Thursday, November 5, 2015

முன்மதி

பிரமிளா முக்கிய கதாபாத்திரமாக நடித்த, கே. பி. அவர்கள் இயக்கிய 'அரங்கேற்றம்' (1973) திரைப்படம் பார்த்திருக்கிறீர்களா?

ஏழ்மை, பெண்ணியம், சாதிய ஏற்றத்தாழ்வு, பணம், படிப்பு என எல்லாவற்றையும் அழகாக அரங்கேற்றியிருக்கிறார் கே.பி.

'வழிகள் இலக்கை நியாயப்படுத்த முடியுமா?' (Do means justify the end?) - இதுதான் இந்தத் திரைப்படம் எழுப்பும் முக்கிய கேள்வி.

அதாவது, நான் 12ஆம் வகுப்பு தேர்வில் மாநிலத்தில் முதல் மாணவனாக வருவது என்பது என் இலக்கு என வைத்துக்கொள்வோம். இந்த இலக்கு நல்லது. எல்லாராலும் வரவேற்கத்தக்கது. ஆனால், நான் இந்த இலக்கை அடைய பிட் அடித்தோ, அல்லது கள்ள ஆட்டம் ஆடியோ முயற்சிக்கிறேன். இந்த வழிகளைக் கொண்டு என் இலக்கை அடைந்தும் விடுகிறேன். நான் கொண்டாடிக் கொண்டிருக்கும்போது நீங்கள் வந்து, 'நீ தவறான வழிகளில்தான் இதை அடைந்தாய்' என என்னிடம் சொல்கிறீர்கள். நான் உங்களிடம், 'வழி எப்படி இருந்தாலென்ன இலக்கை அடைந்தாயிற்றல்லவா!' என்கிறேன்.

இதில் யார் சரி?

'வழிகள் இலக்கை நியாயப்படுத்த முடியாது' என்ற உங்கள் வாதமா?

'வழிகள் இலக்கை நியாயப்படுத்தலாம்' என்ற என் வாதமா?

இதன் முதுகில் ஏறிக்கொண்டே வரும் அடுத்த கேள்வி:

'நியாயம் அல்லது நியாயம் இல்லை என்பதை யார் முடிவு செய்வது?' 'நானா?' 'மற்றவரா?'

இதே கேள்விகளை நாளைய நற்செய்தி வாசகமும் (லூக் 16:1-8) எழுப்புகிறது:
தன் தலைவனின் சொத்துக்களையெல்லாம் 'கையாடல்' செய்து தன் வாழ்க்கையை செட்டில் செய்து கொள்கிறான் அநீதியான வீட்டுக்கண்காணிப்பாளர். 'ஒளியின் மக்களைவிட இவ்வுலகின் மக்கள் முன்மதியுள்ளவர்களாய் நடந்து கொள்கிறார்கள்' என்று இயேசு அவரைப் பாராட்டவும் செய்கின்றார்.

நாளைய நற்செய்தி எப்படி கையாடல் செய்வது என்பதையோ, கையாடலை நியாயப்படுத்துவது என்பதையோ சொல்லவில்லை.

முன்மதி - இந்த ஒன்றைத்தான் சொல்கிறது.

2000 வருடங்களாக கிரேக்க மற்றும் இலத்தீன் இலக்கியங்கள் நான்கு மதிப்பீடுகளை முதன்மையானவை என்று சொல்கின்றன: முன்மதி (prudence), திடம் (courage), மட்டுசதம் (temperance), நீதி (justice).

'இப்போது என்ன?' என்பதை யோசிக்காமல் 'அடுத்து என்ன?' என்று யோசிப்பவர்தான் முன்மதியாக இருக்க முடியும்.

முன்மதி நம்ம பிராக்டிகல் வாழ்விலும் செயல்படுத்த வேண்டிய ஒன்றுதான்:

ஃபோன் கொண்டு போகும் போது உடன் சார்ஜர் கொண்டு போவது.

நீண்ட பயணத்திற்கு மாத்திரைப் பை, தண்ணீர் பாட்டில் எடுத்துச் செல்வது.

டாக்டரைப் பார்க்கும் போது கடந்த முறை கடைப்பிடித்த மெடிக்கல் ஃபைல் கொண்டு செல்வது.

வண்டியில் கொஞ்சம் எக்ஸ்ட்ரா பெட்ரோல்.

பர்சில் கொஞ்சம் எக்ஸ்ட்ரா பணம்.

ஏடிஎம் அட்டைகளை கொஞ்சம் குறைவாக தேய்ப்பது.

கடன் அட்டைகளை பயன்படுத்தாமல் இருப்பது.

வீட்டில் எக்ஸ்ட்ரா சிலிண்டர்.

பாத்ரூமில் எப்போதும் நிரப்பி வைக்கும் பக்கெட்.

இப்படி முன்மதியோடு நாம் இருந்துகொண்டுதான் இருக்கின்றோம்.

வரப்போகும் அல்லது வரலாம் என்று எதிர்பார்த்து, வரப்போகும் அந்த ஆபத்தை எதிர்கொள்ள நம்மையே ஆயத்தப்படுத்துவது - இதுதான் முன்மதியின் வரையறை.

இதற்காக எல்லாமே கெட்டதாக நடக்கும் என அதீத பயம் கொண்டு எதிர்நோக்குவதும் ஆபத்து.

'எல்லாம் கடவுள் பார்த்துக்கொள்வார்' என்று ஓய்ந்திருப்பதும் ஆபத்து.

கடவுள் நம்மைப் பாதுகாக்கிறார்தான் பாஸ்...ஆனா நம்ம பைக்கை நாம்தான் பூட்டி வைக்கணும்.

4 comments:

  1. விவிலியத்தில் வரும் என்னை நெருடச் செய்யும் பகுதிகளில் இன்றையதும் ஒன்று.ஆட்டைக் கடித்து,மாட்டைக் கடித்து,இறுதியாக மனிதனையே கடித்து முன்னுக்கு வருபவனுக்கு இந்த உலகம் தரும் பட்டம் ' புத்திசாலி,பிழைக்கத்தெரிந்தவன்.' அப்படி இல்லாதவனுக்குப் பெயர் 'ஏமாளி, பைத்தியக்காரன்.' 'குறுக்கு வழி'க்கு மறு பெயர்தான் ' முன்மதியா?' இல்லை....தந்தையின் வார்த்தைகளில் வரப்போகும் அல்லது வரலாம் என்று எதிர்பார்த்து , வரப்போகும் அந்த ஆபத்தை அல்லது சூழ்நிலையை எதிர்கொள்ள நம்மையே ஆயத்தப்படுத்துவது...." இதுதான் முன்மதியின் வரையறை.இதன் பின்னனியில் யோசித்தபோது எனக்குப்பட்டது இதுதான்...." என்னிடமுள்ள பணம்,பட்டம்,அதிகாரம்,நேரம்,உடல்நலம் இவற்றை என்னைச்சுற்றி இருக்கும் என் சகோதர்ர்களோடு பகிர்ந்து கொள்வேனேயானால் என் நிறை குறைகளைப் பாராமல்,என் செல்வத்தின் ந்திமூலம்,ரிஷிமூலம் பாராமல் இறைவன் தன் இரக்கத்தை என் மீதும் பொழிவார்" என்பதே! இதை 'விவேகம்' என்று கூட அழைக்கலாமே! தந்தையின் இந்த 'முன்மதி'யை நிறைய தருணங்களில்,சுவைத்துள்ளேன்,பயன்பெற்றுள்ளேன் என்ற முறையில் கூறுகிறேன் தந்தையை 'முன்மதியின்' மொத்த உருவம் என்றால் கூட மிகையில்லை.(Ofcourse I mean it positive) ஒரு குடும்பத் தலைவன் அல்லது தலைவியால் கூட யோசிக்க முடியாத அளவுக்கு அவர் முன்மதிக்கு உதாரணமாகத் தந்துள்ள பட்டியலைப் பார்த்தாலே விளங்கும்.அத்தனையையும் கடைபிடிக்க இயலாது போயினும் ஒருசிலவற்றையாவது முயற்சி பண்ணலாமே! பதிவின் அந்த இறுதி வரி ' கடவுள் நம்மைப் பாதுகாக்கிறார் தான் பாஸ்...ஆனா நம்ம பைக்கை நாம் தான் பூட்டி வைக்கணும்'...புன்னகையை வரவழைக்கும் புத்திமதி. பாராட்டுக்கள் தந்தையின் முன்மதிக்கு மட்டுமல்ல; ஹாஸ்ய உணர்விற்கும் சேர்த்துத்தான்!!!

    ReplyDelete
    Replies
    1. அழகான, ஆழமான பதிவிற்கு அம்மாவின் கமெண்ட் மிக அருமையாக இருந்தது. உங்கள் கமெண்ட் ஒரு எளிமையின் உருவே!.தஞ்சையை நெற்களஞ்சியம் என்று சொல்வார்கள்.ஆனால், அம்மாவை சொற்களஞ்சியம் என்றால் பொருத்தமானதே. கடவுள் உங்களை நிறைவாக ஆசீர்வதிக்கட்டும்.

      Delete
  2. தந்தைக்கு வணக்கம். இந்த பதிவில் நேர்மையற்ற மனிதனின் நடத்தையைப் பாராட்டுவது சரியா என்று தந்தை கேள்வி எழுப்பலாம். தந்தையின் கதையில் நியாயம் அல்லது நியாயம் இல்லை என்பதை யார் முடிவு செய்வது?' 'நானா?' 'மற்றவரா?' இதையே இந்த உவமையில் இயேசு ''நேர்மையற்ற வீட்டுப் பொறுப்பாளர்'' செய்தது சரி என்று கூறவில்லை. மாறாக, அவர் ''முன்தியோடு செயல்பட்டார்'' என்று தலைவரால் பாரட்டப்பட்டதை இயேசு குறிப்பிடுகிறார்.
    இயேசுவைப் பின்செல்வோரும் ''முன்மதியோடு'' நடக்க வேண்டும். இவ்வுலக செல்வத்தைக் கையாளுவதில் கவனமாகச் செயல்படுவது எப்படி என்று தெரிந்துள்ள மனிதர்கள் விண்ணக செல்வத்தை நாம் பெற வேண்டும் என்பதில் எவ்வளவு கருத்தோடு செயல்பட வேண்டும் என்பதை இயேசு இங்கே வலியுறுத்துகிறார் . ''முன்மதி'' என்பது கால இட சூழ்நிலைகளை நன்கு அறிந்து, உணர்ந்து, நாம் செய்கின்ற செயல்களின் பொருளையும் அவற்றின் விளைவுகளையும் சீர்தூக்கிப் பார்த்துச் செயல்படுகின்ற முறையைக் குறிக்கும் என்று தந்தை குறிப்பிடுகிறார். முன்மதி கொண்ட மனிதர் கடவுளின் விருப்பம் யாதென அறிந்து அதற்கேற்பச் செயல்படுவார்கள். கடவுள் தம்மிடம் ஒப்படைத்த பொறுப்பினைக் கரிசனையோடு நிறைவேற்றுவார்கள். அதுவே கடவுள் வழங்கும் நிலையான மகிழ்ச்சியில் நாம் பங்கேற்க வழியாகவும் அமையும் என்று கூறும் தந்தைக்கு பாராட்டுக்கள்!

    ReplyDelete