Wednesday, November 18, 2015

இயேசு அழுதார்

'இயேசு எருசலேம் நகரை நெருங்கி வந்ததும் கோவிலைப் பார்த்து அழுதார்'

(காண் லூக் 19:41-44)

'புதிய உலகை தேடி போகிறேன்' என்ற பாடல் கேட்டிருக்கிறீர்களா?

அதில் அழகான வரி ஒன்று உண்டு:

'தோளில் ஏறினாய் என்னை இன்னும் உயரமாக்கினாய்'

அதாவது, இறந்து தன் மகனைப் பிரிந்து செல்லும் தாய், தனக்கும் தன் மகனுக்கும் இருந்த உறவை சுருக்கிச் சொல்வதாகவும், இனி எல்லா நேரமும் அவனைக் காணப்போவதாகவும் பாடும் பிரியாவிடைப் பாடலே இது.

தன் குழந்தையை தோளில் ஏற்றுவது வழக்கமாக அப்பாக்களின் செயல்தான். ஆனால், இங்கே அதைத் தாய் செய்கிறாள். ஆக, அம்மையும், அப்பனுமாக இந்தக் குழந்தைக்கு இருந்திருக்கிறாள் தாய்.

தோளில் குழந்தை ஏறும்போது வழக்கமாக பாரம் தாங்காமல் கால்கள் தானாகவே வளையும். ஆனால், அந்த வலியையும் பொருட்படுத்தாமல், 'நீ என்மேல் ஏறி நின்றதால் என் உயரம் அதிகமானது' என்கிறாள் தாய்.

கவிஞரின் கற்பனைத் திறனுக்கு ஒரு சபாஷ்.

இங்கே தாயின் உயரம் மட்டுமல்ல. குழந்தையின் உயரமும் கூடத்தான் செய்கிறது.

ஒருவரின் வலி இருவரின் உயரத்தைக் கூட்டுகிறது.

நாம் வடிக்கும் கண்ணீர் கூட நம் இதயத்தின் நீட்சிதான். கண்ணீரின் வழியாக நம் இதயம் தன் உயரத்தை தானே கூட்டிக் கொள்கிறது. உள்ளுக்குள் தெரியாமல் இருக்கும் மென்மையை, கண்ணீர் எல்லாருக்கும் தெரியப்படுத்துகின்றது.

நாளைய நற்செய்தியில் எருசலேமுக்காக கண்ணீர் வடிக்கும் இயேசுவைப் பார்க்கின்றோம்.

எருசலேமின் கோவிலைப் பார்க்கின்ற இயேசு கண்ணீர் வடிக்கின்றார்.

எருசலேமின் கோவிலில்தான் யாவே இறைவனின் திருப்பெயர் உறைந்திருப்பதாக இஸ்ரயேல் மக்கள் நம்பினர். அதாவது, இறைவன் தங்களோடு இருந்தும், அமைதிக்கான வழியை அவர்கள் தெரிந்து கொள்ளவில்லை என்பதுதான் வேதனை.

'கடவுள் உன்னைத் தேடி வந்த காலத்தை நீ அறிந்து கொள்ளவில்லை!'

மக்களின் அறியாமையை முன்னிட்டு கடவுள் கண்ணீர் வடிக்கின்றார்.

ஆக, 'நீ என்னைப் புரிந்து கொள்ளவில்லை' என்ற செய்தியை நாம் மற்றவர்களுக்கு எளிதாக சொல்லிவிடும் வழி கண்ணீர்.

இந்தக் கண்ணீர் துடைக்கப்படுவது எப்போது?

அடுத்தவர் புரிந்துகொள்ளப்படும்போது.

எருசலேம் இயேசுவின் கண்ணீரைத் துடைத்ததா?

இல்லை.


2 comments:

  1. பொதுவாகப் பெண்கள் புரிந்துகொள்ளப்படாதபோது தங்கள் இயலாமையை வெளிப்படுத்துவது இந்தக் கண்ணீர் வழியேதான்.அதென்னவோ அழுகையும் ஒரு உணர்வின் வெளிப்பாடே என்று பலருக்குப் புரிவதில்லை.இங்கு இயேசு தன் இனத்தின் அறியாமை கண்டு கண்ணீர் வடிக்கிறார்.தந்தை குறிப்பிடும் பாடலுக்கு நானும் கரைந்து போயிருக்கிறேன்.தன் பிள்ளை தன்னில் ஏற்படுத்தும் வலியைக்கூட தன் வளர்ச்சியின் நீட்சியாகப் பார்க்கும் தாய்போல நம்மில் எல்லாமாக உறைந்துபோன இயேசுவும் நம்மைப பார்த்துக் கண்ணீர் வடிக்கிறார் நாம் நம் அன்புக்குரியவர்களை,நம்மைச் சார்ந்தவர்களைக் காயப்படுத்தும்போது.நம் கரம் காயப்பட்வர்களின் கண்ணீர் துடைக்கும்போதுதான் நாம் இயேசுவின் கண்ணீ துடைத்தவர்களாவோம்.' குழந்தை தன்மேல் ஏறி நின்றதால் தாயின் உயரம் கூடுகிறது' எனக்கூறும் கவிஞரின் கற்பனைக்கு ஒரு சபாஷ் எனில் 'ஒருவரின் வலி இருவரின் உயரத்தைக் கூட்டுகிறது' எனக்கூறும் தந்தையின் கற்பனைக்கு டபுள் சபாஷ்! அழகானதொரு,மனதைப் பிசைய வைக்கும் பதிவைத் தந்த தந்தைக்கு என் பாராட்டுக்கள்!!!

    ReplyDelete
  2. தந்தைக்கு வணக்கம்."இயேசு அழுதார் "உண்மையாகவே இயேசுவின் அழுகையில் அர்த்தம் இருந்தது.இங்குதான் இயேசுவின் உண்மையான அன்பை உணர முடிகிறது .ஏனென்றால், யார் பிறருக்காக அழுவாங்க ஒன்னு நமக்கு பிடித்தவர்கள் யாரவது தவறான போக்கில் போவதை பார்க்கும் போதும்,தவறானதை செய்யும் போதும் ,இன்னொன்று நமக்கு பாசமானவர்கள் இறக்கும் போது.இயேசு நற்செய்தியில் மூன்று முறை அழுதார்.அவை மூன்றும் நான் கூறிய இரண்டில் அடங்கும். இயேசுவின் மனநிலை நம் எல்லோருக்கும் இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும்.நாம் பிறருக்காக அழாவிட்டாலும் பரவாயில்லை. நாம் பிறரை எதிர்பார்ப்பு இல்லாமல் அன்பு செய்வோம் .அந்த அன்பே நாம் யார் என்று பிறருக்கு காண்பித்துவிடும். இயேசுவின் அழுகையில் அர்த்தம் என்னவென்றால் சுயநலம் இல்லாத அழுகை.ஆக,நல்ல ஒரு பதிவை படைத்து நம்மை பொதுநலவாதியாக மாற,மாற்றிட நல்வழிப்படுத்தும் தந்தையின் பதிவுக்கு நன்றி. தந்தைக்கு ஒரு சல்யூட் மற்றும் பாராட்டுக்கள்!

    ReplyDelete