Monday, August 24, 2015

நத்தனியேல்

நாளை திருத்தூதரான பர்த்தலமேயுவின் விழாவைக் கொண்டாடுகிறோம்.

திருத்தூதர் பிலிப்புவின் நண்பரான இவரை நத்தனியேல் என அழைக்கிறார் நற்செய்தியாளர் யோவான். பர்த்தலமேயு என்ற அரமேய வார்த்தைக்கு 'தலமேய் என்பவரின் மகன்' என்பது பொருள். இது இவருடைய அடைமொழி அல்லது குடும்பப்பெயராக இருந்திருக்கும். நாளைய நற்செய்தி வாசகத்தில் (காண். யோவான் 1:45-51) இவரை நாம் நத்தனியேல் என்றே அறியப்பெறுகிறோம். 'நத்தனியேல்' என்ற எபிரேய வார்த்தைக்கு 'கடவுள் கொடுக்கிறார்' அல்லது 'கடவுளின் கொடை' அல்லது 'கடவுள் நமக்குக் கொடை' என்று பொருள் கொள்ளலாம். 

நாளைய நற்செய்தி வாசகம் பிலிப்புவுக்கும் நத்தனியேலுக்கும், நத்தனியேலுக்கும் இயேசுவுக்கும் இடையே நடக்கும் ஒரு உரையாடல்.

காட்சி 1: பிலிப்பு, நத்தனியேல். இடம். அத்திமரத்திற்கு அடியில். நேரம். நண்பகல்.

'நாங்கள் கண்டோம்!' என்று நாசரேத்தூர் இயேசுவைப் பற்றி தன் நண்பருக்கு பிலிப்பு அறிவிக்கின்றார். 'நாசரேத்தூர்ல இருந்து எப்புடிப்பா நல்லது வரும்?' என கிண்டல் செய்கிறார் நத்தனியேல். 'வா! பார்!' - என தன் நண்பரை இயேசுவிடம் அழைத்து வருகின்றார்.

காட்சி 2: நத்தனியேல், (பிலிப்பு), இயேசு. இடம். பாதசாரிகளின் நிழல்குடை. நேரம். மாலை.

ஏற்கனவே ஒருசிலரோடு பயணியர் நிழற்குடையின்கீழ் அமர்ந்திருக்கும் இயேசு, நத்தனியேலின் வருகையைப் பார்த்து, 'இதோ! கபடற்ற இஸ்ரயேலர் வருகிறார்!' என்கிறார். இயேசு சொல்வதைக் கேட்டுவிட்டு நத்தனியேல், 'என்னை எப்படி உமக்குத் தெரியும்?' என, இயேசுவோ, 'நீ அத்திமரத்தின்கீழ் இருக்கும்போதே நான் உன்னைக் கண்டேன்!'. 'அப்படியா! ரபி! நீரே இறைமகன்! நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்!' 'என்னப்பா! இதுக்கே இப்படி ஆச்சர்யப்படுற! இன்னும் பெரியவற்றை நீ காண்பாய்!'

இந்த உரையாடலில் 'காணுதல்', 'அத்திமரம்', 'இஸ்ரயேலர்', 'இறைமகன்', 'ரபி' என நிறைய உருவகங்கள் இருக்கின்றன. அவற்றை ஆராய்வதை விடுத்து, இந்த உரையாடலைப் படித்தவுடன் என் மனதில் தோன்றிய எண்ணங்களை மட்டும் நான் பதிவு செய்ய விழைகிறேன்.

1. நான் என் நண்பரிடம் என்ன பேசுகிறேன்? 

பிலிப்பு மற்றும் நத்தனியேல் என்ற நண்பர்களுக்கு இடையேயான உரையாடல் இயேசுவைப் பற்றி அல்லது 'மக்கள் எதிர்பார்த்த மெசியா' பற்றி இருக்கின்றது. இரண்டு விடயம் இங்கு: ஒன்று, இயேசுவைச் சந்தித்த ஒருவரால் இயேசுவைப் பற்றி மட்டும்தான் பேச முடியும். அந்த அளவுக்கு இயேசுவின் பிரசன்னம் அடுத்தவரை நிரப்பிவிடுகிறது. ஆக, இன்று நான் இயேசுவை நற்கருணையில் அல்லது இறைவார்த்தையில் அல்லது என் அயலாரில் பார்க்கிறேன் என்றால், நான் எந்த அளவுக்கு இயேசுவால் நிரப்பப்படுகிறேன். இரண்டு, நான் இயேசுவைப் பற்றி தயக்கம் இல்லாமல் என் நண்பர்களிடம் பேசுகிறேனா? அல்லது என் பேசுபொருள் என்னவாக இருக்கின்றது? 

2. நான் அகத்தைக் காண்கிறேனா, அல்லது புறத்தைக் காண்கிறேனா? 

இயேசுவோட வார்த்தையில் உள்ள நேர்முக ஆற்றலைப் (positive energy) பார்த்தீர்களா! நத்தனியேலைக் கண்டவுடன், 'இவரே கபடற்ற இஸ்ரயேலர்!' என்கிறார். இயேசுவும் கபடற்றவர்தான், இஸ்ரயேலர்தான். ஆனால், இவ்வளவு பெரிய வார்த்தைகளை தன்னைப் பற்றிச் சொல்வதற்குப் பயன்படுத்தாமல் தன்னைத் தேடிவரும் ஒருவரைப் பற்றிச் சொல்லப் பயன்படுத்துகின்றார். அது எப்படி இயேசுவால சொல்ல முடிஞ்சது? 'அத்திமரத்தின் கீழ் உன்னைக் கண்டேன்' என்று நத்தனியேலைத் தெரிந்த இயேசுவுக்கு, 'நாசரேத்தூரிலிருந்து நல்லது வரக்கூடுமா?' என்ற நத்தனியேலின் கிண்டல் அல்லது முற்சார்பு எண்ணம் (prejudice) தெரிந்திருக்கும்தானே! அப்படியிருந்தும் எப்படி மனதார பாரட்டுகின்றார். மெய்யியலில் essence மற்றும் accident என்று பொருளுக்கு இரண்டு கூறுகள் இருப்பதாகச் சொல்வார்கள். Accident மாறலாம். ஆனால் essence மாறுவதில்லை. இயேசு அப்படித்தான் நத்தனியேல் பேசிய வார்த்தைகளைப் (accident) பொருட்படுத்தவில்லை. அவரின் அகத்தின் இருக்கும் நபரை (essence) மட்டுமே பார்க்கின்றார். இன்று நான் மற்றவரிடத்தில் பார்ப்பது என்ன? Essence அல்லது accident?

3. இயேசு எனக்கு யார்? 

'யோசேப்பின் மகன் இயேசு' என்று பிலிப்பு சொன்னாலும், நத்தனியேல் இயேசுவிடம், 'நீரே இறைமகன்! நீரே இஸ்ரயேலின் அரசர்' என அறிக்கையிடுகின்றார். நாசரேத்தூர்க்காரர்தான! என்று நையாண்டி செய்தவர் எப்படி இவ்வளவு பெரிய அறிக்கை செய்கின்றார். விவிலிய ஆராய்ச்சியில் சொல்வார்கள். இனி வரும் யோவான் நற்செய்திப் பகுதி அனைத்தும் இந்த நத்தனியேலின் அறிக்கையின் விளக்கவுரைதான் என்று. இயேசு எனக்கு யார்? ஒரு பெயரா? அல்லது ஒரு கருத்தியலா? அல்லது ஒரு வரலாற்று நபரா? அல்லது என்மேல்கொண்ட அன்பிற்காக தன்னையே சிலுவையில் கையளித்து, உயிர்த்து, இன்றும் என்னுடன் உடன்வருபவரா? உள்ளத்தின் மௌனத்தில் ஒவ்வொருவரும் இதற்கு விடைகாணுதல் வேண்டும்.


3 comments:

  1. 15 at 10:06 PM
    "உள்ளத்தின் மௌனத்தில் ஒவ்வொருவரும் இதற்கு விடைகாணுதல் வேண்டும்."
    Most answers that seek and find in the silence of our searches, speeches and thoughts - those are only that matters most!
    Yet another thought:
    Nathaniel who was teasing, "Oh what good can come of?" by NOON
    gets a sort of epiphany about Jesus by EVENING.
    Interesting, Is it not?
    He is the iconic proof that between a noon and an evening Faith and its Persceptives can change.
    Hence, let us never be too much in a hurry to judge our sister and brothers...
    much less US.

    ReplyDelete
  2. ஒரு மேடைக்கடியில் அமர்ந்து நாடகம் பார்த்த உணர்வு.சேற்றிலிருந்து ஒரு செந்தாமரை பூக்குமெனில் " நசரேத்திலிருந்து ஏன் நல்லது வரக்கூடாது?" யோசித்து சொல்ல வேண்டியதொரு விஷயத்தைத் தடாலடியாய் அடித்து விடுகிறார் ந்த்தேனியேல். அதற்கு இயேசுவின் பதிலாய் வருவது ந்த்தேனியேலின் 'அகம்' மட்டுமே 'புறம்' அல்ல. எனக்காகத் தன்னையே துறந்த இயேசுவுக்கும் எனக்குமுள்ள உறவு என்ன? நானும் விடை தேடிக்கொண்டிருக்கிறேன் என் உள்ளத்தின் மௌனத்தில்.தேடுதலின் காரணியான தந்தைக்கு என் நன்றிகள்!!!

    ReplyDelete
  3. ஏசு தந்தையால் நத்தம்பட்டிக்கு நல்லது நடக்கிறது.இன்று இயேசுவால் நத்தானியேலுக்கும் நல்லது நடக்கிறது.என்ன ஒரு அருமையான நகழ்வு. இன்றைய நாளில் தந்தை அவர்கள் மிக அழகாக ஏசு எனக்கு யார் என்று ? கேட்டதோடு மட்டும்மல்லாமல் சிந்திக்கவும் வைத்துள்ளார்கள்.என்னை பொறுத்தவரை தூய உள்ளதோடு பிறரை அன்பு செய்யும் போது ஏசு எனக்கு நண்பராவர் மற்றும் என் வாழ்வின் எல்லாம் ஆவார்.ஆக,நாம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கண்ணால் காணாதவர்களை கூட கபடற்ற உள்ளத்துடன் அன்பு செய்ய வேண்டும் .இறைவா! கபடற்ற எதார்த்த உள்ளம் கொண்டு பிறரை அன்பு செய்யவும் இதன் மூலமாக நான் உன்னை காணவும் வரம் தாரும். இன்று எனக்கு நினைவுக்கு வரு ஒரு பஜன் என் வாழ்வில் என்றும் நீ ஏசுவே ! எல்லாமும் நீயே என் ஏசுவே இந்த பஜனை கேட்டு பாருங்கள் இயேசு யார் என்று விளங்கும் .தந்தைக்கு நன்றிகள்!

    ReplyDelete