Monday, November 2, 2015

மூணு க்ரூப்

நாளைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 14:15-24) திருமண விருந்து உவமை பற்றிய எடுத்துக்காட்டை வாசிக்கின்றோம்.

இந்த உவமையை மாற்கு மற்றும் மத்தேயுவும் தங்கள் நற்செய்திகளில் பதிவு செய்திருந்தாலும், லூக்காவின் பதிவு கொஞ்சம் கலர்ஃபுல்லாக இருக்கிறது.

திருமண விருந்து ரெடி ஆயிடுச்சி. 'நாங்க ரெடி, நீங்க ரெடியா'னு கேட்டு தன் வேலைக்காரர்களை அனுப்புகிறார் அரசன்.

மூணு க்ரூப் மூணுவிதமான பதில்களைச் சொல்றாங்க:

அ. நான் வயல் வாங்கியிருக்கிறேன். கண்டிப்பாய் போய் பார்க்கணும்.
ஆ. நான் ஐந்து ஏர் மாடுகள் வாங்கியிருக்கிறேன். அவைகளை ஓட்டிப் பார்க்கணும்.
இ. எனக்கு இப்போதுதான் திருமணம் ஆயிற்று. என்னால் வர முடியாது.

மூணாவது காரணம்தான் கொஞ்சம் கிலுகிலுப்பாக இருக்கு. மற்ற ரெண்டு பேரும் ஒர்க்கஹாலிக்ஸ் ஃபெல்லோஸ்.

இந்த அரசன் தன் விருந்துக்கு வேறு ஆட்களை அழைத்துக் கொள்கிறான்.

மத்தேயு நற்செய்தி அரசன் கொஞ்சம் கோபக்காரன். விருந்துக்கு அழைத்து வராதவர்களை கொன்றும் விடுகிறான்.

சரி. இப்போ அரசனுக்கு ஒரு கேள்வி.

ஏங்க, நீங்க கூப்பிட்டா நாங்க அப்படியே ஓடி வரணுமா? எங்க வயல், எங்க மாடுகள், எங்க மனைவி எல்லாவற்றையும் விட்டுவிட்டு. அப்படி என்ன ஸ்பெசலா விருந்து வைக்கிறீங்க?

இப்படித்தான் இந்த மூன்று குழுவினரும் நினைத்திருப்பார்கள்.

அரசன் கூப்பிட்டால் போகணுமா என்றால் போகணும்தான்.

நாளைய முதல் வாசகத்தில் (உரோ 12:5-16) ஒரு வசனம் என்னை ரொம்ப தொட்டது:

'விடாமுயற்சியோடும், ஆர்வமிக்க உள்ளத்தோடும் ஆண்டவருக்குப் பணிபுரியுங்கள்.'

நேற்று எங்கள் பங்கிற்குத் திருப்பலிக்கு வந்த பிரேசில் நாட்டு அருட்பணியாளர் ஒருவர் என்னைப் பார்த்தவுடன், 'இதோ! இவரைப் போல, இந்த வயதினர் மூன்றுபேர்தான் நேற்று குருத்துவத்தை விட்டு விலகிப்போயினர் என் மறைமாவட்டத்தில்!' என்றார். சொல்லிவிட்டு அவரே தொடர்ந்தார், 'அந்த மூவரும் மிகவும் திறமைசாலிகள். தங்கள் பங்குகளில் நன்றாகப் பணியாற்றியவர்கள். தங்கள் பங்குகளில் இருந்து மூன்று பெண்களோடு போய்விட்டனர். இன்று தங்களின் இளமை, அவர்களின் இளமை எல்லாம் இனிமையாக இருக்கும். ஆனால் நாளை அவர்கள் 'நோஸ்டால்ஜிக்காக' (அதாவது, 'அங்கேயே இருந்திருக்கலாம்' என்று எண்ணும் மனநிலை) மாறிவிடுவார்கள்' என்றார்.

திருமண விருந்துக்குப் போகாமல் வயலுக்குப் போனவரும், ஏர் பிடிக்கப் போனவரும், துணைவியோடு இருந்தவரும் ஒருவேளை நோஸ்டால்ஜிக்காக மாறியிருப்பார்களோ? 'திருமண விருந்துக்கே போயிருக்கலாம்!' என்று அவர்கள் நினைத்து இப்போது வயலினின்று, வீட்டினின்று திரும்பினாலும், மண்டபத்தில் இடமில்லையே. அவர்கள் எங்கே போவார்கள்?

அருள்பணிநிலை ஒரு மலர்ப்படுக்கை அல்ல என்று நான் படிக்கும்போது அடிக்கடி சொல்லக் கேட்டிருக்கிறேன். படுக்கை என்ன, பாதையில்கூட இங்கு மலர்கள் இல்லை.

'கடவுள் கூப்பிட்டுத்தானே போனாய் நீ!' என்று அடிக்கடி மற்றவர்கள் என்னிடம் சொல்வார்கள். ஆனால் எங்களைக் கூப்பிடுபவர்கள் மனிதர்களே. நாங்களாகத்தான் கடவுள் எங்களை அழைப்பதாக நம்பிக் கொள்கிறோம். இறுதிவரை கடவுளின் குரலைக் கேட்காமலேயே அவரின் குரலை எல்லாவற்றிலும் கேட்பதாக நாங்கள் நம்பிக் கொள்கிறோம். அந்த நம்பிக்கையிலேயே எங்கள் வாழ்வை நகர்த்தி விடுகிறோம். 'அருட்பணியாளர்கள் நம்பிக்கை இல்லாதவர்கள்', 'கோயில் பூனை பயம் அறியாது' என்றும் சொல்வார்கள். 'நான் கேட்டால் கடவுள் தருவார்' என்று நான் நம்புவதில்லைதான். ஆனால் 'அவரின் குரல் கேட்டு நான் வந்தேன்' என்ற நம்பிக்கையில் நாங்கள் குறைவதில்லை.

அருள்நிலையில் எங்கள் பயணம் தொடக்கத்தில் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், நாட்கள் நகர, நகர, தொடக்கத்தில் இருந்த வேகம் குறைகிறது. உடல் நோய், மனதில் தோன்றும் வெறுமை, என்ன பணி செய்தாலும் இன்னும் அதிகம் எதிர்பார்க்கிற மக்கள். ஒரு கட்டத்தில் பயணத்தை முடித்துக்கொள்வோமா என்றும் எண்ணவைத்து விடுகிறது.

பவுல் சொல்வதுதான் இன்று தேவை: விடாமுயற்சி. ஆர்வமிக்க உள்ளம். இந்த இரண்டும் இருந்தால்தான் ஆண்டவருக்குப் பணி செய்ய முடியும்.

அ. வேகமாக விருந்துக்குப் போய்விட்டு, அங்கே பாதியில் எழும்பி வருவதை விட விருந்துக்குச் செல்லாமல் இருப்பது மேல்.

ஆ. ஒருவேளை விருந்துக்குப் போக முடியாவிட்டால், 'போயிருக்கலாமே!' என்று நடக்காததை நினைத்து ஏங்குவதும் தவறு.

இ. விருந்திலிருந்து பாதியில் எழும்பிப் போனவர்களை கொஞ்சம் இரக்கத்தோடும் நாம் பார்க்கலாமே.

4 comments:

  1. தந்தைக்கு வணக்கம்."மூணு க்ரூப்" என்ற உங்களின் அர்த்தமுள்ள பதிவிற்கு நன்றி.என்னை கவர்ந்த வார்த்தைகளும் இதுவே "விடாமுயற்சியோடும், ஆர்வமிக்க உள்ளத்தோடும் ஆண்டவருக்குப் பணிபுரியுங்கள்". புனித பவுல் கூறியது போல எந்த நிலையில் இருந்தாலும் விசுவாசத்துடன் ஆண்டவருக்கு பணிபுரிவோம், தந்தையின் பதிவு என் குழப்பத்தை முற்றிலும் அகற்றியது போன்ற உணர்வு . .தந்தைக்கு எனது பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. மனதைப் பிசைய வைக்கும் ஒரு பதிவு.' விருந்துக்குப் போகாதவன் உவமை'....வெளியிலிருந்து பார்ப்பவர் இதைப் புரிந்து கொள்ளும் கோணத்திலிருந்து முற்றிலும் மாறுபடுகிறது ஒரு அருட்தந்தை இதைப்பார்க்கும் கோணம்.தனிமையின் அஅழும்ப ஒரு இதயத்தின் விசும்பலை என்னால் உணர முடிகிறது.தந்தையே! யாருக்கில்லை உடல்நோயும்,மனத்தின் வெறுமையும்? எதற்காக எதை இழக்கிறோம் என்பது முக்கியமில்லையா தந்தையே? பாலைவனத்தில் பயணம் செய்பவன் களைப்பு மேலீட்டால் அங்கங்கே அமர்ந்து இளைப்பாறுவதில்லையா? இப்பொழுது அந்நிலையில் தான் தாங்களும் இருக்கிறீர்கள்.நிலைமை மாறும்; களைப்பு மறையும்; புத்துணர்ச்சி பிறக்கும்; மீண்டும் எழுந்து ஓடத்தான் போகிறீர்கள்.நம்பிக்கையைத்தளர விடாதீர்கள்." அவரின் குரல் கேட்டுத்தான் நான் வந்தேன் என்ற நம்பிக்கையில் நாங்கள் குறைவதில்லை"....... இதற்கு மேல் என்ன வேண்டும் தங்களின் பிரமாணிக்கத்தைப் பறை சாற்ற? தங்களைப் பற்றித் தூற்றுபவர்களைப் பற்றிக் கவலைப் படாதீர்கள்.தங்களின் படுக்கையிலென்ன....பாதையிலும் மலர் தூவ பலர் காத்திருக்கிறோம்.அனைத்து அருட்பணியாளர்களே! உங்கள் அத்தனை பேருக்கும் எங்கள் செபங்களும்....வாழ்த்துக்களும்.....இறைவன் தங்கள் அனைவரையும் தன் கரங்களில் ஏந்திக் காப்பாராக!

    ReplyDelete
    Replies
    1. அருட்பணியாளர்களுக்கான தங்கள் செபத்தில் நானும் இணைந்துகொள்ள அனுமதியுங்கள் சகோதரி ...

      Delete
  3. திரு புஷ்பராஜா அவர்களே! இதிலென்ன சந்தேகம்? நம்மைப்போன்ற அனைவரும் ஒரு மனத்துடன் இறை வேண்டல் செய்வதன் மூலமே நாம் நம் அருட்தந்தையருக்கு உதவிக்கரம் நீட்ட முடியும்.அதைத் தாராளமாகச் செய்வோம்; மகிழ்ச்சியுடன் செய்வோம்.தங்களுக்கு என் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete