Wednesday, August 12, 2015

கஷ்டம் ஆனால் முடியும்!

பள்ளி மாணவர்களிடம் ஒருநாள் 'கனவு காணுங்கள்!' என்று சொல்லிக்கொண்டிருந்த டாக்டர். கலாம் ஒரு எடுத்துக்காட்டு சொன்னார். 'காற்றைவிட கனம்கூடிய எதுவும் காற்றில் பறக்க முடியாது!' என்று பிரிட்டிஷ்காரர்கள் சொல்லிக்கொண்டிருந்தபோது, அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ரைட் சகோதரர்கள் வானூர்தியைக் கண்டுபிடித்து, அதைப் பறக்கச் செய்து 'காற்றில் பறக்க முடியும்!' என்று காட்டவில்லையா? வாழ்வில் சில 'கஷ்டமானவைதான்! ஆனால் முடியாதவை அல்ல! (Some things in life are difficult, but they are not impossible!)'

யோர்தான் ஆற்றைக் கடக்க வேண்டும்!

எழுபது முறை பிறரை மன்னிக்க வேண்டும்!

இவை இரண்டும் கஷ்டமானவைதாம்! ஆனால் முடியாதவைகள் அல்ல! என்கிறது நாளைய இறைவாக்கு வழிபாடு.

நாளைய முதல் வாசகத்தை (காண்க. யோசுவா 3:7-10அ, 11, 13-17) ஒரே வார்த்தையில் சொன்னால் 'தண்ணீர்' எனவும், நற்செய்தி வாசகத்தை (காண்க. மத் 18:21-19:1) 'கண்ணீர்' எனவும் சொல்லலாம்.

அ. தண்ணீர். இஸ்ராயேல் மக்கள் எகிப்து நாட்டை கடக்கும்போது செங்கடல் குறுக்கிட்டதுபோல, அவர்கள் வாக்களிக்கப்பட்ட நாட்டிற்குள் நுழையும்போது யோர்தான் ஆறு குறுக்கிடுகிறது. புனித நாடுகளுக்குப் பயணம் செய்து யோர்தான் ஆற்றைப் பார்த்தீர்கள் என்றால் உங்களுக்குத் தெரியும். அது காவிரி அல்லது வைகை போன்றுகூட அகன்ற ஆறு கிடையாது. ஐந்தாறு அடி ஓங்கி எடுத்துவைத்தால் கடந்துவிடும் ஒரு கால்வாய். ஒருவேளை யோசுவாவின் காலத்தில் இது அகன்று இருந்திருக்கலாம். செங்கடலை யாவே இறைவன் வறண்டதாக்கச் செய்தார். ஆனால், இன்று மோசே இல்லாததால், யாவே இறைவனும் இனி நேரிடையாக எதுவும் தலையிட மாட்டார். ஆகவே, லேவியர் குலத்துக் குருக்கள்தான் இந்த தண்ணீர் கடக்கும் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். தீர்வு எப்படி கிடைக்கிறது? நான்கு பேரின் தியாகத்தால். யார் இந்த நான்குபேர்? உடன்படிக்கை பேழையை தங்கள் தோள்களில் தூக்கிக்கொண்டு - இல்லை, தங்கள் கைகளை உயர்த்திப்பிடித்துக்கொண்டு. ஏனெனில் மக்கள் அதன் கீழே கடந்து செல்ல வேண்டுமே. தோள்களில் தூக்கினால் மக்கள் அதன்கீழ் தவழ்ந்து அல்லது குனிந்துதான் செல்ல முடியும் - நின்ற குருக்கள். ஒரு குலத்தவரின் படைக்கலன் தாங்குவோர் நாற்பதாயிரம் (யோசுவா 4:13) பேர் என்றால், பன்னிரு குலத்தாரை கணக்குப் போட்டால் ஏறக்குறைய பத்து இலட்சம் பேர் கடக்கும் வரை அந்த நான்கு குருக்களும், தங்கள் கால்களில் முட்டிக்கொண்டு நிற்கும் தண்ணீரையும், தோள்பட்டை வலியையும், ஆற்றின் சகதி மற்றும் கற்கள் கால்களில் குத்துவதையும் பொறுத்துக்கொண்டு நிற்கின்றனர்.

ஆக, கஷ்டமான ஒன்று முடியும் என ஆகக் காரணம் பேழை சுமந்த நான்கு குருக்களின் தியாகம்.

ஆ. கண்ணீர். நற்செய்தியில் மையமாக இருப்பது கண்ணீர். எதனால் கண்ணீர்? சகோதரன் ஒருவன் எனக்கு எதிராக குற்றம் செய்வதால். என்ன தீர்வு? மன்னிப்பு. எத்தனை முறை? 'எழுபது தடவை ஏழுமுறை!' ஆனால் முடிகிறதா? அரசனுக்கு முடிகிறது. ஆனால், பணியாளனுக்கு முடிவதில்லை. அதிகம் பெற்றவன் மன்னிக்கப்படுகிறான். ஆனால், அந்த மன்னிப்பை அவன் மற்றவருக்குத் தர மறுக்கிறான். கொஞ்சம் இறங்கிவர மறுக்கிறான்.

ஆற்றின் தண்ணீரில் இறங்க எப்படித் தியாகம் தேவையோ,

வலியின் கண்ணீரை மன்னிக்கவும் தேவை தியாகம்.

இந்தத் தியாகம் நமதானால்
'கஷ்டமானதுதான்! ஆனால் முடியும்!'
என்று நாமும் சொல்லலாம்.


6 comments:

  1. யோர்தான் ஆற்றைக்கடப்பதும் கடினம்; எழுபது முறை பிறரை மன்னிப்பதும் கடினம்.....வாழும் இறைவன் நம் அருகில் இல்லாது போனால்.மோசேயைப் போலவே யோசுவாவுக்கும் இன்முகம் காட்டும் இறைவன் இஸ்ரேயேலர் யோர்தானைக் கடக்க வழி சொல்கிறார்.கடக்கும்் போது சம்பந்தப்பட்ட குருக்களின் உருவத்தில் அவர்கள் கூடவே இருக்கிறார்.நம் கூடவும் வருகிறார் நாம் மன்னிப்பின் கடவுளர்களாக மாறும்போது. மன்னிப்பது இறைவன் குணம் என்றால் நாமும் ஏன் கடவுளர்களாக மாறக்கூடாது? யோசிப்போம்.தண்ணீருக்கும் கண்ணீருக்கும் கோடு போட்ட தந்தைக்குப் பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. The Greatness of Christianity is Forgiveness – என்று சொல்வார்கள். சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறக்கக்கூடிய அந்த நிலையிலும், இயேசுவால் தன்னை சிலுவைச்சாவுக்கு கையளித்தவர்களை மன்னிக்க முடிந்ததென்றால், அதுதான் மன்னிப்பின் உச்சகட்டம். அத்தகைய மன்னிப்பை ஆண்டவர் நம்மிடமிருந்தும் எதிர்பார்க்கிறார். அதுதான் இன்றைய நற்செய்தியின் சாராம்சம்.தந்தைக்குப் பாராட்டுக்கள்!

      Delete
  2. ஒப்புரவிற்கு ஐந்து காரியங்கள் தேவை என்று படித்திருக்கிறோம். 1. பாவங்களை நினைப்பது. 2 மனம் வருந்துவது. 3. தீர்மானம் செய்வது 4. குருவிடம் சொல்லுவது. 5. அபராதத்தைத் தீர்ப்பது. இன்றைக்குப் பெரும்பாலும் "குருவிடம் சொல்லுவது" மட்டும்தான் நடக்கிறது, அதுவும் அப்படி இப்படி நடக்கிறது,நடப்பதும் இல்லை. முதல் மூன்று பகுதிகளே இல்லாமல் போய்விடுகிறது. அங்கே என்ன மன்னிப்பு இருக்கிறது. இத்தகைய மனமாற்ற மனநிலை இல்லாது மன்னிப்புப் பெற்றவர்கள் திரும்பத் திரும்ப அதே தவறைச் செய்கிறார்கள்.

    இத்தகைய மனமாற்ற மனநிலையோடு எத்தனை முறை தவறு செய்தாலும் அத்தகையோரை எத்தனை முறையும் மன்னிக்கலாம், மன்னிக்க வேண்டும்.

    மனம் திரும்புவோம். மன்னிப்பு பெறுவோம். மன்னிப்போம்.Thank you Father for inspiring me that I am POSSIBLE

    ReplyDelete
  3. ஆம். மன்னிப்பது கண்ணீர் சிந்தினால் மட்டுமே நடைபெறும். கண்ணீர்-தண்ணீர் இரண்டும் ஒன்றுதான். சிறப்பான ஒப்புமை. வாழ்க.

    ReplyDelete
  4. ஆம். மன்னிப்பது கண்ணீர் சிந்தினால் மட்டுமே நடைபெறும். கண்ணீர்-தண்ணீர் இரண்டும் ஒன்றுதான். சிறப்பான ஒப்புமை. வாழ்க.

    ReplyDelete