Sunday, November 8, 2015

'0' விலிருந்து

இன்று நாள் முழுவதும் சூப்பர் மார்க்கெட் ஒன்றின் முன் நின்று எங்கள் பங்கின் ஏழை மக்களுக்கான உணவுப்பொருட்களை அங்கே வருபவர்களிடம் கேட்டுக் கொண்டிருந்தோம். என்னோடு மோனியா, டினா மற்றும் கார்மேலா. எல்லாருக்கும் ஆரஞ்சு டிரஸ். எங்கள் பங்கின் பெயர் போட்டது. காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை. எதிர்பார்த்ததைவிட நிறையப்பேர் கொடுத்தார்கள். வெறுங்கையோடு போனோம். ஒரு அறை நிறைய பொருட்களைப் பெற்று வந்தோம். இடையில் உணவு இடைவெளிக்கு மட்டும் ஆள் மாறினோம். இன்றைய அனுபவம் இனிய அனுபவமாக இருந்தது.

கொடுத்தல் - பெறுதல்.

இந்த இரண்டு வார்த்தைகளை வைத்து அடிக்கடி எனக்கும், என் அம்மாவுக்கும் கருத்து வேறுபாடு வருவதுண்டு.

யார் கொடுக்கலாம்? யார் பெறலாம்?

'ஈகோ' இல்லாதவர்கள்தாம் கொடுக்கவும், பெறவும் முடியும்.

அதாவது, எனக்குதான் எல்லாம் என்று நினைப்பவர்கள் கொடுக்க முடியாது. எனக்கெதுக்கு எல்லாம் என்று நினைப்பவர்கள் பெற முடியாது.

இன்று மக்கள் கொடுக்கும்போது அவர்கள் முகத்தில் இருந்த புன்னகையும், அதை வாங்கி, வாங்கி வண்டியில் அடுக்கிய எங்கள் தன்னார்வத் தொண்டர்களின் புன்னகையும் அப்படியே என் மனதில் பதிந்து விட்டன.

கொடுத்தவர்களும், பெற்றவர்களும் தங்களைப் பற்றி நினைக்கவே இல்லை. அவர்கள் நினைவில் நின்றவர்களெல்லாம் என்றோ ஒருநாள் பங்குக் கோவிலை நாடி உதவி கேட்டு வரும் ஏழைகள். அவர்களுக்காக இவர்கள் வெயிலில் (இன்று கொஞ்சம் வெயில் அதிகம்!) கால்கடுக்க ஏன் நிற்க வேண்டும்?

இன்றைய என் அனுபவத்தோடு நாளைய நற்செய்தியின் கைம்பெண்ணை இணைத்துப் பார்க்கிறேன்.

அவரின் கொடுத்தலைப் பற்றி எழுதுகின்ற லூக்கா, 'அவர் தன்னிடம் இருந்த எல்லாவற்றையும் போட்டார்,' 'அவர் தன் பிழைப்புக்கென்று வைத்திருந்த எல்லாவற்றையும் போட்டார்' என இரண்டு அடைமொழிகளாகப் பதிவு செய்கின்றார்.

இந்தப் பெண்ணிடம் இனி ஒன்றுமில்லை.

இனி இவள் தொடங்குவது '0'விலிருந்து.

சில நேரங்களில் கடவுள் நம்மை மொத்தமாகக் காலி செய்து அவரின் கைகளில் போடச் சொல்கின்றார். எதற்காக? நம்மை புதிய மனிதராக, பழையவைகளைக் களைந்துவிட்டு வாழ அழைப்பதால்தான்.

பெட்ரோல் நிரப்பும் இடங்களில் மீட்டர் '0'வில் இருக்கிறதா என சரிபார்த்துக்கொள்ளுங்கள் என எழுதியிருப்பார்கள்.

நம் வாழ்க்கை என்ற வண்டியும் சில நேரங்களில் தடுமாறும்போது, வறண்டுபோய் நிற்கும்போது, '0'வில் இருக்கிறதா என சரிபார்த்து, இறைவனை நிரப்ப வைக்கலாமே!



5 comments:

  1. மிக அருமை, நிதர்சன உண்மை, என் ஆயன் ஆண்டவர் எனக்கென்ன குறை,

    ReplyDelete
  2. " கொடுத்தல்- பெறுதல்".... அழகாகப் பதிவு செய்துள்ளீர்கள் தந்தையே! 'ஈகோ' என்ற ஒன்று தம் மனத்தில் நுழையாதவர் மட்டுமே கொடுக்கவும்,பெறவும் முடியும்.பொதுவாக்க் " கொடுத்தலின் இன்பம் பெறுவதில் இல்லை" எனக் கேட்டிருப்போம்.ஆனால் தனக்கு அளிக்கப்படுவதை நிறைந்த மனத்தோடு பெற்றுக்கொள்ளவும் ஒரு பரந்த மனது தேவைப்படுகிறது." அந்த ஏழைக் கைம்பெண் தன் பிழைப்பிற்கென வைத்திருந்த அனைத்தையும் போட்டார்.இனி இவள் தொடங்குவது '0' விலிருந்து.இறைவனின் திருவருகைக்காலத்தை விரைவில் தொடங்கவிருக்கும் நாம் கொடுப்போம்...அஅலுங்கிக் குலுங்கிக் கொடுப்போம்.அப்பொழுது தான் நம் வாழ்க்கை என்ற வண்டியும் தடுமாறுகையில்,தடம் மாறுகையில் '0' வில் நிற்கிறதா எனப் பார்த்து இறைவனை நிரப்ப வைக்க இயலும்." சில நேரங்களில் நம்மைப்புதிய மனிதராக,பழையவைகளைக் களைந்துவிட்டு வாழ மொத்தமாக்க் காலி செய்து அவரின் கைகளில் போடச் சொல்கிறார்" ..அருமையான, யாரையும் சிந்திக்கத் தூண்டும் வரிகள்.தந்தைக்குப் பாராட்டும்,ஞாயிறு வாழ்த்துக்களும்.....

    ReplyDelete
  3. தந்தைக்கு வணக்கம் . "'0' விலிருந்து" என்ன ஒரு அழகான பதிப்பு. என்னை தொட்ட வரிகள் " நம் வாழ்க்கை என்ற வண்டியும் சில நேரங்களில் தடுமாறும்போது, வறண்டுபோய் நிற்கும்போது, '0'வில் இருக்கிறதா என சரிபார்த்து, இறைவனை நிரப்ப வைக்கலாமே!
    வாழ்வியல் தத்துவத்தை மிக எதார்த்தமாக எடுத்து வைத்து எங்களை சிந்திக்க வைத்ததற்கு நன்றி.ஏழை மக்களுக்கான உங்களின் சேவை சிறக்க எனது வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும்.

    ReplyDelete
  4. ஆம், இறைவனை நிரப்ப அனுமதிக்கலாமே!
    புதிய சிந்தனை.
    நன்றி 🙏

    ReplyDelete