Sunday, November 22, 2015

இரண்டும் இரண்டும் ஐந்து

நேற்று இரவு 'இரண்டும் இரண்டும் ஐந்து' என்ற இரானிய மொழி குறும்படம் பார்த்தேன்.

இதைப் பார்க்கத் தூண்டியது இந்த வாரம் ஆனந்த விகடனில் வெளியாகியிருக்கும் எஸ்.இராமகிருஷ்ணன் அவர்களின் கட்டுரை.

ஒரு வகுப்பறையின் கரும்பலகையோடு படம் தொடங்குகிறது. மாணவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆசிரியர் வகுப்பறைக்குள் வருகிறார். அனைவரும் எழுந்து நிற்கின்றனர். 'வணக்கம்'. அந்நேரம் தலைமையாசிரியரின் அறிவிப்பு வகுப்பறையின் ஸ்பீக்கரில் ஒலிக்கிறது: 'மாணவர்களே, இன்றிலிருந்து எல்லாமே வித்தியாசமாக இருக்கும். அது பற்றி உங்கள் ஆசிரியர்கள் உங்களுக்குச் சொல்வார்கள்.' அனைவரும் அமர, கரும்பலகைக்குச் செல்லும் ஆசிரியர், '2+2=5' என எழுதுவார். வகுப்பில் சலசலப்பு ஏற்படும். 'சைலன்ஸ்' என்று அதட்டுவார். பின் தான் எழுதியதை சத்தமாகச் சொல்வார். சொல்வதை மாணவர்கள் திரும்பச் சொல்ல வேண்டும் என்பார். ஒரு மாணவன் எழுந்து, 'இரண்டும், இரண்டும் நான்கு' என்பான். ஆசிரியர் அதட்ட, அவனும், 'இரண்டும், இரண்டு ஐந்து' என சொல்லிவிட்டு அமர்ந்துவிடுவான். பின்னால் ஒரு மாணவன் கையை உயர்த்துவான். 'இரண்டும், இரண்டும் நான்கு' என்பான். ஆசிரியருக்குக் கோபம் வந்துவிடும். வேகமாக வெளியே போய் மேல்வகுப்பு மாணவர்கள் மூன்று பேரை அழைத்து வருவார். மறுபடியும் போர்டில் '2+2=?' என எழுதி, 'எத்தனை?' என்று கேட்பார். அவர்கள் 'ஐந்து' என்பார்கள். 'பார்த்தாயா, நம் பள்ளியின் பெஸ்ட் ஸ்டூடன்ஸ் இவர்களே 'ஐந்து' என்றுதான் சொல்கிறார்கள் என்பான். ஆனால் இந்த மாணவன் போர்டில் 'நான்கு' என எழுதுவான். உடனே துப்பாக்கி குண்டுகள் அவன் நெற்றியில் பாய அப்படியே சுருண்டு விழுந்து இறந்துவிடுவான். வந்திருந்த மேல் வகுப்பு மாணவர்கள் அவனை அப்புறப்படுத்துவார்கள். போர்டில் படிந்திருந்த இரத்தத்தை அழித்துவிட்டு, '2+2=5' என ஆசிரியர் மறுபடி எழுதி, 'எல்லாரும் இதை உங்கள் நோட்டில் காப்பி செய்யுங்கள்' என்பார்கள். எல்லாரும் அப்படியே காப்பி செய்வார்கள். கடைசி இருக்கையில் அமர்ந்திருக்கும் மாணவன் மட்டும், 'ஐந்தை' இரப்பரால் அழித்துவிட்டு, 'நான்கு' என எழுத படம் முடிந்துவிடும்.

இந்தக் குறும்படத்தைக் காண இங்கே சொடுக்கவும்: Two Plus Two Equals Five

இந்தக் குறும்படம் சொல்லும் கருத்துக்கள் இரண்டு:

1. எல்லாரும் ஒத்துக்கொள்வதாலோ, மேலான சிந்தனையாளர்கள் சொல்வதாலோ பொய் ஒருபோதும் உண்மை ஆகிவிடாது.

2. உண்மைக்காக வாழ்ந்த ஒருவன் உயிர்விட்டாலும், அந்த இரத்தம் இன்னொருவனை உண்மைக்காக வாழ உருவாக்கும்.

நாளைய முதல் வாசகத்தில் (காண். தானி 1:1-6, 8-20) இந்தப் போராட்டம்தான் இருக்கிறது.

உண்மையான கடவுள் யார்? நெபுகத்னேசரின் கடவுளா அல்லது தானியேலின் கடவுளா?

உண்மைக்காக தானியேல் அனுபவிக்கும் துன்பங்களின் தொடக்கமே இந்த வாசகம்.

உண்மை சில நேரங்களில் உறங்கினாலும், ஒருநாளும் அழிந்துவிடுவதில்லை.

இல்லையா?

3 comments:

  1. தந்தைக்கு வணக்கம்.உண்மை சில நேரங்களில் உறங்கினாலும், ஒருநாளும் அழிந்துவிடுவதில்லை. கடவுளுக்காக துன்பத்தை தாங்கிக்கொண்டு உண்மையை நிலை நாட்ட ஊக்குவிக்கும் தந்தையின் வார்த்தைகளுக்கு நன்றி.இன்றைய காலச்சூழலுக்கு ஏற்றவாறு பதித்துள்ளீர்கள் தங்களின் முத்துக்களை.தந்தைக்கு நன்றியும் பாராட்டுக்களும்.

    ReplyDelete
  2. தந்தையின் காணொளி கண்டேன். தூங்கிக் கிடந்த சில உணர்வுகளைத் தட்டி விட்டது.கண்டிப்பாக இந்தக் காணொளியின் வழியாக தந்தை முன்வைக்கும் இரண்டு கருத்துக்களுமே சந்தேகத்திற்கிடமின்றி ஏற்றுக்கொள்ளப்படவேண்டியவைதான். சிலர் தங்களால் உரக்கப் பேச முடியும் என்ற ஒரே காரணத்தை வைத்தே எதிரில் இருப்பவரின் கூற்றைப் பொய் போலத் தோன்றச் செய்வார்கள்.இது இன்று நேற்று நடப்பதல்ல." பூமி உருண்டை" எனக்கண்டுபிடித்த கலிலேயோவை மத்த்திற்கு எதிராக தேவதூஷனம் பேசுகிறான் எனக்கூறி அவரை எரிக்கத் துணிந்த உலகத்தில் தான் நாம் இருக்கிறோம். அவரின் கண்டு பிடிப்பு தோற்றுப்போனதா என்ன? அது மாதிரி தான்.உண்மை எப்படியும் தண்ணீரை விட்டு மேல்மட்டத்துக்கு வரத்துடிக்கும் ரப்பர் பந்து போல வெளியே வந்தே தீரும்.ஆனால் அப்படி உண்மை வெளிவருகையில் அதற்கு முட்டுக்கட்டை போட்டவர்களுக்கு காலம் கடந்து போய்விடலாம்..உலகப் பிரமாணமான காரியங்களிலேயே நிலமை இப்படி இருக்கும் போது 'உண்மைக்கடவுளைக்' கண்டறியும் விஷயத்தில் எப்படி போராட்டம் இல்லாமல் இருக்கும்? தந்தையுடன் சேர்ந்து உரக்க சொல்லலாம்..." உண்மை சில நேரங்களில் உறங்கினாலும் ஒருநாளும் அழிந்துவிடுவதில்லை"... நல்லதொரு பதிவைத்தந்த தந்தைக்கு ஒரு சலாம்!!!

    ReplyDelete
  3. Dear Father,2+2=5, Two plus two equals five very excellent short movie.It is a good lesson to all.

    ReplyDelete