Sunday, August 9, 2015

இன்னும் யோசிக்கிறேன்!

'ஃபாதர் வணக்கம். என் பேரு குமாரு! எனக்கு சொந்த ஊரு கரூருக்குப் பக்கத்துல உள்ள ஒரு கிராமம். எங்க அம்மாவ இந்தக் கோவிலுக்கு பக்கத்துல இருக்கிற ஆஸ்பத்திரியில சேர்த்திருக்கோம். 'டாக்டர் வர்ற நேரம். யாரும் இங்க இருக்கக் கூடாது!'னு சொன்னதால, அப்படியே வெளியில வந்து உங்க கோயிலு முன்னால நின்னுகிட்டு இருந்தேன். 'வானிலிருந்து இறங்கி வந்த உணவு' அப்படின்னு ஏதோ சொல்லிட்டு இருந்தீங்க. இடையிடையே 'நற்கருணை,' 'பெரிய வியாழன்', 'இராவுணவு', 'பிரசன்னம்' என்றெல்லாம் சொன்னீங்க. ஆனா, எனக்கு எதுவுமே புரியல. ஆங்...சொல்ல மறந்துட்டேனே...நான் ஒரு இந்து. எங்க குலதெய்வம் கற்குவேல் அய்யனார். எனக்குக் கொஞ்சம் புரியற மாதிரி சொன்னீங்கனா நல்லா இருக்கும்னு நினைக்கிறேன். உங்களுக்கு நேரமிருந்தா கொஞ்சம் சொல்றீங்களா!?'

இப்படி ஒரு குமாரு என்னிடம் கேட்டால் நான் என்ன பதில் சொல்வேன்?

'வானிலிருந்து இறங்கி வந்த உணவு' என்ற இயேசுவின் வார்த்தையை 'நற்கருணை' என என் மறையுரையில் எழுதியிருந்தேன். அதை திரும்ப வாசித்தபோது இல்லாத ஒன்றை நான் அதில் புகுத்திவிட்டேனோ என எனக்குத் தோன்றியது. 'நற்கருணை' என்ற வார்த்தை இயேசுவின் இந்தப் போதனையில் இல்லை. இயேசு நற்கருணையை ஏற்படுத்தும் நிகழ்வில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளுக்கும், யோவானின் வார்த்தைகளுக்கும் வித்தியாசம் இருக்கிறதா எனப் பார்த்தேன். 'அப்பத்தை' எடுத்து என்று சொல்லும் இடத்தில் மத்தேயு (26:26-30), மாற்கு (14:22-26)), லூக்கா (22:15-20), பவுல் (1 கொரி 11:23-25) 'அர்டோஸ்' என்ற கிரேக்க வார்த்தையைப் பயன்படுத்துகின்றனர். யோவானும் இதே வார்த்தையைத் தான் யோவான் 6ல் பயன்படுத்துகின்றார். ஆக, ஒரு குழப்பம் நீங்கியது.

'இது என் உடல்' என்று இயேசு சொல்லும் இடத்தில்தான் பிரச்சினை இருக்கிறது. மத்தேயு, மாற்கு, லூக்கா மற்றும் பவுல் ஆகியோர் 'உடல்' என்பதற்கு 'soma' என்ற கிரேக்க வார்த்தையைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் யோவான் இந்த வார்த்தையை தன் நற்செய்தியில் 6 முறை பயன்படுத்தினாலும், இந்த வார்த்தையை மிகக் கவனமாகப் பயன்படுத்துகிறார். இந்த 6 இடத்திலும் இயேசுவின் உண்மையான தொட்டுணரக்கூடிய உடலைக் குறிக்க மட்டுமே பயன்படுத்துகின்றார். 'வார்த்தை மனுவுருவானார்' (1:14) என்ற இடம் தொடங்கி, 'வாழ்வுதரும் உணவு நானே' என்று சொல்வது வரை 'sarx' (சதை) என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றார்.

ஆக, வானினின்று வந்த அப்பம் வேறு, நற்கருணை வேறு என்பதற்கு இது முதல் வாதம்.

இரண்டாவதாக, 'நானே உணவு' என்று சொல்லும் இடத்திலெல்லாம், இயேசு 'வானின்று இறங்கி வந்த' என்ற சின்ன அடைமொழியையும் சேர்த்துக் கொள்கின்றார். மேலும், அடைமொழியைச் சேர்த்ததோடல்லாமல், மன்னா என்ற வானின்று வந்த உணவோடு என்னைக் குழப்பிக் கொள்ளாதீர்கள் என்று சொல்வது போல, ஒவ்வொரு முறையும் 'உங்கள் முன்னோர் உண்ட உணவு போல அல்ல' என்றும் விளக்கம் தருகின்றார். இயேசு நற்கருணையை ஏற்படுத்தும் நிகழ்வில், 'இது என் உடல்' என்று சொல்கிறாரே தவிர, 'வானின்று இறங்கி வந்த உடல்' என்றோ, 'வானிற்கு ஏறிச்செல்லும் உடல்' என்றோ சொல்லவில்லை. ஆக, யோவான் 6க்கும் நற்கருணை ஏற்படுத்தும் நிகழ்விற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

மூன்றாவதாக, யோவான் தன் நற்செய்தியை எழுதிய காலத்தில் நற்கருணை பற்றிய இறையியல் வளரவில்லை. கத்தோலிக்கத் திருஅவை நற்கருணையை 'உணவு, தியாகப்பலி, உண்மையான பிரசன்னம்' ('Thanksgiving meal, Sacrificial memorial and Real presence', cited in Catechism of the Catholic Church (1992), Part II, Section 2, Chapter One, Article 3) என்று வரையறை செய்கிறது. இந்த மூன்று வார்த்தைகளுக்கும் அடிப்படை யோவான் 6தான். ஆக, முதலில் பைபிள், பின் இறையியல் என்றுதான் வளர்ச்சி பெற்றிருக்கிறதே தவிர, முதலில் இறையியல், பின் பைபிள் என்று வளர்ச்சி பெறவில்லை. மேலும், நற்செய்தி நூல்களில் இறையியலாக்கம் இருந்தாலும், அவர்களின் நோக்கம் 'வருங்கால' திருச்சபைக்கு ஒரு இறையியல் புத்தகம் வழங்க வேண்டும் என்பது நோக்கம் அல்ல. மாறாக, அன்று அவர்கள் நடுவில் இருந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வு காண்பதற்காகத்தான் எழுதப்பட்டது.

ஆக, யோவான் 6ஆம் அதிகாரத்தை நற்கருணையோடு ஒப்பிடுவது ரொம்ப சிம்ப்ளிஸ்டிக்காக இருக்கும் என நினைக்கிறேன்.

நற்கருணை பற்றியே தெரியாத ஒருவருக்கு இந்த நற்செய்தியை எப்படி புரிய வைப்பது?

இன்னும் யோசிக்கிறேன்!



2 comments:

  1. ரொம்ப சிம்பிள்! அந்த கரூர் பக்கதுத்த்து கிராமத்து மனிதனைப் பார்த்து ' இது எங்கள் பிரசாதம்' எனக்கூறியிருந்தால் அவன் உங்களுக்கு ஒரு மரியாதை கலந்த கும்பிடு போட்டுச்சென்றிருப்பான்,படித்த நமக்குத்தான் பல சமயங்களில் இது யோவானா,லூக்காவா,பவுலா,அர்டோஸா,சோமாவா,சார்க்ஸா எனும் சந்தேகமெல்லாம்.படிக்காத பாமரமக்களுக்கு ஒரு விஷயம் 'புனிதம்' எனில் அது 'புனிதம்' தான் எக்காலமும்.அதற்குமேல் அப்பீலே இல்லை.என்குத்தேவை எல்லாம் ' திவ்ய நற்கருணை' உட்கொள்கையில் என்ன செய்கிறேன் என்பது மட்டுமே....அதன் பின்புலம் இல்லை.விஞ்ஞானம் எத்தனை முன்னேறினும் 2+2=4 தானே! 6 இல்லையே?சில சமயங்களில் நமக்கெல்லாம் தேவை அந்தக்கிராமத்து மனிதனின் 'சிம்ப்ளிசிட்டி' மட்டுமே என நினைக்கிறேன்.என் கூற்றில் ஏதும் தப்பில்லையே ஃபாதர்? விஷயங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் தங்களின் பெரு முயற்சிக்கு என் பாராட்டுக்கள்!!

    ReplyDelete
  2. a. I loved the way "Karunanidhi" felt distraught and anxiety-ridden over the inquiring mind of "Kumaru". That sense of backwardness and diffidence, despite many Biblical references, Conciliar documents and Papal teaching is very valid. In fact, I congratulate that Fr Yesu, even as he is a doctoral candidate, ends the reflection by adding, "I keep thinking..."! Haven't we alienated so many by our clarity and dogmas...perhaps?
    b. Permit me to differ from Ms Philo Arockiasamy: Is Mass-Eucharist and "Pazani / Thiruchendur Prasatham" identical? Does not such thinking pave the way for a mentality that average Christian is dull-minded, apathetic and simpleton? By that argument, did a St Paul or St Peter, St Luke or St James, the early writers write their writings to academician-Christians, and not to the commoners in the "first" communities?

    ReplyDelete