Wednesday, August 19, 2015

அப்பா, மகள், ஆடையணியாத ஒருவன்

இன்னைக்கு சாயங்காலம் ஒரு வேண்டுதலோடு கோயிலுக்குப் போகும் என் அம்மா, 'ஆண்டவரே, நான் வேண்டுவது மட்டும் கிடைச்சுடுச்சுனா, நான் வீட்டிற்கு திரும்பும்போது என் வீட்டிலிருந்து எது முதலில் வெளியே வருகிறதோ, அதை நான் உனக்கு பலியாகக் கொடுக்கிறேன்!' என கடவுளுக்கு வாக்குறுதி கொடுக்கிறார் என வைத்துக்கொள்வோம். என் வீட்டில் கோழி, ஆடு, மாடு என நிறைய இருக்கிறது. அவர் கோவிலிலிருந்து வீட்டுக்கு வரும் வழியில் அவர் வேண்டியது கிடைத்துவிடுகிறது. நன்றிப்பெருக்கோடு, ஆனந்தக் கண்ணீரும் கண்களுமாய் அவர் திரும்பிக்கொண்டிருக்க, வீட்டிலிருந்து ஃப்ரஷ்ஷா குளித்து, பவுடர் அடித்து நான் வெளியே வருகிறேன். ''ஐயோ! தம்பி! நான் என் வீட்டிலிருந்து முதலில் வருபவதை கடவுளுக்கு பலியாக கொடுக்கிறேன்' என வேண்டிக்கொண்டேனே! உன்னையா நான் முதலில் வீட்டிற்கு வெளியே பார்க்க வேண்டும்! ஐயோ! உன்னைப் பலி கொடுக்க வேண்டுமே' என அழுகிறார். 'ஏம்மா! நீ என்ன லூசா? பலி கொடுக்கணும்! சாமி கேட்டுச்சுணு சொல்ற!' எனச் சொல்லிவிட்டு நான் வெளியே கிளம்பிப் போய்விடுவேன்.

நான் இருந்த இடத்தில் நீங்கள் இருந்தால் நீங்கள் என்ன சொல்லியிருப்பீர்கள்?

இப்படி ஒரு நிகழ்வுதான் நடக்கிறது நாளைய முதல் வாசகத்தில் (காண். நீத 11:29-39)

அம்மோனியர்களின் கைகளிலிருந்து இறைவன் தன் மக்களை விடுவித்துவிட்டார் என்று வீடு திரும்பிய தன் தந்தை இப்தாவை வரவேற்க கிண்ணரங்களுடன் பவனி வருகிறார் அவருடைய ஒரே கன்னி மகள். ஆனால், தன் தந்தையின் வாக்குறுதியை நிறைவேற்றப் பணிகின்றார்: 'நீங்கள் ஆண்டவருக்கு வாக்கு கொடுத்திருந்தீர்கள் என்றால் அதன்படியே எனக்குச் செய்யுங்கள்! ஆனால் என் கன்னிமை குறித்து நான் அழுது புலம்ப எனக்கு இரண்டு மாதங்கள் அவகாசம் கொடுங்கள்!'

அ. பெண்களின் நிலை. ஒரு சமுதாயத்தில் பெண்கள் எப்படி நடத்தப்படுகிறார்களோ, அதை வைத்தே அந்த சமூகத்தின் தரத்தை நாம் அளவிட முடியும். பெண்களுக்கு பாதுகாப்பு, மரியாதை என்று இருந்து, வன்முறை, தவறான பயன்பாடு இல்லாமல் இருந்தால் அந்த சமூகம் உயர்ந்த சமூகம். இப்படிப்பட்ட சமூகம்தான் சிலப்பதிகாரத்தின் காலத்தில் இருந்தது. ஆனால், இன்று நம் தமிழ் சமூகம் எப்படி இருக்கிறது என்பதை நாம்தான் சுயஆய்வு செய்து பார்க்க வேண்டும். நீதித்தலைவர்கள் நூலில் பெண்களின் நிலை 'கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாய்', முழுநிலவிலிருந்து தேய்பிறையாய் இருக்கிறது. பெண் நீதித்தலைவர் தெபோரா நீதிப்பொறுப்பு ஏற்கும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார். ஆனால் நாம் நூலைக் கடந்து செல்லச் செல்ல பெண்களின் நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. 'தன் வாய்க்கு வந்ததை வாக்காகச் சொல்லிவிட்டு அதற்காக தன் மகளை பலி கொடுக்கும்' இப்தா, 'பார்க்கிற பெண்ணையெல்லாம் அடையத் துடிக்கும்' சிம்சோன், 'விடிய விடிய வன்புணர்ச்சி செய்து கொல்லப்படும'; லேவியரின் மறுமனைவி என பெண்களின் முகம் சிதைந்து கொண்டே வருகிறது.

ஆ. அளவுகோல். இப்தா செய்தது சரியா? தவறா? என்று நாமும் 'நீயா-நானா' புரோகிராம் வைத்தால் நம் பதில் ஒவ்வொன்றாக இருக்கும். ஏறக்குறைய 4000 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு நிகழ்வை நாம் இன்றைய அளவுகோல் கொண்டு அளந்து, அவர்களை நல்லவர்கள் என்றும் கெட்டவர்கள் என்றும் தீர்ப்பிடுவது சால்பன்று. ஆண்டவருக்குக் கொடுக்கப்பட்ட வாக்கு அல்லது வாக்குறுதியை மேன்மையானதாகக் கருதினர் முதல் ஏற்பாட்டு மக்கள். ஆகையால், தாங்கள் அளிக்கும் வாக்குறுதியை எப்படியும் நிறைவேற்றிவிடுவார்கள். ஆக, ஒவ்வொன்றிற்கும் ஒரு விலை இருக்கிறது என்பதை நமக்குச் சொல்கிறது இப்தா நிகழ்வு. பாவம் இவர்! ஆண்டவரின் வாக்குறுதிக்காக தன் மகளையே இவள் விலையாகக் கொடுக்க வேண்டியதாயிற்று!

இ. 'கன்னிமை குறித்து துக்கம்!' - எபிரேய விவிலியத்தில் ஒரு புதிய கூறு உண்டு. அது என்னவென்றால், எப்போதெல்லாம் பெண்களைப் பற்றி அல்லது உடல்கூறு பற்றிச் சொல்கிறதோ அப்போதெல்லாம் அது இரண்டு வார்த்தைகளை தொடர்ந்து பயன்படுத்தும். உதாரணத்திற்கு, 'அவன் ஒரு ஊமை. அவனுக்கு பேச வராது' - இந்த வாக்கியத்தைப் பாருங்களேன். 'அவன் ஒரு ஊமை' என்றாலே 'அவனுக்கு பேச வராது' என்றுதான் அர்த்தம். ஆனால், விவிலியம் அதை இரண்டாம் முறையாக வேறு வார்த்தைகளில் திரும்பச் சொல்கிறது. (இந்தக் கூற்றை ஆய்வு செய்ய வேண்டும் என்பது எனது அடுத்த படிப்பின் நோக்கம்). 'அவள் அவருடைய ஒரே மகள்' என்று பதிவு செய்யும் விவிலியம், தொடர்ந்து, 'அவருக்கு வேறு மகனோ மகளோ இல்லை' என்கிறது (நீத 12:34). 'அவள் கன்னி' என்று சொல்லிவிட்டு 'அவள் ஆணுறவு கொள்ளவே இல்லை' என்கிறது (12:39). கன்னிமையோடு இறப்பது என்பது யூதர்களின் சமய மரபில் ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. மேலும் கன்னிமையை அவர்கள் பெரிய மதிப்பீடாகவும் பார்க்கவில்லை. 'நாசீர்' என்று கடவுளுக்கு அர்ப்பணம் செய்யப்பட்டவர்கள்கூட கன்னிமையோடு இருக்க வேண்டும் என்பது விதிமுறை அல்ல. இந்தப் பெண் கன்னிமை குறித்த துக்கத்தை எப்படி தன் தோழியரோடு கொண்டாடியிருப்பாள்? அதற்கு ஏன் இரண்டு மாதங்கள் தேவைப்பட்டன? 'இந்த இரண்டு மாதங்களில் அவள் ஏதாவது ஆணைக் கூடி உறவு கொண்டு கொஞ்சம் திருப்தி அடைந்திருக்கலாமோ!' என்று ஒரு குட்டி ஆசையும் எனக்கு இருந்தது! ஆனால், கன்னியாகவே இறக்கிறாள்! தன் இயல்பை அப்படியே கடவுளுக்கு கொடுக்க விழைந்தாரோ அவர்?

ஈ. ஆனால், இவரின் கன்னிமைக்கான துக்கம் என் மனதில் இன்னொரு உருவகத்தை எழுப்பியது. என்ன உருவகம் என்றால், அருட்பணி வாழ்விற்கு முன் திருத்தொண்டர் பணிக்கான வாக்குறுதியை நாங்கள் கொடுப்போம். அதில் முதல் வாக்குறுதி மணத்துறவு அல்லது கன்னிமை. இந்த வாக்குறுதி கொடுக்கும் முன் ஒன்று அல்லது இரண்டு மாதங்கள் எங்கள் நண்பர்களோடு தியானம் செய்வோம். ஆக, இப்தா என்பவர் என் மறைமாவட்ட ஆயர். தோழிகள் என்பவர்கள் என் நண்பர்கள். கன்னிமை என்பது மணத்துறவு. கன்னிமைக்கான துக்கம் என்பது இரண்டு மாத தியானம். கன்னிமையாக பலியாவது என்பது திருத்தொண்டர் பணிக்காக தன்னையே கையளிப்பது. மகள் என்பது நானும் என்னைப் போன்ற அருள்நிலை ஏற்பவரும். இன்று நாம் செய்யும் வழிபாட்டுக் கூறுகள் நாம் முதல் ஏற்பாட்டில் கடன் வாங்கியவைதாம். ஆக, நம் குருமடம் அல்லது குருத்துவப் பயற்சியும் முதல் ஏற்பாட்டுக் கூறுகளை உள்ளடக்கியிருக்கிறது.

உ. இப்தா தன் மகளையே பலியாக்கி தன் வாக்கை காப்பாற்றுகிறார் என்றால், நாளைய நற்செய்தி வாசகத்தில் (காண். மத் 22:1-14), 'விருந்துக்கு வருகிறேன்!' என்று வாக்குக் கொடுத்தவர்கள் அந்த வாக்கைக் காப்பாற்ற மறுக்கின்றனர். விருந்துக்கு வந்திருந்தவர்களில் ஒருவர் 'திருமண ஆடை' அணியாமல் வந்திருக்கிறார். இப்தாவின் மகளுக்கு அவளின் கன்னிமைதான் திருமண ஆடையோ? ஆகையால்தான், அதை அப்படியே அணிந்து கொண்டு பலியாவதில் அவர் பிரியமாக இருந்தாரோ? 'சாகத்தானே போகிறோம், எப்படியும் இருந்து அனுபவித்து விட்டு சாவோம்!' என்றல்லாமல், 'நாமதான விருந்துக்குப் போறோம். திருமண உடை முக்கியமா! எதைப் போட்டுட்டுப் போனா என்ன?' என்றல்லாமல் இருக்க நிறைய அர்ப்பண உணர்வும், துணிச்சலும் தேவைதான்போல!

4 comments:

  1. தந்தையே! தேவைதானா இப்படியொரு விபரீத ஆசை தங்களுக்கு? தன் வேண்டுதலை நிறைவேற்றிய ஆண்டவனுக்காக ஒரு தாய் தன் மகனைப் பலி கொடுக்க இது ஒன்றும் முதல் ஏற்பாட்டுக்காலம் இல்லையே! இது குறித்து மாறுபட்ட கருத்துகளிருப்பினும் தன் வேண்டுதலை சொன்னபடியே தன் ஆண்டவனுக்கு நிறைவேற்றிய இப்தா என் பார்வையில் உயர்ந்தே நிற்கிறார்.தன் மகளைப்பணயமாக வைக்கக்காரணம் அவர் தன்னை விட தன் மகளை அதிகமாக நேசித்ததாக இருக்கலாம்.ஆனால் அவரைவிட பன்மடங்கு அவர்மகள் என் பார்வையில் ஒரு வீரமங்கையாக வலம் வருகிறார்.வாழ்வையே சுவைத்தறியாத ஒரு கன்னிப்பெண் 'தந்தை சொல் மிக்க மந்திரமில்லை' எனும் வார்த்தைகளுக்கு புது அர்த்தம் வடிக்கிறார்.திருமண விருந்துக்கு எப்படிப்போனால் என்ன நினைப்பவர்களுக்கு மத்தியில் ' கன்னிமை' எனும் உன்னத ஆடையையும் சேர்த்தே பலியிடுவதைத் தந்தைத் தன் திருத்தொண்டர் பணிக்கான வாக்குறுதி ( மணத்துறவு) யுடன் ஒப்பிட்டிருப்பது என்னை சிலிர்க்க வைக்கிறது.தந்தையே பெருமை கொள்ளுங்கள்! நீங்களும் உங்களைப்போன்ற மற்ற அருட்பணியாளரும் 'வணங்கப்பட' வேண்டியவர்கள்!!!

    ReplyDelete
  2. E' molto bello e anche bei pensieri

    ReplyDelete
  3. இறைவன் தருகிற நிறைவான மகிழ்ச்சி, ஆறுதல், நிறைவு.. இவற்றை வேறு யாரும், எதுவும் தரப்போவதில்லை. ஆனால், நாம் இறைவனின் அழைப்பை பொருட்படுத்தாமல் இருக்கிறோம். அவர் தரும் விருந்துக்கு வர விரும்பாமல் இருக்கிறோம். காரணம், இந்த உலகம் காட்டும் ஈர்ப்புகள். அன்றாட வாழ்வின் கடமைகள், பணிகள். அந்த உவமையில் வரும் மனிதர்களைப் பார்த்து வியக்கும் நாம், இப்போது நம்மைப் பார்த்தே கொஞ்சம் வியப்போமா?கன்னிமையோடு கூடிய அர்ப்பணமும் , துணிச்சலும் தேவை என்று கூறிய என் அன்பு தந்தைக்கு நன்றிகள்.எனக்காகவும்,கன்னியர்களுக்ககவும் ஜெபியுங்கள்

    ReplyDelete
  4. a. The imaginative scenario created by the writer arrested my attention - his own mother offering prayers to God with a promise [You have a violent imagination, Dear Fr Y K.!]...In my heart's eyes, I see how the Bible can become indeed real...and hurting - distressing - existential.
    b. A Madurai's mother addressing her son, using the word, "THAMPI" fascinates me, as someone not belonging to that region. It also strikes me as odd that a married woman addresses her darling spouse as "annE" [Thanjavur, Pondicherry]. So much for the regional take on a language and its usages.
    c. Did the Hebrews ever offer their "daughters" as burnt offering at all?
    Perhaps, is not the enunciation of the Mosaic law requisition "male only" sacrifices, even in those days of the early hardness of hearts and times?
    d. How come, I sit wondering, the daughter is asking for a two-month of off-days, not to be with the heart-broken and desolate father? Why a two month of outing @Kodaikanal Cool settings?
    e. Who was there to wipe the tears of Jephthah x2 months and many more years?
    f. Who was the priest who took the knife?
    What was the Altar on which the victim was offered?
    g. Finally, Is Jephthah a high symbol of God the Father and the Daughter, the only daughter, a coequal to THE ONLY BEGOTTEN SON, and "the mountain with her companions" - a Madurai Scenario of the Last Chapters of the Gospels - Gethesamene - 12 Disciples - the closing chapters of the Narrative of Redemption?

    ReplyDelete