Tuesday, November 24, 2015

வேறோர் கை

ஆங்கிலத்தில் 'the writing on the wall' என்று ஒரு சொலவடை (idiom) உண்டு.

இதற்கு இரண்டு அர்த்தங்கள்:

அ. ஒளிவு மறைவு இல்லாதது. எல்லாருக்கும் தெரிந்த ஒன்று. எகா. Jeya is the CM of TN is a writing on the wall.

ஆ. கெட்டது நடக்கப் போகும் என்ற ஒரு எச்சரிக்கை. எகா. It is the writing on the wall that the Dravidian parties will fail miserably in the forthcoming poll.

இந்த சொலவடை உருவாவது நாளைய முதல்வாசகத்தில்தான் (காண். தானி 5:1-28).

நெபுகத்னேசர் இறந்துவிட்டார். அவரது மகன் இப்போது ஆட்சி செய்கிறான். தன் அப்பா எருசலேம் ஆலயத்திலிருந்து திருடி வந்த பொன் மற்றும் வெள்ளிப் பாத்திரங்களில், தானும், தன் மனைவியரும் மது அருந்துகின்றனர். இப்படி மது அருந்திக் களித்துக்கொண்டிருந்தபோது அவர்களுக்கு எதிரே இருந்த சுவற்றில் ஒரு மனிதக் கை தோன்றி, விரல்களே பேனா போல மாறி எழுதத் தொடங்குகிறது.

(ஒருவேளை இதிலிருந்துதான் டச் ஸ்க்ரீன் தொழில்நுட்பம் அல்லது ஆப்பிள் iபென்சில் உருவாகியிருக்குமோ!)

அந்த வார்த்தைகளுக்கு விளக்கம் சொல்ல தானியேல் அழைக்கப்படுகிறார்.

அப்பா இறந்து மகன் ஆட்சிக்கு வந்துவிட்டான்.

ஆனால் தானியேல் மட்டும் இன்னும் இளமையாகவே காட்டப்படுகின்றார். தானியேலின் நூல் முழுவதும் அவருக்கு ஒரே வயது இருப்பதுபோலவே காட்டப்பட்டுள்ளது. எல்லாருக்கும் வயசானாலும் ரஜினி காந்துக்கு வயசாகாதுல. அது மாதிரி.

மேனே, தேகேல், பார்சின் (முடித்தார். நிறுத்தார். பிரித்தார்)

இந்த மூன்று வார்த்தைகள்தாம் எழுதப்பட்டாலும், தானியேலின் விளக்கம் என்னவோ ரொம்ப நீளமாக இருக்கிறது.

இவற்றில் இரண்டாம் உருவகம் எனக்குப் பிடித்திருக்கிறது.

'நீர் தராசில் நிறுக்கப்பட்டீர். எடையில் மிகவும் குறைந்துள்ளீர்'

வாழ்க்கையில ஒன்னு கவனிச்சீங்களா. நம்ம ஒன்னு வாங்கணும்னு நினைச்சா அந்தப் பொருள் நம்ம கண்ணுல பட்டுக்கொண்டே இருக்கும். கடந்த வாரம் எனக்கு ஒரு 'வெயிங் ஸ்கேல்'  வாங்கணும் என்று ஆசை. எந்தப் பக்கம் திரும்பினாலும் வெயிங் ஸ்கேல்தான் கண்ணுக்குத் தெரியுது.

நேற்று என் நண்பி ஒருத்தி தான் புதிதாக வெயிங் ஸ்கேல் ஒன்று வாங்கியிருப்பதாகவும், ஆன்லைனில் மலிவு விலையில் கிடைத்ததாகவும் சொன்னாள். மலிவாக கிடைத்தால் சரியான எடை காட்டாது என்று அவளிடம் சொன்னேன். நம் எடை அதிகரித்தால் நமக்கு இயல்பாகவே தெரிந்துவிடும். நம் காலணி, ஆடைகள், ஏன் நடக்கும் வேகம் எல்லாமே நம் எடை கூடியிருக்கிறதா, குறைந்திருக்கிறதா என்று நமக்குச் சொல்லிவிடும். அப்புறம் எதுக்கு ஸ்கேல்?

கடவுளின் தராசு மேடையில் பாவம் இந்த அரசன் எடைகுறைந்த குழந்தையாக இருக்கிறான்.

கடவுள் உடலின் எடையை நிறுப்பாரா? அல்லது உள்ளத்தின் எடையை நிறுப்பாரா?

வழக்கமாக எடை கூடினால்தான் ஆபத்து.

ஆனால் இங்கே என்னவொரு விந்தை. எடை குறைந்தால்தான் ஆபத்து.

ஆக, நமக்கு எடை கூடினால் கவலைப்பட வேண்டாம்.

இந்த அரசனிடம் அப்படி என்ன குறைந்தது?

கடவுளுக்குரிய பாத்திரத்தை மதுக் கோப்பையாக மாற்றினான்.

இதுதான் அவன் செய்த பெரிய தவறு. இதுதான் அவனது எடையைக் குறைத்தது.

அதாவது, 'மேன்மையானதை மேன்மையானதாக வைக்கத் தவறுவது' பெரிய குற்றம்.

கடவுளுக்கு அருகில் இருப்பது கடவுளுக்கு அருகில்தான் இருக்க வேண்டும். கடவுளின் நியாயம் சரிதானே.

'சொன்னது நீ தானா' (திரைப்படம்: நெஞ்சில் ஓர் ஆலயம், 1962) என்று தொடங்கும் பாடல் நினைவிற்கு வருகிறது.

அதில் ஒரு வரி வரும்:

'தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை
தெருவினிலே விழலாமா
தெருவினிலே விழுந்தாலும்
வேறோர் கை தொடலாமா'

எருசலேம் ஆலயத்தில் இருந்த கடவுளின் பாத்திரத்தை அரசனின் கை தொட்டதுதான் அரசனின் எடைக்குறைவுக்கு காரணம்.

வேறோர் கை தொட்டால், கடவுளின் கை வந்து நம் முன் எழுதும்!


2 comments:

  1. தந்தைக்கு வணக்கம்.இன்றைய பதிவு செம்மையாக இருக்கிறது.ஆரம்பமும்,முடிவும் ரொம்ப அமர்க்களமாக இருக்கிறது.என்னை தொட்ட வரிகள் மேன்மையானதை மேன்மையானதாக வைக்கத் தவறுவது பெரிய குற்றம்.நன்றாக சொன்னீர்கள். புதிய ஏற்பாட்டில் இயேசு கடவுளுக்கு உரியதை கடவுளுக்கும்,செசார்க்கு உரியதை செசார்க்கும் கொடுங்கள் என்கிறார்.இதை போன்றே கடவுளுக்கு அருகில் இருப்பது கடவுளுக்கு அருகில்தான் இருக்க வேண்டும் என்று தந்தை ஏசுவும் கூறுகிறார். நியாயமானதே.மேலும், வேறோர் கை தொட்டால், கடவுளின் கை வந்து நம் முன் எழுதும் என்ற வரிகள் மூலம் கடவுள் பயத்தை விதைத்த தந்தைக்கு நன்றியும் பாராட்டுக்களும்!!!

    ReplyDelete
  2. மிக மிகத் த்த்ரூபமானதொரு பதிவு.நான் பள்ளிப்பருவத்தில் ஞானோபதேச வகுப்பில் என்னை வறுத்தெடுத்த வராத்தைகள் தான் சுவற்றில் எழுதப்பட்ட இந்த மூன்று வார்த்தைகள்.அப்பொழுது புரியாதவை...ஏன் வாயில் கூட நுழையாதவை இன்று புரிகிறதுகடவுளின் தராசு மேடையில் இந்த அரசன் தான் செய்த தவறினால் எடை குறைந்து காணப்படுகிறார். உலகத்தாரின் கண்களுக்கு எடை குறைதல் என்பது இன்றைய எதிர்பார்ப்பாயிருப்பினும் இங்கு அரசனின் எடைகுறைப்பு எதிர்மறையாக்க் காட்டப்பட்டிருப்பதைப் பார்க்கும்போது " என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்கள் அல்ல; என் வழிகள் உங்கள் வழிகள் அல்ல" என்ற வரிகள் தான் ஞாபகத்திற்கு வருகின்றன.கண்டிப்பாக....இறைவனுக்குரியதை இறைவனுக்கும்,செசாருக்குரியதை செசாருக்கும் செலுத்துவதே மரபு என்றிருக்கும்போது கடவுளுக்குரிய பாத்திரத்தை மதுக்கோப்பையாக மாற்றுவதும்," மேன்மையானதை மேன்மையானதாக வைக்கத்தவறுவதும் பெரிய குற்றமில்லையா?" இன்றையப் பதிவின் பின்னனியில் மீண்டும் ஒரு அழகான திரைப்படத்தின் அழகான வரிகளைத் தந்தை கொடுத்திருப்பது நேற்றைய மையக்கருத்தான 'எது எங்கே இருக்க வேண்டுமோ,அது அங்கே தான் இருக்க வேண்டும் ' என்பதை மீண்டும் நினைவூட்டுகிறது. " தினம் ஒரு அர்த்தமுள்ள பாடல்".... அதுவும் கூட அழகாகத் தான் இருக்கிறது.தந்தைக்குப் பாராட்டுக்கள்!!!

    ReplyDelete