Tuesday, November 3, 2015

அறிவுப்பூர்வமான

'செவ்வாய்க்கிழமைகளில் மோரியோடு'  (Tuesdays with Morrie) என்ற நூலில் வரும் மோரி அடிக்கடி சொல்லும் வாக்கியம் என்ன தெரியுமா?

'அன்பு ஒரு அறிவுப்பூர்வமான செயல்' (Love is a rational act).

நம் வழக்கமான புரிதலில் அன்பை ஒரு உணர்வு என்றுதான் பார்க்கிறோம். சில நேரங்களில் அதை நாம் பிறரன்புச் செயல்களில் வெளிப்படுத்துகிறோம். ஆனால் அதை அறிவுப்பூர்வமான செயலாக நாம் நினைப்பதில்லை.

ஆனால் உட்கார்ந்து யோசித்தால் நாம் அன்பு செய்வதிலும் அறிவு முக்கியமான இடம் வகிக்கிறது. அறிவு இடம்பெறாத அன்பு வெறும் உணர்வும், உணர்ச்சியாகவும் முடிந்துவிட வாய்ப்பிருக்கிறது.

நாளைய நற்செய்தியில் (லூக் 14:25-33) சீடத்துவம் பற்றி வாசிக்கின்றோம்.

சீடத்துவம் என்பதும் இயேசுவைப் பின்பற்றுவது என்பதும்கூட அன்பைப் போலவே 'ஒரு அறிவுப்பூர்வமான செயல்.'

வெறும் உணர்ச்சிவசப்பட்டு அவரைப் பின்பற்றுவது இயலாது.

ஒருவர் அமர்ந்து, ஆய்ந்து இந்த முடிவை எடுக்க வேண்டும்.

இயேசு இப்படி அமர்ந்து ஆராய்வதற்கு இரண்டு எடுத்துக்காட்டுக்களை முன்வைக்கின்றார்:

அ. கோபுரம் கட்டுபவர்
ஆ. போருக்குச் செல்பவர்

இந்த இரண்டு பேரும் தங்கள் இலக்கின் இறுதியை முதலில் உட்கார்ந்து யோசிக்க வேண்டும். இல்லையென்றால் அவரின் முயற்சிகள் தோல்வியில் முடிவதோடல்லாமல், அவர் கேலிப்பொருளாகவும் மாறிவிடுகின்றார்.

'நீங்கள் யாருக்கும் எதிலும் கடன்படாதீர்கள்' என்று நாளைய முதல் வாசகத்தில் (உரோ 13:8-10) அறிவுறுத்தும் பவுல், 'ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதே நீங்கள் செலுத்த வேண்டிய ஒரே கடனாய் இருக்கட்டும்' என்கிறார்.

இன்று நான் எடுக்கும் முடிவு இதுதான்.

நான் கோபுரம் கட்டப்போவதில்லை. போருக்கும் செல்லப்போவதில்லை.

ஆனால் நான் அவரைப் பின்பற்ற 'ஆம்' என்று சொல்லிவிட்டேன். இந்தப் பயணத்தில் என்மேல் இருக்கும் ஒரே கடன் அன்பு. என் அன்பிற்குரியவர்களிடம் நான் பேசும் சொற்களை, செய்யும் செயல்களை, நிகழ்த்தும் பரிமாற்றங்களை கட்டடம் கட்டவும், போருக்கும் செல்லவும் பயன்படுத்தும் அறிவைப் பயன்படுத்தி அமர்ந்து, ஆராய்ந்து செய்வேன்.


3 comments:

  1. கண்டிப்பாக்ப் போருக்குச் செல்பவரும், கட்டடம் கட்டுபவரும் தங்கள் இலக்கின் இறுதியை உட்கார்ந்து யோசிக்க வேண்டும் தான்.அது தேவையும் கூட.ஆனால் அன்பு ஒரு அறிவுப் பூர்வமான செயல் என்பதில் நான் தந்தையிடமிருந்து வேறுபடுகிறேன்.யாரை நேசிக்கிறோம்; எதற்காக நேசிக்கிறோம் என்று தெரியாமல் வருவதுதான் அன்பு.என்று ' அறிவு' என்ற ஒன்று அங்கே நுழைகிறதோ அங்கே அன்பு மறைந்து இன்ன பிற விஷயங்கள் நுழைந்து விடுகிறது. ஆனாலும் தந்தையின அந்த இறுதி வரிகள் " நான் அவரைப்பின்பற்ற 'ஆம்'என்று சொல்லி விட்டேன்.இந்த பயணத்தில் என் மேல் இருக்கும் ஒரே கடன் அன்பு.என் அன்பிற்குரியவர்களிடம் நான் பேசும் சொற்களை,செய்யும் செயல்களை,நிகழ்த்தும் பரிமாற்றங்களை கட்டடம் கட்டவும்,போருக்குச் செல்லவும் பயன்படுத்தும் அறிவைப் பயன்படுத்தி அமர்ந்து,ஆராய்ந்து செய்வேன்"... இதில் வரும் 'அறிவைப்பயன்படுத்தி' எனும் வார்த்தைகளை நீக்கி ஒத்துக்கொள்கிறேன்.தந்தை மன்னிக்கவும்."கண்டிப்பாக நாம் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதே நாம் செலுத்த வேண்டியஒரே கடன்" ஏற்றுக்கொள்ள வேண்டிய வார்த்தைகளே! தந்தையின் நேற்றைய சோக இராகத்துக்கும் இன்றைய அன்பின் இராகத்துக்கும் எத்தனை வித்தியாசம்! இறைவனுக்கும் நன்றி!தந்தைக்குப் பாராட்டு!!!

    ReplyDelete
  2. என் பாச தந்தைக்கு வணக்கம்."அறிவுப்பூர்வமான" இந்த்தப்பதிவு ஒரு அற்புதமான பதிவு . ஏனென்றால் அன்பை பிறர்க்கு அல்லது தன் மக்களுக்கு பகிர்ந்த ஒருவரால் மட்டுமே அன்பை பற்றி கூறமுடியும்.அதில் தந்தை ரொம்ப கெட்டிக்காரர். தூய பவுல் 'ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதே நீங்கள் செலுத்த வேண்டிய ஒரே கடனாய் இருக்கட்டும்' என்கிறார். இதை நான் அடிக்கடி படித்ததுண்டு எனக்கு பிடித்த வார்த்தைகள் கூட . ஆக, ஆம் என்று கூறி ஆண்டவரை நோக்கி பயணம் செய்து கொண்டிருக்கும் நான் இந்த பயணத்தில் சந்த்திப்பவர்களை குழந்தையை போன்று கள்ளம் கபடம் இல்லாத அன்பை பிறர்க்கு காட்டி அறிவுபூர்வமாக வாழ அறிவுரை கூறிய தந்தைக்கு நன்றிகள். பாராட்டுக்கள் .

    ReplyDelete