Monday, November 16, 2015

குட்டையாய்

'ஏனெனில் சக்கேயு குட்டையாய் இருந்தார்.' (காண் லூக்கா 19:1-10)

குருமடத்தில் பயின்றபோது எப்போதெல்லாம் இந்த வாசகம் வாசிக்கக் கேட்பேனோ, அப்போதெல்லாம் ரொம்ப கூச்சமாக இருக்கும். 'குட்டையாய்' இருத்தல் எனக்கு அப்போது பிடிக்கவில்லை. நான் இதைக் கண்டுகொள்ளாமல் இருந்தாலும், இந்த வாசகம் வாசித்தபின் சாப்பாட்டு அறையில் சில 'வளர்ந்தவர்கள்' என்னைப் பார்த்து, 'இன்று உன்னுடைய வாசகம்' என்று கேலி செய்திருக்கிறார்கள். சிலர் என்னை 'சக்கேயு' என்றும் அழைப்பார்கள்.

குட்டையாய் இருப்பது பற்றி இப்போது எனக்கு எந்த வருத்தமும் இல்லை.
எப்படி வருத்தம் இல்லை என்று சொல்ல முடியும்?

பாலசந்தரின் 'இரு கோடுகள்' தத்துவம்தான். ஒரு கவலையைவிட பெரிய கவலை வந்துவிட்டால் இந்த ஒரு கவலை சின்னதாகிப்போய்விடும்.

அப்படி என்ன இப்போ பெரிய கவலை என்று கேட்காதீர்கள். அப்படி ஒன்றும் இல்லை.

நான் குட்டையாகப் பிறந்ததற்கு நான் பொறுப்பல்லவே.

ஜீன்களின் தவறுக்கு நான் என்ன செய்ய முடியும்?

சக்கேயுவும், இயேசுவும் ஒரே வயதினராகத்தான் இருந்திருக்க வேண்டும். குட்டையாய் இருந்தாலும் ஆளு ரொம்ப கறாரான ஆள். குட்டையாய் இருப்பவர்கள் எல்லாம் ரொம்ப கறாரானவர்கள் என்பதற்கு வரலாறும் சான்று பகர்கிறது: நெப்போலியன், சார்லி சாப்ளின், ஹிட்லர், தொன் போஸ்கோ.

அவர் பெரிய புத்திசாலியாகவும் இருந்திருக்க வேண்டும். உரோமையர்களுக்கு கீழ் வேலை பார்ப்பது அவ்வளவு எளிதான காரியமன்று.

இயேசுவைப் பார்க்க வேண்டும் என ஆவல் கொள்கிறார்.

அதற்கான தடைகளை தானே வெல்கின்றார்.

இயேசுவைக் கண்டவுடன் மெய்மறந்து போகின்றார்.

பாதியைக் கொடுக்கிறேன். நாலு மடங்கு கொடுக்கிறேன். என அப்படியே எல்லாவற்றையும் அள்ளிக் கொடுக்கின்றார்.

சக்கேயுவின் துணிச்சல் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது.

கடவுளுக்கு கொடுப்பது என்று சொல்வதைவிட, அவர் 'அள்ளி வீசுகிறார்' என்றே சொல்வேன்.

நான் புனித நாடுகள் பயணத்தின்போது எரிக்கோவில் இருக்கும் சக்கேயு ஏறிய மரத்திற்குச் சென்றேன். அந்த இடத்தில் வளரும் மரம் இன்னும் குட்டையாகவே இருப்பது ஆச்சர்யம்.

குட்டையும், குட்டையும் சேர்ந்தது நிறைவான மீட்பிற்கு வழிவகுத்தது.


3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. புன்னகையை வரவழைக்கும் ஒரு பதிவு.தந்தையே! தாங்கள் குருமடத்தில் இருந்தபோது சில 'வளர்ந்தவர்கள்' தங்களை 'சக்கேயு' என்று அழைத்தது, தாங்கள் உயரம் குறைவாயிருப்பது குறித்து தங்களுக்குக் கவலை இல்லை என்பது எல்லாம் சரிதான்.ஆனால் தங்களின் உயரக்குறைவுக்குக் காரணம் 'ஜீன்ஸ்'களின் தவறு என்று எப்படிச் சொல்ல முடியும்? அமைப்பு என்று சொல்லலாமே' வரலாறு படைத்த நெப்போலியன்,சார்லிசாப்ளின்,ஹிட்லர்,தொன்போஸ்கோ போன்றவர்களின் வரிசையில் வரும் தங்களுக்கு இறைவன் உடம்பெல்லாம் 'மூளையாக' வைத்திருக்கிறார் என்பது பெருமைக்குரிய விஷயமில்லையா? உயரம் குன்றிய சக்கேயுவுக்குத் துணிச்சலையும்,அள்ளிக் கொடுக்கும் குணத்தையும் இறைவன் அளித்துள்ளார் என்பது அவர் தன் மக்களிடம் காணப்படும் எந்தக் குறைக்கும் ஈடு செய்கிறார் என்றுதானே அர்த்தம்? "குட்டையும்,குட்டையும் சேர்ந்தது நிறைவான மீட்பிற்கு வழி வகுத்தது".. ..நிறைவான,அழகானதொரு முடிவைத் தந்த தந்தைக்கு ஒரு சபாஷ்!!!

    ReplyDelete
  3. என் பாச தந்தைக்கு வணக்கம்."குட்டையாய்" என்ற தலைப்பே அமர்க்களமாக இருக்கிறது .ஏனென்றால் நீங்கள் குறையை கூட சில நேரங்களில் நிறைவாக காண்பித்துவிடுவீர்கள். கடவுளுக்கு கொடுப்பது என்று சொல்வதைவிட, அவர் 'அள்ளி வீசுகிறார்' என்றே சொல்வேன்.இதில் சக்கேயுவின் துணிச்சலை மிக அழகாக பாராட்டியுள்ளீர்கள். நாங்களும் இந்த துணிவுடன் எங்கள் வாழ்வில் இறைவனை தழுவ வேண்டுங்கள். தந்தைக்கு நன்றியும் பாராட்டுக்களும் !

    ReplyDelete