என்னால் யோசித்துக்கூட பார்க்க இயலவில்லை.இருப்பினும் எங்கோ ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்த சரவணனின் தந்தை ரவிக்கு அது முடியுமெனில் எனக்கும் கூடப் புரியக்கூடிய விஷயம்தான்." ஓநாய் செம்மறியாட்டுக்குட்டியோடு தங்கியிருக்கும்.அக்குட்டியோடு சிறுத்தைபுலி படுத்துக்கொள்ளும்.கன்றும்,சிங்கக்குட்டியும்,கொளுத்த காளையும் கூடி வாழும்.பச்சிளம் குழந்தை அவற்றை வழி நடத்திச்செல்லும்.பசுவும் கன்றும் ஒன்றாய் மேயும்.பால் குடிக்கும் குழந்தை விரியன் பாம்பின் வளையில் விளையாடும்.பால் குடி மறந்த பிள்ளை கட்டுவிரியன் வளையினுள் தன் கையை விடும்".... இவை எல்லாம் சாத்தியமெனில் எனக்கும் கூட 'உடல் தானம்' சாத்தியமாகட்டும்.விழிப்புணர்வைத் தந்த தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete