Sunday, November 29, 2015

படிக்கட்டு

நாளை திருத்தூதர் அந்திரேயாவின் திருநாள்.

இவர் சீமோன் பேதுருவின் சகோதரர். அண்ணனா? தம்பியா? என்று தெரியவில்லை.

'நம்பிக்கை கொள்ளாமல் எப்படி மன்றாடுவார்கள்?

கேள்வியுறாமல் எப்படி நம்புவார்கள்?

அறிவிக்கப்படாமல் எப்படி கேள்வியுறுவார்கள்?

அனுப்பப்படாமல் எப்படி அறிவிப்பார்கள்?'

(காண் உரோ 10:9-18)

நாளை முதல் வாசகத்தில் பவுல் பயன்படுத்தும் இலக்கிய நடையின் பெயர் 'படிக்கட்டு' (Staircase Rhetoric). அதாவது, முதல் வாக்கியத்தின் முதல் வார்த்தை அடுத்த வாக்கியத்தின் இறுதி வாக்கியமாக இருக்கும். இது ஒரு வகையான பேச்சு நடை. இந்த நடையில் ஒருவர் பேசும்போது, பேசுபவரும் தான் பேச வேண்டியதை மறந்துவிடாமல் பேசுவார். கேட்பவரும் எளிதில் நினைவில் கொள்வார்.

நாங்கள் திருத்தொண்டராகும்போது நடைபெற்ற சடங்கிலும், ஆயர் எங்கள் கையில் விவிலியத்தைக் கொடுத்து இதே போல ஒரு படிக்கட்டு நடை வாக்கியத்தைச் சொல்வார்:

'வாசிப்பதை நம்பு.

நம்புவதை போதி.

போதிப்பதை வாழ்ந்துகாட்டு'

இதில் நடை 'கண்ணாடியின் பிம்பம்போல' திரும்பி நிற்கிறது. ஒரு வாக்கியத்தின் கடைசி வார்த்தை அடுத்த வாக்கியத்தின் முதல் வார்த்தையாக இருக்கிறது.

இவ்வகை நடையில் உள்ள ஆபத்து என்னவென்றால், ஒரு வார்த்தை புரண்டாலும் அர்த்தம் கிடைக்காமல் போய்விடும்.

திருத்தூது பணி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த சீடர்களின் பணி மட்டுமல்ல.

ஒவ்வொருவரும் படிக்கட்டு போல வரும் இந்தப் பணியில் நமக்கு உரிய அளவில் திருத்தூது பணி செய்வது அவசியம்.

'தீமைகளை விலக்கி, நன்மைகளைக் கற்றக்கொள்வது' என தனிநபர் வாழ்வு சார்ந்ததும் திருத்தூதுப்பணியே.


3 comments:

  1. திருவருகைக் காலத் தொடக்க நாளில் அழகானதொரு பதிவு.புனித பவுல் அடிகளாரும்,தந்தையைத் திருத்தொண்டாராக்கிய ஆயரும் என்ன நினைத்து அந்த வார்த்தைகளைக் கூறினார்களோ தெரியவில்லை...தந்தை அவற்றைத் தம் அழகு தமிழில் 'படிக்கட்டுகளாகவும்', கண்ணாடி பிம்பமாகவும் மாற்றித்தந்துள்ளார்.நாம் ஒவ்வொருவருமே 'திருத்தூதுப்பணி' செய்ய வேண்டியதன் அவசியத்தை முன் வைப்பது மட்டுமின்றி, அதை எப்படி செய்வது என்பதையும் தந்தை குறிப்பிடுகிறார்." நற்செய்தி வாசிப்போரின் பாதங்கள் எத்தனை அழகானவை!" என வர்ணிக்கிறது விவிலியம்.நாமும் தீமைகளை விலக்கி,நன்மைகளைக் கற்றுக்கொள்வதன் மூலம் ஒவ்வொரு படிக்கட்டாக ஏறலாமே! கிறித்து பிறப்புக்கு நம்மைத் தயாரிக்க திருச்சபை அழைப்பு விடுக்கும் இந்நேரத்தில் உரிய முறையில் தயார் செய்து அவர் பிறக்கும் அன்று படிக்கட்டுகளின் இறுதிப்படியைக் கடந்து அவரைத் தொட்டு விடலாமே! திருவருகைக் காலத்தின் முதல் நாளான இன்று இப்படி ஒரு அழகான பதிவைத் தந்த தந்தைக்கு என் நன்றிகள்!!!

    ReplyDelete
  2. மன்னிக்கவும் சிறு பிழைக்காக....நற்செய்தியை அறிவிப்போரின் ( வாசிப்போர் அல்ல)பாதங்கள் எத்தனை அழகானவை என்றிருந்திருக்க வேண்டும்...

    ReplyDelete
  3. தந்தைக்கு வணக்கம். திருவருகை காலத்திற்கு ஏற்ற பதிவு.
    'வாசிப்பதை நம்பு.

    நம்புவதை போதி.

    போதிப்பதை வாழ்ந்துகாட்டு'

    அருள்நிலையில் உள்ளவர்கள் மட்டும் தான் இதன் படி வாழ வேண்டும் என்பது இல்லை.மாறாக உலகத்தில் உள்ள எல்லோரும் இந்த மூன்று படிக்கட்டு நடைமுறை வாக்கியங்களை பயன்படுத்தினாலே போதும் உலகத்தில் பிரச்சனையே இருக்காது.
    தந்தைக்கு நன்றியும் பாராட்டுக்களும்!!!

    ReplyDelete